ஒன்றரை வருடங்களுக்கு முன் எனக்குத் திருமணம் முடிந்தது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். இப்போது கையில் மூன்று மாத பெண் குழந்தையுடன் இருக்கிறேன். ஆனால், தாய்மையின் அந்த மகிழ்வை முழுமையாகக்கூட அனுபவிக்கவிடாமல், பலரின் வார்த்தைகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றன.
நான் கொஞ்சம் உயரம் குறைவு. மாநிறம். `அப்படி ஒன்றும் அழகில்லை' என்று உலகம் என்னை சொல்லலாம். ஆனால், அதைப் பற்றி நான் வருத்தப்பட்டதில்லை. நன்றாகப் படிப்பேன். அனைவரிடமும் நன்றாகப் பழகுவேன். நன்றாக சமைப்பேன். வீட்டு வேலைகளை திருத்தமாகப் பார்ப்பேன். திருமணத்துக்கு முன் அருகில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வேலைக்கு உண்டான பொறுப்புகளையும் சிறப்பாகக் கையாண்டேன். இப்படி, என்னை நான் எப்போதுமே பெஸ்ட் ஆக உணர்வேன். இந்த உலகம் அழகுக்கு வைத்திருக்கும் அளவுகோலில் நான் என்னை பொருத்திப் பார்த்து வருந்துவதெல்லாம் இல்ல. எனக்கு நான் அழகி... அவ்வளவுதான்.

எனக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நல்ல உயரம். இந்த உலகம் சொல்லும் `சிவப்பு' நிறம். திருத்தமாக இருப்பார். நிச்சயம் முடிந்த நாளிலிருந்து என் வீட்டு சொந்தங்கள் எல்லாம், `மாப்பிள்ளை சூப்பர்' என்று சொல்வதோடு நிறுத்தாமல், கூடவே, `பரவாயில்லையே, நீ கறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல செவத்த மாப்பிள்ளை கிடைச்சிருச்சே' என்று சேர்த்தே சொன்னார்கள். நானும் பதிலுக்கு, `எனக்கு என்ன குறைச்சல்? கண்ணு பாக்குற அழகெல்லாம் மூணு மாசத்துல சலிச்சிடும். மனசுதான் அழகு. அந்த அழகுதான் ஆயுசுக்கும் வரும்' என்றெல்லாம் துடுக்காக பதில் பேசுவேன்.
புகுந்த வீட்டுக்குச் சென்ற பின்னர், இந்தப் பேச்சுகள் இன்னும் அதிகரித்தன. பிறந்த வீட்டில், `நீ அழகு குறைச்சாலா இருந்தாலும் உனக்கு அழகான மாப்பிள்ளை கிடைச்சுட்டார்' என்று நான் கேட்ட வார்த்தைகள், புகுந்த வீட்டில் வேறு மாதிரி கேட்க ஆரம்பித்தன. `எங்க பையன் அழகு. அவன் அழகுக்கு நீ பொருத்தமில்லாத பொண்ணு' என்று அதை இன்னும் கடுமையான வார்த்தைகளால் சொன்னார்கள்.
ஆரம்பத்தில் பிறந்த வீட்டு உறவுகளிடம் துடுக்காக பதில் சொல்லியதுபோலவே, புகுந்த வீட்டிலும் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், நானும் எத்தனை காலத்துக்கு, எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்லிக்கொண்டே இருப்பது? ஒரு கட்டத்தில், `என்ன வேணாலும் சொல்லிக்கோங்க... எனக்கு நான் அழகு... அவ்ளோதான்' என்று மௌனமாக இருந்துவிட்டேன். உண்மையில் என் கணவர் எங்கள் உருவப் பொருத்தம் பற்றி நான் வருந்தும் விதமாக இதுவரை எதுவும் சொல்லியதில்லை. மற்றவர்கள் பேசுவதையும், `அதெல்லாம் கண்டுக்காத... அப்புறம் நமக்குள்ள நிம்மதி போயிடும். நாமதான் பொருத்தமான ஜோடினு வாழ்ந்து காட்டுவோம்' என்றுதான் சொல்வார்.
இந்நிலையில், நான் கர்ப்பமானபோதும், கர்ப்பகாலம் முழுக்க, `புள்ள உன்னை மாதிரி கறுப்பா பிறக்காம, அவன மாதிரி சிவப்பா பிறக்கணும்...' என்று அடுத்த சுற்று பேச்சை ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் நான் தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக இருந்தாலும், இந்த வார்த்தைகள் எல்லாம் தொடர்ந்து எனக்குள் ஒரு அழுத்தத்தை உருவாக்கிக்கொண்டே வந்தன.

