நான் பி.எஸ்சி படித்தபோது கல்லூரியில் என்னுடன் படித்த ஒருவரை காதலிக்க ஆரம்பித்தேன். நாங்கள் எம்.எஸ்சி படித்தபோது வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததால், ஒரு வேகத்தில் முடிவெடுத்து நானும் அவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டுக்கு பதிவுத் திருமணம் பற்றி தெரியவந்தபோது, மகளிர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், என் அப்பா, அம்மாவை மிகவும் காயப்படுத்தியும், உதாசீனப்படுத்தியும் பேசிவிட்டு, இவர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

படிப்பை முடித்திருந்த நான் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். என் கணவர் வேலை தேட ஆரம்பித்தார். இருவரும் அவரின் பெற்றோர் வீட்டிலேயே வாழ்க்கையை ஆரம்பித்தோம். கல்யாணமாகி ஆறு மாதங்கள் வரை, என் அம்மா எனக்கு அவ்வப்போது போன் செய்வார். அப்பா என்னால் மிகவும் காயப்பட்டிருப்பதாகவும், எனக்காக ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்து செய்த அவர்களை திருமணம் என்ற பெரிய முடிவில் நான் தள்ளிவைத்துவிட்டதாகவும் சொல்லி அழுவார். எனக்கு அவரை சமாதானம் செய்யும் அளவுக்குக் கூட பொறுமையோ பாசமோ இருக்காது. ‘எனக்கு இவரைதான் பிடிச்சிருக்கு, என் விருப்பப்படிதான் நான் வாழ்வேன்’ என்று கூறி போனை வைத்துவிடுவேன். ஒரு கட்டத்தில், அவர் எனக்கு போன் செய்வதை நிறுத்திவிட்டார்.
இதற்கிடையில், முதல் ஆறு மாதங்களுக்குப் பின் என் திருமண வாழ்க்கையில் எனக்கு வருத்தங்கள், கசப்புகள், ஏமாற்றங்கள், காயங்கள் என அனைத்தும் ஒவ்வொன்றாய் உள்நுழைய ஆரம்பித்தன. என் கணவருக்கு வேலை கிடைக்கவில்லை. தன்னை நம்பி ஒரு பெண் வந்திருக்கிறாள், அவளுக்காகவாவது தொடர் முயற்சியில் ஏதாவது ஒரு வேலை, தொழில் என்று விரைவில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வோ, பாசமோ இல்லை. வேலை கிடைக்க தன் முழு முயற்சியையும் போடாமல், உறவினர்கள், நண்பர்கள் என யாராவது சிபாரிசு செய்து வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

என் அப்பா, அம்மாவை விட்டு வந்திருக்கும் எனக்கு எல்லாமுமாக இருக்க வேண்டியவர், என் கணவர். ஆனால் அவரோ, நண்பர்கள், மொபைல், டூர் என்று ஒரு பேச்சிலர் வாழ்க்கையிலேயே இன்றும் இருக்கிறார். இது நியாயமா என்று நான் கேட்டால், ‘பொண்ணு பார்க்க வர்றாங்கனு நீ அவசரப்படுத்தினதாலதான் நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண வேண்டியதாகிடுச்சு. இல்லைன்னா, நாம இன்னும் ரெண்டு, மூணு வருஷம் வாழ்க்கையில செட்டில் ஆனதுக்கு அப்புறமே கல்யாணம் பண்ணி இருக்கலாம். இந்த 24 வயசுல என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஜாலியா இருக்கும்போது, நினைச்சுப் பார்த்தா நான்தான் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு, வேலை கட்டாயம், மனைவினு ஏதோ பிரஷர்ல இருக்குற மாதிரி இருக்கு’ என்று வேண்டா வெறுப்பாகப் பேசுகிறார். அவ்வப்போது பார்ட்டி, மது என்றும் செல்கிறார்.
அவர் அப்பா, அம்மாவும் என் மீது பிரியமாக இல்லை. அவர்கள் சொந்தத்தில் ஒரு பெண்ணை அவருக்கு மணமுடிக்க இருந்ததாகவும், இவர் திடீரென என்னை அழைத்துவந்துவிட்டதாகவும், வேறு வழியில்லாமல் அவர்கள் சம்மதித்தாகவுமே பேசுகிறார்கள் இன்றுவரை. ஆனால், என் சம்பள பணத்தை வாங்கிக்கொள்வதில் மட்டும் இருவருக்கும் எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. ஆம், என் சம்பளத்தில் 30% மட்டும் என் செலவுகளுக்கு வைத்துக்கொண்டு அவர்களிடம் கொடுத்துவிடுவேன். வேலைக்கு செல்லாத கணவரை வைத்துக்கொண்டு வேறு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

