எனக்கு ஒரு வருடத்துக்கு முன் காதல் திருமணம் முடிந்தது. என் வீட்டில் நான் ஒரே பெண், கணவர் வீட்டில் அவர் ஒரே பையன். நான்கு ஆண்டுக் காதல் இரு வீட்டின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.
திருமணத்துக்கு முன்பே, நானும் என் கணவரும் மெச்சூரிட்டியுடன் எங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றி பல விஷயங்களைப் பேசி முடிவெடுத்துக்கொண்டோம். அதில் ஒன்று, எங்கள் பெற்றோர் பற்றியது. இருவருமே வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால், என் பெற்றோரை அவரும், அவர் அம்மாவை (அப்பா உயிருடன் இல்லை) நானும் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினோம். அதேபோல, திருமணத்துக்கு முன்பே நான் அவர் அம்மாவை `அம்மா' என்றே அழைக்கத் தொடங்கி, `உங்களுக்கு ஒரு மகளாக நான் இருப்பேன்' என்று உறுதியளித்தேன். என் கணவரும் என் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைத்து, `உங்களுக்கு ஒரு மகனாக நான் இருப்பேன்' என்று நம்பிக்கை கொடுத்தார்.

என் கணவரின் அம்மா சொந்த ஊரில் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். என் அப்பா எங்கள் சொந்த ஊரில் தொழில் பார்க்கிறார். நானும் கணவரும் சென்னையில் பணிபுரிவதால் திருமணத்துக்குப் பின் சென்னைக்கு தனிக்குடித்தனம் வந்தோம். இருவரின் பெற்றோரும் அவ்வப்போது எங்களைப் பார்க்க வந்து போவார்கள்.
இந்நிலையில், என் மாமியார் மீது நான் காட்டும் அன்பு என் அம்மாவுக்கு பொஸசிவ்வாக உள்ளதும், என் நிம்மதியைப் பறிக்கும் அளவுக்கு அது வளர்ந்துகொண்டே வருவதும்தான் இப்போது என் பிரச்னை. திருமணத்துக்குப் பின்பு, `உன் மாமியாரை ஏன் அம்மானு கூப்பிடுற? அத்தைனு கூப்பிடு' என்றார் என் அம்மா. அப்போது நான், `என் வீட்டுக்காரர் உன்னை எப்படி அம்மானு கூப்பிடுறாரோ, அப்படித்தான் நானும் அவங்களைக் கூப்பிடுறேன். இதுல என்ன இருக்கு?' என்றேன். `அம்மா அம்மாதான், அத்தை அத்தைதான். அத்தையால எப்பவும் அம்மா ஆக முடியாது. சீக்கிரமே அவங்க மாமியார் குணத்தை உங்கிட்ட காட்டுவாங்க. அப்போ தெரியும்...' என்று சிடுசிடுத்தார் அம்மா. நான் அப்போது அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, `என்னதான் இருந்தாலும் பொண்ணு அம்மாகிட்ட பேசுற மாதிரி எல்லாத்தையும் மாமியார்கிட்ட பேசிட முடியாது. நீ வெகுளியா இருந்து எல்லாத்தையும் உன் அத்தைகிட்ட ஒப்பிக்காத', `நீ நினைக்கிற மாதிரியே உன் மாமியாரும் உன்னை நினைப்பாங்கனு நினைச்சு ஏமாந்து போகப்போற' என்றெல்லாம் என் மாமியார் பற்றி தொடர்ந்து சொல்லி வந்தார் அம்மா. தன் மகள் மாமியாரிடம் எந்தக் கஷ்டத்தையும் அனுபவித்துக் கூடாது என்ற அக்கறையில் அம்மா அப்படி பேசுகிறார் என்றே நான் அப்போது நினைத்தேன். ஆனால், உண்மையில் என் மாமியார் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்பவர். எனவே, என் மாமியார் என்னை கஷ்டப்படுத்திவிடுவாரோ என்ற என் அம்மாவின் கவலையை நீக்க நினைத்து, `கவலைப்படாதம்மா... அவங்க என்னை எள் அளவும் வித்தியாசமா நினைக்கல... சொல்லப்போனா நீ என்னைப் பார்த்துக்கிற மாதிரி பார்த்துக்கிறாங்க' என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்... அது என் அம்மாவின் பொஸசிவ்னெஸ்ஸை மளமளவென எரியவைத்துவிட்டது.