மூன்று மாதங்களுக்கு முன் எனக்குப் பெண் குழந்தை பிறந்தது... என்னைப்போலவே! என்னுடைய மினி ஜெராக்ஸை பார்ப்பதுபோல குழந்தையை பார்த்தபோது, மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனேன். இந்த பூமிக்கு என்னை நம்பி வந்திருக்கும் இந்த உயிரை பத்திரமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பில் இன்னும் வலிமை ஆனேன். ஆனால், தாய்மையின் இந்த பூரிப்புகளை எல்லாம் என்னை முழுமையாக அனுபவிக்க விடாமல் இப்போதும் என்னைச் சூழ்ந்துகிடக்கின்றன அதே வார்த்தைகள்... `பொண்ணு அவன மாதிரி பொறக்காம உன்ன மாதிரி பொறந்துடுச்சே...' என்று ஏதோ பரிதாபம்போலச் சொல்கிறார்கள்.
பிறந்திருக்கும் என் பச்சிளம் உயிர் கொண்டாடப்படாமல் இப்படி பேசப்படுவது, ஒரு தாயாக என் பொறுமையை முற்றிலும் தீர்த்தேவிட்டது. என்னை நானே கன்ட்ரோல் செய்ய முடியாமல், `என் புள்ளைக்கு ஒரு குறைச்சலும் இல்ல. அவ ஏன் அழகா இருக்கணும்? அவ ஆளுமையா வளருவா பாருங்க...' என்றெல்லாம் அவர்களிடம் சண்டைபோடுகிறேன். இது நான் இல்லை என்று புரிந்தாலும், இவர்களுக்கு எல்லாம் நான் இப்படி மாறியே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

உண்மையில் இந்த உலகத்துக்கு என்னதான் பிரச்னை? `இதுதான் அழகு' என்று அது சொல்லும் வரையறைக்குள் ஏன் அனைவரும் அடங்க வேண்டும்? இதை நான் எழுதுவதால், எனக்குள்ளும் இப்போது அழகு குறித்த தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது என்பது இல்லை. இத்தனை வார்த்தைகளை கேட்ட பின்னரும், கடந்த பின்னரும், `எனக்கு நான் அழகி' என்ற என் நம்பிக்கை குறையாமல்தான் இருக்கிறேன். ஆனால், என்னிடம் பேசப்படும் வார்த்தைகளுன், பேசுபவர்களுடன் போராடிப் போராடிதான் இந்த உறுதியில் என்னால் நிற்க முடிகிறது. எனில், என்னதான் என் குழந்தையையும் நான் என்னைப்போலவே `அழகி'யாக வளர்த்தாலும், ஒரு கட்டத்தில் அவளும் அதே உறுதியில் நிற்க, இந்த உலகத்துடன் இப்படிப் பேராட வேண்டுமா என்ற கேள்விதான் அயற்சி தருகிறது.
இதை படிப்பவர்களுக்கும் அழகு குறித்த அவர்களின் அளவுகோல்கள் நேர்மறையாக மாறும்விதமாக, எனக்குக் கொஞ்சம் பாசிட்டிவ் வார்த்தைகள் சொல்லுங்களேன்..!
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.