எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. பி.இ முடித்த பின் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, என் கணவர் வீட்டினர் பெண் கேட்டு வந்தனர். ஆரம்பத்தில் மிகவும் வேண்டியும் விரும்பியும் பேசியதால், எங்கள் வீட்டில் அனைவருக்கும் அவர்கள் வீட்டினரை பிடித்துப்போய்விட்டது.

நிச்சயத்துக்கு நாள் குறித்த பின்னர்தான், சீர், செய்முறை பற்றியெல்லாம் மாப்பிள்ளை வீட்டினர் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். 70 பவுன் நகை, ஸ்பூன் முதல் ஏ.சி வரை சீர் வரிசை, கார் என்று அவர்கள் கேட்க கேட்க, எங்களுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் உறவுகள், குடும்பங்களில் எல்லாம், பெண்ணுக்குப் பெற்றோர் விரும்பியதை, அவர்களால் இயன்றதை திருமணத்துக்குச் செய்யும் வழக்கமே உண்டு. ஆனால், மாப்பிள்ளை வீட்டினரோ, `இதெல்லாம் கண்டிப்பா வேணும்' என்று சீர் வரிசையை டிமாண்ட் செய்து கேட்டது எங்களுக்கு நெருடலாக இருந்தது. ஆனாலும், திருமணத்தை இரண்டு குடும்பங்களுக்கும் நடுவில் இருந்து பேசிய உறவினர்கள் எல்லாம், `ஒரே ஒரு பொண்ணுக்கு நீங்க இதையெல்லாம் செய்ய மாட்டீங்களா என்ன? நல்ல இடம்... முடிச்சுட்டா நாளைக்கு உங்க பொண்ணுதானே நல்லாயிருப்பா..?' என்றெல்லாம் பேசி என் பெற்றோரின் மனதை கன்வின்ஸ் செய்து திருமணத்தை முடித்தார்கள்.
திருமணத்துக்குப் பின்தான் தெரிந்தது, என் புகுந்த வீட்டினர் எந்தளவுக்கு காசு ஆசை பிடித்தவர்கள் என்பது. நான் எங்கள் வீட்டில் ஒரே பெண், அவர்கள் கேட்கும் சீர்வரிசையை எல்லாம் நிச்சயமாகச் செய்வோம் என்பதை முன்னரே கணக்கிட்டுத்தான் என்னைப் பெண் கேட்க வந்துள்ளனர். மேலும், திருமணம் என்பது இரு குடும்பங்களின் இணைவு, அந்த ஆண் - பெண்ணின் வாழ்வின் ஆரம்பம் என்று எல்லாம் அவர்கள் பார்க்கவில்லை. தன் ஆண்பிள்ளை மூலமாகத் தன் வீட்டுக்கு பெண், நகை, பாத்திரங்கள், கார் என்று பெற்றுக்கொள்ளும் வரவாகவே இதை அவர்கள் அணுகினர் என்பது புரிந்தது. புகுந்த வீட்டினரின் இந்தக் குணம் எனக்கு அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தாலும், சரி இனி இதுதான் வாழ்க்கை என்று நான் என்னை அதற்குத் தயார்படுத்திக்கொண்டுவிட்டேன்.

இந்நிலையில், மாமியாரும், திருமணமான என் நாத்தனாரும், என் வீட்டில் எனக்கு சரியாக சீர் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் இந்த ஆறு மாதங்களாக. பேச்சு எங்கு ஆரம்பித்து, எங்கு சென்றாலும், அதில் சில வரிகள், `சொன்னதுல இருந்து அஞ்சு பவுன் குறைஞ்சுதானே உங்க வீட்டுல போட்டிருக்காங்க, அதை சீக்கிரம் போடச் சொல்லிடு', `65 இன்ச் டிவிதான் நம்ம வீட்டு ஹாலுக்கு பொருத்தமா இருந்திருக்கும்; உங்க வீட்டுல 55 இன்ச் வாங்கிக்கொடுத்துட்டாங்க', `இதைவிட நல்ல காரா கொடுத்திருக்கலாம்' என்று வந்து விழும்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் சகித்துக்கொண்ட எனக்கு, இப்போதெல்லாம் எதற்காக சகிக்க வேண்டும், பொறுக்க வேண்டும் என்று கோபம் வருகிறது. என்னை எங்கள் வீட்டில் பி.இ படிக்க வைத்திருக்கிறார்கள். செல்லமாக வளர்த்த ஒரே மகளுக்கு, தங்களால் எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு சிறப்பாகத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். புகுந்த வீட்டில் அன்பு, மரியாதை என்று எதற்கும் குறையில்லாமல் நான் நடந்துகொள்கிறேன். ஆனால், இந்த நிறைவு எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல், `எங்க பொண்ணுக்கு எல்லாம் வெள்ளியில 17 பொருள் சீர் வெச்சோம், உனக்கு 10 தான் வெச்சிருக்காங்க', `தீபாவளிக்கு உங்க வீட்டுல மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவாங்கதானே?' என்று இவர்கள் பேசிக்கொண்டே இருப்பது, எனக்கு எரிச்சலாக இருக்கிறது.

