கல்லூரியில் படித்தபோது, என்னுடன் படித்த நண்பனைக் காதலித்தேன். படிப்பு முடிந்தபோது, எனக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தது. அவன் மேற்படிப்பு படிக்கும் முடிவை எடுத்தான். காதல் தொடர்ந்தது.
நான் ஒரு வருடம் வேலைபார்த்த பின்னர், என் வீட்டில் எனக்குத் திருமணப் பேச்சை எடுத்தனர். நான் அவனிடம் பேசினேன். `இப்போதான் பி.ஜி செகண்ட் இயர் போகப்போறேன். இன்னும் வேலை தேடணும், வேலை கிடைக்கணும், வாழ்க்கையில கொஞ்சம் காலூன்றணும். அப்போதான் உன்னை என்னால நல்லா பார்த்துக்க முடியும். அதுக்கு இடையில எப்படி என்னால கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியும்?' என்றான். அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும், என் வீட்டில் பெற்றோரை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை.

`உன் படிப்பு முடிஞ்சதும், என் வீட்டில் பேசிடலாம். அவங்க ஒத்துக்கலைன்னாலும் நாம லவ் மேரேஜ் பண்ணிக்கலாம். கல்யாணம் முடிச்சிட்டுகூட நீ வேலை தேடு... அதான் நான் வேலைபார்க்கிறேன்ல... சமாளிச்சுக்கலாம்' என்று நான் கூறிய ஆலோசனை, அவனுக்கு ஈகோ பிரச்னையாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. `நீ வேலைபார்க்கிற, சம்பாதிக்கிற. நான் இன்னும் படிச்சிட்டு இருக்கேன். என்னை உங்க வீட்டுல எப்படி மதிப்பாங்க? நம்பி பொண்ணு கொடுப்பாங்க? கல்யாணமாகி ரெண்டு மாசத்துக்கு அப்புறம் நீயே என்னை மதிக்க மாட்டியே...' என்றான்.
இன்னொரு பக்கம், என் பெற்றோர் என்னைத் திருமணத்துக்கு அவசரப்படுத்தினார்கள். இந்த அவஸ்தையில் இருந்த நான், அவனிடம் இது குறித்து சண்டை போட ஆரம்பித்தேன். இதனால் எனக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்டைகள் வர ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில், நாங்கள் பேசிக்கொள்வது குறைந்துகொண்டே வந்தது. பேசும் சந்தர்ப்பங்களிலும், சமாதானத்துக்கான முயற்சியைவிட சண்டைகளே மீண்டும் வர, இருவருக்கு இடையில் இருந்த தொடர்பு 90% இல்லாமல் போய்விட்டது. கால், மெசேஜ், வாட்ஸ்அப் என்று எதுவுமே இல்லை.
இதற்கிடையில், என் அலுவலகத்தில் உடன் வேலைபார்த்த ஒருவர், என்னைக் காதலிப்பதாகச் சொன்னார். நான் அவரை அவாய்டு செய்தபடியே இருந்தேன். `ஏன் பிடிக்கலை சொல்லு?' என்று டார்ச்சர் செய்ய, நான் `எனக்கு உங்கள் மீது விருப்பமில்லை' என்றேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, அவர் என் வீட்டுக்கே வருவார் என்று. என் அம்மா, அப்பாவிடம், அவர் என்னைக் காதலிப்பதாகவும், ஆனால் நான் பதில் எதுவும் சொல்ல மறுப்பதால், அவர்களிடமே பேச வந்திருப்பதாகவும் கூற, என் பெற்றோர் அவரைத் திட்டி அனுப்பி வைத்தனர். என்னையும் வார்த்தைகளால் வதைத்தனர்.
