Published:Updated:

அண்ணனின் காதலுக்கு சம்மதம், என் காதலுக்கு சமாதி; ஆணாதிக்கக் குடும்பத்துக்கு பாடம் என்ன? #PennDiary85

Penn Diary
News
Penn Diary

`என் காதலை மட்டும் ஏன் சமாதி ஆக்கினீர்கள்?’ என்று என் அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்ன காரணம், அதிர்ச்சி. `அண்ணன் வேற ஜாதி பொண்ணை லவ் பண்ணினாலும், அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவ நம்மகூட சேர்ந்துடுவா. ஆனா, பொம்பளப் புள்ளைங்க அப்படியில்ல...’

Published:Updated:

அண்ணனின் காதலுக்கு சம்மதம், என் காதலுக்கு சமாதி; ஆணாதிக்கக் குடும்பத்துக்கு பாடம் என்ன? #PennDiary85

`என் காதலை மட்டும் ஏன் சமாதி ஆக்கினீர்கள்?’ என்று என் அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்ன காரணம், அதிர்ச்சி. `அண்ணன் வேற ஜாதி பொண்ணை லவ் பண்ணினாலும், அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவ நம்மகூட சேர்ந்துடுவா. ஆனா, பொம்பளப் புள்ளைங்க அப்படியில்ல...’

Penn Diary
News
Penn Diary

நாங்கள் ஒரு பெரிய நகரத்தில் வசிக்கிறோம். பெற்றோர் இருவரும் படித்தவர்கள், பணிக்குச் செல்பவர்கள். நானும் அண்ணனும் பொறியியல் பட்டதாரிகள். இருவருமே நல்ல பணியில் இருக்கிறோம். நிறைய சம்பளம் வாங்குகிறோம். அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம். இந்தளவுக்கு முன்னேறிய குடும்பமாக இருந்தாலும், சாதி எண்ணத்திலும், ஆணாதிக்கத்திலும் எங்கள் குடும்பம் மிகவும் பிற்போக்குடன், ஆதிக்கத்துடன் இருக்கிறது. அது என் வாழ்க்கையில் எனக்கு நீங்காத காயத்தைக் கொடுத்துவிட்டது.

அண்ணனின் காதலுக்கு சம்மதம், என் காதலுக்கு சமாதி; ஆணாதிக்கக் குடும்பத்துக்கு பாடம் என்ன? #PennDiary85

என் அப்பா, அம்மா இருவருக்குமே சுயசாதி பெருமை நிறைய உண்டு. ஏதாவது பிரச்னை என்று வரும்போது, அது சாதிவெறியாக உருமாறுவதையும் பார்த்திருக்கிறேன். இந்நிலையில், அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஒருவரை நான் காதலிக்க ஆரம்பித்தேன். அதேபோல, என் அண்ணனும் ஒரு பெண்ணை காதலித்தான். அண்ணனும், நானும் காதலிக்கும் இருவருமே வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பெற்றோரின் சம்மதத்துக்குப் போராட வேண்டியது வரும் என்று எதிர்பார்த்தோம். வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது, என் காதலை பெற்றோரிடம் சொன்னேன். வீடே களேபரமானது. முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார்கள். `அப்போ எனக்குக் கல்யாணமே வேண்டாம்’ என்று நான் பிடிவாதமாக நிற்க, `நீ கல்யாணமே பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்ல, ஆனா அந்தப் பையனை பண்ணிக்கக் கூடாது’ என்று சொல்லும் அளவுக்கு இறுகிப்போயிருந்தார்கள்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள், நான் வீட்டில் என் காதலுக்காகப் போராடினேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் என் அப்பாவுக்கு மாரடைப்பு வரவே, சென்டிமென்டலாகவும், எமோஷனலாகவும் என்னிடம் பேசி, என்னை வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்தனர். என் காதலர், `இதற்கு மேல் நீ எனக்காக சிரமப்பட வேண்டாம், பிரிந்துவிடுவோம்’ என்று விடைபெற்றார்.

