என் கணவர் விவசாயி. எங்களுக்கு இரண்டு மகன்கள். இருவரையும் டிகிரி படிக்க வைத்தார் கணவர். மூத்தவன் வேலைக்குச் செல்ல, இளையவன் தொழில் செய்தான். இருவருக்கும் திருமணம் முடித்து குழந்தைகள் பிறந்தனர். வாழ்வில் எந்தக் குறையும் இல்லை என்றிருந்தபோது, என் கணவர் தவறிவிட்டார். கிராமத்தில் எங்களுக்கு இருக்கும் 5 ஏக்கர் நிலத்தை பங்குக்கு விட்டு வரும் பணமும், நான் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணமும் என் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. மகன்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. என்னிடம் கொஞ்சம் தொகை சேர்ந்ததும், இரண்டு மகன்களின் பேரப் பிள்ளைகளுக்கும் அதைப் பிரித்துக்கொடுப்பேன்.
இந்நிலையில், வேலைக்குச் சென்றுகொண்டிருந்த மூத்த பையனுக்கு கொரோனாவால் பணியிழப்பு ஏற்பட்டது. பிழைப்புக்கு ஒரு தொழில் செய்ய முடிவெடுத்த அவன், அதற்கான பணத்தை ஏற்பாடு செய்ய சிரமப்பட்டுக்கொண்டிருந்தான். இளைய மகனின் மனைவி, உறவினர்கள் வட்டத்துக்குள் வட்டிக்குப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தார். எனவே, அவரே முன்வந்து, `பணம் எதுவும் வேணும்னா வாங்கிக்கோங்க மாமா...' என்று என் மூத்த மகனிடம் சொல்ல, அவனும் அவரிடம் வட்டிக்குப் பணம் பெற்று தொழிலை ஆரம்பித்தான்.

என் மகன் தொடங்கிய தொழில் சிறப்பாகச் செல்லவில்லை. என்றாலும், மேலும் மேலும் என் இரண்டாவது மருமகளிடம் பணத்தை வாங்கி தொழிலில் முதலீடு செய்துவந்தான். வட்டி சரியாகக் கிடைத்து வந்ததால் அவரும் என் மகன் கேட்கக் கேட்கப் பணம் கொடுத்து வந்தார். இப்படியாக ஒன்றரை வருடத்தில் என் மூத்த மகன் 5 லட்சம் வட்டிக்கு வாங்கியிருந்த நிலையில், இன்னொரு பக்கம் தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நஷ்டத்தில் முடிந்தது. வாழ்வாதாரத்துக்கே வழி இல்லாத நிலையில், அவனால் வட்டி கொடுக்க முடியாமல் போனது.
`ஒழுங்கா உங்க அண்ணன்கிட்ட வட்டியோட பணத்தை வாங்கிக் கொடுங்க' என்று என் இளைய மருமகள் என் இளைய மகனிடம் சண்டை போட, அவன் தன் அண்ணனிடம் கோபமாகப் பணம் கேட்டுப் பேச, `ஒன்றரை வருஷமா தவறாம வட்டி கொடுத்தேன்தானே? இப்போ என்கிட்ட காசில்லடா. இப்போதைக்கு நான் பெங்களூருக்கு வேலைக்குப் போறேன். கொஞ்சம் பொறுத்துக்கோ... எப்படியும் உன் பணத்தை திருப்பிக் கொடுத்துடுவேன்' என்று சொல்லிவிட்டு, தன் மனைவி, பிள்ளைகளை கிராமத்தில் என் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு அவன் பெங்களூரு சென்றுவிட்டான்.
என் இளைய மகனுக்கும் மருமகளுக்கும், இந்தப் பிரச்னையால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. `என்னோட மொத்த சேமிப்பு 5 லட்சத்தையும் உங்க அண்ணன்கிட்ட கொடுத்து இப்போ ஏமாந்து நிக்குறேன். உங்க அண்ணனால நான் மட்டுமில்ல நம்ம குடும்பமே நாசமாபோச்சு' என்று மருமகள் சண்டை போட, `நானா எங்க அண்ணனுக்குப் பணம் கொடுக்கச் சொன்னேன்? நீதானே வட்டிக்கு ஆசைப்பட்டுக் கொடுத்த?' என மகன் பதிலுக்குப் பேச, அவர்கள் குடும்பத்தில் தினம் தினம் சண்டை, சச்சரவு என்றானது.
ஒரு கட்டத்தில், என் இளைய மகனும், மருமகளும் என்னிடமும் சண்டை போட ஆரம்பித்தனர். `நாங்க 5 லட்சத்தை வெளிய யாருக்காச்சும் கொடுத்திருந்தா இந்நேரம் மாசம் மாசம் வட்டி வாங்கியிருப்போம். இப்போ ஆறு மாசமா எந்த வட்டியும் இல்லாம எல்லாம் போச்சு. எங்ககிட்ட இருந்த மொத்த சேமிப்பையும் அவன் அழிச்சுட்டுப் போயிட்டான். எங்களால இதுக்கு மேல பொறுக்க முடியாது. அவன் பங்கு வயலையோ வீட்டையோ வித்து இப்போவே எங்களுக்கு அவன் கொடுக்க வேண்டிய பணத்தை செட்டில் பண்ணுங்க. 'எப்படியும் உன் காசை திருப்பிக் கொடுப்பேன்'னுதான் அவன் சொல்லியிருக்கான்ல... அப்படிக் கொடுக்கும்போது அந்தக் காசுல அவன் சொத்து வாங்கிக்கட்டும்'' என்று என்னிடம் சண்டைக்கு நிற்கிறான் மகன். இதை உடனடியாகச் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறார் இளைய மருமகள்.

