Published:Updated:

மாமனாரின் இரண்டாவது திருமண முடிவு, மறுக்கும் பிற்போக்கு கணவர்; புரியவைப்பது எப்படி? #PennDiary93

Penn Diary
News
Penn Diary

மனைவி, மகன், பேரன்கள் என இதுவரை குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர், இப்போது தனக்காக ஒரு முடிவெடுக்கும்போது, இதில் குடும்பமானம் போக என்ன இருக்கிறது? இதை என் கணவருக்கு எப்படி புரியவைப்பது?

Published:Updated:

மாமனாரின் இரண்டாவது திருமண முடிவு, மறுக்கும் பிற்போக்கு கணவர்; புரியவைப்பது எப்படி? #PennDiary93

மனைவி, மகன், பேரன்கள் என இதுவரை குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர், இப்போது தனக்காக ஒரு முடிவெடுக்கும்போது, இதில் குடும்பமானம் போக என்ன இருக்கிறது? இதை என் கணவருக்கு எப்படி புரியவைப்பது?

Penn Diary
News
Penn Diary

என் மாமனாருக்கு என் கணவர் ஒரே பையன். என் மாமியார் இறந்து 15 வருடங்கள் ஆகின்றன. மாமனார் வீட்டில் அவருடன்தான் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் கல்லூரியில் முதல் வருடமும், இரண்டாவது பையன் பள்ளி இறுதி வருடமும் படித்துவருகிறார்கள்.

Old age - Representational Image
Old age - Representational Image
Pixabay

என் மாமனார் தொழில் செய்து வந்தார். கணவரை அவர் விரும்பிய படிப்பு படிக்கவைத்தார். அவர் மாமனாரின் தொழிலை பார்த்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தபோது, மறுபேச்சு எதுவும் சொல்லாமல் அவர் விருப்பப்படியே அனுப்பிவைத்தார். வீடு, நிலம் என நிறைவாக சொத்துகள் சேர்த்துவைத்துள்ளார். என் மாமியாரிடம் மிகவும் அன்புடன் இருப்பார். அவர் மறைவுக்குப் பிறகு மிகவும் ஒடிந்துபோனார். என்றாலும், அதற்குப் பின் எங்கள் பிள்ளைகளையே தன் சந்தோஷமாகக் கொண்டு வாழ ஆரம்பித்தார். என் இரண்டு மகன்களையும் வளர்த்ததில் அவர் பங்கு பெரிது.

இந்நிலையில், சில வருடங்களாக அவருக்கு உடல்நலப் பிரச்னைகள் ஆரம்பித்தன. எனவே, இரண்டு வருடங்களுக்கு முன்பாக தன் தொழிலை முடித்துக்கொண்டார். அந்தப் பணத்தில் அவருக்குக் குறிப்பிட்ட தொகை எடுத்துக்கொண்டு, மற்றவற்றை என் கணவரிடம் கொடுத்துவிட்டார். சொத்துகளையும் என் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டார்.

முதுமை
முதுமை

எங்கள் மூத்த மகன் ஒரு பெரு நகரத்தில் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். எங்கள் இரண்டாவது மகனையும் அதே ஊரில் அடுத்த வருடம் கல்லூரியில் சேர்க்கவிருக்கிறோம். எனவே, என் கணவருக்கும் அதே ஊருக்கு பணி மாறுதல், அல்லது நிறுவனம் மாறிச் செல்லுதல் என முடிவு எடுத்தோம். மாமனாரையும் எங்களுடன் வரச்சொல்லி அழைத்தோம். அவர், இந்த ஊரில்தான் தன் நட்பு, உறவு அனைவரும் இருப்பதால் தான் வரவில்லை என்றும், எங்களை போகச் சொல்லியும் சொன்னார்.

நாங்கள் சென்னையில் வீடு பார்க்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறோம். இந்நிலையில், என் மாமனார் எங்களிடம், தனது இரண்டாவது திருமணத்தை பற்றி பேசினார். இந்த வயோதிகத்தில் தனக்கு ஆதரவாக ஒரு துணை தேவைப்படுவதையும், அவருக்குத் தெரிந்த ஓர் உறவுக்காரப் பெண், கணவரை இழந்தவர், தன்னைப் போலவே இந்நிலையில் இருப்பதையும், தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் என்ன என்று யோசிப்பதாகவும் கூறினார். அந்தப் பெண்மணிக்கு ஒரே ஒரு மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். தன் அம்மாவின் திருமணத்துக்கு அவர் சம்மதம் சொல்லிவிட்டார். இப்போது எங்கள் மாமனார் எங்களது சம்மதம் கேட்டு நிற்கிறார்.

Old age (Representational Image)
Old age (Representational Image)
Credits : Shutter stock

எனக்கு என் மாமனாரின் முடிவு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான், அந்தப் பெண்மணியிடமும், அவர் மகளிடமும் பேசினேன். அனைவரது பேச்சு வார்த்தையும் நிறைவாக இருக்கிறது. என் மகன்களுக்கும் இதில் சம்மதம், சந்தோஷம். ஆனால், என் கணவர் மட்டும் ஒரே பிடிவாதமாக இதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்.

’ஊரு உலகத்துல எல்லாரும் என்ன நினைப்பாங்க? இந்த வயசுல இவருக்கு கல்யாணம் தேவையா?’ என்று பிற்போக்காகப் பேசும் கணவரிடம், ‘நாமளும் அடுத்த வருஷம் வேற ஊருக்குப் போயிடுவோம். அவருக்கு ஒரு துணை வேண்டாமா? இந்த ஊரும், உறவுமா அவருக்கு ஆதரவா இருக்கப் போகுது? முதுமையில அவர் ஏன் தனிமையில இருக்கணும்? இப்படி ஒரு வாய்ப்பு இருக்கும்போது நீங்க ஏன் அதுக்கு குறுக்க நிக்கிறீங்க?’ என்று எடுத்துக்கூறினாலும், புரிந்துகொள்ள மறுக்கிறார்.

 Old age couple - Representational image
Old age couple - Representational image

என் மாமனார், ஒருவேளை என் கணவர் சொத்துக்காக யோசிக்கிறாரோ என்று நினைத்து, அதைப் பற்றியும் வெளிப்படையாகவே பேசிவிட்டார். ‘எனக்குனு நான் எடுத்து வெச்சிருக்கிற தொகையைத் தவிர, வேற எந்த சொத்துக்கும், பணத்துக்கும் நாங்க உங்ககிட்ட இனி வரமாட்டோம்’ என்றார். ஆனால் என் கணவர், ‘பணம் பத்திலாம் நான் யோசிக்கல. குடும்ப மானம்தான்’ என்கிறார். மனைவி, மகன், பேரன்கள் என இதுவரை குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர், இப்போது தனக்காக ஒரு முடிவெடுக்கும்போது, இதில் குடும்பமானம் போக என்ன இருக்கிறது? இதை என் கணவருக்கு எப்படி புரியவைப்பது?