நான் கிராமத்தில் வளர்ந்த பெண். வீட்டில் வசதிக்குக் குறைவில்லை. திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் வீட்டிலும் வசதிக்குக் குறைவில்லை. ஆனால், தங்கக்கூண்டுக் கிளிகளாகக் கிடக்குறோம் நானும் என் கணவரும்.
என் மாமனார் மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் வறுமையில் உழன்றவர். பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறார். ஒரு கொத்தனாராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், தன் கடுமையான உழைப்பாலும் முயற்சியாலும் பில்டிங் கான்ட்ராக்டர் ஆனார். நல்ல சம்பாத்தியம்.

என் மாமனார், மாமியாருக்கு என் கணவர் ஒரே பிள்ளை. கணவர் டிகிரி முடித்தவுடனேயே அவரையும் தன் கட்டுமானத் தொழிலைப் பார்க்கப் பழகியிருக்கிறார் மாமனார். ஆனால், அன்று முதல் இன்றுவரை, `நான்தான் இங்க முதலாளி, இதெல்லாம் என் உழைப்பு. நீ சும்மா ஒத்தாசைக்கு இருந்தா போதும்' என்றே அவரை வைத்திருக்கிறார். அதுதான் பிரச்னை.
அப்பாவின் தொழிலை மகன்கள் பார்ப்பது வாடிக்கைதான். அப்படித்தான் என் கணவரும் தன் அப்பாவின் தொழிலுக்கு, அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். ஆனால், மகனும் இதில் வெற்றியாளராக வேண்டும் என்ற எண்ணமில்லை என் மாமனாருக்கு. `இது எல்லாம் என் உழைப்பு. என் சுய சம்பாத்தியம். நான் இருக்கும்வரை நான்தான் இங்கு அதிகாரம். பணம் விஷயத்திலிருந்து முக்கிய முடிவுகள்வரை என் பொறுப்பில்தான் இருக்க வேண்டும்' என்றே அவர் அணுகுமுறை இருந்திருக்கிறது. என் மாமியாரின் மனநிலையும் அதுவே.
எங்கள் திருமணத்துக்குப் பிறகு, மருமகள் என்று ஒருத்தி வந்த பிறகு, வீட்டில் எங்கே எங்கள் கை ஓங்கிவிடுமோ என்ற பாதுகாப்பின்மையில், அவர்களின் ஆதிக்க மனப்பான்மை இன்னும் அதிகரித்துவிட்டது. `இந்த வீட்டுல நாங்கதான் நாட்டாமை' என்பதைச் சொல்லாலும் செயலாலும் உணர்த்தியபடியே இருக்க ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் உண்மையில் நானும் என் கணவரும் மாமனார், மாமனாரை நன்றாகப் பார்த்துக்கொள்வோம். அவர்களை மீறியோ, எதிர்த்தோ ஒரு வார்த்தைப் பேசமாட்டோம். ஆனால், அந்த மரியாதை, பாசத்தையும்கூட அவர்கள், `காசு எல்லாம் நம்ம கன்ட்ரோல்ல இருக்குல்ல... அதான்' என்றே நினைப்பார்கள். உறவுகள், அலுவல் வட்டம் என என் கணவரை எப்போதும், `அவன் கிடக்கான்... அவனுக்கு என்ன தெரியும்? இந்தத் தொழில் இன்னும் என் கண்காணிப்புல இருக்குறதாலதான் ஜம்முன்னு போயிட்டிருக்கு' என்று பேசி உதாசீனப்படுத்துவார் என் மாமனார்.

