என் முன்னாள் கணவருடன் எனக்குப் போராட்டமான வாழ்க்கை. புகை, மது எனக் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை அவருக்கு. ஆனால், அவர் ஒரு மோசமான ஆணாதிக்கவாதி. அத்துடன் சந்தேக புத்தியும் சேர்ந்துகொள்ளும். எங்களுக்கு ஓர் ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். என்னிடம்தான் பிரச்னை, போராட்டம் என்றால், குழந்தைகளிடமும் அவருக்கு அன்பிருக்காது. வீட்டுக்குள் ஒரு சர்வாதிகாரிபோலதான் இருக்கும் அவர் நடவடிக்கைகள்.
என் பெற்றோரிடமிருந்து, `பொறுத்துப்போ...', `பிள்ளைகளுக்காக யோசி...' என்ற சமாதானங்கள்தான் வருமே தவிர, அவர் செய்யும் தவறுகள் குறித்து அவரை தட்டிக்கேட்க நினைக்க மாட்டார்கள். அவரால் ரத்தக்காயங்கள் வரை நான் குடும்ப வன்முறைக்கு ஆளாகும்போதுகூட, காவல்நிலையத்தில் புகார் செய்யத் துணிய மாட்டார்கள். லோயர் மிடில் கிளாஸ் குடும்பமாக நாங்கள் இருந்ததும், முன்னாள் கணவர் பணபலத்துடன் இருந்ததும் அதற்கு இன்னொரு காரணமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் நான் கணவரை பிரிய முடிவெடுத்தபோது, எனக்கு ஆதரவளிக்க என் பிறந்த வீட்டினர் முன்வரவில்லை. எனவே, பொறியியல் பட்டதாரியான நான், பெற்றோரிடமும் செல்லாமல், ஒரு வெளியூரில் வேலையில் சேர்ந்து, அங்கேயே வீடு எடுத்து, குழந்தைகளுடன் வசிக்க ஆரம்பித்தேன். கிடைத்த சம்பளம், என்னையும் என் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளப் போதுமானதாக இருந்தது.
இந்நிலையில், அந்த ஊரில் ஒரு வருடம் கழித்து எனக்கு அறிமுகமான ஒருவர், எனக்கு நல்ல நண்பராக இருந்தார். என் கடந்து காலத்துக்கான ஆறுதலில் இருந்து, நிகழ்காலத்துக்கான தன்னம்பிக்கை வரை அளித்தார். ஒரு கட்டத்தில், என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் 14, 12 வயதுகளில் இருக்கும் என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இருப்பதாகவும் கூறினார். குழந்தைகளிடமும் ஆலோசித்து, நீண்ட, நிதானமான பரிசீலனைக்குப் பின் அவருக்கு சம்மதம் தெரிவித்தேன். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தேன். பல்வேறு சிக்கல்களுக்குப் பின்னர் எனக்கு ஒருவழியாக விவாகரத்து கிடைத்தது. அதைத் தொடர்ந்து எங்கள் திருமணம் நடந்தது.
இந்நிலையில், என் பெற்றோரும், உடன் பிறந்த இரண்டு சகோதரர்களும் என் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. `ஊர் என்ன சொல்லும்...' என்ற பாழாய்ப்போன மனத்தடை, அவர்களை என் திருமணத்தை அங்கீகரிக்க விடவில்லை. எனவே, இரண்டு வருடங்கள் என்னுடன் பேச்சுவார்த்தையின்றி இருந்தனர்.
இதற்கிடையில், நானும் கணவரும் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்தோம். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற தொழிலாக அது இருந்ததாலும், எங்களின் உழைப்பை அதில் நாங்கள் இருவருமே முழுகையாகச் செலுத்தியதாலும் அது நல்ல வெற்றியடைந்தது. எங்கள் வருமானம் ஒரே வருடத்தில் நான்கு மடங்கு கூடியது. நான், கணவர், குழந்தைகள் என்று நாள்கள் இப்போது மகிழ்ச்சியாகியுள்ளன. நரகம் போன்ற வாழ்க்கையில் இருந்த எனக்கு, இப்போது இந்தப் புது வாழ்க்கை கனவா, நனவா என்று எண்ணவைக்கும் அளவுக்கு நிறைவாகச் சென்று கொண்டிருக்கிறது. ஒரே ஒரு பிரச்னை... என் பிறந்த வீட்டினர் என் கணவரை ஏற்றுக்கொள்ளாதது.

என் பெற்றோரும், இரண்டு சகோதரர்களும் கடந்த ஒரு வருடமாக என்னுடன் பேச ஆரம்பித்தனர். ஏற்கெனவே லோயர் மிடில் கிளாஸ் ஆன என் பிறந்த வீட்டின் நிலை, இந்தக் கொரோனா சூழலில் இன்னும் மோசமானது. அவர்களுக்கான பணச்சிக்கல்கள், அவசரத் தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்கும் பொருளாதார ஸ்திரத்துக்கு நான் வந்ததால், அவர்களை நான் என்னால் முடிந்த அளவு பார்த்துக்கொண்டேன். அம்மா, அப்பாவின் மாதாந்தர மருத்துவச் செலவுகள், அண்ணனுக்கு பைக் இ.எம்.ஐ-கள், வேலையிழந்த தம்பிக்கான உதவிகள் என்று செய்து அவர்களை பார்த்துக்கொண்டேன்.
