Published:Updated:

கல்விக்கடன் விஷயத்தில் இந்த தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா? ஒரு வழிகாட்டி! #HerMoney

Education (Representational Image)
News
Education (Representational Image)

இவ்விரண்டு சம்பவங்களும் கல்விக்கடன் குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என துணிந்து சொல்வதற்கான உதாரணங்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி கல்விக்கடனை பற்றிய அடிப்படை தகவல்கள்கூட நம்மில் பலருக்குத் தெரியவில்லை.

Published:Updated:

கல்விக்கடன் விஷயத்தில் இந்த தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா? ஒரு வழிகாட்டி! #HerMoney

இவ்விரண்டு சம்பவங்களும் கல்விக்கடன் குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என துணிந்து சொல்வதற்கான உதாரணங்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி கல்விக்கடனை பற்றிய அடிப்படை தகவல்கள்கூட நம்மில் பலருக்குத் தெரியவில்லை.

Education (Representational Image)
News
Education (Representational Image)

பிரியங்கா - சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் முதல் தலைமுறை பட்டதாரி. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களுக்குப் பின், வாங்கிய கல்விக்கடனை அடைப்பதற்கு கடன் வாங்கிய வங்கிக்குப் போனவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி!

ஐந்து வருடங்களுக்கு முன் கல்லூரியில் சேருவதற்காகக் கல்விக்கடனை பெற்றபோது, கல்விக்கடன் மீதான வட்டியை இவர்கள் கட்டத் தேவையில்லை என்று அவ்வங்கிக் கிளையில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர் சொல்லியிருக்கிறார். அதை நம்பி ஆவணங்களை சரியாகப் பார்க்காமல் பிரியங்காவின் குடும்பமும், கல்விக்கடனுக்கான மாதாந்தர வட்டியைக் கட்டவில்லை. அதைக் கட்ட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. கல்விக்கடன் தொடர்புடைய வங்கி ஆவணங்களையும் சரியாக வாசிக்கவில்லை. வாசித்தாலும் பல பக்கங்களைக் கொண்ட அந்த ஆவணத்தில் கடுகு சைஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் `செய் செய்யாதே' பட்டியலைப் புரிந்து கொண்டிருப்பாரா என்பதும் சந்தேகமே.

Education (Representational Image)
Education (Representational Image)

பிரியங்கா வாங்கியது 4.5 லட்சம் கல்விக்கடன். ஆனால், வட்டியுடன் சேர்த்து அவர் கட்டியது ஏறக்குறைய 7 லட்ச ரூபாய். மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனுக்கான வட்டியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மத்திய அரசு மானியமாக வழங்குகிறதே என்ற கேள்வி எழலாம். அம்மானியம் எல்லா வங்கிகளிலும் எல்லா, மாணவர்களுக்கும் கொடுக்கப்படுகிறதா என்றால்... இல்லை. கல்விக்கடன் வட்டிக்காக அரசாங்கம் கொடுக்கும் மானியம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மானியம் பெறுவதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4 லட்சத்தைத் தாண்டக் கூடாது.

இப்போது மற்றவோர் உதாரணத்தைப் பார்க்கலாம்.

அபிஷேக் - இவரும் முதல் தலைமுறை பட்டதாரி. வங்கியில் பெறப்பட்ட கல்விக் கடன் மூலம் பொறியியல் படிப்பை முடித்த பின் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தவர். வேலைக்குச் சேர்ந்த ஒரு வருடம் முடிந்த பின் தந்தையின் மருத்துவச் செலவுக்காகத் தனிநபர் கடன் (பெர்சனல் லோன்) கேட்டு வங்கியை அணுகியபோது, கல்விக்கடனை திருப்பிச் செலுத்தாததால் அவரது சிபில் ஸ்கோர் குறைந்திருப்பதாகவும், அதனால் கடன் வழங்க முடியாதென்றும் சொல்லி வங்கி அதிர்ச்சி கொடுத்தது.

மேலே குறிப்பிட்ட இவ்விரண்டு சம்பவங்களும் கல்விக்கடன் குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என துணிந்து சொல்வதற்கான உதாரணங்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமின்றி கல்விக்கடனை பற்றிய அடிப்படை தகவல்கள்கூட நம்மில் பலருக்குத் தெரியவில்லை.