கணவரோ, ‘அப்பா ரிட்டரியர்டு ஆகிட்டார். நான் வேலைக்குப் போயிருக்கணும், ஆனா கல்யாணத்தை பண்ணிட்டு வந்து நின்னுட்டேன். அதனால, நான் வேலைக்குப் போறவரைக்கும் உன் சம்பளத்தை கொடு. நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் நான் பார்த்துக்குறேன்’ என்கிறார். அவர் பொறுப்புடன் வேலை தேடிக்கொள்வார், வேலையில் சேர்ந்தாலும் தன்முனைப்பு, உழைப்புடன் அடுத்தடுத்த நிலையை நோக்கிச் செல்வார் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு வற்றிவிட்டது. கரியர் குறிக்கோள், சுயமுன்னேற்றம், எதிர்காலத் திட்டமிடல் என இவையெல்லாம் இல்லாத சோம்பேறி அவர் என்பது, காதலித்த காலத்தில் தெரியவில்லை. அப்போது ஹார்மோன் குறுகுறுப்பு மட்டுமே. இப்போதுதான், வாழ்க்கை என்பது வேறு என்பது புரிகிறது.
அதற்காக, காதல் திருமணமே அவசர முடிவு என்று சொல்ல வரவில்லை நான். காதலிக்கும் காலத்திலேயே, இருவரது படிப்பில், கரியரில் ஒருவருக்கு ஒருவர் பலமாக இருந்து, இரு குடும்பங்களையும் பரஸ்பரம் புரிந்துகொண்டு, பொருளாதார நிலையில் ஸ்திரமான பிறகு திருமணம் முடித்து என, அழகாக வாழ்க்கையை ஆரம்பிக்கும், வாழ்ந்துகாட்டும் எத்தனையோ காதல் தம்பதிகள் இருக்கிறார்கள். எங்களைப்போல, வயதின் அவசரத்தில் முடிவெடுத்து இருப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை இப்போது உணர்கிறேன்.

இப்போது திருமணமாகி ஒரு வருடம் ஆகப்போகிறது. எனக்கும் கணவருக்கும் சண்டைகள் பெருகியுள்ளன. ‘எல்லாவற்றையும் விட்டு உனக்காக வந்தவளை அதற்கான பதில் அன்புடன், புரிதலுடன், மரியாதையுடன் நீ நடத்தவில்லை’ என்பதே என் அடிப்படை குற்றச்சாட்டு. ‘இந்த அவசர திருமணத்தால்தான் எனக்கு இத்தனை பிரச்னைகளும்’ என்பது அவர் பதில். சில சண்டைகளில் அவர் என்னை அடித்தும் இருக்கிறார்.
இப்போது, என் பெற்றோரை எனக்கு அதிகமாகத் தேடுகிறது. அவர்களிடமே திரும்பிவிடலாம் என்று தோணுகிறது. ஆனால், என் பிரிவால் என் அப்பா மிகவும் நோய்வாய்ப்பட்டு, என் அம்மா அந்த மனஅழுத்தத்தில் தேய்ந்து என்று ஏற்கெனவே நொந்து போயிருக்கிறார்கள் என் பெற்றோர். அவர்கள் முன் சென்று நிற்க எனக்குக் குற்றஉணர்வாக இருக்கிறது. மேலும், என் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று தெரிந்தால் அது அவர்களை இன்னும் உடைத்துவிடும்.
என்ன செய்ய நான்?