நானும் என் கணவரும் முதல் தலைமுறை பட்டதாரிகள். இருவருமே பணிபுரிகிறோம். பெரியவர்கள் பார்த்துவைத்த திருமணம். மிடில் க்ளாஸ் குடும்பம். இரண்டு பிள்ளைகள்... நிம்மதியான வாழ்க்கை. இப்போது அது சுழலில் சிக்கிக்கொண்டுள்ளது.
நான் இயல்பிலேயே கொஞ்சம் இரக்க குணம் உள்ளவள். மிடில் க்ளாஸ் குடும்பம் என்றாலும், என் கையில் சம்பாத்தியம் இருப்பதால் எனக்குத் தெரிந்த வட்டத்தில் சின்னச் சின்ன உதவிகள் செய்வேன். பெரிதாக ஒன்றும் இல்லை... ஆயிரங்களில் கைமாத்து கேட்டால் கொடுத்துவிட்டு, பின்னர் வாங்கிக்கொள்வேன். தொகை ஆயிரத்துக்குள் என்றால், கைமாத்தாக வாங்கிய பணத்தை அவர்கள் கொடுக்கத் திணறுவது தெரிந்தால், 'சரி வேண்டாம் விடுங்க...' என்று சொல்லிவிடுவேன். ஆனால், என்னுடைய இந்த உதவும் குணத்தையே சிலர் என் மைனஸாக பயன்படுத்திக்கொண்டனர். சீராகச் சென்றுகொண்டிருந்த வாழ்க்கையின் போக்கையே கலைத்துபோட்டுவிட்டனர்.

எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் பன்னிரண்டாம் வகுப்பும் இளையவள் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர். அவர்களின் படிப்பு, திருமணத்துக்கு என நானும் என் கணவரும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம், நகை என்று சேர்த்துவந்தோம். மிடில் க்ளாஸ் குடும்பம்தான் என்றாலும், பொருளாதார ரீதியாகக் கட்டுக்கோப்பாக குடும்பத்தை நடத்தியதால், சிறப்பான சேமிப்பு சாத்தியமானது.
இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன், என் தாய்வழி உறவினர் ஒருவர், தன் மகளுக்குத் திருமணம் வைத்திருப்பதாகவும், கடனாக ஐந்து லட்சம் ரூபாய் வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டார். அவர் மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்தத் திருமணத்தை நடத்துகிறார் என்பதை நான் அறிவேன். ஆனாலும், அவ்வளவு பெரிய தொகையை கொடுத்து உதவுவதற்கு எல்லாம் நாம் பொருத்தமானவள் இல்லை என்பதால், என் இயலாமையை கூறினேன். ஆனால் அவர் மனைவியோ, உறவினர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டதாகவும், அனைவரும் கையைவிரித்துவிட்டனர் என்றும், இந்தத் தொகை கிடைக்கவில்லை என்றால் தங்கள் மகளின் திருமணமே நின்றுவிடும் என்றும் கண்ணீர் வடித்தார். என் உறவினரும் அழுதார்.
மகளின் திருமணச் செலவுகளுக்காக நெருப்பில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெற்றோரின் கண்ணீரை பார்க்க எனக்கு மிகவும் துயரமாக இருந்தது. இன்னொரு பக்கம், எங்கள் சேமிப்பில் இருந்த தொகை ஏறக்குறைய அந்த ஐந்து லட்சம்தான். அதை மொத்தமாக அவர்களிடம் கொடுக்கவும் யோசனையாக இருந்தது. `ஒரே ஒரு மாசம்தான் கைமாத்தா கேட்குறோம். கல்யாணம் முடிஞ்சதும் மொய்ப் பணம் வரும். அதை அப்படியே உங்கிட்ட கொண்டுவந்து கொடுத்துடுவேன். நீயும் ரெண்டு பொம்பளப் புள்ளைங்கள வெச்சிருக்க... எனக்குத் தெரியும். எங்களை நம்பிக் கொடு... ஒரு பிரச்னையும் வராது...' என்று கணவனும் மனைவியும் என்னை கரைத்தார்கள். நானும், பெண் பிள்ளையின் கல்யாண விஷயமாக இருக்கிறது, சரி கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
