நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அம்மாதான் ஒற்றை பெற்றோராக என்னை வளர்த்து ஆளாக்கினார். அம்மாவின் ஆசிரியப் பணி, பொருளாதார ரீதியாகக் கை கொடுத்து எங்களை வாழ்க்கை நகர்த்த வைத்தது. மேலும், அம்மாவின் சுய சம்பாத்தியம் அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையைக் கொடுத்தது. கூடவே, உறவினர்களது உதவியற்ற நிலை அவரை யாரையும், எதற்கும் சாராத ஒரு வாழ்க்கைக்குப் பழக்கியது.
நான் கல்லூரிப் படிப்பை முடித்ததும், ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு என்னுடன் பணிபுரிந்த ஒருவரும் நானும் காதலித்தோம். அதை அம்மாவிடம் சொல்லி திருமணத்துக்குச் சம்மதம் கேட்டபோது, `உன் விருப்பம் எதுவோ அதுதான் என் முடிவும், ஊரு, சொந்தம்னு யாரை பத்தியும் நாம கவலைப்பட வேண்டாம்' என்று சொல்லி, என் திருமணத்தை நடத்திவைத்தார்.

என் கணவர், அப்பா, பெரியப்பா, சித்தப்பா எனப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். எனவே, அவருக்கு எப்போதும் சொந்தங்கள், சொந்தங்கள் கூடும் விசேஷங்களில் எல்லாம் ஆர்வம் அதிகம். ஆனால், தனித்த மனுஷியாகவே வாழ்க்கையைக் கழித்த என் அம்மாவுக்கு, என் மாமனார் வீட்டின் பெரிய குடும்பத்துடனும், பரந்துபட்ட அந்த உறவுகளுடனும் பழகுவது எளிதாக இல்லை. எனவே, அம்மா தன் வீட்டுக்கு புகுந்த வீட்டு உறவுகள் யாரையும் அழைப்பது இல்லை. மேலும், மாமனார் வீட்டில் என்ன விசேஷம் என்று அழைத்தாலும் தவிர்ப்பார்.
என் மாமனார் வீட்டில், `ஏன் உங்க அம்மா எங்க யார்கூடவும் பேசப், பழக முன்வர மாட்டேங்குறாங்க, நம்ம வீட்டு விசேஷம் எதுக்கும் வர மாட்டேங்குறாங்க..?' என்று கேட்கும்போதெல்லாம், `இல்ல... அம்மாவுக்கு ஸ்கூல்ல லீவ் இல்லையாம்...' என்று சொல்லியே சமாளித்தேன் நான். ஆனால், என் கணவருக்கு என் அம்மாவின் இயல்பு தெரிந்துவிட்டது. `உங்க அம்மா நடவடிக்கை எனக்குப் பிடிக்கலை' என்பார்.
இன்னொரு பக்கம், என் கணவர், என் புகுந்த வீட்டினருக்கு, ஒற்றை பெற்றோராக என்னை வளர்த்த என் அம்மாவின் போராட்ட வாழ்க்கையை, அதனால் இறுகிப்போயிருக்கும் அவர் இயல்பை புரிந்துகொள்ளும் பக்குவமும் இல்லை. `உங்கம்மா ரொம்ப ஈகோ பிடிச்சவங்களா இருக்காங்க' என்று தட்டையாகப் பேசுவார்கள்.
நாங்கள் தனிக்குடித்தனம் இருந்தாலும், என் கணவர் வீட்டு உறவுகள் பலர் வார இறுதி நாள்களில் எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார்கள். நாங்களும் அப்படி அவர்கள் வீட்டுக்குச் செல்வோம். நானும் அம்மாவுமாக வளர்ந்தபோது இது போன்ற உறவினர் வருகை, விருந்து என்றெல்லாம் அனுபவமே இல்லை என்பதால், அந்த கெட்-டுகெதர்கள் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், என் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. `உனக்குனு ஒரு ப்ரைவஸி வேணும். வீக் எண்ட்லயும் உனக்கு ஓய்வு கொடுக்காம உன் கணவர் வீட்டு விருந்தினர்கள் வர்றதும், அவங்களுக்கு நீ சமைச்சுப் போடுறதும் எனக்குப் பிடிக்கவே இல்ல. இப்போ சந்தோஷமா தெரிஞ்சாலும் இதைப் பழக்கிட்டா அப்புறம் நீ இதிலிருந்து மீளவே முடியாது' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இதனாலேயே ஒரு கட்டத்தில், `வேறு இடத்தில் உன்னை கல்யாணம் பண்ணிக்கொடுத்திருக்கலாம்' என்று என்னிடமே சொல்ல ஆரம்பித்துவிட்டார். `எனக்கு எந்தக் குறையும் இல்ல, நான் நல்லாயிருக்கேன்' என்றாலும் அவர் கேட்பதாக இல்லை.

