சென்னை அருகில் உள்ள ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் குடும்பம் எங்களுடையது. கணவருக்கு எங்கள் ஊரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை. ஒரே மகனை பல பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் பொறியியல் படிக்க வைத்தோம். படிப்பை முடித்தவன், என் கணவர் பணிபுரியும் அதே தொழிற்சாலையில் தன் சொந்த முயற்சியால் வேலைக்குச் சேர்ந்தான். 18,000 ஆரம்ப சம்பளமாகப் பெற்றான். இனி அவன் வாழ்க்கை விடிந்துவிடும் என, நானும் கணவரும் பெருமூச்சுவிட்டோம். `நான் வேலை பார்க்கிற அதே ஆபீஸ்ல என் பையன் இன்ஜீனியர்' என்று என் கணவர் அனைவரிடமும் பெருமையுடனும் சந்தோஷமாகவும் பகிர்ந்துகொண்டார்.

பையன் வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. 30,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறான். தன் குடும்பத்தைத் தனியாகவும், குறையில்லாமலும் நிர்வகிக்கும் அளவுக்கு அவன் பொருளாதாரம் உயர்ந்துவிட்டதாக எண்ணியதால், அவனுக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்தோம். கோவை மாவட்டத்தின் ஒரு நகரத்தில் பெண் அமைந்தது. பெண்ணுக்கும் பையனுக்கும் பிடித்துக்கொண்டது. அவர்கள் எங்களைவிட வசதியான குடும்பம். நாங்கள் திருமண சீராக எதுவுமே எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டோம். இருந்தாலும், `எங்களுக்கு ஒரே பொண்ணு, எங்களால முடியுறதை செய்யுறோம்' என்றார்கள் சம்பந்தி வீட்டில். சிறப்பாகத் திருமணம் முடிந்தது.
இந்நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் என் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்னை எழுந்தது. காரணம், என் மகனின் சம்பளம். `நீங்க 50,000 சம்பாதிக்கிறதா சொன்னதாலதான், நான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா, பொய் சொல்லி கல்யாணம் பண்ணியிருக்கீங்க...' என்று மருமகள் சொல்ல, என் பையன் அதிர்ந்துவிட்டான்.`அப்படி நாங்க யார்கிட்ட சொன்னோம்? ஏமாத்தி கல்யாணம் செய்ய எங்களுக்கு என்ன அவசியம்..?' என்று எங்கள் பையனும் பதிலுக்கு வெடிக்க, பிரச்னை பெரிதானது.
மருமகள் தன் பெற்றோரிடம் நடந்ததைச் சொல்ல, என் மகனும் அவர்களுக்கு போன் செய்து, `நான் 50,000 சம்பளம் வாங்குறதா உங்ககிட்ட சொன்னோமா..?' என்று கேட்க, `அப்படித்தானே சொன்னாங்க..? அப்போ நீங்க அவ்ளோ சம்பளம் வாங்கலையா..?' என்று அவர்களும் அதிர்ந்துபோய் கேட்டார்கள்.
நடந்தது இதுதான். இந்த சம்பந்தத்தைப் பேசி முடித்த, இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவான உறவினர் ஒருவர், என் மகன் 50,000 சம்பளம் வாங்குவதாக சம்பந்தி வீட்டில் சொல்வதாக திருமணத்துக்கு முன்னர் கூறினார்.

