Published:Updated:

வீட்டுக்குத் தெரியாத என் சேமிப்பு, கடனில் கணவர், பணத்தை கொடுக்க பயம்; என்ன செய்ய? #PennDiary74

Penn Diary
News
Penn Diary

`தொழிலில் ஆரம்பத்திலேயே அகலக்கால் வேண்டாம் என்று நீ கூறியும் கேட்காத உன் கணவர், தன் தவறான முடிவுகளுக்கான விளைவுகளை அவர்தான் சந்திக்க வேண்டும். நீ நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்து, நல்லா அம்மாவாக இருக்கத் தவறிவிடாதே’ என்று எச்சரிக்கிறது என் மனசாட்சி.

Published:Updated:

வீட்டுக்குத் தெரியாத என் சேமிப்பு, கடனில் கணவர், பணத்தை கொடுக்க பயம்; என்ன செய்ய? #PennDiary74

`தொழிலில் ஆரம்பத்திலேயே அகலக்கால் வேண்டாம் என்று நீ கூறியும் கேட்காத உன் கணவர், தன் தவறான முடிவுகளுக்கான விளைவுகளை அவர்தான் சந்திக்க வேண்டும். நீ நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்து, நல்லா அம்மாவாக இருக்கத் தவறிவிடாதே’ என்று எச்சரிக்கிறது என் மனசாட்சி.

Penn Diary
News
Penn Diary

நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். நான் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எங்களுக்கு 12-ம் வகுப்புப் படிக்கும் மகள், மற்றும் 10-ம் வகுப்புப் படிக்கும் மகள் என இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்.

Family (Representational image)
Family (Representational image)
Pexels

கொரோனா காலத்தில் கணவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. எனவே, தொழில் செய்ய முடிவெடுத்தார். என் நகைகளை அடகுவைத்து பணம் 2 லட்சம் ஏற்பாடு செய்தார். நான்கு லட்சம் கடன் வாங்கினார். ’இவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டுமா? ஆரம்பத்தில் சிறிய அளவில் செய்து பார்க்கலாமே’ என்று கூறிய என் வார்த்தைகளை அவர் சட்டை செய்யவில்லை. ஆனால் தொழில் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. ஒரு வருடத்தில் அதை மூட வேண்டிய அளவுக்கு நஷ்டம்.

பின்னர் மீண்டும் வேலை தேட ஆரம்பித்து, இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவரும் நானும் வாங்கும் சம்பளம் எங்கள் தினசரி செலவுகள், பிள்ளைகள் படிப்புக்கே சரியாக இருக்கிறது. அடகுவைத்த என் நகைகளை திருப்ப என்ன வழி என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம், வாங்கிய நான்கு லட்ச ரூபாய் கடனுக்கு வேறு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்.

Savings for Future
Savings for Future

என் கணவருக்கு எப்போதும் சேமிப்புப் பழக்கம் இருக்காது. மேலும் நான் சேமிக்கும் பணத்தையும், பெரிய டிவி வாங்க வேண்டும், பைக் வாங்க வேண்டும் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி வாங்கிவிடுவார். எனவே, அவருக்குத் தெரியாமல் நான் மாதம் ஒரு தொகையை சேமிக்க ஆரம்பித்தேன். கடந்த ஆறு வருடங்களாக அப்படி நான் சேமித்து வந்ததில், இப்போது 3 லட்சம் ரூபாய் சேர்ந்திருக்கிறது. ஆனால், இந்த சேமிப்புத் தொகை பற்றி என்னை தவிர என் கணவர், பெற்றோர் உட்பட யாருக்குமே தெரியாது.

’கணவர் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கும்போது, உனக்கு சேமிப்பு தேவையா? அந்தத் தொகையை எடுத்து அவரிடம் கொடுக்க வேண்டியதுதானே?’ என்கிறீர்களா? எப்படி கொடுப்பேன்? அடுத்த வருடம் என் மூத்த பெண்ணை கல்லூரில் சேர்க்க பணம் தேவைப்படும். அதற்கு நான் இந்தப் பணத்தை நம்பித்தான் இருக்கிறேன். மேலும், என்னிடமிருந்த நகைகளை வேறு ஏற்கெனவே அவரிடம் கொடுத்து, மீட்க முடியாமல் அவை வங்கியில் அடமான கடனில் உள்ளன. இந்த நிலையில், என் கையில் இருக்கும் ஒரே தெம்பான சேமிப்பு பணத்தையும் அவரிடம் கொடுக்க எனக்கு விருப்பமும் இல்லை, தைரியமும் இல்லை.

Money (Representational Image)
Money (Representational Image)

பணத்தை கொடுத்தால் அவர் வட்டிக்கு வாங்கிய 4 லட்சத்தில் 3 லட்சம் கடனை அடைப்பார்தான். ஆனால், என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க நினைக்கக்கூட மாட்டார். ஆனால் கடன்காரரிடம் அப்படி இருக்க முடியாது இல்லையா? வேறு வழியில்லை என்பதால் வாங்கிய கடனை எப்படியாவது அடைத்துவிடுவார். தன் பெற்றோர், சகோதரர்களிடம் பணம் கேட்பது, லோன் போடுவது என அவர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். ஆனால், நான் என் சேமிப்புப் பணத்தை கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இன்னொரு பக்கம், கடனுக்கு வட்டி கட்டவும், கடன் தொகையை திருப்பி அடைக்க அவர் படும் சிரமங்களையும் பார்க்க மனசு கேட்கவில்லை. என்னவானாலும் சரி, பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துவிடுவோம் என்று தோன்றுகிறது.

Woman in distress(Representational image)
Woman in distress(Representational image)
Pexels

‘உணர்வுபூர்வமாக யோசிக்காதே. அடுத்த வருடம் உன் பிள்ளையை நீ கல்லூரியில் சேர்க்க வேண்டும். அப்போது பணத்துக்கு நீ யாரிடம் சென்று கேட்பாய்? கொடுக்க உனக்கு யார் இருக்கிறார்கள்? அடகுவைக்க உன் நகைகூட இப்போது உன்னிடம் இல்லை, ஏற்கெனவே உன் கணவர் அதற்கும் வழியில்லாமல் செய்துவிட்டார். தொழிலில் ஆரம்பத்திலேயே அகலக்கால் வேண்டாம் என்று நீ கூறியும் கேட்காத உன் கணவர், தன் தவறான முடிவுகளுக்கான விளைவுகளை அவர்தான் சந்திக்க வேண்டும். நீ நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்து, நல்லா அம்மாவாக இருக்கத் தவறிவிடாதே’ என்று என் மனசாட்சி என்னை எச்சரிக்கிறது.

என்ன செய்யட்டும் நான்?