என் அம்மாவுக்கு 19 வயதில் திருமணம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆறு வருடங்களாகக் குழந்தை இல்லை. எனவே, உறவினர் குடும்பத்திலேயே ஓர் ஆண் குழந்தையை சட்டப்படி தத்தெடுத்தனர். அண்ணனுக்கு அப்போது 10 வயது. அண்ணன் வந்ததுக்குப் பின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்வுக்கு அர்த்தம் கிடைத்தது. கூடுதல் ஆசீர்வாதமாக, அண்ணனைத் தத்தெடுத்து 10 வருடங்கள் கழித்து, நானும் தம்பியும் இரட்டைக் குழந்தைகளாக எங்கள் பெற்றோருக்குப் பிறந்தோம். அண்ணன் வந்த ராசியால்தான் நாங்கள் பிறந்தோம் என்று, எங்கள் மூன்று பேரையும் ஆசை ஆசையாக வளர்த்தனர் பெற்றோர்.
எதிர்பாராத விதமாக, எங்கள் அப்பா நாங்கள் பிறந்த ஐந்து வருடங்களில் இறந்துவிட்டார். அம்மா உலக விவரம் எதுவுமே தெரியாத வெள்ளந்தி. அப்போது, 25 வயதில் இருந்த என் அண்ணனிடம், எங்கள் வீட்டுப் பொறுப்பை கொடுத்தார் அம்மா. அண்ணன் அடுத்த குடும்பத் தலைவர் ஆனார்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதுமே குழந்தைகளில் வேறுபாடு இருந்ததில்லை. ஆனால், அண்ணனுக்கு எப்போதுமே எங்களிடம் பாசம் இருந்ததாகத் தெரியவில்லை. எங்களிடம் மிகுந்த கண்டிப்புடனேயே இருப்பார். அம்மாவிடம் நானும் தம்பியும் முறையிட்டால், `அம்மா, அப்பாவுக்கு குழந்தைங்க பிறந்ததுனால, நம்ம மேல பாசம் குறைஞ்சிடுமோனு பயப்படுறான். என்ன இருந்தாலும் அவன்தான் எனக்கு மூத்த பையன். நீங்களும் எப்பவும் அவனை வேற்றுமையா நினைக்காம, மூணு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்' என்றுதான் எப்போதும் சொல்லி வளர்ப்பார் அம்மா. நாங்களும், அது அண்ணனின் பொஸசிவ்னெஸ் என்றே புரிந்துகொண்டோம்.
வீட்டில் வசதிக்குக் குறைவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பிறகு, அம்மாவுக்குக் கிடைத்த இன்ஷூரன்ஸ் பணம், அப்பா போட்டுவைத்திருந்த ஃபிக்ஸடு பணத்தில் கிடைக்கும் வட்டி, ஊரில் விவசாய நிலத்தில் இருந்து வரும் வருமானம் என்று இந்தப் பணம் போதுமானதாக இருந்தது, எங்கள் அம்மாவுக்கு எங்கள் மூவரையும் வளர்க்க. அண்ணன் படித்து நல்ல வேலைக்குச் சென்றார். ஆனாலும், அண்ணனின் சம்பளம் குடும்பத்துக்குத் தேவைப்படவில்லை என்பதால், அதை அவரது சேமிப்புக் கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டார் அம்மா.
அண்ணனுக்குத் திருமணமானது. அப்போது ஊரில் சொந்த நிலம் ஒன்றை விற்று, மிக விமரிசையாக அதை நடத்தினார் அம்மா. அதேபோல, நான், தம்பி என எங்கள் திருமணச் செலவுகளுக்கும், ஊரில் இருக்கும் மீதம் இரண்டு நிலங்களைக் கல்யாணத்தின்போது விற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார் அம்மா.
திருமணத்துக்குப் பின், கண்டிப்பு என்றே நாங்கள் அதுவரை அறிந்திருந்த அண்ணனின் இயல்பில், உண்மையில் ஒளிந்திருந்தது சுயநலம் என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினேன். பின்னர்தான், அதுவரை அவர் எங்களை பார்த்துக்கொண்ட விதத்தை மதிப்பீடு செய்து, சில உண்மைகளைப் புரிந்துகொண்டேன்.

என் அண்ணனை என் அப்பா ஊரிலேயே சிறந்த பள்ளியில் படிக்க வைத்தார். ஆனால், என்னையும் தம்பியையும் சிறந்த பள்ளி, கல்லூரி, கோர்ஸில் படிக்க வைக்க அண்ணன் எந்த ஆர்வமும் காட்டவில்லை, முயற்சியும் எடுக்கவில்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியிலேயே இருவரும் படித்தோம். கல்லூரியில் சேர்ந்தபோதுகூட, எதிர்காலத்துக்கான கோர்ஸ் என்றெல்லாம் வீட்டில் எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. பெயருக்கு ஒரு டிகிரி என்றே என்னையும் தம்பியையும் படிக்க வைத்தார் அண்ணன்.
கல்லூரிப் படிப்பை முடித்தபோது, தம்பி வேலைக்குச் செல்ல முயன்றுகொண்டிருந்தான். அப்போது, வயசுக்கோளாறில் தன் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஒரு பிரச்னையில், அதற்குத் தொடர்பே இல்லாத இவனது பெயரும் இவன் நண்பர்களுடன் சேர்ந்து காவல்துறை புகார்வரை சென்றது. `இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல... ஃப்ரெண்ட்ஸ்கூட என் பெயரையும் சேர்த்துட்டாங்க...' என்று அண்ணனிடம் அழுதான்.
