தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

நிகழ மறுத்த என் அற்புதம் - சாரதா

கடவுளின் அம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுளின் அம்மா

கடவுளின் அம்மா

“இது என்னைப் போன்ற பல அம்மாக்கள் பேசத் தயங்கும் கதை. உங்கள் துயரம் விடுபட்டு நீங்கள் மீண்டும் வாழத் தொடங்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் இந்தக் கடிதத்தை.

என் பெயர் சாரதா. வயது 28. எனது வாழ்வில் நான் திட்ட மிட்டபடிதான் அத்தனையும் நிகழ்ந்தன. போட்டோகிராப ராக வேண்டும் என்று விரும்பி அதை நிகழ்த்தினேன். நெருங்கிய நண்பரையே காதலித்து மணந்தேன். எனது வாழ்வில் நான் திட்டமிடாதது என்றால், என் மகளைக் கருவுற்றதுதான்.

2017 ஜூலை 3 அன்று, எனக்கும் மணிகண்டனுக்கும் திருமணம் முடிய, ஒரு வருடம் கழித்து 2018 ஜூலை 14-ல் நான் கருவுற்றது உறுதியானது. அஹானாவைக் கருவுறுதல் எளிதில் கைகூடவில்லை எங்களுக்கு. எனக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தது. அதனால் கருவுறுதலில் தாமதம் ஏற்படும் என்றார்கள் மருத்துவர்கள். ஒரு வருடக் காத்திருப்புக்குப் பின், அவள் உருவாகியிருந்தாள்.

பிரெக்னன்ஸி டெஸ்ட் கிட்டில் இரண்டு கோடுகள் உறுதியான அடுத்த நொடி முதல் அவளுக்காக நானும் மணியும் வாழத் தொடங்கியிருந்தோம். தான் எப்படியான தந்தையாக இருக்க வேண்டும் என்கிற பதற்றமும் பரவசமும் மணிக்குத் தொற்றிக் கொண்டன. முதல் நாள் முதலே நான் அவளுடன் உரையாடத் தொடங்கியிருந்தேன். அதுவரையிலான என் வாழ்க்கையை குட்டிக்குட்டி கதைகளாக அவளுக்குச் சொன்னதுடன், அவள் அப்பாவைப் பற்றிய கதைகளையும் அவளுடன் பகிர்ந்திருந்தேன். யாரும் என்னுடன் வராத பயணங்களில் அவள் எனக்குத் துணையாக வந்தாள். எல்லோரும் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று சொன்னபோதுகூட, `நிச்சயம் எனக்கு பெண்தான் பிறப்பாள்' என்று உறுதியுடன் இருந்தேன்.

 சாரதா க்ளிக் செய்த புகைப்படங்கள்
சாரதா க்ளிக் செய்த புகைப்படங்கள்

`அஹானா' உட்பட, பெண் குழந்தைக் கான பெயர்களை மட்டும்தான் தேர்வு செய்திருந்தோம். `ரவுடி பேபி’ பாடலைக் கேட்டால், வயிற்றில் உதைக்கத் தொடங்கி விடுவாள். அவளை வயிற்றில் ஏந்திக்கொண்டே அவளுக்குப் பிடித்த பாடல்களுக்கு அவளோடு நடனமாடியிருக்கிறேன். அவளின் சேட்டைகளைவைத்தே, அவள் இப்படித்தான் இருப்பாள் என எனக்குள் உருவகப்படுத்திக்கொண்டேன்.

2019 பிப்ரவரி 26 அன்று நான் அவளைப் பிரசவித்துவிடுவேன் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள்.

பிரசவிப்பதற்கு 20 நாள்களுக்கு முன், அந்தத் துயரப் பகல் புலர்ந்தது. காலை எப்போதும்போல எழுந்தேன். ஆனால், அவள் எப்போதும்போல் எட்டி உதைக்கவில்லை. மனத்தில் நெருட, மணியிடம் சொன்னேன். 'பிரச்னையெல்லாம் எதுவும் இருக்காது' என்று சமாதானப்படுத்தினார். அன்று இரவு படுக்கச்செல்லும்போது பாப்பாவிடம் மணி ஏதோ பேச, அசைவு கொஞ்சம் இருந்தது. அதனால் மனது சற்று ஆசுவாசமடைய, உறங்கச் சென்றோம்.