என் கணவருக்கு அந்த உறவினரை ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது. வெறுப்பாக நடந்துகொள்ள மாட்டார் என்றாலும், அவர் விஷயங்களில் பட்டும் படாமலும் இருந்துகொள்வார். இந்நிலையில், அவருக்கு 5 லட்சம் கொடுப்பது என்பதை என் கணவர் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதால், என் வங்கிக்கணக்கில் நாங்கள் சேமித்து வந்த அந்தத் தொகையை, என் கணவரிடம் சொல்லாமலேயே எடுத்து, நான் அந்தத் தம்பதியிடம் கொடுத்துவிட்டேன். `அஞ்சு லட்சம்... அவருக்குத் தெரியாம வேற கொடுக்குறேன். நான் எடுக்குறது பெரிய ரிஸ்க். என்னை எந்தச் சிக்கல்லயும் மாட்டிவிட்டுடாம பணத்தை திருப்பிக் கொடுத்துடுங்க' என்று சொல்லியே கொடுத்தேன். அவர்களும், திருமணம் முடிந்ததும் ஒரு மாதத்துக்குள் பணத்துடன் வருவதாகக் கூறினார்கள்.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. நான் செய்த ஓர் அவசர உதவி ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு உதவியிருக்கிறது என்று எனக்கும் நிறைவாக இருந்தது. ஆனால், திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் அவர்கள் பணத்தை திருப்பியளிக்கவில்லை. போன் செய்தபோது, பணம் தயாராக இருக்கிறது என்றும், விரைவில் கொண்டுவந்து கொடுப்பதாகவும் கூறினர். பிறகு, போன் செய்தால் அட்டண்ட் செய்வதை நிறுத்தினர். எனக்கு மனதுக்குள் பயம் பிடித்துக்கொண்டது. நேரிலேயே சென்றுவிட்டேன். இடியாக ஒரு செய்தியை சொன்னார்கள்.
`ஏற்கெனவே ஆறு லட்சத்துக்குக் கடன் இருந்தது. வட்டிக்கு வாங்கின கடன். அவங்க ரொம்ப டார்ச்சர் கொடுத்தாங்க. அதனால மொய்ப் பணத்தை அங்க கொடுத்துட்டோம். நீ கொஞ்சம் பொறுத்துக்கோ... வீட்டுப் பத்திரத்தை அடமானம் வெச்சு உனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடுறோம்' என்றார்கள். என் மனதுக்குள் கலவரமானது. `எங்களோட மொத்த சேமிப்பும் அதுதான்... உங்க பொண்ணுக்கு உதவப்போய் இப்போ என் வாழ்க்கை சிக்கல்ல வந்து நிக்குது. இதெல்லாம் எனக்குத் தேவையா..?' என்று கோபமாகச் சொல்லிவிட்டு வந்தேன்.
இரண்டு மாதங்கள் ஆகின, மூன்று மாதங்கள் ஆகின, ஆறு மாதங்கள் ஆகின... அவர்கள் வீட்டுக்கு நான் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். மனிதர்கள் கடன் வாங்கும்போது எப்படி பேசுகிறார்கள், கடன் வாங்கிய பின் எப்படி மாறிவிடுகிறார்கள் என்பதை எல்லாம் நேரடியாக உணர்ந்தேன். அப்போதுதான், இன்னோர் உறவினர் ஒருவர் பேச்சுவாக்கில், என்னிடம் கடன் வாங்கிய இந்தத் தம்பதி, பெண்ணின் திருமணத்துக்கு முன்னரே, திருமணச் செலவுகளுக்காகத் தங்கள் வீட்டை அடமானம் வைத்த தகவலைச் சொன்னார். என் உலகமே நின்றுவிட்டது. உடனடியாக அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். `உண்மைதான்... அந்தப் பணம் போதாமல்தான் உன்கிட்டயும் வாங்கினோம். தொழில்ல ஏற்பட்ட பெரிய நஷ்டத்துல காசெல்லாம் கைவிட்டுப் போச்சு. கல்யாணச் செலவுக்கு 10 லட்சம் தேவைப்பட்டுச்சு. என்ன பண்றதுனு தெரியல...' என்றார்கள். `எனக்கு அதெல்லாம் தெரியாது... என் பணத்துக்கு என்னதான் வழி..?' என்றேன். ஓர் இடம் இருப்பதாகவும் அதை விற்று விரைவில் எனக்குக் கொடுத்துவிடுவதாகவும் கூறினர்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக, இந்தப் பிரச்னையை என் கணவரிடம் நான் மறைத்துவந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தில் என் இயல்பே மாறிப்போனேன். என் நிம்மதி, சந்தோஷம் எல்லாம் தொலைந்துவிட்டது. அப்போதுதான் எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. என் கணவரின் கிராமத்தில் அவர் வீட்டுக்கு அருகில் அவர் சித்தப்பா தன்னுடைய இரண்டு சென்ட் இடத்தை விற்பதாகவும், அதை இவரை வாங்கச்சொல்லிக் கேட்பதாகவும் கூறினார். அதன் மதிப்பு 4 லட்சம் என்று சொல்லிய என் கணவர், எங்கள் சேமிப்பிலிருக்கும் பணத்தில் இடத்தை வாங்கிவிடலாம் என்றும், பின்னர் விலையேறியதும் தேவையின்போது விற்பது லாபமாக இருக்கும் என்று கூறினார். என் ரத்தமே உறைந்துவிட்டது.