அண்ணன் நினைத்திருந்தால், தம்பி பெயரில் எஃப்.ஐ.ஆர் பதியப்படுவதைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், அவனுக்காக ஒரு வார்த்தைகூட யாரிடமும் பேச அவர் முன்வரவில்லை. `உனக்கெல்லாம் அப்போதான் புத்தி வரும்...' என்று அவனைக் கைவிட்டுவிட்டார். அதில் மிகவும் மனம் வெறுத்துபோனான் தம்பி. அம்மாவிடம் முறையிட்டபோது, `அண்ணனுக்கு அவ்ளோ கோபம் வர்ற மாதிரி நீ பொறுப்பில்லாம நடந்திருக்க...' என்று அவரும் எப்போதும்போல அண்ணனை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.
இதுபோன்ற சூழல்கள் தொடர்கதையாக, தம்பி விரக்தியில் நண்பர்கள், சிகரெட், குடி என்று பாதை மாறிப் போனான். அப்போதும்கூட, அவனை நல்வழிப்படுத்த வேண்டும், ஒரு வேலை அல்லது தொழிலை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும், முனைப்பும் அண்ணனிடம் இல்லை. மாறாக, அம்மா தம்பியின் மீது நம்பிக்கை இழக்கும் அளவுக்கு அவனை `உருப்படாதவன்' என்று தொடர்ந்து முத்திரை குத்திக்கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில், தம்பி உருப்படாதவனாகவே போய்விட்டான்.

இப்போது எனக்கும் தம்பிக்கும் 32 வயதாகிறது. தம்பி, வேலை இல்லாத தண்டச்சோறு ஆகிவிட்டான். எனக்கு இன்னும் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டே இருக்கிறார் என் அண்ணன். என் ஜாதகத்தில் குறை இருப்பதாகவும், அதனால் பொறுமையாக, அதற்குப் பொருத்தமான ஜாதகமாகப் பார்த்தே திருமணத்தை முடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் திருமணம் ஆனாலும் நான் வாழாமல் வீடு திரும்பிவிடும் வகையில் என் ஜாதக அமைப்பு இருப்பதாகவும் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். வரும் வரன்களை எல்லாம், ஜாதகம் சரியில்லை என்று சொல்லி அவரே தட்டிக்கழித்து வருகிறார்.
அம்மா, எங்கள் இருவரின் வாழ்க்கையும் அண்ணன் வேண்டுமென்றே சீரழிப்பதை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. `நீங்க இல்லைன்னா இந்த வாழ்க்கையே எனக்கு இல்ல. என்னை தம்பியும் தங்கச்சியும் புரிஞ்சுக்காம என்ன சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன். அவங்க மேல இருக்குற அக்கறையைதான் நான் கண்டிப்பா வெளிப்படுத்துறேன். சின்ன பசங்களுக்கு அதைப் புரிஞ்சுக்கத் தெரியல. ஆனா, நீங்க என்னை வித்தியாசமா நினைச்சா, அப்போவே இந்த வீட்டைவிட்டு வெளியேறிடுவேன்...' என்றெல்லாம் அம்மாவிடம் எமோஷனல் டிராமா போடுகிறார் அண்ணன். எங்கள் இருவரின் வாழ்க்கையும் இப்படி ஆனது விதியால் என்றும், அண்ணன் எங்களுக்கு நல்லதே நினைப்பார் என்றும் தன்னையும் சமாதானப்படுத்தி, எங்களையும் சமாதானப்படுத்துகிறார் எங்கள் அம்மா. இன்னொரு பக்கம், அண்ணன் தன் மனைவி, குழந்தைகள், அவர் மனைவி பெயரில் வீடு, அதை வாங்கியபோது எங்கள் அப்பா போட்டிருந்த ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் இருந்து குறிப்பிட்ட தொகையை அம்மாவிடம் பெற்றுக்கொண்டது என பக்காவாகத் தன் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்கிறார்.
நாங்கள் வசிக்கும் வீடு, அருகில் ஒரு பெரிய இடம், ஊரில் எங்கள் திருமணத்துக்கு விற்பதற்காக என்று இருக்கும் இரண்டு விவசாய நிலங்கள்... இவைதான் எங்கள் மொத்த சொத்து. நானும் தம்பியும் திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆன பின், அண்ணன், நான், தம்பி என்று சொத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு அண்ணனுக்கு விருப்பமில்லாததால், தன் சுயநலத்துக்காக எங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டிருக்கிறார். இதுதான் நிலை. இதைக் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் நானும் தம்பியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் புரிந்துகொண்டோம். சட்ட உதவி, உறவுகளிடம் பஞ்சாயத்து என்றெல்லாம் செல்லலாம் என்றால், அம்மா மன்றாடி எங்களைத் தடுக்கிறார். `அப்படியெல்லாம் பண்ணினா, சொத்தை உங்களுக்குப் பிரிச்சுக்கொடுத்துட்டு, நான் உங்க அண்ணனோட போயிடுவேன், உங்க மூஞ்சியிலேயே முழிக்கமாட்டேன்...' என்கிறார். எங்கள் வயது சென்றுகொண்டே இருக்கிறது.
நானும் தம்பியும் என்னதான் செய்வது..?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.