Published:Updated:

கடன் தந்த நண்பரின் திடீர் மரணம், பணத்தை திருப்பிக்கொடுக்க ஊசலாடும் மனசு, என்ன செய்ய? #PennDiary78

Penn Diary
News
Penn Diary

மனிதர்கள் எல்லோருமே அடிப்படையில் நல்லவர்கள்தான். சூழ்நிலைதான், எத்தனை சதவிகிதம் நாம் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இந்தப் பண விஷயத்தில் இப்போது நாங்கள் என்ன முடிவெடுப்பது?

Published:Updated:

கடன் தந்த நண்பரின் திடீர் மரணம், பணத்தை திருப்பிக்கொடுக்க ஊசலாடும் மனசு, என்ன செய்ய? #PennDiary78

மனிதர்கள் எல்லோருமே அடிப்படையில் நல்லவர்கள்தான். சூழ்நிலைதான், எத்தனை சதவிகிதம் நாம் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இந்தப் பண விஷயத்தில் இப்போது நாங்கள் என்ன முடிவெடுப்பது?

Penn Diary
News
Penn Diary

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் கணவர் தொழில் செய்து வருகிறார். கொரோனாவுக்குப் பிறகு, தொழிலில் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீள முடியாமல் பெருத்த நஷ்டமடைந்ததால், எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் நொடித்துப்போனது. கடன் வாங்கினோம். வட்டியும் கடனும் சேர்ந்து அழுத்த, ஒரு கட்டத்தில் மீளவே முடியாத பள்ளத்தில் தள்ளப்பட்டோம். அப்போதுதான், என் அலுவலக நண்பரிடம் எங்கள் நிலையைச் சொல்லி கடன் கேட்டேன்.

கடன் வலையில்...
கடன் வலையில்...

அந்த நண்பர், எங்கள் குடும்ப நண்பரும் கூட. 10 வருடங்களுக்கும் மேல் பழக்கம். பணக்காரர், பொருளாதார ரீதியாக பலமாக இருப்பவர். எங்களுக்குக் கடன் கொடுத்தபோது அவர் என் கணவரிடம், ‘இந்த மூணு லட்சம் எனக்குப் பெரிய பணமில்ல. ஒரு வருஷம் கூட பொறுத்து என்னால வாங்கிக்க முடியும். நீங்க கடனை அடைச்சுட்டு, தொழிலை கொஞ்சம் மேல கொண்டு வந்துட்டு, அப்புறமா கொடுத்தா போதும்’ என்றார். அவர் அன்பில் நானும் கணவரும் நெகிழ்ந்துபோனோம்.

கடன் வாங்கி எட்டு மாதங்கள் ஆகின்றன. வட்டிக்கு வாங்கிய கடனை, நண்பர் கொடுத்த பணத்தில் அடைத்துவிட்டோம். என் கணவரது தொழில் இப்போதுதான் கொஞ்சம் மூச்சுவிடும்படி பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. எனவே அந்த வருமானத்தை எதிர்பார்க்காமல், நான் வாங்கும் சம்பளத்தில் குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொள்கிறேன். வீட்டு வாடகை முதல் பிள்ளைகள் படிப்பு வரை வரவும் செலவும் இறுக்கிப்பிடிக்கும் நிலைதான். என்றாலும், கடன் தொல்லையால் ஓடிக்கொண்டிருந்த நாள்களை எண்ணும்போது, அதற்கு இது பரவாயில்லை என்று தோன்றும். அந்தக் கடனில் இருந்து எங்களை மேடேற்றிவிட்ட நண்பரை எப்போதும் நன்றியுடன் நினைத்துக் கொள்வோம்.

நிதி உதவி
நிதி உதவி
vikatan

இந்நிலையில், எங்களுக்குக் கடன் கொடுத்த நண்பர் சென்ற மாதம் ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். இந்த சுயநல உலகில், நாம் ஒரு கஷ்டத்தில் இருந்தபோது காப்பாற்றிவிட்ட ஒரு நல்ல உயிரையும் இழந்துவிட்டோமே என்ற சோகத்தில் இருந்து எங்களால் மீளவே முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல, நானும் கணவரும் பல நாள்கள் தூக்கம், பசியின்றி திரிந்தோம். இப்போதுதான் கொஞ்சம் மீண்டிருக்கிறோம்.

இப்போது, எங்கள் மனதில் ஒரு ஊசலாட்டம். நண்பர் எங்களுக்குப் பணம் கொடுத்ததை பற்றி தன் குடும்பத்தாரிடம் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறோம். காரணம், அவர் மனைவியும் மகனும் பிறருக்கு உதவுவதை எல்லாம் விரும்பாதவர்கள். இப்போது, இந்தப் பணத்தை திருப்பிக்கொடுப்பது பற்றிய குழப்பத்தில் இருக்கிறோம் நாங்கள். மறைந்த நண்பர் பணக்காரர். அவர் குடும்பத்துக்கு இந்த பணம் உடனடித் தேவையாக இருக்காது. அதற்காக, சாட்சியே இல்லாமல் அவர் எங்களுக்குக் கொடுத்த பணத்தை நாங்களே வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கவில்லை. அவர் சொன்னதுபோல, இந்த தினசரி பாடுகளில் இருந்தெல்லாம் மீண்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவர் பணத்தை அவர் குடும்பத்திடம் கொடுத்துவிடலாம் என்றுதான் நினைக்கிறோம்.

தவிப்பு
தவிப்பு

ஒருவேளை இப்போது அவர் மனைவி, மகனிடம் சென்று, ‘உங்கள் அப்பா எங்களுக்கு 3 லட்சம் கொடுத்தார், நாங்கள் அதை இரண்டு, மூன்று தவணைகளில் விரைவில் திருப்பிக் கொடுக்கிறோம்’ என்று சொன்னால், அதை ஏற்கும் மனதுக்காரர்கள் இல்லை அவர்கள். ‘அப்பா மூணு லட்சம்தான் கொடுத்தாரா, இல்ல அதைவிட அதிகமா கொடுத்தாரானு நாங்க எப்படி நம்புறது?’ என்று கேட்கக்கூடியவர்கள். அதேபோல, ’பணத்தை உடனே கொண்டு வந்து வைங்க’ என்றும் சொல்லக்கூடியவர்கள். எனவே, இப்போது சென்று நாங்கள் இதை அவர்களிடம் சொல்ல வேண்டாம், பணம் கிடைக்கும்போது மொத்தமாகக் கொடுத்துவிட்டு சொல்லிவிட்டு வரலாம் என்று தோணுகிறது.

இன்னொரு பக்கம், ஒருவேளை நண்பர் எங்களுக்குப் பணம் கொடுத்ததை பற்றி தன் குடும்பத்திடமோ, வேறு நண்பர்கள் யாரிடமோ கூறியிருப்பாரோ என்றும் தோணுகிறது. அப்படி அவர் குடும்பத்துக்குத் தெரியவந்து, அவர்களே வந்து எங்களிடம், ‘அப்பா செத்ததும், யாருக்கும் இதைப் பத்தி தெரியாது, பணத்தை ஏமாத்திடலாம்னு நினைச்சீங்களா?’ என்று கேட்டால் எங்கள் முகத்தை எங்குபோய் வைத்துக்கொள்வது என்றும் தவிக்கிறது.

தவிப்பு
தவிப்பு

மனிதர்கள் எல்லோருமே அடிப்படையில் நல்லவர்கள்தான். சூழ்நிலைதான், எத்தனை சதவிகிதம் நாம் நல்லவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இந்தப் பண விஷயத்தில் இப்போது நாங்கள் என்ன முடிவெடுப்பது?