சொல்லப்போனால், என் கணவரை அவர்கள் ஒரு செல்லாக்காசாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். `தனக்கு அப்புறம் மகன் என்ன பண்ணுவான்னு உங்க மாமனார் யோசிக்க மாட்டாரா?' என்கிறீர்களா? அதையும் அவர் முடிவெடுத்துவிட்டார். `நான் சம்பாதிச்சதே ரெண்டு தலைமுறைக்குப் போதும். அவன் புதுசா ஒண்ணும் சம்பாதிக்க வேணாம். நான் இருக்குறவரை ஒத்தாசையா இருந்துட்டு, அப்புறம் நான் சேர்த்துவெச்ச சொத்தை நாசமாக்காம, இருந்து சாப்பிட்டாலே போதும்' என்பதுதான் என் மாமனாரின் மனநிலை.
ஆனால், எங்களுக்கு என்று சுயமோ, சுயமரியாதையோ இல்லாமலேயே வாழ்க்கை கழிந்துகொண்டிருக்கிறது. தொழில் கணக்கு வழக்குகள் அனைத்தும் இப்போதுவரை என் மாமனாரிடம்தான். பிள்ளைகளின் ஃபீஸ், கார் டியூவிலிருந்து, பண்டிகைகளுக்குத் துணி எடுக்க, மளிகைக்கடை கட்டணம்வரை மாமனாரின் கைகளிலிருந்து பெற்று என் கணவர் கட்ட வேண்டும். ஃப்ரெண்ட்ஸுடன் டூர், புது டிரெஸ் என என் கணவர் ஏதாவது தேவைக்குப் பணம் கேட்டால், அதற்கு ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டுத்தான் கொடுப்பார். எனக்கு உடல்நோவுக்கு மருத்துவமனை செல்ல வேண்டுமென்றால்கூட, அதற்கும் மாமனாரிடம்தான் பணத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலை.
இப்படியான ஒரு சூழலில், என் கணவருக்கே மரியாதை இல்லாத வீட்டில் எனக்கான மரியாதையை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என் பிறந்த வீட்டில் வசதியானவர்கள் என்பதால், எனக்கான தேவைகளை நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்றாலும், என்னுடன் பிறந்த ஒரே அண்ணனுக்குத் திருமணமான பிறகு, அதையும் நான் குறைத்துக்கொண்டுவிட்டேன்.
கணவரின் நண்பர்கள் சிலர், ஏதாச்சும் தொழில் தொடங்கும்போது இவரையும் பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ள அணுகுவார்கள். என் கணவரும், `நம்ம தொழில்ல எல்லா வேலைகளையும் நான் கத்துக்கிட்டாலும், இத்தனை வருஷத்துல என்னோட தனிப் பொறுப்புல ஒரு கட்டடம்கூட அப்பா பார்க்கவிட்டதில்ல. நண்பர்கள்கூட ஒரு தொழில் செஞ்சு ஜெயிச்சுக்காட்டிட்டா, எனக்கும் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும்' என்றே நினைப்பார். ஆனால், அதற்கான முதலீட்டுக்கும் நாங்கள் என் மாமனாரிடமே சென்று கேட்க வேண்டிய நிலை. `அதெல்லாம் ஒண்ணும் வேணாம், உனக்கு சாமர்த்தியம் பத்தாது, காசத் தொலைச்சுட்டு வந்துருவ. இருக்குறதைப் பார்த்தா போதும்' என்று அலட்சியப்படுத்தி அவமானப்படுத்துவார்.

38 வயதாகிறது என் கணவருக்கு. ஆனாலும், வீட்டில் பதின்ம வயதுச் சிறுவர்கள் என்ன செய்தாலும் அப்பாக்கள், `உனக்கென்னடா தெரியும்...' என்ற மனநிலையில் செய்யும் உதாசீனத்தைதான் இப்போதுவரை என் கணவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். சொல்லப்போனால், இப்போதெல்லாம் பதின்ம வயதுச் சிறுவர்களின் சின்னச் சின்ன முயற்சிகளை, அவர்களின் சுய தேடல்களை எல்லாம் பெற்றோர்கள் ஊக்குவிக்கும் பக்குவம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டிலோ, பணக்கார, ஈகோயிஸ்ட் மாமனாரின் அதிகாரத்தில் என் கணவர் தினம் தினம் முகம் வாடும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
தனிக்குடித்தனம் பற்றியெல்லாம் நானோ கணவரோ இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் நிலையை அறிந்து, அதைப் பற்றி எங்களிடம் சொல்லும் உறவுகள், நண்பர்களிடம்கூட, `ஒற்றை பிள்ளையை பெற்று வளர்த்தவர்களை வயதான காலத்தில் அப்படியெல்லாம் விட்டுச்செல்லலாமா? மனக்கசப்புகள் வேறு, பெற்ற கடமை வேறு. நாங்கள்தாம் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று உறுதியாகச் சொல்லிவிடுவோம். ஆனால் மாமியாரோ இதை உறவுகளிடம் வேறு மாதிரியாகச் சொல்வார். `தனிக்குடித்தனம் போனா அவங்கப்பா தயவில்லாம அவனால குடும்பத்தை நடத்திட முடியுமா? அதுக்கும் அவர்கிட்டதானே வந்து நிக்கணும்?'
இப்படித்தான், தங்கக்கூண்டில் கிளிகளாகக் கிடக்கிறோம் நானும் கணவரும். நிலைமாற வழியென்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.