15 - 20 வருடங்களுக்கு முன், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடித்து கல்லூரிக்குள் நுழையக் காத்திருந்த மாணவ, மாணவிகள் பலர், உயர் கல்வி கட்டணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தனர். அப்படி திறமையிருந்தும் பொருளாதார சூழல்களால் கல்வியை மேற்கொண்டு தொடர முடியாத மாணவ, மாணவியர்களுக்குக் கிடைத்த பெரும் வரம்... கல்விக்கடன். கல்வி என்பது பொருளாதார அடுக்கில் உயர்ந்தவர்களுக்குத்தான் என்ற நிலை மாறியிருப்பதற்கு, வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் மிக முக்கியமான காரணம். பொருளாதாரச் சிக்கல்கள் படிக்க விழையும் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் ஒரு தடைக்கல்லாக இல்லாமலிருக்கும் சூழலை கல்விக்கடன்கள் உருவாக்கியுள்ளன.

யாருக்கெல்லாம் கல்விக்கடன் வழங்கப்படும் என்பது முதல் கல்விக்கடன் பெறுபவர்கள்/பெற நினைப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன, அறிந்துகொள்ள வேண்டியது என்ன என்பது வரை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Degree
Degree

எந்தெந்தப் படிப்புகளில் சேருவதற்குக் கல்விக்கடன் பெற முடியும்?

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு முதலிய அரசு அமைப்புகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளோமா (Post graduate diploma) படிப்புகளிலும் சேர்ந்துள்ளவர்கள் கல்விக்கடனுக்காகத் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.

ஐசிடபிள்யூஏ (ICWA), சிஏ (CA), சிஎஃப்ஏ (CFA) போன்ற படிப்பு தொடங்கி, டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் போன்ற அரசு அங்கீகார அமைப்புகளின் அனுமதியுடன் நடத்தப்படும் படிப்புகள், மேலும் நர்ஸிங் டிப்ளோமா அல்லது நர்சிங் பட்டப் படிப்பு, பைலட் டிரெயினிங் உள்ளிட்ட பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா படிப்புகளில் சேருபவர்களும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் அங்கீகாரம் பெற்ற படிப்புகளில் சேருபவர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்கும். இவை தவிர, வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தேர்வு செய்யப்பட்டவர்களும் வங்கிகளில் கல்விக்கடன் பெறலாம். மேலும், பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி படிப்புகளில் சேர்வோருக்கும் கல்விக்கடன் கிடைக்கும். ஆனால், இவர்களுக்குக் கல்விக்கடன் மீதான வட்டிக்கு சலுகை கிடைக்காது.

கல்விக்கடன் பெற தேவையான ஆவணங்கள்

* 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

* பள்ளி மாற்றுச் சான்றிதழ் ( Transfer certificate).

* பெற்றோரின் ஆதார் கார்டு மற்றும் வருமானச் சான்றிதழ்.

* பெற்றோரின் வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள்.

* இருப்பிடச் சான்றிதழ்.

* சாதிச்சான்றிதழ்.

* ஆதார் கார்டு.

* கல்லூரியில் இடம் கிடைத்ததை உறுதிப்படுத்த கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்படும் சான்றிதழ்.

* கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.

Loan
Loan

கல்விக்கடனாக எவ்வளவு வழங்கப்படும்?

இன்று கல்விக்கடனாக 4 லட்சம் ரூபாய் வரை எவ்வித அடமானமும் இல்லாமல் பெறமுடிகிறது. பிரபலமான முன்னணிக் கல்வி நிறுவனங்களில், அதிக கட்டணத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அடமானமில்லாமல் 7.5 லட்சம்வரை கல்விக்கடன் அளிக்கப்படுகிறது. 4 லட்சத்துக்கு அதிகமாக 7.5 லட்சம் வரையிலும் கடன் பெறும்போது மூன்றாம் நபர் உத்தரவாதமும் கொடுக்க வேண்டியிருக்கும். வாங்கும் கடன் தொகை 7.5 லட்சம் ரூபாய்க்கும் மேல் போனால் வீடு, மனை முதலிய சொத்துகளை உத்தரவாதமாகக் கொடுக்க வேண்டி வரும். இந்த வகையில் அதிகபட்சம் 25 லட்ச ரூபாய்வரை கல்விக்கடன் பெறலாம்.

இத்துடன் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்காக அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம். வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடனாக வழங்கப்படுகிறது.

கல்விக்கடனில் எந்தக் கட்டணங்கள் எல்லாம் அடங்கும்?