இந்நிலையில், நான் கர்ப்பம் ஆனதால் என் கணவர் என்னை வேலையை விடச் சொல்ல, நான் வேலையை விட்டேன். அதில் என் மீது என அம்மாவுக்குக் கோபம். என்னை இந்த முடிவை எடுக்கவைத்தது என் கணவர்தான் என்று, அவர் மீதும் கடும் கோபம். அம்மா சுயசம்பாத்தியம் உள்ள பெண்மணி என்பதால், அந்தப் பொருளாதார சார்பின்மையின் முக்கியத்துவம் பற்றி அவர் நன்கு அறிவார். அதை நான் உதறுவதாக அவர் நினைத்தார். எனக்கும் அது புரிகிறது என்றாலும், என் குழந்தை ஓரளவு வளர்ந்த பிறகு என் கரியரைத் தொடங்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.
இந்தப் பிரச்னை குறித்து எனக்கும் என் அம்மாவுக்குமான பேச்சுவார்த்தை, ஒரு கட்டத்தில் என் கணவருக்கும் என் அம்மாவுக்குமான வாக்குவாதமாக மாறிவிட்டது. `எங்க குடும்பத்து முடிவுல நீங்க தலையிடாதீங்க' என்று அவர் சொல்ல, `உங்களுக்கும் உங்க சொந்தக்காரங்களுக்கும் சமைச்சுப் போடவா அத்தனை கஷ்டத்துலயும் நான் என் மகளை படிக்கவெச்சேன்' என்று அம்மா சொல்ல, கடைசியில் அது இருவருக்குமான சண்டையாக முடிந்துவிட்டது.
என் அம்மாவுக்குத் தன் கடந்த காலத்தால் மனிதர்களுடனும் உறவுகளுடனும் இணக்கமாவது சாத்தியமில்லாததாக உள்ளது. வீட்டில் எப்போதும் 15 பேர் இருக்கும் சூழலில் வளர்ந்த என் கணவருக்கு, ஆள் அண்டாத என் அம்மா மீது சலிப்பு வந்துவிட்டது. மேலும், `எல்லா மாமியாரும் மருமகன்னா எவ்ளோ மரியாதை கொடுக்குறாங்க..? ஆனா உங்கம்மா என்னை ஏதோ கொடுக்கக் கூடாதவனுக்குப் பொண்ணைக் கொடுத்துட்ட மாதிரி பார்க்குறாங்க' என்கிறார் கணவர். `நான் எப்பவுமே சுதந்திர மனுஷிதான். மருமகன் வந்துட்டாருன்னு அவர்கிட்டயும், அவர் குடும்பத்துகிட்டயும் கைக்கட்டியெல்லாம் என்னால நிக்க முடியாது. குடும்பப் பொறுப்பு, அன்புனு எல்லாம் சொல்லி உன்னை அடிமைப்படுத்த நீயும் அனுமதிக்காத' என்கிறார் அம்மா. இவர்களுக்கு இடையில் வளர்ந்துகொண்டே இருக்கும் ஈகோ பிரச்னையில் என் நிம்மதி சுத்தமாகத் தொலைந்துவிட்டது.

இப்போது என் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. ஆனால் என் அம்மாவுக்கும் கணவருக்கும் இடையில் இடைவெளியும் சச்சரவுகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில், `இனிமே உங்க அம்மா நம்ம வீட்டுக்கு வரவேண்டாம்' என்று சொல்லிவிட்டார் என் கணவர். எனக்கு இருவருமே முக்கியம். என் அம்மாவுக்கு நான்தான் உலகம். அவரை யாருக்காகவும், எதற்காகவும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. அவரை ஆயுளுக்கும் நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். `மகளா நீ அதை சொல்லலாம். ஆனா நான் உங்கம்மாவை சகிச்சுக்கிட்டுப் போகணும்னு எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த அவசியமும் இல்ல' என்று கோபப்படும் கணவரை எப்படி சமாதானம் செய்வது? அம்மாவுக்கும் கணவருக்கும் சுமூகமான ஓர் உறவை எப்படி நான் ஏற்படுத்துவது?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.