ஏற்கெனவே என்னைத் திருமணத்துக்கு அவசரப் படுத்திக்கொண்டிருந்த என் பெற்றோர், இந்த நிகழ்வுக்குப் பிறகு இன்னும் அதிகமாக எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஏன் என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற வெறுப்பிலிருந்த நான், அந்தக் கோபத்தில் என் காதலனுக்குக் கால் செய்து, நடந்ததைச் சொல்லி, `உன்னாலதான் எனக்கு இந்தப் பிரச்னையெல்லாம்...' என்றேன். `நீ ஏன் அவன்கிட்ட ஏற்கெனவே என்னை லவ் பண்றதை சொல்லல? சொல்லியிருந்தா அவன் விலகியிருப்பான்ல?' என்று அவன் கேட்க, `ஆனா நீ இப்போ என்னை லவ் பண்றியானு எனக்கே தெரியலையே...' என்று நான் சொல்ல, மீண்டும் ஒரு பெரிய சண்டை வர, அதோடு அவன் என் எண், சோஷியல் மீடியா பக்கங்கள் என அனைத்திலும் என்னை பிளாக் செய்துவிட்டான்.

உச்சபச்ச வெறுப்புக்கு ஆளான நான், மறுநாள் அலுவலகத்தில், என்னை லவ் டார்ச்சர் செய்தவரை மிகக் கடுமையாகத் திட்டிவிட்டேன். `நீங்கள் வீட்டுக்கு வந்ததால் என் வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்னை தெரியுமா...' என்று ஒரு கட்டத்தில் உடைந்து அழுதும்விட்டேன். எதிர்பார்க்கவே இல்லை... அவர் தற்கொலை முயற்சி செய்வார் என்று. நல்லவேளையாக மருத்துவமனை சிகிச்சையில் அவர் நூலிழையில் உயிர்பிழைத்துவிட்டார். என்றாலும், குற்றமே செய்யாத நான் இந்தச் சம்பவத்தில் குற்றவாளி ஆக்கப்பட்டேன்.
என் அலுவலகத்தில் அனைவரும் என்னை வசை பாட, நான் வேலையை ராஜினாமா செய்தேன். இன்னொரு பக்கம், என் பெற்றோர் இந்த அசம்பாவிதத்தால் மிகவும் பயந்துபோனார்கள். குறிப்பாக, தற்கொலை முயற்சி செய்தவரின் உறவினரான காவல்துறை அதிகாரி ஒருவர் போன் செய்து என் பெற்றோரையும் என்னையும் விசாரித்தது அவர்களை அதிகப் பதற்றமாக்கியது. நானும் மனஉளைச்சலுக்கு உள்ளானேன்.
இன்னொரு பக்கம், இவற்றை எல்லாம் என்னால் என் காதலனுக்குத் தகவல் தெரிவிக்கக்கூட முடியாத வகையில் அவன் என்னை பிளாக் செய்திருந்தது, என் அழுகையை எல்லாம் அவன் மீதான கோபமாகத் திரட்டியது. அவனுக்கும் எனக்கும் பொது நண்பர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால், அவனை எந்த வகையிலும் தொடர்புகொள்ள முடியாத நிலை. இந்த இக்கட்டான சூழலில்கூட, நான் தொடர்புகொள்ளக்கூட முடியாத நிலையில் என்னை ஆக்கியிருந்த ஆத்திரத்தில், நானும் அவனை என் மொபைல் மற்றும் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலும் பிளாக் செய்தேன். உண்மையில், நான் இவ்வளவு பெரிய பிரச்னையில், கண்ணீரில், மனப்போராட்டத்தில் இருக்கும்போது எனக்காக இல்லாத அவன், இனி என் வாழ்க்கையில் எப்போதுமே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன்.
