சென்னை பெண் நான். ஸ்கூல், காலேஜ் படிப்பு, வேலை எல்லாமே இங்கதான். காலேஜ் படிப்பை முடிச்சிட்டு ஒரு ஆபீஸ்ல சேர்ந்தப்போ எனக்கு அறிமுகமானார் அவர். மதுரை பக்கம் ஒரு சிறு நகரத்துலயிருந்த எங்க அலுவலகக் கிளையில இருந்து எங்க கிளைக்கு மாற்றலாகி வந்திருந்தார். என்னைவிட சீனியர். ஆங்கிலம் தெரியாம தடுமாறினது, நகரத்து வாழ்க்கை முறையில மிரண்டிருந்ததுனு இதெல்லாம் அவர் மேல எனக்கு ஒரு சாஃப்ட் கார்னரை ஏற்படுத்துச்சு. அவர்கிட்ட பேசினப்போ, `ஊருல விவசாயக் குடும்பம். முதல் தலைமுறை பட்டதாரிங்க... அதான் திணறுறேன்...'னு சொன்னார்.

ரெண்டு பேரும் நண்பர்களாகப் பழக ஆரம்பிச்சப்போ, அவர் விவாகரத்து ஆனவர்னு சொன்னார். பொறியியல் கல்லூரியில தன்னுடன் படிச்ச பெண்ணை கல்லூரி இறுதியாண்டிலேயே திருமணம் செய்துகிட்டதாவும், ரெண்டு வீட்டுப் பெற்றோர்களுமே எதிர்த்தாலும் கல்லூரிப் படிப்பை முடிச்ச கையோடு ரெண்டு பேருக்குமே வேலை கிடைக்க, ஜம்முன்னு வாழ ஆரம்பிச்சதாவும் சொன்னார்.
ஆனா, ஈகோ பிரச்னைகளால ரெண்டு பேருக்கும் இடையில நாளுக்கு நாள் இடைவெளி, சண்டை, சச்சரவுகள் ஆரம்பிக்க, திருமணமான ஒன்றரை வருஷத்திலேயே பரஸ்பர விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றிருக்காங்க. குழந்தை இல்லை. `ரெண்டு மாசத்துக்கு முன்தாங்க விவாகரத்து கிடைச்சது. ஒரு மாற்றத்துக்காக ஊரு மாத்தி போகலாம்னுதான், சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபராகி வந்தேன்' என்றார்.

ஒரு கட்டத்துல, எனக்கு அவர் மேல காதல் ஏற்பட்டது. அதை நான் அவர்கிட்ட சொன்னப்போ, `அய்யய்யோ... கல்யாணம்னாலே எனக்கு அலர்ஜியா இருக்கு. உங்க மேல எனக்கு லவ்வும் இல்ல'னு மறுத்தார். `ரெண்டு வருஷம் காத்திருக்கேன். ஒருவேளை உங்களுக்கும் என் மேல காதல் வந்தா, நாம திருமணம் செய்துக்கலாம்'னு சொன்னேன். ஒன்றரை வருஷங்கள் வரை பிடி கொடுக்காமலேயே இருந்தார். அப்போ எனக்கு எங்க அலுவலகத்துல சென்னையிலேயே வேறு கிளைக்கு ட்ரான்ஸ்ஃபர் கொடுக்க, அதுக்கு அப்புறம்தான் என்னை மிஸ் செய்திருக்கார். அது காதல்தான் என்பதை உணர்ந்தவர், அதை என்கிட்ட சொன்ன கையோடு, `முதல் முறை பெரியவங்களோட சப்போர்ட் இல்லாம நான் பட்டது போதும். எங்க வீட்டிலும் உங்க வீட்டிலும் சம்மதிச்சா கல்யாணம் பண்ணிக்குவோம்'னு சொன்னார்.
அடுத்த போராட்டம், எங்க வீட்டை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது. விவாகரத்தான ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க என் பெற்றோர் ஒத்துக்கலை. `யாரோ ஒருத்தரை எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்க. அது எனக்குப் பிடிச்சவரா இருந்தா என்ன? அவரோட கடந்த காலம் முடிஞ்சு போச்சு, நாங்க புதுசா வாழ்க்கைய ஆரம்பிக்கிறோம்'னு சொல்லி பிடிவாதமா அவங்க சம்மதம் வாங்கினேன். அவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்க, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி திருமணம் செய்துகிட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சோம்.

அன்பு, அக்கறை, பரஸ்பர மரியாதை, வீட்டு வேலைகளை பகிர்ந்துக்கிறதுனு எல்லா வகையிலும் அவர் நல்ல கணவர். ஏற்கெனவே காயப்பட்டவர் என்பதால, அதை மனசுல வெச்சு நானும் அவருக்குப் பிடிச்ச மாதிரியான மனைவியா நடந்துக்கிட்டேன். ரெண்டு பேருமே சம்பாதிச்சதால பொருளாதாரமும் ஏற்றமா போச்சு. இப்படி எல்லா வகையிலுமே வசந்தமா இருந்த எங்க வாழ்க்கையில, ஆறு மாசமா ஒரே பிரச்னை. காரணம், அவரோட முதல் மனைவி. இப்போ ரெண்டு பேரும் மீண்டும் பேச, பழக ஆரம்பிச்சிருக்காங்க.
என் கணவரோட முதல் மனைவிக்கு இன்னும் திருமணம் ஆகலை. மதுரையில வேலைபார்த்திட்டிருந்த அவங்க, ஒரு வருஷம் முன்னாடி சென்னையில ஒரு வேலையில் சேர்ந்திருக்காங்க. ரெண்டு பேரும் மறுபடியும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. `என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஏன் மறுபடியும் அவகூட பேசுறீங்க?'னு என் கணவர்கிட்ட சண்டை போட்டேன்.

