ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்த பெண் நான். அதே ஊரில் ஒரு கலைக் கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த தோழனைக் காதலித்தேன். படிப்பை முடித்தவுடன் இருவரும் ஒரு வேலையில் சேர்ந்தோம். இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர், வீட்டில் எங்கள் காதலைச் சொன்னோம். இருவர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர், இருவர் வீட்டையும் சமாதானப்படுத்தி திருமணம் செய்துகொண்டோம்.
திருமணத்துக்குப் பின், என் கணவருக்குத் தொழில் செய்யும் ஆர்வம் வந்தது. `எவ்ளோ வேலை பார்த்து முதலாளிக்கு சம்பாதிச்சுக் கொடுக்குறோம்... இதுவே நாமளே தொழிலை ஆரம்பிச்சு முதலாளி ஆனா, லாபம் முழுக்க நமக்குக் கிடைக்குமே...' என்று சொன்னவர், நாங்கள் வேலை பார்த்து வந்த துறையிலேயே தன் தொழிலை ஆரம்பித்தார். அவர் தொழிலில் காலூன்றும் வரை நான் என் சம்பாத்தியத்தில் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டேன்.

கணவரின் திறமைக்கும் கடும் உழைப்புக்கும் தொழிலில் இரண்டே ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம். அதற்கு அடுத்து அவருக்கு வெற்றி மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது. நல்ல உயரத்துக்குச் சென்றார். நானும் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். இப்போது திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. 8 வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கிறான். வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை என்று சென்றுகொண்டிருந்தபோதுதான், இப்போது என் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.
கடந்த ஆறு மாதங்களாக என் கணவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. செல்போனில் அதிக நேரம் பேசுவது, மாதத்தில் ஒரு நாள் வெளியூரில் வேலை என்று செல்வது, என்னுடனும் மகனுடனும் செலவழிக்கும் நேரம் குறைந்திருந்தது என்று மாறிக்கொண்டே வந்தார். அவருக்கு யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தது. என்றாலும், அது என் கற்பனையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தபடியே, அவரை கண்காணித்து வந்தேன். அவர் மொபைல் பாஸ்வேர்டை ஒருவழியாகக் கண்டுபிடித்து, டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்களை `பின்'னில் தேடியபோது, என் சந்தேகம் உறுதிசெய்யப்பட்டது. அந்தப் பெண், இவரை எட்டு மாதங்களுக்கு முன்னர் தொழில்ரீதியாகச் சந்தித்த பெண் என்பது, என் அதிர்ச்சியை மேலும் கூட்டியது.
ஆரம்பத்தில் இல்லை என்று வாதாடிய கணவர், பின்னர் நான் அடுக்கிய ஆதாரங்களால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் கொடுத்த விளக்கம்தான் என்னை குற்றுயிராக்கிவிட்டது.
`நீயும் குழந்தையும்தான் என் உலகம். அதுல உனக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்தப் பொண்ணுக்கு 30 வயசாகுது. ஆனா சிங்கிள். அவளுக்கும் எனக்கும் எமோஷனலா எல்லாம் எந்த பாண்டும் இல்ல. அவளுக்கு ஒரு கம்பேனியன் தேவைப்பட்டது. என்னைப் பிடிச்சிருக்குனு சொன்னாள். ஒரு பெண்ணே அப்படிச் சொல்லும்போது, `அய்யய்யோ இது தப்பு...'னு சொல்ற அளவுக்கு எல்லாம் நான் நல்லவன் இல்லையே. எனக்கும் அவளைப் பிடிச்சிருந்தது. ஆறு மாசமா பேசுறோம், பழகுறோம். ஆனா, இது உன் வரை பிரச்னையான பிறகு, இனி நான் அந்தப் பொண்ணுகிட்ட பேசலை, பழகலை, என்னை நம்பு'' என்று குழந்தை மீது சத்தியம் செய்கிறார்.

என் கணவர்தான் என் உலகம் என்றிருந்த எனக்கு, அவரின் இந்த ஸ்டேட்மென்ட் என்னை மிகுந்த மனப்போராட்டத்தில் தள்ளிவிட்டது. என் மீது அவர் சொல்வதற்கு எந்தக் குறையும் இல்லாதபோது, அவர் மீது நான் இத்துணை அன்பு வைத்திருக்கும்போது, எப்படி அவரால் இதைச் செய்ய முடியும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்தத் துரோகத்தை விட்டு என்னால் நகரவே முடியவில்லை. மேலும், `அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்...' என்ற ரீதியில் அவர் பேசுவது, துரோகத்தைவிட எனக்கு அதிக கவலையைத் தருகிறது. `இதையே நான் செய்துவிட்டு வந்து உங்களிடம் இதேபோல பேசினால் என்ன செய்வீர்கள்?' என்று வெடித்துக் கேட்டால், `நீ எமோஷனலா பேசுற. ஆம்பளைங்க உலகம் வேற...' என்கிறார்.
`இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்...' என்று என்னால் இதைக் கடக்க முடியவில்லை. அப்படிக் கடப்பது, நான் அவர் மீது வைத்திருக்கும் தூய்மையான, உண்மையான அன்புக்கு நான் செய்யும் அவமரியாதை என்று எனக்குத் தோணுகிறது. அவரை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. `யார் வந்தாலும், போனாலும், என்ன ஆனாலும் நம்மை நேசிக்க ஒரு ஜீவன் இருக்கிறது...' என்ற அன்பின் உறுதியைத் தரும் ஒரு பெண்ணை, அதையே அவள் பலவீனம் ஆக்கும் ஆண்களை என்னவென்று சொல்வது? `அவ என்ன ஆனாலும் நம்மைவிட்டுப் போகமாட்டா... நாம யாரையும் ஃப்ளர்ட் பண்ணலாம், டேட் பண்ணலாம்...' என்ற எண்ணத்தில் இருக்கும் ஆண்களுக்கு, அந்தப் பெண்கள் தங்கள் அன்பின் நிரந்தரத்தன்மையை, மாறாதன்மையை தகர்ப்பதுதானே தண்டனை? அதை என் கணவருக்கு நான் கொடுக்க வேண்டும் என்று என் மனம் கொதிக்கிறது.
மேலும், `இனிமே அந்தப் பொண்ணுகிட்ட பேசலை, பழகலை...' என்று அவர் சொல்வதையும் என்னால் நம்பமுடியவில்லை. அப்படியே இந்தப் பெண்ணிடம் இவர் பேசவில்லை என்றாலும், அடுத்து இன்னொரு பெண் வருவார், `இதெல்லாம் சகஜம்...' என்று இவர் வாழ்வார் என்றால், அப்படி ஒரு கணவர் எனக்கு எதற்கு?

என் கையில் படிப்பு இருக்கிறது, வேலை இருக்கிறது, தன்னம்பிக்கை இருக்கிறது... எல்லாவற்றையும்விட சுயமரியாதை அதிகம் இருக்கிறது. என் முடிவு சரிதானே?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.