மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான். ஐந்து வருடங்களுக்கு முன்பு உள்ளூரிலேயே எனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைத்தனர் என் பெற்றோர். பின்னர் அடுத்த ஆறு மாதங்களில் என் அண்ணனுக்கும் திருமணத்தை முடித்தோம். எனக்கு ஒரு பெண் குழந்தை, அண்ணனுக்கு ஓர் ஆண், ஒரு பெண் குழந்தை என, யார் வாழ்விலும் எந்தக் குறையும் இல்லாமல் நகர்ந்தது வாழ்க்கை.
இந்நிலையில், கொரோனா முதல் அலையின்போது என் அப்பா, அம்மா இருவருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக நான் குழந்தையுடன் அம்மா வீட்டுக்குச் சென்று தங்கினேன். எதிர்பாராதவிதமாக, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையிலிருந்து திரும்பியிருந்த அம்மா, அப்பாவை வீட்டுக்குள்ளேயே 14 நாள்கள் க்வாரன்டீனில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியிருந்த நிலையில், எனக்கு உதவிக்கு யாரும் இல்லை.

என் அண்ணி, அண்ணனுடன் ஏற்பட்டிருந்த ஒரு மனக்கசப்பால் கோவித்துக்கொண்டு வெளியூரில் இருக்கும் தன் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தார். எனவே, அவரிடமும் உதவி கேட்க முடியாத நிலை. அப்போதுதான் என் நிலை அறிந்த என் தோழி, `என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா..?' என்று உரிமையுடன் கோவித்துக்கொண்டு, என் அம்மா வீட்டிலேயே ஒரு வாரம் தங்கி, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலிருந்து, அம்மா, அப்பாவுக்கான உணவுவரை எல்லாம் பார்த்துக்கொண்டாள்.
அவள் எனக்குப் பள்ளிக்காலத் தோழி. பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் அவளுக்கு அவள் வீட்டில் திருமணம் முடித்துவிட்டனர். அவள் பெண் குழந்தைக்கு மூன்று வயதாகியிருந்தபோது, அவளின் கணவர் விபத்தில் இறந்துவிட்டார். மறுமணத்தை மறுத்தவள், தன் கையிலிருந்த தையல் தொழிலை நம்பி களத்தில் இறங்கினாள். இன்று ஆறு பேரை வேலைக்கு வைத்து தன் டெய்லரிங் கடையை நடத்தும் அளவுக்கு அதில் சிறப்பான வெற்றி பெற்றிருக்கிறாள். பள்ளிப் படிப்பே படித்த அவள் மாதம் 50,000 சம்பாதிப்பதைப் பார்த்து நானே வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கையும் உறுதியும் மிகவும் நிறைந்த பெண்.
இந்நிலையில், என் தோழி என் அம்மா வீட்டில் தங்கி என்னைப் பார்த்துக்கொண்டபோது, என் அண்ணனும் வீட்டுக்கு வந்து சென்றார். பள்ளிக் காலத்தில் இருந்தே அவளை என் அண்ணன் அறிவார் என்றாலும், அதிகமாகப் பேசிக்கொண்டதில்லை. சென்ற வருடம், நாங்கள் மூன்று பேருமாக அமர்ந்து அரட்டை அடிப்பது, கார்ட்ஸ் விளையாடுவது என்று பொழுதைப் போக்கினோம். பேசினோம், சிரித்தோம், கதைகள் பகிர்ந்தோம். ஆனால், அதன் திசை சிக்கலாக மாறும் என்று அப்போது நான் உணரவில்லை.
தொடர்ந்த மாதங்களில், அண்ணன் மற்றும் தோழிக்கு இடையே ஓர் உறவு ஏற்பட்டிருக்கிறது. அதை நான் தாமதமாகவே அறிய நேர்ந்தது. அவர்கள் இருவரின் நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தை உணர்ந்த நான், `ஒருவேளை தப்பாக எதுவும் இருக்குமோ...' என்று சந்தேகித்து, அதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என் நிம்மதி சுக்குநூறாக உடைந்துபோனது. இதைப் பற்றி என் அப்பா, அம்மாவிடம் சொன்னாலோ, கணவரிடம் சொன்னாலோ, `நீதான் தேவையில்லாம உன் ஃப்ரெண்ட்டை வீட்டுக்கு வரவெச்சு, இப்போ இவ்வளவு பெரிய பிரச்னையை உண்டாக்கிட்ட' என்று என்னைத் திட்டுவார்கள். எனவே, இந்தப் பிரச்னையை நானே சரிசெய்ய எண்ணி, அண்ணனிடமும் தோழியிடமும் பேசினேன்.

