எனக்கும் கணவருக்கும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். 10 ஆண்டுகள் மணவாழ்க்கையில் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். என் கணவர் வீட்டில் அவர், அவரின் தம்பி என இரண்டு பிள்ளைகள். தம்பிக்கும் திருமணம் முடிந்து, இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், என் கணவரின் தம்பி அவருக்குத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தான் மிகவும் சிரமப்படுவதாகவும், கழுத்தளவு இருக்கும் கடனில் இருந்து மீள வழியில்லை, வட்டிகட்ட முடியவில்லை என்றும், என் மாமனார், மாமியார், கணவரிடம் வந்து அழுது புலம்பினார். மேலும், பூர்வீக வீடு, பொதுச் சொத்தில் தன் பங்கைப் பிரித்துக் கொடுக்கும்படியும், அதை விற்றுதான் தன் கடனை அடைத்துக்கொள்வதாகவும் கேட்டார்.

பதறிய என் மாமனாரும் மாமியாரும், `பூர்வீக வீடு அண்ணன், தம்பி இருவருக்குமானது. உன் பங்கை நீ விற்றால், பிழைக்க வழியில்லாமல் வீட்டை விற்றுவிட்டார்கள் என்று ஊரில் பேசுவார்கள். அது நம் குடும்பத்துக்கு மானக் குறைவு. எனவே, அடமானம் வேண்டுமானால் வைத்துக்கொள், பிறகு திருப்பிவிடு. அப்படியே உன்னால் திருப்ப முடியாமல் போனால், அண்ணன் அதைத் திருப்பி, உனக்கு மீதமுள்ள பணத்தை செட்டில் செய்துவிட்டு, உன் பங்கையும் அவனே எடுத்துக்கொள்ளட்டும். வீடு நம் கைவிட்டுப் போகாமல் இருக்கும்' என்று ஒரு பொங்கச்சோறு பஞ்சாயத்துப் பேசினார்கள். எனக்கு அப்போதே அதில் உடன்பாடில்லை. ஆனால் என் கணவர், இது தாங்கள் பிறந்து, வளர்ந்த வீடு சம்பந்தப்பட்ட விஷயம், தன் பெற்றோரின் முடிவே சரியென்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.
அடுத்த பிரச்னை எழுந்தது. என் கொழுந்தனாரின் பங்கு வீட்டை விற்றால் அவருக்கான தொகை கிடைத்துவிடும். ஆனால், அடமானம் வைக்கும்போது அந்தத் தொகை கிடைக்காது; குறைவாகத்தான் கிடைக்கும். எனவே தன் அண்ணனின் பங்கையும் சேர்த்து அடமானம் வைக்க அனுமதி கேட்டார் கணவரின் தம்பி. தான் தொழிலில் மீண்டும் விட்டதைப் பிடித்து, சம்பாதித்து, வீட்டைத் திருப்பிவிடுவதாகக் கூறினார். அதற்கும் என் மாமனார் வீட்டில் தலையாட்டினார்கள்.
மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், என் கணவரின் தம்பி வீட்டு அடமானக் கடனுக்கு வட்டி கட்டவே இல்லை. அசலும் வட்டியுமாகச் சேர்ந்து வீடு மூழ்கிக்கொண்டிருக்கிறது. `வீட்டை திருப்புங்கள் அல்லது வெளியேறுங்கள்' என்று கடன் கொடுத்தவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். என் கணவரின் தம்பியிடம் கேட்டால், `நினைத்த மாதிரி தொழில் மேலே வரவில்லை, இன்னும் நஷ்டத்தால் சென்றுகொண்டிருக்கிறது. நான் பணத்துக்கு எங்கே செல்வேன்...' என்று கண்ணீர் வடித்து கைவிரிக்கிறார்.
இந்நிலையில், என் மாமனார், மாமியார் இன்னோர் அதிர்ச்சிகரமான முடிவை எடுக்கிறார்கள். பொதுச் சொத்தாக ஊரில் ஓர் இடம் இருக்கிறது. அந்த இடத்தை விற்று, வீட்டை திருப்பிவிடலாம் என்கிறார்கள். நானோ, `தம்பி வாங்கிய கடனுக்காக அண்ணனின் பங்கு சொத்தையும் சேர்த்து விற்பது நியாயமில்லை. என்றாலும் போகட்டும். ஆனால், அந்த இடத்தை விற்று, அதை இரண்டு பங்காகப் பிரித்து, தம்பிக்கு உரிய பங்கில் வீட்டை திருப்பட்டும். போதவில்லை என்றால், அவர்தான் மேற்கொண்டு பணத்துக்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்' என்றேன். ஆனால், மாமனார், மாமியாரோ, இடத்தை விற்ற பணத்தை இரண்டாகப் பிரித்தால் வீட்டை அடமானக் கடனில் இருந்து திருப்ப தம்பியின் பங்கு மட்டும் போதாது என்றும், அதனால் அந்தப் பணத்தில் வீட்டை திருப்பியது போக மிச்சம் இருப்பதை அண்ணனும் தம்பியும் பிரித்துக்கொள்ளட்டும் என்றும் சொல்கிறார்கள்.

