Published:Updated:

சுதந்திரமாக வளர்ந்த பிறந்த வீடு, கட்டுப்பாடுகளால் மூச்சடைக்கவைக்கும் கணவர் வீடு; விடுபட வழி என்ன?

Penn Diary
News
Penn Diary

என் கணவரிடம், 'இப்படித்தான் உன் வீடு இருக்கும் என்று தெரிந்திருந்தால் உன்னைக் காதலித்திருக்கவே மாட்டேன். அன்புக்கு இணையாக சுதந்திரமும் அவசியம் என்று உணர்த்தப்பட்டு வளர்க்கப்பட்டவள் நான்' என்றேன். #PennDiary-67

Published:Updated:

சுதந்திரமாக வளர்ந்த பிறந்த வீடு, கட்டுப்பாடுகளால் மூச்சடைக்கவைக்கும் கணவர் வீடு; விடுபட வழி என்ன?

என் கணவரிடம், 'இப்படித்தான் உன் வீடு இருக்கும் என்று தெரிந்திருந்தால் உன்னைக் காதலித்திருக்கவே மாட்டேன். அன்புக்கு இணையாக சுதந்திரமும் அவசியம் என்று உணர்த்தப்பட்டு வளர்க்கப்பட்டவள் நான்' என்றேன். #PennDiary-67

Penn Diary
News
Penn Diary

நான் ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண். அப்பா, உள்ளூர் போஸ்ட்மேன். அம்மா இல்லத்தரசி. வீட்டில் நான், தங்கை என இரண்டு பெண் பிள்ளைகள். என்னையும் தங்கையையும் அன்பாக, பொறுப்பாக மட்டுமல்ல, சுதந்திரமாகவும் வளர்த்தெடுத்தார்கள் என் பெற்றோர். உடை முதல் உணவு வரை, படிப்பு முதல் டூர் வரை எங்களது நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

Sisters (Representational image)
Sisters (Representational image)
Pexels

நான் டிகிரியை முடித்துவிட்டு, அருகில் இருந்த நகரத்தில், ஒரு தனியார் வங்கியில் பணியில் சேர்ந்தேன். பொருளாதார சுதந்திரத்தை என்னை ருசிக்கவைத்த என் பெற்றோர், 'எக்காலத்திலும் வேலையை மட்டும் விட்டுவிடக்கூடாது. பெண்கள் யாரையும் சார்ந்திராமல் வாழ வேண்டும்' என்று மனதில் ஆழப்பதிய வைத்தனர். என் தங்கைக்கு என்னை ரோல் மாடலாகக் காட்டினார்கள்.

எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருந்தபோது, என் வாழ்வில் காதல் வந்தது. நான் வேலைக்குச் சென்று வந்த பக்கத்து நகரத்தை சேர்ந்தவர் அவர். இரண்டு வருட காதலுக்குப் பிறகு, இருவரும் அவரவர் வீட்டில் திருமணத்துக்கு அனுமதி கேட்டோம். என் வீட்டில், பையன் குணம், வருமானம், குடும்பம் என்று விசாரித்துவிட்டு, 'இந்த முடிவில் நீ உறுதியாக இருக்கிறாயா?' என்று கேட்டுவிட்டு, சம்மதித்துவிட்டனர். ஆனால் அவர் வீட்டிலோ, சாதியை காரணம் காட்டி சம்மதம் தெரிவிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்துக்குப் பிறகே என் கணவரால் அனுமதி வாங்க முடிந்தது.

Love marriage(Representational image)
Love marriage(Representational image)
Pixabay

கிராமத்தில் வளர்ந்திருந்தாலும் சுதந்திரமாகவும் முற்போக்கு எண்ணங்களுடனும் வளர்க்கப்பட்டவள் நான். ஆனால் கணவர் வீடு நகரத்தில் இருந்தாலும், ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம், கட்டுப்பாடுகள் என எனக்கு மூச்சுமுட்ட வைக்கிறது. பொறுமையாகச் செல்ல வேண்டும், பெரியவர்களுக்கான மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்கிறேன். ஆனால் என் மனசாட்சியோ, 'பொறுமையாக இருப்பதற்கும் அடிமையாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது' என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