இருவருமே இல்லவே இல்லை என்று மறுத்தார்கள். என் தோழி, `நீ என்னை எப்படி சந்தேகிக்கலாம்? உனக்குப் போய் உதவ வந்தேன் பாரு...' என்று என்னிடம் பெரிய சண்டைபோட்டு, என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். வாட்ஸ்அப்பிலும், அலைபேசி எண்ணிலும் என்னை பிளாக் செய்துவிட்டாள். என் அண்ணனோ, `அப்படியெல்லாம் எதுவுமே இல்ல. உனக்கு சந்தேகம் வந்ததுனு இல்லாத ஒண்ணைச் சொல்லி, நீ வீட்டுக்குள்ள தேவையில்லாத பிரச்னையைக் கொண்டுவந்து எல்லாரோட நிம்மதியையும் பறிச்சுடாத...' என்று என்னைத் திட்டினார்.
இன்னொரு பக்கம், என் அண்ணன் அவருடன் சண்டைபோட்டுக்கொண்டு தன் அம்மா வீட்டுக்குச் சென்ற அண்ணியை மீண்டும் அழைத்து வர ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. என் அண்ணியிடம் நான் பேசி, `கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போங்க, வீட்டுக்கு வந்துடுங்க அண்ணி' என்று எத்தனையோ முறை கூப்பிட்டுப் பார்த்தேன். அவரோ, `அப்படித்தான் நானும் கிளம்ப நினைக்கிறேன். அதை உங்க அண்ணன்கிட்ட சொல்லலாம்னு நினைக்கும்போதே, உங்க அண்ணன் போன்லேயே மறுபடியும் மறுபடியும் ஒரு சண்டையைப் போட்டு என்னை இன்னும் மனசு நோகச் செய்றார். பரவாயில்ல விடுங்க... பசங்களுக்கு ஆன்லைன் கிளாஸ்தானே... நான் இங்கேயே இருக்குறேன். என்னைக்கு உங்க அண்ணனுக்கு என் அருமை புரியுதோ, அப்போ அவர் வந்து என்னைக் கூப்பிடட்டும்' என்று சூழல் புரியாமல் பேசுகிறார் அவர்.
நிலைமை தொடர்கதையாக ஆகிக்கொண்டே இருப்பதால், என்னைத் திட்டினாலும் பரவாயில்லை, இதை என் கணவர், பெற்றோரிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் என் தோழிக்கு ஏதாவது தொந்தரவு, அவமானம் கொடுத்துவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது. கணவரும் இல்லாமல், பெற்றோரின் பொருளாதார ஆதரவும் இல்லாமல் இருக்கும் என் தோழிக்கு, அவள் தொழில்தான் ஒரே ஆதாரம். இவர்கள் அவளது டெய்லரிங் யூனிட்டுக்குச் சென்று ஏதேனும் பிரச்னை செய்தாளோ, அவள் வசிக்கும் வீட்டுக்குச் சென்று அவளுடன் ஏதேனும் பிரச்னை செய்தாளோ, தொழில், உறவு, நட்பு, சுற்றத்தில் அவள் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.
என் தோழி மிகவும் கண்ணியமான பெண். இந்த ஐந்து வருடங்களாகத் தன் குழந்தையே உலகம் என்று அவள் வாழ்ந்து வந்த தவவாழ்வை நான் அறிவேன். நான் என் அண்ணனைத்தான் குற்றம் சொல்வேன். அவள் சூழ்நிலையை இவர்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். `ஆனா இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை அவ நாசம் பண்ணுறதை அவ உணரலையா..?' என்ற கேள்வியை புறம்தள்ளுவதற்கு இல்லை.

என்றாலும், தோழியின் சூழ்நிலையைப் பொறுத்தவரையில் அவளை ஒரு விக்டிம் ஆகவே நான் பார்க்கிறேன். இத்தனை வருடங்களில் எத்தனையோ ரிலேஷன்ஷிப் அழைப்புகள், பாலியல் தொல்லைகள் அவளுக்கு நேர்ந்திருப்பதை நான் அறிவேன். அனைத்தையும் நெஞ்சுரத்துடன் கடந்து வந்திருக்கிறாள். நெடிய, வறண்ட ஓட்டத்தின் சோர்வில் இருந்தவளை, இப்போது என் அண்ணன் அன்பை ஆயுதமாக்கிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றே சொல்வேன். அந்த அன்பும் மெய் அன்பு இல்லை என்பதையும் அறிவேன். ஏனெனில், என் அண்ணன் பொதுவாகவே மற்றவர்களின் சூழ்நிலைகளில் இருந்து அவர்களைப் புரிந்துகொள்பவர் இல்லை. தனக்கு என்ன ஆதாயம் என்ற கணக்கே அவருக்கு எப்போதும் பிரதானமாக இருக்கும். எனவே, தோழி மீது பழி சுமத்துவதைவிட, அவளை இதிலிருந்து மீட்பதையே என் கடமையாக நினைக்கிறேன்.
அதை எப்படிச் செய்வது..?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.