அண்ணனின் காதலுக்கு சம்மதம், என் காதலுக்கு சமாதி; ஆணாதிக்கக் குடும்பத்துக்கு பாடம் என்ன? #PennDiary85

`வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்திருக்கலாமே?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், என் அப்பாவும் அம்மாவும் என்னை மிகவும் பாசமாக வளர்த்தார்கள். அவர்களுக்கு நானும் அண்ணனும்தான் உலகம். அவர்கள் சம்மதமின்றி, அவர்களை மீறி என்னால் செல்ல இயலவில்லை. என் காதலர் வீட்டிலும், `அவர்கள் ஆள் பலம் உள்ளவர்கள், அவர்களை எதிர்த்து நீங்கள் திருமணம் செய்வது பாதுகாப்பானது அல்ல. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டதால், காதல் திருமண முடிவை எங்களால் எடுக்க முடியவில்லை.

எனக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது, என் அண்ணனின் திருமண வேலைகள் ஆரம்பித்துள்ளன. அவன் காதலித்த பெண்தான் மணப்பெண். அவனிடமும் ஆரம்பத்தில் காதல் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனர் என் பெற்றோர். ஆனால், நான் எதிர்கொண்ட அளவுக்கு வலிமையான எதிர்ப்பு அல்ல. அண்ணனை மாற்ற முடியுமா என்று பார்த்தார்கள். அண்ணன் நான் இருந்தது போன்ற பிடிவாதத்தில் இருக்க, என் பெற்றோர் வளைந்துகொடுத்துவிட்டது ஆச்சர்யம்.

Wedding
Wedding
Pexels

என் அண்ணனின் காதலுக்கு என் பெற்றோர் சம்மதம் சொன்னதில் எனக்கு சந்தோஷம்தான். நானும் இப்போது என் கணவருடன் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஆனால், என் காதலை இழந்த வருத்தம் இல்லாமல் இல்லை. அதுவும் சாதி, ஆணாதிக்கக் காரணத்துக்காக. `என் காதலை மட்டும் ஏன் சமாதி ஆக்கினீர்கள்?’ என்று என் அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்ன காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `அண்ணன் வேற ஜாதி பொண்ணை லவ் பண்ணினாலும், அந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவ நம்மகூட சேர்ந்துடுவா. ஆனா, பொம்பளப் புள்ளைங்க அப்படியில்ல. நீ வேற ஜாதிப் பையனை கல்யாணம் பண்ணி அவங்க வீட்டுக்குப் போயிட்டா நம்ம ஜாதி மானமும் உன்கூடவே போயிடும். நீ அவங்க வீட்டுல, அவங்கள மாதிரிதான் இருக்கணும். அதை எங்களால ஏத்துக்க முடியாது’ என்றார்.

என்ன ஒரு அருவருக்கத்தக்க சாதிவெறி, ஆணாதிக்கவெறி? பெண் மீது, பெண் உடல் மீது மதம், சாதி, குடும்ப மானம் என்று எல்லாவற்றையும் ஏற்றிவைத்து, அவள் விருப்பத்தைக் கொல்லும் குடும்பங்களுக்கு பாடம் எடுப்பது எப்படி? என் அம்மா, அப்பாவுக்கும், அவர்களைப் போன்ற பெற்றோர்களுக்கும் சாதியைவிட பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம் என்பதை எப்படி புரியவைப்பது?

சாதி
சாதி

இதுபோல, குடும்பங்களின் சாதி வெறிக்கு தங்கள் காதலை பலிகொடுக்கும், ஒருவேளை மீறி திருமணம் செய்தாலும், ஆணவக் கொலை என்ற பெயரில் உயிரையே பலிகொடுக்கும் மகள்களுக்கு எல்லாம் என்ன விடிவு?