மறுநாள் விழித்தபோது, வயிற்றில் ஏதோ பிரச்னை இருப்பதுபோலத் தோன்றவே, உயிர் கவ்விய அச்சத்துடன் மருத்துவரிடம் சென்றோம். பல பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள், என் அஹானா வயிற்றிலேயே இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதைக் கேட்ட அடுத்த நொடி, மணி அடி வயிற்றிலிருந்து `ஓ’வென அழத் தொடங்கினார். `என் குழந்தையை நானே கொன்றுவிட்டேன்’ எனக் கதறினார். அவர் அப்படி அழுது நான் பார்த்ததில்லை.

நான் எப்போதும்போல அஹானாவிடம் பேசத் தொடங்கினேன். `நீ இறந்துட்டதா இவங்க சொல்றாங்க அம்மு! அதெல்லாம் பொய். எழுந்துக்க' என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளுக்குப் பிடித்த பாடல்களை போட்டுக் காட்டினேன். அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவளை வயிற்றிலிருந்து வெளியே எடுக்க வேண்டியதுதான் அடுத்தகட்டம் என்றார்கள் மருத்துவர்கள். அறுவை சிகிச்சையா, பிரசவமா என்ற ஆலோசனை செய்து, பிரசவம் மூலமே பெற்றெடுக்கவைக்க முடிவுசெய்து, வலியெடுப் பதற்கான மருந்து கொடுத்து, என்னைக் காத்திருக்கச் செய்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக என் வயிற்றின் உருவம் மாறத் தொடங்கியது. இறந்தே பிறக்க இருப்பவளைப் பெற்றெடுப்பது போன்ற மரண வேதனை வேறு எதுவும் இல்லை. பிரசவிக்கும்போதுகூட அவளது அழுகைச் சத்தம் கேட்கும், கைகால்களை உதைப்பாள், இவர்கள் சொல்வது பொய்யாகும் என்று நம்பினேன். ஆனால், இறந்துதான் பிறந்தாள். என்னிடம் குழந்தையின் முகத்தை அவர்கள் காட்டவில்லை. எரிப்பதா, புதைப்பதா என எனது அறைக்கு வெளியே விவாதித்துக் கொண்டிருந்தார்கள். `என்ன குழந்தை?' என்று மட்டும் கேட்டேன். `பெண் குழந்தை' என்றார்கள்.

மருத்துவமனையிலிருந்து நான் வீடு திரும்பிய நாள்கள், வாழ்வின் நரகம். தற்கொலை எண்ணங்கள் தோன்றின. பித்துப்பிடித்தவள் ஆனேன். இரவுகளிலெல்லாம் அழுதேன். `நீ உன் பிள்ளையை இழந்துட்டே... நான் என் பொண்ணை இழந்துருவேனோன்னு பயமா இருக்கு’ என்றார் என் அம்மா. புகுந்த வீட்டில், என்னை மீட்டுக்கொண்டுவர எவ்வளவோ முயற்சி செய்தார்கள். `நாம் இப்படி இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள்தாம் இன்னும் பாதிக்கப்படுவார்கள்' என்பது புரிந்தது.

அவளை இழந்த ஐந்தாம் நாள், கையில் என் கேமராவை எடுத்தேன். மனம் பித்துப்பிடித்துவிடாமல் ஏதேனும் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். அஹானா வயிற்றில் இருந்தபோது, `அம்மா, குழந்தைகள் போட்டோகிராபர் ஆகப்போறேன்' என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அது என்னால் முடிந்ததா..?

மனதும் உடலும் முன்புபோல இல்லை. எடை கூடத் தொடங்கியது, உடல் அமைப்பு மாறத் தொடங்கியது. என் பாசிட்டிவிட்டியெல்லாம் காணாமல்போய், நெகட்டிவிட்டி அப்பிக்கொண்டது. அஹானா ஒருவேளை என்னுடன் இருந்திருந்தால், கர்ப்பகால ஹார்மோன் மாற்றங்கள் தந்த இந்த உடல், மன மாற்றங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்திருக்காது. ஆனால், அவளுக்காக, அவள் தந்த தாய்மைக்காக என் உடலும் உயிரும் இவ்வளவு மாற்றங்களைச் சந்திக்க... கடைசியில் அவள் இல்லாமல் போன துயரம் சொல்லிப் புரியாது.

 மகளின் உருவம் ஓவியமாக...,  கணவருடன்...
மகளின் உருவம் ஓவியமாக..., கணவருடன்...