என் கணவர் மிக நேர்மையாக நடந்துகொள்பவர். ஆனால் அந்த நேர்மையை பிறரிடமும் எதிர்பார்ப்பவர். இதனாலேயே இவருடன் பலருக்கும் செட் ஆகாது. என்றாலும், தன் இயல்புடன் பொருந்திப் போகும் சிலருடன் நல்ல உறவை மெயின்டெய்ன் செய்பவர். இந்நிலையில், அவர் மனைவியே அவரிடம் சொல்லாமல் இப்படி 5 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது தெரிந்தால், அவர் என்னை மன்னிக்கவே மாட்டார்; என்னால் அவர் கோபத்தை தாங்கவே முடியாது என்று புரிந்தது.
ஒரு தவறிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து தவறுகளைச் செய்வார்கள் என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இடம் வாங்க கணவர் எங்கள் சேமிப்புப் பணத்தை கேட்டபோது, என் நகைகளை அடமானம் வைத்து 4 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டேன். மாதம் மாதம் அதற்கு நான் வட்டிகட்ட ஆரம்பித்தேன். `எங்க இடத்தை வித்து பணம் கொடுத்துடுறோம்...' என்று சொன்ன அந்த உறவுக்கார தம்பதி மீது நம்பிக்கை வைத்துக் காத்திருந்தேன். ஆனால், அதோடு கொரோனா வந்துவிட, 'இப்போது எதுவும் செய்ய முடியவில்லை... மன்னித்துவிடு' என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர்.
இதற்கு மேல் இதை கணவரிடம் சொல்லாமல் இருக்கக் கூடாது, மிகவும் விபரீதமாகிவிடும் என்று ஒருவழியாகச் சொல்லிவிட்டேன். பெரிய பெரிய சண்டைகள், சூறாவளிகள் எல்லாம் வந்தன. இறுதியாக, `நகைக்கு வட்டி கட்ட வேண்டியதும், கொடுத்த அஞ்சு லட்சத்தை மறுபடியும் வாங்கி நகையை திருப்ப வேண்டியதும் உன் பொறுப்பு. நம்மளோட 15 வருஷ உழைப்போட சேமிப்பை, முன்ன பின்ன யோசிக்காம எடுத்துக்கொடுத்திருக்க. நீ செஞ்சது உதவியில்ல, நம்ம குடும்பத்துக்கு செஞ்ச துரோகம்' என்று சொல்லிவிட்டார்.

இந்த ஒரு வருடத்தில் நகைக்கு வட்டி மட்டும் நான் ஒரு லட்சம் கட்டியிருக்கிறேன். ஒருவேளை வாங்கிய பணத்தை அந்தத் தம்பதி திருப்பித் தந்தாலும் (அது ஆண்டவனுக்கே வெளிச்சம்), ஐந்து லட்சமே தருவார்கள். அவர்களுக்கு உதவப்போய் நான் கட்டிய ஒரு லட்சம் ரூபாய் வட்டியை, இனி கட்டப்போகும் வட்டியை யாரிடம் போய் கேட்பது என்று தெரியவில்லை. நானும் கணவரும் மருத்துவத் துறையில் பணிபுரிவதால் கொரோனா பொதுமுடக்கத்தில் வேலையிழப்பு, பொருளாதார இழப்பு என்று எதுவும் இல்லாமல் தப்பித்துவிட்டோம். ஆனால், இந்த வருடம் ப்ள்ஸ் டூ முடிக்கும் என் மகளை கல்லூரியில் சேர்க்க பணம் தேவைப்படுகிறது. அதற்காக என் கணவர் அலைந்துகொண்டிருக்கிறார். அவரை பார்க்கப் பார்க்க, என் குற்றஉணர்வு என்னைக் கொல்கிறது. வீட்டிலும் முன்போன்ற சிரிப்பு, சந்தோஷம் எதுவும் இல்லை. `நீ பண்ணின தப்பால குடும்ப நிம்மதியே போச்சும்மா...' என்று சில சமயம் வருத்தமாகவும், சில நேரங்களில் கோபமாகவும் சொல்கிறார்கள் மகள்கள்.
இந்தச் சுழலிலிருந்து நான் மீள வழியெதுவும் இருக்கிறதா?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.