``ரெண்டு பேரும் நல்ல குடும்பம், சம்பந்தம் பண்ணினா சிறப்பா ஒத்துப்போகும். நீங்க நகை, சீர்னு எதுவும் கேட்கலை. ஆனா பொண்ணு, மாப்பிள்ளை 50,000-மாவது சம்பளம் வாங்கணும்னு எதிர்பார்க்குறதா அவங்க வீட்டுல சொன்னாங்க. மற்ற எல்லா விஷயங்களிலுமே ரெண்டு வீட்டுக்குமே ரொம்ப ஒத்துப்போகுது. இந்த ஒரு விஷயத்தால இந்த சம்பந்தம் நின்னுட வேண்டாம். உங்க பையனுக்கு 50 ஆயிரம் சம்பளம்னு நான் சொல்லியிருக்கேன். அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல... கல்யாணத்துக்கு அப்புறம் உங்க பையனோட குணம், உங்க குடும்பத்தை எல்லாம் பார்த்ததுக்கு அப்புறம், பையனோட சம்பளம் அவங்களுக்குப் பெரிய குறையா தெரியாது'' என்றார், இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவான அந்த உறவினர்.
அவர் சொன்னது எங்களுக்குத் தயக்கமாக இருந்தாலும், அதை தவறு என்று நாங்கள் அப்போது உணரவில்லை. சம்பந்தம் பேசும் போது கூட, குறைய அனைவரும் சொல்வதுதானே... அதுபோல் என்று நினைத்துவிட்டோம். இதைப் பற்றி எங்கள் பையனுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அது என் பையனின் வாழ்க்கையையே பாதிக்கும் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை.
என் மருமகள் என் சம்பந்தி வீட்டுக்கு போன் செய்ததும், அவர்கள் இருவரும் நேராக அந்த உறவினர் வீட்டுக்குக் கிளம்பினர். எங்களையும் எங்கள் மகன், மருமகளை அழைத்துக்கொண்டு அங்கு வரச் சொன்னார்கள். அங்கு வைத்து பேச்சு வார்த்தை தொடங்கியது.
'உங்க ரெண்டு வீட்டுக்கும் நல்லது நெனச்சு சொன்னதுக்கு, இப்போ என்கிட்ட சண்டைக்கு வர்றது வேதனையா இருக்கு' என்றார் அந்த உறவினர். 'அவர் சொல்லியிருந்தாலும், நாங்களும் இதுக்கு உடந்தையா இருந்திருக்கக் கூடாது. இப்போ எப்படி இதை சரிசெய்றதுனு எங்களுக்குத் தெரியலை. மன்னிச்சிடுங்க....' என்றோம் நானும் என் கணவரும். தொடர்ந்த பேச்சு வார்த்தைகளில் சம்பந்தி வீட்டில் அந்த உறவினருடனும், எங்களிடமும் ரொம்பவே சண்டை போட்டார்கள். இறுதியில், அங்கிருந்தே என் மருமகள் தன் பெற்றோருடன் சென்றுவிட்டார். நாங்கள் வீடு திரும்பிவிட்டோம்.
திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. மருமகள் மகனைப் பிரிந்து சென்று மூன்று மாதங்கள் ஆகின்றன. `சரி ஆனது ஆகிடுச்சு, இதுக்கு நாங்கதான் காரணம். என் பையனுக்கு இதுல எந்த சம்பந்தமும் இல்ல. என் பையன் திறமையானவன், சீக்கிரமாவே நீ எதிர்பார்த்த சம்பளம் வாங்கிடுவான்...' என்றெல்லாம் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், என் மருமகள் மீண்டும் வீட்டுக்கு வர மறுக்கிறார். அவர் பெற்றோரோ, ``நீங்க செஞ்சது தப்பு. உங்க மேல இனி எங்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? எங்களுக்கு ஒத்தப் புள்ள, அவளை இதுவரை நாங்க எதுக்குமே கட்டாயப்படுத்தினதில்ல. அவ முடிவுதான் இறுதி முடிவு" என்கிறார்கள்.

என் மகனின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. `மிடிள் கிளாஸ் குடும்பம்னாலும் நல்லா படிச்சு, சுய முயற்சியில நல்ல வேலையில சேர்ந்து, படிப்படியா முன்னேறினு என் மேல நான் வெச்சிருந்த தன்னம்பிக்கையை எல்லாம், இந்தக் கல்யாணம் நொறுக்கிடுச்சு. `நீ அதிக சம்பளம் வாங்கல...'னு என் பொண்டாட்டி என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போனது, எனக்கு இப்போ தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்துடுச்சு. ஃப்ரெண்ட்ஸ், உறவினர்கள்னு யாரையுமே ஃபேஸ் பண்ண முடியாம என்னை நானே சுருக்கிக்கிறேன். நான் செய்யாத ஒரு தப்புக்கு எனக்கு ஏன் இந்தத் தண்டனை..? நீங்க என் வாழ்க்கையவே கெடுத்துட்டீங்க' என்று எங்களுடன் சண்டை போடும் எங்கள் மகன், மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறான். எங்கள் மகனை இப்படி ஒரு சூழ்நிலைக்குத் தள்ளியதை நினைத்து, எங்களுக்கு மிகவும் குற்றவுணர்வாக இருக்கிறது.
என் மருமகளிடம் எத்தனையோ முறை பேசிப் பார்த்துவிட்டேன். மன்னிப்புக் கேட்டுவிட்டேன். ``நீங்க என்ன எங்களுக்கு சொந்தமா? இல்லை நான் உங்க பையனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேனா? எதுக்காக நான் கன்வின்ஸ் ஆகணும்? அரேஞ்சுடு மேரேஜ்ல பொண்ணுங்க எதிர்பார்க்கிற முக்கியமான விஷயம், மாப்பிள்ளையோட சம்பளம்தான். ஆனா, அதுலேயே எங்களை ஏமாத்தியிருக்கீங்க. அந்த நம்பிக்கை துரோகத்தை எங்களால ஏத்துக்கவே முடியாது. அதுக்குக் காரணம் உங்க பையன் இல்ல, அந்த சொந்தக்காரரும், நீங்களும்தான்னாலும், நீங்க எல்லாம் பண்ணின தப்புக்கு நான் ஏன் என் வாழ்க்கையை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்? அம்பதாயிரம் சம்பளம் இவர் வாங்க இன்னும் மூணு, நாலு வருஷம் ஆகும். மேலும், இந்தப் பிரச்னையால எங்க ரெண்டு பேருக்குள்ள ஏற்பட்ட மனக்கசப்புகள் எல்லாம் சூழலை இன்னும் சிக்கலாக்கிடுச்சு. எனக்கு இது சரியா வரும்னு தோணலை" என்கிறார்.
தீர்வுதான் என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.