`ஊருல என் ஃப்ரெண்ட் ஒருத்தன்கிட்ட என் போன் நம்பர் வாங்கி ஒரு நாள் கூப்பிட்டா. புது அலுவலகத்துல யாரோ ஒருத்தன் செக்ஷுவல் டார்ச்சர் கொடுக்குறான்னு சொல்லி அழுதா. அதை ஏன் என்கிட்ட சொல்ற, நான் யாரு உனக்குனு சொல்லி போனை வெச்சுட்டேன். ஆனாலும் மனசு கேக்கல. ரோட்டுல ஒரு பொண்ணுக்குப் பிரச்னைனாகூட கேட்கமாட்டோமா..? அப்படித்தான் அவளை தொல்லை பண்ணினவனை வார்ன் பண்ணி, அவளுக்கு ஹெல்ப் பண்ணினேன்'னு சொன்னார் கணவர். இப்படித்தான் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க.
ஆனா, தொடர்பு அதோடு முடிஞ்சு போயிருந்தா பரவாயில்ல. அவரோட முதல் மனைவி வீடு ஷிஃப்ட் பண்ண, ஹாஸ்பிட்டலுக்குப் போக, புது டூவீலர் வாங்கனு எல்லா வேலைகளுக்கும் உதவி பண்ண இவரை கூப்பிட ஆரம்பிச்சு, இவரும் போக ஆரம்பிச்சிருக்கார். அவ்ளோ மனசு வெறுத்து விவாகரத்து பண்ணிக்கிட்ட ரெண்டு பேரும் எப்படி மறுபடியும் பழக ஆரம்பிச்சாங்கனு நான் அதிகம் ஆராய்ச்சி பண்ணல. ஏன்னா, அதுக்குக் காரணமெல்லாம் வேண்டாம்னு எனக்கும் தெரியும். ஆனா, என் நிலைமை என்ன ஆகுறதுனு என்னை பயம் பிடிச்சுக்கிச்சு. இதனால ஆறு மாசமா எனக்கும் என் கணவருக்கும் ஒரே சண்டை.

`நீ வீணா சந்தேகப்படாத. கணவன், மனைவியா எங்களுக்குள்ள ஒத்துப்போகாமதான் நாங்க விவாகரத்து பண்ணிக்கிட்டோம். இப்போ நண்பர்களாதான் இருக்கோம். சென்னையில வந்து தனியா தங்கியிருக்குற அவளுக்கு ஒரு சப்போர்ட்டா இருக்கேன் அவ்வளவுதான்' என்ற கணவர், அந்தப் பெண்ணின் எண் கொடுத்து என்னை பேசச் சொன்னார். நானும் பேசினேன். `அதான் வேணாம்னு போயிட்டீங்கள்ல, இப்போ என் வாழ்க்கைய கெடுக்க வந்திருக்கீங்களா?'னு சண்டை போட்டேன். ஆனா, `அவருக்கும் எனக்கும் இப்பவும் ரிலேஷன்ஷிப் எல்லாம் செட் ஆகாது. கல்யாணத்துக்கு முன்னாடி காலேஜ் டேஸ்ல நாங்க ரெண்டு பேரும் எப்படி நல்ல நண்பர்களா இருந்தோமோ, அப்படிதான் இப்போ இருக்கோம். இதனால உனக்கு எந்த பாதிப்பும் வராது. இருந்தாலும், என்னால உங்களுக்குள்ள பிரச்னை வேணாம்னுதான் நான் பெங்களூருவுக்கு ட்ரான்ஸ்ஃபர் ட்ரை பண்ணிட்டு இருக்கேன், சீக்கிரம் கிளம்பிடுவேன்'னு சொன்னாங்க.
இவங்க ரெண்டு பேரையும் எந்தளவுக்கு நம்புறதுனு எனக்குத் தெரியல. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டு இருக்காங்களானும் எனக்குத் தெரியல. ஒருவேளை அந்தப் பொண்ணு மறுபடியும் இவர் வாழ்க்கையில வந்துட்டா, என் நிலைமை என்ன? என் பெற்றோருக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

`நீ சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்கிட்டா, அவர் அதுக்கு அப்புறம் உன்னை விட்டுப் போகவேமாட்டார்'னு சொல்றா ஒரு தோழி. `அந்தத் தப்பை மட்டும் செஞ்சுடாத. அந்தப் பொண்ணு உன் வீட்டுக்காரரை விட்டுப் போற வரைக்கும் குழந்தை முடிவை தள்ளிப்போடு. ஒருவேளை அவங்க மீண்டும் சேர்ந்துட்டா, நீ இவரைவிட்டு யோசிக்காம விலகிடு'னு சொல்றா இன்னொரு தோழி.
நான் என்னதான் செய்றது?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.