இதில் சிக்கல் என்னவென்றால், என் பிறந்த வீட்டினர் என்னுடன் பேச ஆரம்பித்திருந்தாலும், என் கணவரை அவர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. உறவினர்களுக்கு நான் மறுமணம் செய்துகொண்டது தெரியும் என்றாலும், அதை என் பெற்றோர் முதலில் ஏற்றுக்கொண்டால்தானே உறவுகளிடம் எனக்கான அங்கீகாரம் கிடைக்கும்? ஆனால் பெற்றோரும் சகோதரர்களும், `ஊருக்கு வர்றதா இருந்தா நீயும் பிள்ளைகளும் மட்டும் வாங்க' என்கிறார்கள். அதேபோல, என் கணவரிடம் இதுவரை என் பிறந்த வீட்டினர் யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. போனை அவர் எடுத்தால்கூட எதுவும் பேசாமல் கட் செய்துவிடுவார்கள்.
ஆரம்பத்தில் என் கணவர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அவர் கேட்கும் சில கேள்விகள், எனக்கும் நியாயமாகப் படுகிறது. `நீ துன்பமான வாழ்வில் இருந்து விடுபட்டு வந்திருக்கிறாய். விவாகரத்துக்குப் பின் நாம் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான குடும்பச் சூழலை கொடுத்திருக்கிறோம். இந்நிலையில், என்னை உன் குடும்பம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, நம் திருமணத்துக்கான மரியாதையை அவர்கள் கொடுக்கவில்லை, ஏதோ நாம் தவறான உறவில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்றுதானே அர்த்தமாகிறது?' என்கிறார்.
மேலும், `ஒருவேளை நீ அவர்களுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்யாமல் இருந்தால், உன்னை அவர்கள் இன்னும் ஏதோ குற்றவாளியாகத்தான் நிறுத்தியிருப்பார்கள். ஆனால், இப்போது அவர்களுக்கு உன் தேவை இருப்பதால்தான் உன்னுடன் பேசுகிறார்கள். உன் பிறந்தவீட்டை பார்த்துக்கொள்ள வேண்டியது உன் கடமை. அதே நேரம் உன்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கும், உன் மீது அவர்கள் பாசமாக இருப்பதற்குமான வித்தியாசத்தை நீ உணர்ந்துகொள். என்னை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நீ அவர்களுக்கு உதவுவது குறித்தும் எனக்கு சந்தோஷம்தான். என்றாலும், உறவுகளைச் சரிசெய்துகொள்' என்றார்.

கணவர் சொன்னது எனக்கும் நியாயமாகப்பட்டதால், என் பிறந்தவீட்டினரிடம் நான் பேசினேன். வார்த்தைகள் பரிமாறப்பட்டபோதுதான், என் கணவரை அவர்கள் துளியும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் மீது அவர்களுக்குத் துளியும் மரியாதை இல்லை என்பது புரிந்தது. `நாம என்ன சாதி, அவன் என்ன சாதி...', `நீ காசு கொடுத்தா, அதுக்காக அவனை நாங்க ஏத்துக்கணுமா? ஊரு எங்களை என்ன சொல்லும்...', `ரெண்டு புள்ளைகளோட நீ கல்யாணம் பண்ணிகிட்டனு எல்லார்கிட்டயும் போய் எங்களை பெருமையா சொல்லச் சொல்றியா..?' என்றெல்லாம் என் சகோதரர்கள் தங்களின் சீழ்ப்பிடித்த மனதை வெளியில் பேசியபோதுதான், என் கணவர் சொன்ன வார்த்தைகளில் உள்ள உண்மையை நான் உணர்ந்துகொண்டேன்.
ஒரு கொடுமைக்கார மிருகத்திடம் நான் அவதிப்பட்டபோது, `பொறுத்துக்கோ...' என்று சொன்ன என் பிறந்த வீட்டினர், இப்போது என்னை அன்பு, அக்கறை, மரியாதையுடன் பார்த்துக்கொள்ளும் என் கணவரை, `அவனையெல்லாம் நாங்க ஏத்துக்க முடியாது...' என்று சொல்லும்போது, அதிர்ச்சியாக, அவர்கள் மீது எனக்கு வெறுப்பாக உள்ளது. சாதி, மறுமணம் குறித்த சமூக அழுத்தத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்களை நான் புரிந்துகொள்வதைவிட, இந்த விஷயங்களில அவர்கள் திருந்த வேண்டியதுதானே முக்கியம்?
என் திருமணத்துக்கான மரியாதையை நான் பெற்று, என் பிறந்த வீட்டுக்கு அதைப் புரியவைக்க என்ன செய்ய வேண்டும்..?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.