Published:Updated:

குடும்ப வன்முறையாகிப்போன இரண்டாவது திருமணம், வாழ அழைக்கும் முதல் கணவர்; முடிவு என்ன? #PennDiary84

Penn Diary
News
Penn Diary

`நீயும் நானும் வாழ்க்கையில் நிறைய பட்டு அனுபவித்துவிட்டோம். நாம் மீண்டும் சேர்ந்தால் என்ன? நீ துன்புறுத்தப்படும் வாழ்க்கையை விட்டு வா. யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாம் மீண்டும் நம் வாழ்க்கையை ஆரம்பிப்போம்’ என்றார் முதல் கணவர்; மறுத்துவிட்டேன்.'

Published:Updated:

குடும்ப வன்முறையாகிப்போன இரண்டாவது திருமணம், வாழ அழைக்கும் முதல் கணவர்; முடிவு என்ன? #PennDiary84

`நீயும் நானும் வாழ்க்கையில் நிறைய பட்டு அனுபவித்துவிட்டோம். நாம் மீண்டும் சேர்ந்தால் என்ன? நீ துன்புறுத்தப்படும் வாழ்க்கையை விட்டு வா. யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாம் மீண்டும் நம் வாழ்க்கையை ஆரம்பிப்போம்’ என்றார் முதல் கணவர்; மறுத்துவிட்டேன்.'

Penn Diary
News
Penn Diary

கிராமத்துப் பெண் நான். அப்பா... விவசாயி. நான், தம்பி என வீட்டில் இரண்டு பிள்ளைகள். நான் கல்லூரிப் படிப்பை முடித்தபோது, வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அப்போது, என் தம்பியின் மிக நெருங்கிய தோழனின் அண்ணனுக்கு, அவர்கள் வீட்டிலிருந்து வந்து என்னை பெண் கேட்டார்கள். என் தம்பி, அவர்கள் மிகவும் நல்ல குடும்பம் என்று அதற்கு சம்மதிக்கச் சொல்லி என் பெற்றோரிடம் கேட்டான். எங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் குடும்பம் பல வருடங்களாகப் பழக்கம் என்பதால், சம்மதித்தோம்.

Brother, Sister
Brother, Sister
Pexels

மாப்பிள்ளை தனியாகத் தொழில் செய்தார், கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை, மேலும் மாப்பிள்ளை வீட்டினர் பணக்கார குடும்பம் என்பதால், ஊர், உறவு எல்லாம் பொறாமைப் படும்படியாக சம்பந்தம் அமைந்ததாக எங்கள் வீட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். நானும் அந்த மகிழ்ச்சியுடன்தான் வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்னைகள் வர ஆரம்பித்தன. அதற்குக் காரணம், அவர் தொழில் தொழில் என்றே ஓடிக்கொண்டிருந்ததால் எனக்கான அன்பை, நேரத்தை கொடுக்காமல் போனது. அதற்கான வருத்தம்கூட அவரிடம் இல்லை.

`பத்து வருஷத்துக்கு முன்னாடி வரை பணத்துக்கு அவ்ளோ கஷ்டப்பட்ட நாங்க, இப்படியெல்லாம் நேரம், காலம் பார்க்காம ஓடித்தான் இன்னைக்கு இவ்வளவு பணம் சம்பாதிச்சிருக்கோம். நீ சொல்ற மாதிரி வீடே கதினு கிடந்தா உங்களை மாதிரி மிடில் கிளாஸாவே கிடக்க வேண்டியதுதான்’ என்று ஒரு சண்டையில் அவர் பேசியது எனக்கு மிகவும் காயமாகிவிட, அதற்குப் பின்னான நாள்களில் எல்லாம் அந்தக் காயத்தின் எரிச்சலுடனேயே நான் அவரிடம் நடந்துகொள்ள, எங்கள் உறவு, சிக்கலுக்கு உள்ளானது. வசதியில்லாத வீட்டுப்பெண் என்பதால் என்னை அவர் மதிப்பதில்லை என்ற எண்ணம் என் மனதில் வேரூன்றியது. அதைச் சரிசெய்ய அவரும் நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சண்டைகளும் விரிசல்களும் அதிகமாக, இருவரும் விவாகரத்து முடிவு எடுத்தோம். நட்பாக இருந்து உறவாக இணைய ஆசைப்பட்ட எங்கள் இரண்டு குடும்பங்களும் எங்களை எவ்வளவு சமாதானப்படுத்த முயன்றும், இருவருமே எங்கள் முடிவில் உறுதியாக இருந்து பிரிந்தோம்.