என் மூத்த மருமகளும், `அவங்க சொல்றதும் சரிதானே அத்தை? 5 லட்சம் என்ன சின்னத் தொகையா? யாருதான் பொறுத்துப்பாங்க? என் வீட்டுக்காரர் பண்ணின தப்புக்கு நானும் என் பிள்ளைகளும்தான் தண்டனையை அனுபவிக்கணும். அவங்க ஏன் அனுபவிக்கணும்? எங்க பங்கு சொத்தை வித்துக் கொடுத்துடுங்க' என்று அழுகிறார். இந்தப் பிரச்னையால் மனைவி, பிள்ளைகளைப் பார்க்கக்கூட ஆறு மாதங்களாக ஊருக்கு வராமல் இருக்கும் என் மூத்த மகன் போனில், `காசு வாங்குனது நான்தானே? அதை அவன் என்கிட்டதான் கேட்கணும். தாத்தா சொத்து பேரப்புள்ளைங்களுக்கு... என் புள்ளைங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை எப்படி அவன் கேட்கலாம்? மனசாட்சி இருக்கா அவனுக்கு? நான்தான் ஒண்ணு, ரெண்டு வருஷத்துல அவன் பணத்தை தந்துடுறேன்னு சொல்லியிருகேன்ல..?' என்கிறான்.
இப்போதைக்கு என்னிடம் இருந்த சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இளையனிடம் கொடுக்கலாம் என்று நினைத்துக் கொடுத்தால், `இதுவரை வட்டி கொடுக்காத ஆறு மாசத்துக்கும், இனி வரப்போற ஆறு மாசத்துக்கும் வட்டியா இதை எடுத்துக்குறேன். ஆனா அசல்ல கழியும்னு நினைக்காதீங்க' என்று இரக்கமே இல்லாமல் சொல்கிறார் இரண்டாவது மருமகள். `காசை வாங்கிட்டு ஊரைவிட்டுப் ஓடிப் போயிட்டானே உங்க மகன், அவன் பணத்தை திருப்பிக் கொடுப்பான்னு என்னை நம்பச் சொல்றீங்களா? அவன் மட்டும் ஊருக்குள்ள வரட்டும்... சட்டையைப் பிடிச்சுக் கேட்குறேன்' என்று கோபத்தை கக்குகிறான் இளையவன். `உங்களையும் என் மனைவியையும் அவங்க ரெண்டு பேரும் பேசுற பேச்சுக்கும் படுத்துற பாட்டுக்கும் நான் ஊருக்கு வந்தேன்னா அவனுக்கு மரியாதை கெட்டுப்போயிடும்' என்று பதிலுக்குக் கோபப்படுகிறான் என் மூத்த மகன்.

பணத்தைக் கொடுத்து வட்டியையும் இழந்து நிற்கும் என் இளையமகன், மருமகளின் கோபத்தையும், ஆற்றாமையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பெற்ற பிள்ளைகளில் அதிகம் கஷ்டப்படும் பிள்ளைக்குத்தானே தாய் மனம் துணையாக நிற்கத் தவிக்கும்? அதனால், வேலையை இழந்து, தொழிலிலும் தோற்று, மனைவி, பிள்ளைகளையும் பிரிந்து மாத சம்பளத்துக்கு ஏதோ ஓர் ஊரில் உழன்றுகொண்டிருக்கும் என் மூத்த மகனையும் என்னால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. அண்ணன், தம்பி பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் இப்போது இப்படி எதிரிகளாக நிற்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பரிதவித்து நிற்கும் தாய் மனதுக்கு தீர்வென்ன?!
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.