நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறேன். கணவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறார். 14 வயதில் மகள், 10 வயதில் மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். 15 வருட திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்ப வருடங்களில் கொஞ்சம் தென்பட்டது. பிள்ளைகள் பிறந்த பிறகு, அவர்கள் நடப்பது, பேசுவது, அவர்களைப் பள்ளியில் சேர்ப்பது என அவர்களது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும்தான் மகிழ்ச்சி என்றானது. எனக்கும் கணவருக்கும் இடையிலான சந்தோஷ தருணங்கள் வறண்டு போனதுடன், சண்டை, சச்சரவுகள் பெருக ஆரம்பித்தன. இப்போது 90% கசப்புடன்தான் சென்று கொண்டிருக்கிறது எனக்குக் குடும்ப வாழ்க்கை.
என் கணவர் வீட்டு உறவினர்கள் சில பிரச்னைகள் செய்கிறார்கள் என்றாலும், பல பிரச்னைகள் எங்கள் இருவருக்கும் இடையில்தான் ஏற்படுகிறது. சண்டை மிகும் போதெல்லாம் தகாத வார்த்தைகளால் பேசுவது, அடிப்பது, பாத்திரங்கள், பொருள்களை உடைப்பது என்று வீட்டை நரகம் ஆக்குவார்.

ஒரே வீட்டில் இருந்தாலும் 10 நாள்கள், இரண்டு வாரங்கள், ஒரு மாதம் வரை என இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தில் முழிக்காமல் இருப்பது என்றிருப்போம். சமீபத்தில், ஏழு மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்துவருகிறோம்.
ஒவ்வொரு முறை எங்களுக்கு இடையில் பிரச்னை வரும்போதும் என் பொறுமையும் சகிப்புத்தன்மையும், `இனி என்னால முடியவே முடியாது' என்று தீர்ந்துபோனாலும், `ஒருநாள் திருந்தி நடப்பார்' என்ற அசட்டு நம்பிக்கையும் இன்னொரு பக்கம் என்னை விடாது. எனவே, சண்டையை என் மனதை வலுக்கட்டாயமாக மறக்கவைத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயல்வேன். ஆனால், சென்ற முறை சண்டை வந்தபோது தகாத வார்த்தைகள், அடியுடன் கொதிக்கும் பாலை என் காலில் ஊற்றிவிட்டார். வலி வடிந்தாலும் என் மனவேதனை ஆறவில்லை. என் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.
குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புதான் என்பதால், இரண்டரை மாதங்கள் அங்கேயே தங்கிவிட்டேன். சமாதானம் செய்யவோ, வீட்டுக்கு அழைக்கவோ கணவரிடமிருந்து ஒரு போன் கூட இல்லை. பிறகு பிள்ளைகளுக்குப் பள்ளி திறந்தபோது, மீண்டும் கணவர் வீட்டுக்கே திரும்ப வேண்டிய கட்டாயம். அப்போது, என் பெற்றோர் மற்றும் என் மாமியார் என் கணவருக்கு வழக்கம்போல அறிவுரை கூறினர். ஆயினும் அவர் தன் செயல்களுக்காக வருந்தவோ, திருந்தவோ இல்லை வழக்கம்போல். அதிலிருந்து இதோ ஓடிவிட்டன ஏழு மாதங்கள்... ஒரே வீட்டில் இரு துருவங்களாக வாழ்ந்து வருகிறோம். குடும்பச் செலவுக்கும் பணம் தருவதில்லை.

என்றாலும் என்னால் சமாளிக்க முடியும் என்பதை அவருக்குப் புரியவைக்க நானே அனைத்தையும் பார்த்துக்கொண்டேன்.
இப்போது, `இதுதான் வாழ்க்கை. பிடிக்கவில்லை என்றாலும், கொடுமை என்றாலும் பிள்ளைகளுக்காக இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். என்றேனும் ஒருநாள் அவர் திருந்துவார்' என்பதெல்லாம் என் மனதிலிருந்து மறைந்துவிட்டது. இந்த உறவை முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானமாகத் தோன்றுகிறது. எங்கள் சண்டையில் பிள்ளைகளின் மனநலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற தவிப்பு எனக்கு இருக்கிறது.
அவருக்கோ, அம்மாவைவிட அப்பாவை பிள்ளைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்ற வீம்பே இருக்கிறது. எனவே, குழந்தை வளர்ப்பில் சற்று கண்டிப்பாக இருக்கும் என்னைவிட, தாங்கள் எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் அப்பாவை என் பிள்ளைகளுக்குப் பிடிக்கிறது. அவர் அளவுக்கு என்னிடம் ஒட்டவோ, அவரால் நான் படும் கஷ்டத்தை கண்ணுக்கு எதிராகப் பார்த்தாலும் என்னைப் புரிந்துகொள்ளவோ மறுக்கின்றனர். இதனால், பிள்ளைகளும் இப்படி நம்மை நினைக்கும்போது நாம் யாருக்காக வேண்டா வெறுப்பான இந்த வாழ்க்கையை வாழ்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் என்று விரக்தி ஆகிறது.
என் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிய நான் முடிவெடுத்துவிட்டேன். அதற்குப் பின்னான வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும், பொருளாதார தற்சார்பும் என்னிடம் இருக்கிறது. நான் பார்க்கும் வேலையும், பெறும் சம்பளமும் என்னையும், என் பிள்ளைகளையும் நிச்சயமாகக் காப்பாற்றும். பிள்ளைகள் யாருடன் இருப்பார்கள் என்பதையெல்லாம் வழக்கின் போக்கில் தீர்மானித்துக்கொள்ளலாம்.

இப்போது நான் எடுத்துவைக்க வேண்டியது, விவாகரத்துக்கான முதல் படி. ஆனால், என் அப்பா அதைப் பற்றி பேசவே மறுக்கிறார். அவரை மீறி என்னால் இதில் சட்டபூர்வமாக முன்நகரவே முடியவில்லை. மிகவும் கண்டிப்பான என் தந்தையாலும், எதற்கும் ஒத்துவராத கணவராலும், ஒரு மாற்றத்திற்காக வெளியூர் பயணம் செல்லலாம் என்றால்கூட என்னால் முடியவில்லை. சகிப்புத்தன்மை சுழியாகி மனச்சோர்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. என் கணவரைவிட, பெற்று வளர்த்த மகள் இத்துனை துன்பப்படுவதைப் பார்த்தும் எனக்கான விடுதலையை யோசிக்காமல், சமூக மதிப்பீடுகளுக்கு அஞ்சி என்னை நிம்மதியில்லாத வாழ்வுக்குத் திரும்பச் சொல்லும் அப்பா மேல் அதிகக் கோபம் வருகிறது.
என் வாழ்க்கைதான் என்ன என்ற சுயபச்சாதாபமும், மன அழுத்தமும் தூக்கமின்மை, பசியின்மை என இப்போது எனக்கு உடல்நலப் பிரச்னைகளையும் ஆரம்பித்து வைத்திருக்கின்றன. நிழலற்ற இந்த நீண்ட பாலையில் இன்னும் எத்தனை காலம் நடக்க வேண்டும் நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.