Wedding(Representational image)
Wedding(Representational image)
Pixabay

விவாகரத்துக்கு ஒரு வருடத்துக்குப் பின், எங்கள் வீட்டில் எனக்கு மீண்டும் மாப்பிள்ளை பார்த்தார்கள். உறவினர் ஒருவருடன் திருமணமும் முடிந்தது. ஆனால், இந்த வாழ்க்கை முதல் வாழ்க்கையைவிட கொடூரமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது கணவர், சகிக்க முடியாத ஆணாதிக்கவாதி. குறிப்பாக, எனக்கு அது இரண்டாம் திருமணம், அவருக்கு முதல் திருமணம் என்பதால், ஏதோ அவர் தியாகம் செய்து எனக்கு வாழ்க்கை கொடுத்திருப்பதாகவும், அதனால் நான் அவருக்கு ஆயுளுக்கும் அடிமையாகக் கிடக்க வேண்டும் என்பதாகவும் என்னை நடத்த ஆரம்பித்தார்.

வீட்டில் இருப்பது மூச்சுமுட்டவே, நான் ஓர் ஆசுவாசமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால், அவர் அதற்கும் சம்மதிக்கவில்லை. அதை நான் எதிர்த்துக் கேட்கவே, என்னை அடிக்க ஆரம்பித்தார். எனக்கு என்று தனிப்பட்ட விருப்பம், சுயமரியாதை, சுதந்திரம் என்று எதுவும் இல்லாத, அவருக்கு மனைவியாக இருந்து பணிவிடைகள் செய்யும் பெண்ணாக மட்டுமே நான் இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம், கட்டளை. என் வீட்டில் நான் இதைச் சொல்லி அழுதபோது, `ஏற்கெனவே ஒரு கல்யாணம் பாழாப்போகி இது ரெண்டாவது கல்யாணம். கஷ்டமோ, நஷ்டமோ இதுதான் இனி உனக்கு மிச்ச வாழ்க்கை. சாகுற வரை சகிச்சுக்கிட்டு இருந்துக்கோ’ என்று சொன்னபோது, உடைந்து போனேன்.

Domestic violence (Representational Image)
Domestic violence (Representational Image)
Pixabay

இதற்கிடையில், நான் என் இரண்டாவது திருமண வாழ்க்கையில் குடும்ப வன்முறைக்கு ஆளாகி வருவதை உறவினர் ஒருவர் மூலமாக அறிந்த என் முதல் கணவர், என்னிடம் தொடர்புகொண்டு பேசினார். `உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் நாசமாக நான்தான் காரணம். நான் தேடி ஓடிய பணம் இப்போது என்னிடம் நிறைய இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லவே இலை. நான் உன் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு நம் வாழ்க்கையை முடித்துவிட்டேன். வீட்டில் எனக்கு பெண் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், நான் எதிலுமே பற்றற்ற நிலையில் இருக்கிறேன். சரி நீயாவது நன்றாக இருப்பாய் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது உன் வாழ்க்கையும் துன்பத்தில் உள்ளதை அறிந்தபோது, என் குற்றஉணர்வு அதிகரித்துவிட்டது. நீயும் நானும் வாழ்க்கையில் நிறைய பட்டு அனுபவித்துவிட்டோம். நாம் மீண்டும் சேர்ந்தால் என்ன? நீ துன்புறுத்தப்படும் வாழ்க்கையை விட்டு வா. யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாம் மீண்டும் நம் வாழ்க்கையை ஆரம்பிப்போம்’ என்றார் முதல் கணவர். ஆனால், பட்டது வரை போதும், மீண்டும் ஏதாவது புதிய துயரத்தில் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அஞ்சி, மறுத்துவிட்டேன்.

இது நடந்து ஓராண்டாகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், என் திருமண வாழ்க்கையில் ரணங்கள் நிறைய பெருகிவிட்டன. என் கணவர் வார்த்தைகளால் என்னை துன்புறுத்துவது, அடிப்பது என்று நரகமாகச் சென்றுகொண்டிருக்கின்றன நாள்கள். இந்நிலையில் மீண்டும் என் முதல் கணவர் என்னை தொடர்புகொண்டு, `நான் இன்னும் காத்திருக்கிறேன்’ என்கிறார். என்ன முடிவெடுப்பது நான்?