ஒருமுறை இப்படி என் மாமியாரும் நாத்தனாரும் என்னைச் சீண்டியபோது, `எங்க வீட்டுல எல்லாமே நல்லாதான் செஞ்சிருக்காங்க. நிறைவே இல்லாத மனசுக்கு குறை தெரிஞ்சுகிட்டேதான் இருக்கும்' என்று சொல்லிவிட்டேன். இரண்டு பேருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
`நீங்க மட்டும் என்ன எந்த எதிர்பார்ப்பும், ஆசையும் கணக்கும் இல்லாமலா எங்க வீட்டுல பெண் கொடுத்தீங்க? பையன் மாசம் இவ்வளவு சம்பாதிக்கிறான், சொந்தமா வீடு இருக்கு, சொத்துல பங்கு இவ்வளவு வரும்னு எல்லா கணக்கும் பார்த்துதானே கல்யாணம் பண்ணுனீங்க? எங்களைக் கணக்குப் பார்க்குறோம்னு சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?' என்று என்னுடன் சண்டை போட்டார்கள்.
பெண்களுக்குக் கல்வியும் வேலையும், சுய சம்பாத்தியமும்தான் முக்கியம். அதுதான் அவர்களுக்கு நிரந்தர துணை, தன்னம்பிக்கை என்று உணராமல், `பையனுக்கு நல்ல சம்பாத்தியம், சொந்த வீடு' என்று மட்டுமே பார்த்து திருமணம் முடித்து வைக்கும் பெற்றோர்களுக்கு... இங்கு சில வார்த்தைகள். இதுபோன்ற சூழலில் நாங்கள் எந்தளவுக்குக் கூனிக்குறுகி நிற்போம், எங்கள் மீதான மதிப்பையே நாங்கள் இழந்துபோய் நிற்போம் என்றெல்லாம் புரிந்துகொள்ளுங்கள். மகள்களுக்கு `நல்ல வாழ்க்கை' அமைத்துக்கொடுப்பது என்பது, அவர்களை சுய சம்பாத்தியம் உள்ளவர்களாக, சுயமரியாதை உள்ளவர்களாக வாழவைப்பதே. `வேலைக்குச் செல்கிறேன்' என்று சொன்ன என்னை, `எங்க கடமையை நாங்க முடிக்கணும்' என்று சொல்லி திருமணத்துக்குள் தள்ளிவிட்ட என் பெற்றோரும், இன்று நான் படும் வேதனைகளுக்குக் காரணம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். ஒருவேளை, பொருளாதார சார்பற்ற பெண்ணாக இப்போது நான் இருந்திருந்தால், என் புகுந்த வீட்டினரின் வார்த்தைகள் என்னை இந்தளவுக்குக் காயப்படுத்தியிருக்காது; இதுபோன்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு ஏற்பட்டிருக்காது என்று தோன்றுகிறது.

இந்தப் பிரச்னைகள் பற்றி எல்லாம் என் கணவரிடம் சொன்னால், `என் வீட்டில் உள்ளவர்கள் அப்படித்தான். என் வீட்டினரை என்னால் கண்டிக்க முடியாது; உனக்கு ஆதரவாகப் பேச முடியாது. ஆனால் எனக்கு, இந்த சீர், செய்முறை எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. நீதான் சூழ்நிலையை கையாளப் பழக்கிக்கொள்ள வேண்டும்' என்கிறார்.
எப்படி எதிர்கொள்வது நான்?