`நேத்து வந்த அவங்களும் நானும் ஒண்ணா உனக்கு? நான் உன்னை பார்த்துக்கிற அளவுக்கு அவங்களால உன்னைப் பார்த்துக்க முடியுமா?' என்றெல்லாம் என்னிடம் சண்டை போட்டார் அம்மா. சரி இனி அம்மாவிடம் மாமியார் பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றெண்ணி, அப்படியே செய்தும் வருகிறேன். ஆனால், அம்மா தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் என் மாமியாருடன் ஒப்பிட்டு புலம்பிக்கொண்டே இருக்கிறார். `உன் மாமியார்கிட்ட நேத்து போன் பேசியிருக்க, எனக்கு போன் பண்ண உனக்கு நேரம் இல்ல', `லீவுக்கு உன் மாமியார் வீட்டுல அஞ்சு நாள் இருந்த, ஆனா நம்ம வீட்டுல மூணு நாள்ல கிளம்பிட்ட', `தீபாவளிக்கு உன் மாமியாருக்கு எடுத்த புடவை கலர்லேயே எனக்கும் எடுத்திருக்கலாம்ல? எனக்கு மட்டும் ஏன் இந்தக் கலர்?' என இப்படியெல்லாம் சின்னக் குழந்தைபோல போட்டா போட்டி போடுகிறார்.
ஊரில் என் அம்மா, அப்பா இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்கிறார்கள். ஆனால், என் மாமியார் மட்டுமே தனியாக இருக்கிறார் என்பதால், நான் சில விஷயங்களில் என் அம்மாவைவிட என் மாமியாருக்கு சற்றதிக முக்கியத்துவம் கொடுப்பது உண்மைதான். உதாரணமாக, விடுமுறைக்கு மாமியார் வீட்டில் அம்மா வீட்டைவிட கூடுதலாக இரண்டு நாள்கள் தங்குவது, மாமியாரின் மாதாந்தர மருத்துவமனை அப்பாயின்ட்மென்ட்களை ஃபாலோ செய்து அவருக்கு நினைவுபடுத்துவது என்று அவரை பார்த்துக்கொள்வேன். அதுவே, அம்மா, அப்பா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைப்பேன்.

மாமியார் சென்னைக்கு வந்தால் அவருக்குத் தேவைப்படும் பொருள்களை எல்லாம் அலைந்து திரிந்து வாங்கிக் கொடுப்பது, அவரை வெளியே அழைத்துச் செல்வது என மிகுந்த உற்சாகத்துடன் செய்வேன். இவற்றையெல்லாம் நான் என் பெற்றோர் வரும்போதும் செய்வேன் என்றாலும், என் அம்மாவுக்கு அதை நான் என் மாமியாருக்கும் அவருக்கு சமமாகச் செய்வது பிடிப்பதில்லை. `என் மாமியார் என்னைக்காச்சும் என் வீட்டுக்காரர்கிட்ட, நீ ஏன்டா உன் மாமியார் மேல பாசமா இருக்கனு கேட்டிருக்காங்களா? நீ ஏன்மா இப்படி பண்ணுற?' என்றும் கேட்டுப்பார்த்துவிட்டேன்.
`உன் வீட்டுக்காரர் என்னதான் என்னை அம்மானு கூப்பிட்டாலும், அவருக்கு மனசுக்குள்ள அவர் அம்மாதான் உசத்தி. ஆனா நீ, என்னைவிட அவங்களைதான் தூக்கிவெச்சு கொண்டாடுற' என்று அவராக ஒன்றைப் புரிந்துகொண்டு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்.
இதற்கிடையில், என் அம்மா, மாமியார் இருவரும் எங்கள் வீட்டில் வந்து தங்கும் நாள்களில், என் அம்மாவுக்குள் புகைந்துகொண்டிருக்கும் பொஸசிவ்னெஸ் பற்றி எதுவும் அறியாத என் மாமியார், என் துணிகளைத் துவைப்பது முதல் எனக்கு தலைசீவி விடுவது வரை அன்பைக் கொட்ட, இதையெல்லாம் என் அம்மாவை எரிச்சல்படுத்தவே செய்வதாக நினைத்துக்கொள்வார் என் அம்மா.
இப்படியே நாள்கள் செல்ல, இப்போது இந்தப் பிரச்னை என் பிரசவத்தில் வந்து நிற்கிறது. இப்போது நான் ஏழு மாத கர்ப்பம். `பிரசவத்துக்கு நீ நம்ம ஊருக்குத்தான் வரணும்' என்கிறார் என் அம்மா. `அம்மா வீட்டுல பிரசவம் பார்க்குறதுதான் முறை. ஆனா, எனக்கும் உன்னைக் கூட இருந்து பார்த்துக்கணும்னு ஆசையா இருக்கு. அதனால, நானும் லீவ் போட்டு உங்க அம்மா வீட்டுக்கு வந்துடுறேன்' என்கிறார் என் மாமியார். `உன் மாமியார் போட்டிக்கே இப்படி பண்ணுறாங்க. பெத்த அம்மாவுக்குப் பிள்ளைக்குப் பிரசவம் பார்க்கத் தெரியாதா?' என்று கோபப்படுகிறார் என் அம்மா.

என் அம்மா என் அத்தையின் மீது கொண்டுள்ள பொஸசிவ் புகைச்சலைப் பற்றி நான் இதுவரை என் கணவரிடம் சொல்லவே இல்லை. பின்னர் அவர் என் அம்மா மீது வைத்துள்ள பாசமும் மரியாதையும் போய்விடும் என்பதே காரணம். இந்நிலையில், என் பிரசவத்தில் என்னவெல்லாம் பிரச்னை நடக்கப்போகிறதோ என்பதே இப்போது என் கவலையாக உள்ளது. பிரசவத்துக்கு என் அம்மா வீட்டுக்குச் செல்லவிருக்கும் என்னுடன் வருவதாகச் சொல்கிறார் என் மாமியார். அந்நாள்களில் என் மாமியார் மனம் வருந்தும்படி என் அம்மா நடந்துகொண்டால் என்ன செய்வது? அதன் பின் என் மாமியார், கணவரை நான் எப்படி எதிர்கொள்வது? இந்த விநோத பிரச்னைக்கு விடை என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.