நிறைய அழுதேன். அப்படி அழுது கொண்டிருந்த ஓர் இரவில்தான், `அஹானா உன்னோடுதான் இருக்கான்னு நீதானே சொல்லுவ... அப்புறம் ஏன் அழுதுகிட்டே இருக்க?' என்று மணி என்னிடம் கேட்டார். அப்போதுதான் மனத்தில் சுள்ளென்று ஏதோ ஒன்று வெட்டியது. என்னை மீட்டெடுப்பதற்காக ஹீலிங் தெரபிக்குச் சென்றேன். அஹானா வுக்காகப் பார்த்துப் பார்த்து சாப்பிட்டவள், என் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடத் தொடங்கினேன். என் உடல்நலனில் அக்கறை செலுத்தினேன். எத்தனையோ வலிகளை ஆற்றுப்படுத்திவிடும் வல்லமை காலத்துக்கு உண்டென்பார்கள். ஆனால், குழந்தையை இழந்த காயத்துக்கு காலத்திடம்கூட மருந்து இல்லை என்பதுதான் நிதர்சனம். என் நிலையில் இருக்கும் ஒரு தாயைத் தவிர, வேறு எவராலும் அந்த வலியைப் புரிந்துகொள்ள முடியாது என்றுணர்ந்தேன். என்னைப்போன்று இழப்பைச் சந்தித்தவர்களின் வலிகளை, ‘தயங்காமல், என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், வார்த்தைகளில் பாரத்தை இறக்கிவையுங்கள்’ என கேட்கத் தொடங்கினேன்.

அந்த நேரம் ஆச்சர்யமாக வேறொரு சம்பவம் நடந்தது. அஹானா வயிற்றிலிருந்துபோது, குழந்தைகளைப் புகைப்படம் எடுக்கும் புராஜெக்ட் ஒன்றுக்காக ஒரு மருத்துவமனையில் பேசியிருந்தேன். அப்போது மறுத்தவர்கள், அவள் இறப்புக்குப் பிறகு இரண்டொரு மாதங்கள் கழித்து என்னைத் தொடர்புகொண்டார்கள். தாய்மைத் தருணங்கள் மற்றும் குழந்தைகளைப் புகைப்படம் எடுக்கும் அவர்களது இன்-ஹவுஸ் புராஜெக்ட், எதிர்பாராமல் எனக்குக் கிடைத்தது. தாய்ப்பால் தொடர்பான விழிப்புணர்வுக்காக ஒரு வீடியோ பதிவு செய்தேன். அதில் பேச ஒத்துழைத்த முதல் பெண், தன் குழந்தையின் பெயர் அஹானா என்றார். என் இதயம் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றது.

எங்கள் ஸ்டூடியோவுக்கான முதலீடு அளிக்க, அதிக பழக்கமில்லாத ஒருவர் முன்வந்தார். `அஹானா போட்டோகிராபி’ தொடங்கியது அப்படித்தான். அஹானா என்னுடன் இல்லையென்றாலும், அவள்தான் என்னை வழிநடத்துகிறாள் என்பதை, எதிர்பாராமல் நடந்த அத்தனை நல்ல விஷயங்களும் எனக்கு உணர்த்தின.

யானைகளும் பட்டாம்பூச்சிகளும் என்னையும் என் மகளையும் இணைப்பவை. நான் முடங்கியிருக்கும் நிமிடங்களில் எல்லாம் ஏதோ ஒரு வடிவில் யானையும் பட்டாம்பூச்சியும் என் கண்களுக்குத் தென்பட்டுவிடும். இப்போதும் யாராவது, `அஹானா போட்டோகிராபியா?' என விசாரிக்கும்போது, என் இதயம் ஒருமுறை நின்றுதான் துடிக்கும். அவள் பெயரைக் கேட்கும்போது குரல் தழுதழுக்கும்.

ஸ்கேன் வழியாக மட்டுமே பார்த்த அவளது முகத்தை உருவமாக வரைந்து தரச் சொல்லி எனது ஸ்டூடியோவில் வைத்திருக்கிறேன். இழப்போடு பயணிக்கத் தொடங்க வேண்டும் என்பதை, என்னை மீண்டெழச் செய்துகொண்டிருக்கிற, நிகழ மறுத்த என் அற்புதம், எனக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். நான் கடவுள் நம்பிக்கையற்றவள். ஆனால், அஹானா இருப்பதாக நம்புகிறேன். அஹானாதான் என் கடவுள். நான் கடவுளின் அம்மா!''