Published:Updated:

வீட்டுவேலைகள் பார்க்கும் மகன், அவமானமாக நினைக்கும் மருமகள்... என்ன செய்வது நான்? #PennDiary - 14

Penn Diary
News
Penn Diary

மகனுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. வீட்டில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

Published:Updated:

வீட்டுவேலைகள் பார்க்கும் மகன், அவமானமாக நினைக்கும் மருமகள்... என்ன செய்வது நான்? #PennDiary - 14

மகனுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. வீட்டில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை.

Penn Diary
News
Penn Diary

நான், என் கணவர், என் மகன் என சிறிய குடும்பம் எங்களுடையது. கணவர் செய்துவந்த தொழிலையே, படிப்பை முடித்த பின்பு மகனும் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான். சமீபத்தில் அவனுக்குத் திருமணம் முடிந்தது. மருமகளுக்கு, என் மகன் வீட்டு வேலைகள் செய்வது பிடிக்கவில்லை. அதுதான் இப்போது வீட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துக்கொண்டு இருக்கிறது.

Wedding
Wedding

என் 35 வயதுதிலிருந்தே எனக்கு உடல்நிலை சரியில்லை. பிபீ மற்றும் சுகர் பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன. எனவே, கணவரும் மகனும் எனக்கு ஒத்தாசையாக அனைத்து வீட்டு வேலைகளையும் செய்துகொடுக்க ஆரம்பித்தனர். காய்கறிகள் நறுக்குவது, வீடு கூட்டுவது, மாப் போடுவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்வார்கள். சமையல் மட்டும்தான் என் வேலையாக இருக்கும். சில நேரங்களில், என் உடல்நிலை மோசமடையும்போது சமையல் வேலைகளையும் அவர்கள் இருவருமே சிறப்பாகச் செய்து முடித்துவிடுவார்கள்.

இந்த வேலைகளை எல்லாம் அவர்கள் சிரமமாகவோ, ஆண்கள் செய்யக்கூடிய வேலைகளா இது என்றோ நினைத்ததில்லை. `நம் வீட்டு வேலைகளை நாம் பகிர்ந்து செய்கிறோம் அவ்வளவுதான்' என்று அவற்றை எல்லாம் மிக இயல்பாகச் செய்வார்கள்.

இந்நிலையில், திருமணத்துக்குப் பின் என் மருமகள், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்த என் மகனைப் பார்த்து அவனை திட்ட ஆரம்பித்தார். `நீங்க எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யணும்? சொந்தக்காரங்க முன்னாடி எனக்கு அசிங்கமா இருக்கு. எங்க வீட்டுல எல்லாரும் கேலி பண்ணுறாங்க...' என்றார். என்னிடமும் கோபப்பட்டார். `உங்களுக்கு உடம்பு முடியலைன்னா, வேலைக்கு ஆள் போட்டிருக்க வேண்டியதுதானே? இப்படியா உங்க மகனை பொம்பள மாதிரி எல்லா வேலையும் செய்யவெச்சு வளர்க்குறது..?' என்று சிடுசிடுத்தார்.

என் கணவர் மருமகளிடம், `இதுல என்னம்மா இருக்கு? நம்ம வீட்டு வேலையை நாம செய்றோம். வேலைக்கு ஆள் வைக்கணும்னா வெச்சிருந்திருக்கலாம்தான். ஆனா, எனக்கும் பையனுக்கும் அதை நாங்களே செய்துடலாம்னு தோணுச்சு. ரெண்டு பேரும் நம்ம தொழிலைத்தான் பார்க்குறோம் என்பதால, அதுக்கான நேரமும் வசதியும் எங்களுக்குக் கிடைச்சது. சொல்லப்போனா, வரப்போற மருமக, பையனுக்கு எல்லா வேலையும் சொல்லிக் கொடுத்திருக்கோம்னு சந்தோஷப்படுவாங்கனு நாங்க நினைச்சிருந்தோம். இதை ஏன்மா நீ அவமானமா பார்க்குற? நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்த பிறகு, என் பையனும் நானும் அந்தக் குழந்தை வேலைகளையும் பார்த்துக்கொடுப்போம்...'' என்றெல்லாம் நிதானமாக எவ்வளவோ பேசிப் பார்த்தார். ஆனாலும், மருமகள் யார் பேசியும் சமரசமாகவில்லை.

Family
Family
Image by mohamed Hassan from Pixabay

வேறு வழியில்லாமல் என் மகனிடம், `சரி இனி நீ எந்த வீட்டு வேலைகளையும் பார்க்க வேணாம். நானும் அப்பாவும் சமாளிச்சுக்குறோம். இல்லைனா, வேலைக்கு ஒரு ஆள் வெச்சுக்குவோம்...' என்று நானும் கணவரும் கூறினோம். அவன் அதற்கு சம்மதிக்க மறுக்கிறான். `இதுல என்ன இருக்கு? அவதான் நம்ம வீட்டு நடைமுறையைப் புரிஞ்சுக்கணும். நாளைக்கு எனக்கு பையன் பிறந்தாலும் அவனையும் நான் இப்படித்தான் வளர்ப்பேன்' என்கிறான்.

ஒருவழியாக மகனுக்கும் மருமகளுக்கும் ஓர் ஒப்பந்தம் ஆனது. மகன் எங்கள் வீட்டில் செய்த வேலைகளை எல்லாம் மருமகள் இனி செய்வதாகக் கூறி, அதேபோல செய்யவும் ஆரம்பித்தாள். ஆனாலும், நானும் என் கணவரும் ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தால் என் மகனால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. நான் துணி துவைக்கும்போது வந்து அவற்றைக் காயப்போடுவது, என் கணவர் தோட்டத்தைக் கூட்டிக்கொண்டிருந்தால் அவரிடமிருந்து துடைப்பத்தை வாங்கி தான் கூட்டுவது என்று பார்ப்பான். ஆனால், இதெல்லாம் மருமகளுக்கு மிகவும் கோபத்தை கொடுக்கிறது. `உங்களை நான் என்ன சொல்லியிருக்கேன்... இந்த வேலை எல்லாம் பார்க்கக் கூடாதுனு சொல்லியிருக்கேன்ல...' என்று அவனிடம் சண்டைக்குச் செல்கிறாள். `அதுக்காக எங்கம்மா, அப்பா வேலை பார்க்கும்போது அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கச் சொல்றியா? அது என்னால முடியாது' என்று இவனும் கோபப்படுகிறான்.

மகனுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. வீட்டில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. மகனை படிக்க வைத்து, அவனுக்கு ஒரு தொழில் ஏற்பாடு செய்து வைத்து, சொத்து சேர்த்து வைத்து, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் குணநலன்களுடன் வளர்த்து என ஒரு சிறப்பான பெற்றோராக நாங்கள் இருந்திருக்கிறோம், இருக்கிறோம். ஆனால் மருமகளோ, எங்கள் சுயநலனுக்காக, குறிப்பாக, என் சுயநலனுக்காக நான் அவனை வீட்டுவேலைகள் செய்ய வைத்து வளர்த்தது குற்றம் என்ற ஒன்றை மட்டுமே பூதக்கண்ணாடியில் பார்த்து வீட்டின் நிம்மதி, சந்தோஷத்தை எட்டாக்கனி ஆக்கிக்கொண்டிருக்கிறார்.

woman (Representational image)
woman (Representational image)
Pexels

என்ன செய்ய வேண்டும் நான்?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.