என் சொந்த ஊர், தமிழகத்தின் ஒரு முக்கிய தொழில் நகரம். அம்மாவும் அப்பாவும் மருத்துவர்கள் என்பதால், அவர்களின் அதிக வேலைப்பளு மற்றும் பொறுப்புகளால், பால்யத்தில் என்னையும் என் தங்கையையும் அவர்களால் கவனிக்க இயலவில்லை. எனவே, ஆறாம் வகுப்பு வந்தபோது இருவரையும் கான்வென்ட்டில் சேர்த்தார்கள். கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்த கையோடு, சென்னையிலேயே ஒரு வேலையில் சேர்ந்தேன். தங்கைக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. வாழ்க்கை நன்றாகவே நகர்ந்தது.

24 வயதானதுபோது வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். நான் திருமணமே வேண்டாம் என்று மறுத்தேன். எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதில் பிடிவாதமாக இருந்தேன். `யாரையாச்சும் காதலிச்சா சொல்லு...' என்றனர் வீட்டில். ஆனால் அப்படி எதுவும் இல்லை. உண்மையில், திருமணம், குழந்தை என்ற இந்த வாழ்க்கையில் நான் சுவாரஸ்யமற்றும், நம்பிக்கையற்றும் இருந்தேன்.
என்னைவிட என் தங்கை இரண்டு வருடங்கள் இளையவள். என்னை என் போக்கில் விட்டுவிட்டு, என் தங்கைக்குத் திருமணத்தை முடிக்கச் சொல்லி பெற்றோரிடமும் தங்கையிடமும் பேசினேன். ஒருவழியாக அவர்களும் அதற்கு சம்மதித்து, தங்கையின் திருமணத்தை முடித்தனர்.

சில வருடங்களில் என் வாழ்க்கையில் ஒரு காதல் வந்தது. அவரும் என்னைப் போலவே குடும்ப அமைப்பில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இணைந்தோம். அதை இருவர் வீட்டிலும் தெரிவித்தோம். பயங்கர எதிர்ப்பு. என் பெற்றோரும் தங்கையும், `ஊருக்குள்ள எங்க நிலைமைய யோசிச்சு பாரு. இதை எப்படி எங்களால நாலு பேர்கிட்ட சொல்ல முடியும்? நீ காதல் திருமணம் செய்துகிட்டு போயிட்டதா சொல்லிடுறோம். தயவுசெஞ்சு ஊருக்கு, வீட்டுக்கு வந்துடாத...' என்றார்கள். அவர் வீட்டில் எங்கள் உறவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடனான அவர்களின் அன்பில், தொடர்பில் மாற்றமில்லாமல்தான் இருந்தார்கள்.
அன்பு, அக்கறை, மகிழ்ச்சி, மரியாதை, பயணங்கள், பகிர்தல்கள், சண்டைகள், சமாதானங்கள் என ஆறு வருடங்கள், எங்களை நாங்களே கொண்டாடும்படி வாழ்ந்தோம். ஆறு வருடங்களுக்குப் பிறகு, பரஸ்பர நம்பிக்கையில் எழுந்த ஒரு பெரிய பிரச்னையால், `இத்தோடு முடித்துக்கொள்வோம்' என்று பிரிந்துவிட்டோம். அப்போது எனக்கு 33 வயது.

பிரேக் அப்புக்குப் பிறகும், என் எந்தவோர் அன்றாடத்தையும், இயல்பையும், சந்தோஷத்தையும் மிஸ் செய்யாமல் விட்ட இடத்திலிருந்து என் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன். வொர்க்கிங் உமனான என் பொருளாதார தற்சார்பு, யாரை பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழும் வசதியை எனக்குக் கொடுத்திருந்தது. தோழிகள், நண்பர்கள், கேளிக்கைகள் என வாழ்க்கை எப்போதும்போலவே சென்றது.
இப்போது எனக்கு 39 வயதாகிறது. என் தோழிகள், நண்பர்கள் எல்லாம் குடும்பம், குழந்தை எனப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். எனவே, நாங்கள் செல்லும் பயணங்கள், எங்கள் சந்திப்புகள், கேளிக்கைகள் என இவற்றுக்கான நேரமெல்லாம் குறைந்துவிட்டது. நான் ஒருவித வெறுமையை உணரத் தொடங்கியதுபோல் இருக்கிறது. மனம் ஒரு துணையை நாடுகிறது.

இடைப்பட்ட வருடங்களில் என் வாழ்க்கையில் வந்த பல ஆண்கள், என் மீதான அவர்களின் விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் என்பதன் அடிப்படையிலேயே என்னைப் பற்றிய ஜட்ஜ்மென்ட் அவர்களிடம் இருந்தது. அதாவது, ரிலேஷன்ஷிப்புக்கு ஈஸியாக இவள் ஓ.கே சொல்லிவிடுவாள் என்பதாக என்னை அணுகினார்கள். ஆனால், அது ரகசிய உறவாக இருக்க விரும்பினார்கள். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.
நான் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை தேர்ந்தெடுத்திருந்தாலும், `இவள் என் பார்ட்டனர்' என்று என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தும் ஆணையே தேர்ந்தெடுத்திருந்தேன். அந்த மரியாதை எனக்கு வேண்டும். திருமணம்தான் தவிர்க்கப்பட்டதே தவிர, ஊர், உலகத்துக்குத் தெரியாத ரகசிய உறவு அல்ல என் தேர்வு. எனவே, அப்படி ஓர் எண்ணத்துடன் என்னை அணுகிய ஆண்களை எல்லாம் புறந்தள்ளினேன்.

என் பெற்றோரும், தங்கையும் இப்போது என்னிடம் பேசினாலும்கூட, என் மீதான, என் முடிவு மீதான அவர்களின் அதிர்ச்சியும் கோபமும் இன்னும் தீரவில்லை. `நீ ஒரு காதல் கல்யாணம் பண்ணி, அது விவாகரத்தாகி வந்திருந்தாகூட, இப்போ உனக்குக் கல்யாணத்துக்கு வரன் பார்க்கலாம். ஆனா, எங்க பொண்ணு லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டு பிரிஞ்சுட்டானு சொல்லி எப்படி எங்களால மாப்பிள்ளை பார்க்க முடியும்? எங்களை என்ன நினைப்பாங்க?' என்று புலம்புகிறார்கள். அதற்காக, அவர்கள் எனக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமூக மனநிலையைப் பற்றிக் குறிப்பிடுவதற்காக இதைச் சொல்கிறேன்.
என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அந்த நபர், சில வருடங்களில் மீண்டும் ஒரு பெண்ணுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இணைந்தார். பிறகு அவரை திருமணம் செய்துகொண்டார். ஆண்களைப் பொறுத்தவரை, ஓர் உறவை விட்டு விலகும்போது அவர்கள் எதையும் இழந்ததாக இந்த சமூகம் நினைப்பதில்லை. அதுவே பெண் எனில், ஜட்ஜ்மென்ட்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன.

திருமணத்துக்குப் பிறகு ஐந்து, ஆறு வருடங்களில் விவாகரத்து செய்த ஒரு பெண்ணைப்போலத்தான் நானும். ஆனால், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் என்றால் இங்குள்ள சமூக மதிப்பு வேறு மாதிரி இருக்கிறது. அதை பற்றியெல்லாம் அறிந்தும், அதற்கெல்லாம் கவலைப்படாமலும்தான் லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன். இன்று, எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நான் உணரத் தொடங்கியிருக்கும் ஒருவித வெறுமை, இதையெல்லாம் நினைக்கவைக்கிறது.
40 வயதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இப்போது என்ன முடிவெடுப்பது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.