இரண்டு மாதங்கள் ஆன நிலையில், என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பேச்சை மீண்டும் ஆரம்பித்தனர். அந்தத் தற்கொலை முயற்சி சம்பவத்தால் அவர்களின் அச்சம் கூடிப்போயிருந்தது. இப்போது, அதை மறுக்கும் காரணங்களும், என் உறுதியும் என்னிடம் பலம் குறைந்து போயிருந்தன. நடப்பது நடக்கட்டும் என்று அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்குச் சரி சொல்லிவிட்டேன். மூன்று மாதங்களில் எனக்குத் திருமணத் தேதி குறித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சென்ற மாதம் என் காதலன், புதிதாக ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கி, அதிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்பி, தன் நிலையை விளக்கி இருந்தான். இடைப்பட்ட காலத்தில் அவன் வீட்டில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்தது, அதில் குடும்பமும் இவனும் நிலைகுலைந்து போனது, இப்போதும் அவன் அம்மா மருத்துவமனையில் வாழ்வா, சாவா நிலையில் அட்மிட் ஆகியிருப்பது என்று நடந்தவற்றை எல்லாம் அவன் சொல்ல, நான் உடைந்துபோனேன். உடனடியாக அவன் எண்ணை அன்பிளாக் செய்து, அவனை அழைத்தேன். இடைப்பட்ட காலத்தில் நான் சந்தித்த போராட்டங்களையும், என் திருமணத் தகவலையும் சொன்னேன். கம்யூனிக்கேஷன் பிரச்னையால் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைக்க முடியாத தொலைவில் விலகிப்போய் விட்டதை எண்ணி இருவருமே அழுதோம்.
கைவிட்டுச் சென்றுவிட்ட வாழ்க்கையை மீண்டும் சரிசெய்யும் நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால், அவன் விடுவதாக இல்லை. உன் வீட்டில் நான் வந்து பேசுகிறேன் என்றான். வந்தான். பேசினான். என் பெற்றோர் கொதிநிலைக்குச் சென்றார்கள். என்னை அடித்தார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் தற்கொலை முயற்சி எடுத்தார்கள். பட்டது எல்லாம் போதும் என்று, நான் காதலை கைவிடும் மனநிலைக்கு வந்துவிட்டேன். ஆனால், அவன் மனது அதை ஏற்கவில்லை.
`ரெண்டு வருஷத்துக்கு முன்னரே வீட்டை விட்டு வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்ன இல்ல... இப்போ வா...' என்கிறான். அந்தச் சூழல் வேறு. இப்போது நிச்சயம் முடிந்து, ஊர் உலகுக்கு எல்லாம் சொல்லிவிட்ட சூழலில், இன்று நான் அதைச் செய்தால், அதனால் என் பெற்றோர், மாப்பிள்ளை வீட்டார் என்று இரு குடும்பங்களும் எதிர்கொள்ள வேண்டிய துயரம், அவமானத்துக்கு எல்லாம் நான் பொறுப்பாகிப் போகமாட்டேனா? மேலும், ஏற்கெனவே என்னால் ஓர் உயிர் பறிபோகவிருந்த தருணத்தின் நெருப்பில் இருந்து வந்துள்ளதால், இப்போதெல்லாம் என்னால் யாருக்கும், எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணமே என்னிடம் மேலோங்கி இருக்கிறது. எனக்குப் பிடித்த வாழ்க்கை, விருப்பங்கள் என்பதெல்லாம் மனதிலிருந்து கரைந்தோடிவிட்டது.

`எல்லாக் காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை. இந்தச் சூழலில் நாம் நிற்பது, சமாதானம் செய்ய வேண்டிய தருணங்களில் சண்டையை பெரிதாக்கிய நம் ஈகோவுக்கு, மாறி மாறி பிளாக் செய்துகொண்ட நம் முட்டாள்தனத்துக்கு கிடைத்த தண்டனை. வழியில்லை பிரிவோம்...' என்கிறேன் நான் காதலித்தவனிடம். `சூழல்கள் நம் வாழ்வில் செய்த விதி இது. முடிவு இன்னும் உன் கையில்தான் இருக்கிறது... வா...' என்கிறான் அவன்.
என் திசை என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.