நான் ஒரு நடுத்தர நகரத்தைச் சேர்ந்த பெண். கல்லூரியில் என்னுடன் படித்த தோழரும் நானும் காதலித்தோம். படிப்பை முடித்ததும், எங்கள் வீட்டில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். ஆனால், அவர் வீட்டின் சூழல் திருமணத்துக்கு இசைவாக இல்லை என்பதால், `எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்...' என்று வீட்டில் சொல்லிவிட்டு நான் மேற்படிப்புப் படிக்கப் போனேன்.
நான் காதலித்தவரின் வீட்டைப் பொறுத்தவரை, மிகவும் வசதியான குடும்பம். டிராவல்ஸ் தொழிலில் அவர் அப்பாவுக்கு நல்ல வருமானம். இவர், இவரின் அண்ணன் என அவர்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள். அண்ணனுக்கு இவரைவிட இரண்டு வயது அதிகம். அண்ணனும் தம்பியும் படிப்பை முடித்த கையோடு அப்பாவிடம் கசடற தொழிலைக் கற்றார்கள். தங்கள் உழைப்பைக் கொட்டி தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றார்கள்.

ஒரு கட்டத்தில், நான் காதலித்தவரின் அண்ணனுக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்தார்கள். ஆனால், பல வருடங்களாக எந்தப் பெண்ணும் அமையவில்லை. இதனால், எங்களின் திருமணமும் தள்ளிக்கொண்டே போனது. `எத்தனை வருஷம் ஆனாலும் உங்களுக்காக நான் காத்திருப்பேன்' என்று என்னவருக்கு உறுதி கொடுத்து, மேற்படிப்பு, வேலை என்று என் பெற்றோரை அரும்பாடுபட்டு சமாளித்து வந்தேன். ஒருவழியாக அவர் அண்ணனுக்குத் திருமணம் முடிய, நாங்கள் இருவரும் எங்கள் காதலை இருவரது வீட்டிலும் சொன்னோம்.
ஒரே கலவரம். சாதி மிகப்பெரிய தடையாக இருந்தது. இருவீட்டுப் பெற்றோருமே திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. படிப்பை முடித்து ஏற்கெனவே எட்டு வருடங்கள் இருவரும் காத்திருந்தாகிவிட்டது. இனி பெற்றோரின் சம்மதத்துக்கு காத்திருக்கும் அவகாசம் இல்லை என்பதால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டோம்.
காலப்போக்கில், இருவரது வீட்டிலும் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், எங்கள் மாமனார் எங்களை அரை மனதாகத்தான் ஏற்றுக்கொண்டார். அவர் மனதில் ஊறியிருந்த சாதிப்பற்றால், என் கணவர் மீதான பிரியம்கூட அவருக்குக் குறைந்துபோயிருந்தது.
எங்களுக்குத் திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. கணவரின் அண்ணன் குடும்பம் என் மாமனார், மாமியாருடன் வசிக்க, நானும் என் கணவரும் தனியாக வசிக்கிறோம். மாமனார், மாமியாருடன் அதே வீட்டில் நாங்களும் வசிக்க எங்களுக்கும் ஆசைதான். என் கணவரின் அண்ணன் பிள்ளைகள் தாத்தா, பாட்டியுடன் வளர்வதைப்போல, எங்கள் பிள்ளைகளும் வளர ஆசைப்பட்டோம். ஆனால், நாங்கள் நினைத்தாலும், `சரி இங்கேயே வந்துடுங்களேன்...' என்று மாமனாரேகூட சில நேரங்களில் நினைத்தாலும், என் கணவரைப் பற்றி இல்லாதது ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொடுத்து அவருக்கும் என் மாமனாருக்கும் ஓர் இடைவெளியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார் கணவரின் அண்ணன். காரணம்... சொத்து.

நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்ட கோபத்தில், குடும்பத் தொழிலைவிட்டு என் கணவரை வெளியேற்றிவிட்டார் என் மாமனார். திருமணத்துக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் என் கணவர் வேலைக்குச் சென்றார். அந்தக் காலகட்டத்தில், மொத்தத் தொழிலையும் தன் கன்ட்ரோலுக்குக் கொண்டுவந்துவிட்டார் என் கணவரின் அண்ணன். ஒருவழியாக நாங்கள் குடும்பத்துடன் சேர்ந்த பின்னர், என் கணவர் மீண்டும் தங்களது தொழிலைப் பார்க்க ஆரம்பித்தார். ஆனால், என் கணவரை பங்காளியாகப் பார்க்க ஆரம்பித்த அவரின் அண்ணன், தொழிலிலும் சொத்திலும் அவர் பங்குக்கு வருவதை விரும்பவில்லை.
என் மாமனாருக்கு என் கணவர் மீதிருந்த கோபம் ஆறினாலும், `திருவிழாவுல நம்ம சொந்தக்காரங்க, தம்பி காதல் கல்யாணத்தை பத்தி கேலியா பேசினாங்களாம்... இவனால போன மானம் திரும்பவே திரும்பாது...' என்று இப்படி ஏதாவது சொல்லி, என் மாமனாரை மீண்டும் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார் கணவரின் அண்ணன். மாமனார் வயோதிகம் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலிருந்து ஒதுங்கிக்கொள்ள, வரவு, செலவு மொத்தத்தையும் கையில் எடுத்த கணவரின் அண்ணன், என் கணவரை அதிலிருந்து ஒதுக்கியே வைக்கிறார். பெயருக்கு மூன்று வாகனங்களை என் கணவர் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, `நீ இதை பார்த்துக்கோ...' என்கிறார். ட்ராவல்ஸின் மொத்த வருமானம், என் மாமனார் கட்டிவைத்துள்ள வீடுகளில் இருந்து கிடைக்கும் வாடகைப் பணம் என் எல்லாவற்றையும் ஏகபோகமாக அனுபவித்து வருகிறார்.
இதைப் பற்றி என் கணவர் என் மாமனாரிடம் முறையிட்டால், இயல்பிலேயே மூத்த பிள்ளையின் மீது இருக்கும் அதிக பாசத்தாலும், இன்னொரு பக்கம் என் கணவரின் மீது உள்ள காதல் திருமணக் கோபத்தாலும் அவரைத்தான் மேற்கொண்டு திட்டுகிறார் என் மாமனார். `அண்ணனை அப்படியெல்லாம் நினைக்காத...' என்று என் கணவருக்கு அறிவுரை கூறுகிறார். என் மாமியாருக்கு, தன் மூத்த பிள்ளையின் சுயநலச் செயல்பாடுகள் ஓரளவுக்குப் புரிகிறது. என்றாலும், அவருக்கு அறிவுரை சொல்வதற்கு பதில், `சொத்தை நினைச்சுட்டு அண்ணன்கூட சண்டை எதுவும் போட்டுடாதடா...' என்று என் கணவரையே அடக்கப் பார்க்கிறார். பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று என் மாமனார், மாமியார் நினைப்பது புரிகிறது. ஆனால், பங்காளி துரோகத்தை அவர்களும் தட்டிக்கேட்காமல், எங்களையும் அதை கேள்விகேட்க விடாமல் தடுப்பது நியாயமா?
`அதான் எதுவும், யாரும் வேண்டாம்னு போனீங்க இல்ல... இப்போ மட்டும் ஏன் சொத்துக் கணக்குக்கு எல்லாம் வர்றீங்க...' என்று கேட்கிறார் என் கணவரின் அண்ணன் மனைவி என்னிடம். ஆம் நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டோம்தான். அதற்காக, `சொத்து எதுவும் வேண்டாம்...' என்று நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்? இந்தத் தொழிலில் என் மாமனாரின் அப்பா, என் மாமனார், அவரின் இரண்டு பிள்ளைகள் என்று எல்லோரின் உழைப்பும் கிடக்கிறது. அப்படியிருக்கும்போது, என் கணவர் மட்டும் எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்? மேலும், காதல் திருமணம், சாதிக் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் சொத்துக்கு வரக்கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. `நீ சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா என் சொத்து உனக்குக் கிடையாது...' என்று அப்பாக்கள் சொல்லும் அர்த்தமற்ற வாதங்கள் உடைக்கப்பட வேண்டிய அவசியத்தை இப்போது நான் அழுத்தமாக உணர்கிறேன். சாதிக் கலப்புத் திருமணம் செய்துகொள்வது என்பது குற்றம் அல்ல, நீங்கள் தண்டனை தருவதற்கு. அது இரு தனிநபரின் விருப்பம், உரிமை.

`அப்பா ரெண்டு பேருக்கும் சமமாதான் சொத்துப் பிரிப்பார், நீ மனசப்போட்டுக் குழப்பிக்காத' என்று என் கணவரை சமாதானப்படுத்துகிறார் என் மாமியார். ஆனால், சொத்துகள் பிரிக்கப்படுவதற்கு முன்னதாகவே மாமனாரின் சேமிப்புப் பணத்தை கணிசமாகத் தன் அக்கவுன்ட்டில் மாற்றிக்கொள்வது, சொத்துகளில் அதிக மதிப்புள்ளதை தனக்கு ஒதுக்கிக்கொள்வது என்று வேட்டையில் இருக்கிறார் என் கணவரின் அண்ணன். `பேசாம வக்கீல்கிட்ட போக வேண்டியதுதான்...' என்று என் கணவர் வெறுத்துப்போய் பேசும்போதெல்லாம், நான்தான் அவரை சமாதானப்படுத்துகிறேன்.
`சொத்துக்காக அண்ணன், தம்பிக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டால், அது உங்கள் பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுக்கும். யார் மனதும் புண்பட்டுவிடாமல், உறவு சேதமாகிவிடாமல், அதே நேரம் நம் உரிமையை விட்டுக்கொடுக்காமல் நாம் இந்தப் பிரச்னையைக் கையாள வேண்டும்' என்று என் கணவருக்கு நம்பிக்கை கொடுத்துவருகிறேன். ஆனால், அதை எப்படிச் செய்வது?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.