அப்படி என்ன கட்டுப்பாடுகள் என்கிறீர்களா? வீட்டில் என்ன விஷயம் என்றாலும் ஆண்கள்தான் பேச வேண்டும், முடிவெடுக்க வேண்டும். பெண்கள் கருத்து சொல்ல இடமில்லை. தியேட்டர், அவுட்டிங் எல்லாம் செல்லக் கூடாது. வெளியே சென்றால் அது கோயில், உறவினர் விசேஷங்களுக்கு மட்டுமே. சுடிதார் அணியலாம், மற்ற மாடர்ன் உடைகளுக்கு அனுமதியில்லை. விருந்தினர்கள் யாராவது வீட்டுக்கு வரும்போது நைட்டி அணியக்கூடாது. ஒருவேளை எதிர்பாராமல் யாரேனும் வந்துவிட்டாலும் நாம் உடனடியாக ஆடை மாற்றிக்கொள்ள வேண்டும். மாமியார், மருமகள் என வீட்டில் இரண்டு பெண்கள் இருக்கும்போது எந்த வீட்டு வேலைகளுக்கும் ஆள் வைத்துக்கொள்ளக் கூடாது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Masha Raymers from Pexels

என் அப்பா, அம்மா வீட்டுக்கு மாதத்தில் இரண்டு நாள் சென்றுவர மட்டுமே அனுமதி. என் உறவினர்கள் தேவையில்லாமல் வீட்டுக்கு வரக் கூடாது. நான் அக்கம், பக்கத்தில் இருக்கும் பெண்களுடன் சம்பிரதாயமாகப் பேசலாம், ஆனால் நட்புடனெல்லாம் இருக்கக் கூடாது. ஹாலில், டைனிங்கில் என கணவருக்கு அருகில் அமரக் கூடாது. தினமும் என்ன சமையல் என்பதை என் மாமியார், மாமனாரிடம் கேட்டே முடிவு செய்வார். இப்படி, இன்னும் இன்னும் நீள்கிறது பட்டியல்.

எனக்குத் திருமணமாகி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. நுரையீரல் முட்டுமளவுக்கு திணறிப்போகிறேன் தினம் தினம். என் கணவரிடம், 'இப்படித்தான் உன் வீடு இருக்கும் என்று தெரிந்திருந்தால் உன்னைக் காதலித்திருக்கவே மாட்டேன். அன்புக்கு இணையாக சுதந்திரமும் அவசியம் என்று உணர்த்தப்பட்டு வளர்க்கப்பட்டவள் நான்' என்றால், 'எனக்கும் அப்படி ஒரு சுதந்திர வாழ்வுதான் வேண்டும். ஆனால், நானே இன்றும் என் பெற்றோரிடம் அடிமை பிள்ளையாக இருக்கும்போது, உன் சுதந்திரத்துக்கு என்னால் என்ன உதவ முடியும்...' என்கிறார். அவரை பார்க்க கோபமாகவும் இருக்கிறது, பாவமாகவும் இருக்கிறது.

Daughter in law(Representational image)
Daughter in law(Representational image)
Pexels

வேறு வங்கியில் வேலைக்கு முயன்றுகொண்டு இருந்ததால், திருமணத்தின்போது வேலையை விட்டேன். திருமணத்துக்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்து புதிய வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என்று இருந்தேன். இப்போது அதற்கான முயற்சியில் இறங்கும் என்னை, 'குழந்தை பெத்துக்கிட்டு, அப்புறமா வேலை பத்தியெல்லாம் யோசிக்கலாம்' என்கிறார் என் மாமியர். எனக்கு இருட்டிக்கொண்டு வருகிறது. இப்போது எனக்கு வேலை என்பது பொருளாதார அவசியம் என்பதுடன், அலுவலகம் சென்று வருவது இந்த சிறைச்சாலை வீட்டிலிருந்து ஆசுவாசமாகவும் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் அதற்கும் தடைபோட்டுவிடுவார்களோ என்று நினைக்கும்போதே பதற்றமாக இருக்கிறது.

என் சூழலுக்குத் தீர்வென்ன?