கல்லூரிக் கட்டணம், விடுதி + உணவுக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகம் மற்றும் ஆய்வகக் கட்டணம், புத்தகங்கள், லேப்டாப், புராஜெக்ட், படிப்பு தொடர்பான போக்குவரத்துச் செலவுகள் போன்ற செலவுகளுக்குக் கல்விக்கடன் பெறலாம். வெளிநாடு செல்லும் மாணவர்களின் போக்குவரத்துச் செலவுக்கும் கல்விக்கடன் பெற முடியும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்களுக்கு அரசு அமைப்புகள் நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தின்படி மாத்திரமே கடன் பெற முடியும்.

கல்விக்கடன் பெற வங்கிகளில் முன் பணம் செலுத்த வேண்டுமா?

ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளில் முன்பணம் செலுத்தத் தேவையில்லை. இந்தியாவில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் வாங்கினால் கடன் தொகையில் 5 சதவிகிதமும், வெளிநாடுகளில் படிக்க ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் வாங்கினால் கடன் தொகையில் 15 சதவிகிதமும் முன்பணமாகச் செலுத்த வேண்டியதிருக்கும். இவ்விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

Bank (Representational Image)
Bank (Representational Image)

எந்த வங்கியை கடனுக்காக அணுகலாம்?

முன்பிருந்த விதிமுறைகளின்படி கல்விக்கடன் பெற விரும்புவோர், வீட்டுக்கு அருகிலுள்ள வங்கிகளைத்தான் அணுக வேண்டுமென்று இருந்தது. ஆனால் தற்போது, கல்விக்கடன் பெறுவோர் கல்வி பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள வங்கிகளை அணுக வேண்டும். இதன் மூலமே அக்கல்லூரியின் தரம் குறித்து வங்கியால் அறிய முடியும் என்பதே விதிமுறைக்கான அடிப்படை காரணம்.

கல்விக்கடனுக்கான வட்டிவிகிதம் என்ன?

கல்விக்கடனுக்கு ஆண்டு வட்டி 12% - 17.3% வரை இருக்கிறது. இவ்வட்டி விகிதமும் வங்கிக்கு வங்கி மாறுபடும். கல்விக்கடன் பெறும் மாணவர்கள் படிக்கின்ற காலத்திலேயே வட்டியைச் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. படித்து முடிக்கும்வரை வட்டி கொடுக்க இயலாதென்பதை மாணவர்களே வங்கிகளிடம் முறைப்படி எழுதியும் கொடுக்கலாம்.

யாருக்கெல்லாம் மானியம் பெறும் தகுதி உண்டு?

நம்மில் பலரும் அறியாத ஒரு விஷயம், கல்விக்கடனுக்கு செலுத்தும் வட்டித் தொகையை மானியமாக மத்திய அரசு வங்கிகளுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒருவர் தான் கடன் தொகையை மாத்திரம் திரும்பி செலுத்தினால் போதும். இந்த மானியத்தைப் பெறுவதற்கு கல்விக்கடன் பெற்ற வங்கியை அணுகி உங்களுக்கு மானியம் பெறுவதற்கான தகுதி உள்ளதா என்பதை விசாரிக்கவும். ஒருவேளை உங்களுக்கான கடன் தொகையுடன் வட்டியும் சேர்க்கப்பட்டிருந்தால் உடனேயே மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

Rupees
Rupees
Photo by rupixen.com on Unsplash

வங்கியில் இதற்கான விண்ணப்பத்துடன், உங்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு குறைவானது என்ற வருமான சான்றிதழைக் கொடுக்க வேண்டும். வருமான வரி சான்றிதழ் கொடுக்க இயலாதவர்கள் உங்கள் பகுதி தாசில்தாரிடம் பெறப்பட்ட சான்றைக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுத்து, வங்கியில் உங்களது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாணவர் அவரின் கல்விக்கடன் தொகையை மட்டும் திரும்பி செலுத்தினால் போதுமானது.

கல்விக்கடன் தொடர்பான அடிப்படைத் தகவல்களைப் பார்த்துவிட்டோம். ஒருவர் ஒரே வங்கியில் மாத்திரம்தான் விண்ணப்பிக்க முடியுமா? கல்விக்கடன் கிடைத்ததும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னென்ன? வங்கிகள் மட்டும்தானா கல்விக்கடனை வழங்க முடியும்? இன்னும் பல தகவல்களை அடுத்த வாரம் பார்க்கலாம் தோழிகளே!