தம்பி வாங்கிய கடனுக்கு, அடமானம் வைத்த வீட்டுக்கடனுக்கு, பொதுச்சொத்தில் அண்ணனின் பங்கையும் சேர்த்து பலிகொடுப்பது என்ன நியாயம்? இதைவிடக் கொடுமையாக, இன்னொன்றும் சொல்கிறார்கள். கடனை வைத்து அடகு திருப்பும் வீடு, அண்ணன், தம்பி இருவருக்கும் சொந்தம் என்கிறது என் புகுந்த வீட்டுச் சட்டம். என் கணவரிடம், `இடத்தை விற்றதில் உங்கள் பங்கையும் சேர்த்து தம்பியின் கடனை அடைக்கக் கொடுக்கிறீர்கள்தானே? எனில், திருப்பிய வீட்டில் உங்கள் தம்பியின் பங்கை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், அவருக்கான மீதப் பணத்தை செட்டில் செய்துவிடுங்கள்' என்று கூறினால், என்னை வில்லிபோலப் பார்க்கிறார்.
``என் அப்பா, அம்மா சம்பாதித்ததுதான் வீடும் இடமும். அதை அவர்கள் எனக்கும் தம்பிக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆக, அவர்கள் பெயரில் இருக்கும் இடத்தை அவர்கள் விற்று, வீட்டைத் திருப்புகிறார்கள். இதில் நான் தலையிடவே உரிமை இல்லாதபோது, நீ எப்படி எங்கள் வீட்டு சொத்தைப் பற்றிப் பேசலாம்" என்கிறார். தம்பியின் பொறுப்பில்லாத தனத்தால் அண்ணனின், என் கணவரின் பங்கும் பலியாகிறது என்ற என் ஆதங்கத்தை, நியாயத்தைப் புரிந்துகொள்ள இந்த வீட்டில் யாருமே இல்லை.

இந்த வேதனையே என்னால் தாங்க முடியாமல் இருக்க, மாமனார், மாமியார் சொன்ன வார்த்தைகள் என்னை இதைவிடக் காயப்படுத்திவிட்டன. `உனக்கு ரெண்டும் பொண்ணு; சின்னவனுக்கு ரெண்டும் பையன். இன்னைக்கு நீ விட்டுக்கொடுத்துப் போ... நாளைக்கு உன் ரெண்டு பொண்ணுங்களையும் தம்பியோட பையனுங்க பார்த்துப்பாங்க' என்று அவர்கள் சொல்ல, உடனே அவர் தம்பியும், `ஆமா அண்ணி...' என்று ஏதோ நான் அவர் பையன்களை நம்பித்தான் என் மகள்களை வைத்திருப்பதுபோலச் சொன்னார். எல்லாவற்றையும்விட என்னைக் காயப்படுத்தியது, அந்த சபையில் என் கணவரின் மௌனம். `என் மகள்களை யாரும் பார்த்துக்கத் தேவையில்லை, அவங்களே அவங்களைப் பார்த்துப்பாங்க, உங்களையும் சேர்த்துப் பார்த்துப்பாங்க' என்றுதானே அவர் சொல்லியிருக்க வேண்டும்? ஆனால், தனக்கு இரண்டும் பெண் பிள்ளைகள் என்பது ஏதோ பரிதாபத்துக்கு உரிய, மற்றவர்களின் உதவிக்குரிய விஷயம்போல அன்று அவர் அந்தச் சொற்களை ஏற்றுக்கொண்டதை என்னால் மன்னிக்கவே முடியவில்லை.
இவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது, பதிலடி கொடுப்பது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.