Published:Updated:

அவர் வேலைகளை என்னை செய்ய வைக்கும் சீனியர்; உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுபட வழியென்ன?- PennDiary 49

Penn Diary
News
Penn Diary

நான் பார்க்கத் தேவையில்லாத, அவர் முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் என் சீனியர் என்னை தினசரி பார்க்க வைத்தார். `ஆனா, இதெல்லாம் நான் ஏன் பார்க்கணும்?' என்ற கேள்வியை அவரிடம் நேருக்கு நேர் கேட்கவே எனக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. ஒருவழியாகக் கேட்டபோது... #PennDiary 49

Published:Updated:

அவர் வேலைகளை என்னை செய்ய வைக்கும் சீனியர்; உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுபட வழியென்ன?- PennDiary 49

நான் பார்க்கத் தேவையில்லாத, அவர் முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் என் சீனியர் என்னை தினசரி பார்க்க வைத்தார். `ஆனா, இதெல்லாம் நான் ஏன் பார்க்கணும்?' என்ற கேள்வியை அவரிடம் நேருக்கு நேர் கேட்கவே எனக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. ஒருவழியாகக் கேட்டபோது... #PennDiary 49

Penn Diary
News
Penn Diary

நான் 30 வயதுகளில் இருக்கும் பெண். திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. டிகிரி முடித்ததும் திருமணம் முடிந்து விட்டது என்பதால் பணிக்குச் செல்ல இயலவில்லை. இப்போது குழந்தைக்கு 3 வயதாகிறது. எனவே, அருகில் இருக்கும் ஒரு டேட்டா என்ட்ரி நிறுவனத்தில் ஒரு வருடத்துக்கு முன் பணியில் சேர்ந்தேன். இங்கு என் உழைப்பைச் சுரண்டும் என் சீனியர்தான் என் பிரச்னையே.

அலுவலகத்தில் மொத்தம் 20 பேர் வேலைபார்க்கிறார்கள். ஒரு வருடத்துக்கு முன் அலுவலகத்தில் சேர்ந்து நான்தான் இருப்பதிலேயே ஜூனியர் மோஸ்ட். என்னை, ஒரு சீனியரிடம் ரிப்போர்ட் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அந்த அலுவலகத்தில் ஐந்து வருடங்களாக வேலைபார்க்கும் அவர், டெசிக்னேஷனில் எனக்கு ஐந்து படிகள் முன்னால் இருப்பவர். அவர், என் அமைதியான சுபாவத்தையும், நான் பெண்தான், பிரச்னை செய்ய மாட்டேன் என்ற எண்ணத்திலும், அவர் வேலைகளையும் என்னைச் செய்ய வைப்பதே என் பிரச்னை.

Office (Representational Image)
Office (Representational Image)
Photo by Francesco Ungaro on Unsplash

ஓர் ஒழுங்குடனும், அர்ப்பணிப்புடனும் வேலைபார்க்கும் இயல்புடையவள் நான். எனவே, நான் என் வேலைகளை விரைவாகச் செய்து முடித்துவிடுவேன். அலுவலகத்தில் சிலர் பணி நேரத்தில் பொழுதுபோக்கிவிட்டு அல்லது வேலையை விரைவாக முடிக்கும் திறனற்று இருப்பதால் அலுவலக நேரம் தாண்டியும் வேலைபார்ப்பார்கள். ஓவர் லோடட் வேலையால் இரவு வரை வேலைபார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற சூழலில், நான் என் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவதால், தன் வேலைகளை என்னிடம் கொடுக்க ஆரம்பித்தார் என் சீனியர். ஆரம்பத்தில், `ஒரு ஹெல்ப்... இதை முடிச்சுக் கொடுத்துடுறீங்களா..?' என்று அவர் கேட்டபோது, நானும் அதைச் சுமையாக நினைக்காமல் முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.

ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, நான் பார்க்கத் தேவையில்லாத, அவர் முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் என் சீனியர் என்னை தினசரி பார்க்க வைத்தார். `ஆனா, இதெல்லாம் நான் ஏன் பார்க்கணும்?' என்ற கேள்வியை அவரிடம் நேருக்கு நேர் கேட்கவே எனக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. ஒருவழியாகக் கேட்டபோது, `நீதான் உன் வேலையை சீக்கிரம் முடிச்சிடுற இல்ல, இதைப் பார்த்துக்கொடு. எனக்கு நிறைய டார்கெட் இருக்கு, நேரமே இல்ல' என்றார். இப்படியே மூன்று மாதங்கள் போயின. அவருடைய வேலையை முடிப்பதற்காக, நான் அலுவலகத்தில் இரவு 7 மணி வரை இருக்க வேண்டி வந்தது. எரிச்சலும், அவரிடம் அந்த வேலைகளை மறுக்க முடியாத ஆற்றாமையும் பணியிடத்தை எனக்குப் பிடிக்காமல்போகச் செய்தது.

இப்படியே மாதங்கள் உருண்டோட, இனியும் பொறுக்க முடியாது என்ற ஒரு கட்டத்துக்கு வந்தேன். `உங்களுக்கு வேலை அதிகம்னா அதை நீங்க நிர்வாகத்துக்கிட்ட வெளிப்படையா சொல்லி, உங்களோட வேலைகள்ல சிலவற்ற என்கிட்ட ஒப்படைக்கலாமே? அப்போதானே இதையெல்லாம் நான் பண்ணுறது அலுவலகத்துக்குத் தெரியும், இந்த வேலைகளை எல்லாம் செய்யுற எனக்கு அதுக்கான அங்கீகாரமும் கிடைக்கும்?' என்று கேட்டுவிட்டேன். என் உழைப்பை உறிஞ்சுவது குறித்து நான் கேட்டபோது அவர் சொன்ன பதில், என் அதிர்ச்சியை இன்னும் அதிகரித்தது.

Office (Representational Image)
Office (Representational Image)
Image by RAEng_Publications from Pixabay

`எனக்குக் கொடுக்குற வேலையை செய்ய முடியாதுனு என்னால நிர்வாகம்கிட்ட சொல்ல முடியாது. ஒரு டீல் வெச்சுக்கலாம். நான் உனக்கு ஒரு தொகை என் கையில் இருந்து தர்றேன், நீ இந்த வேலையை எல்லாம் எனக்கு செய்துகொடு அல்லது இதை முடிச்சுக் கொடுக்குற மாதிரி உனக்குத் தெரிந்த வேறு யாராவது இருந்தாலும் சொல்லு' என்றபோது, எனக்கு என் சுயமரியாதைச் சுட்டுவிட்ட மாதிரி இருந்தது. நான் அலுவலகத்துக்கு வேலைபார்க்க வந்தேனா, இவருக்கு வேலைபார்த்துக் கொடுக்க வந்தேனா? இவர் கொடுக்கும் பணத்துக்காக இப்படி ஒரு வேலையை நான் செய்வேன் என்று எப்படி அவர் என்னை நினைத்தார்? நிர்வாகத்தை அவர் ஏமாற்றுவதோடு இல்லாமல் என்னையும் எப்படி ஏமாற்றச் சொல்லலாம்? என்னுடைய இந்தக் கோபத்தை எல்லாம் அவரிடம் வெளிப்படுத்தி, `முடியாது...' என்று மறுத்துவிட்டேன்.

அதற்குப் பிறகு, இப்போது அவர் வேறு முகம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். அவர் வேலைகளை என்னைச் செய்ய வைத்ததை நான் நிர்வாகத்திடம் சொல்லிவிடுவேனோ என்று நினைத்தவர், எனக்குப் பயிற்சி கொடுப்பதற்காக அவருடைய வேலைகள் சிலவற்றை என்னிடம் கொடுத்து டிரெயின் செய்வதாக அலுவலகத்தில் சிலரிடம் சொல்லி வைத்திருக்கிறார். ஒருவேளை நான் புகார் தெரிவித்தாலும், அதை மடை திருப்ப இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். கூடவே, இப்போதெல்லாம் அடிக்கடி, என் பணியில் பிழைகள் அதிகம் இருப்பதாக அலுவலகத்தில் பலரிடமும் அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

Office (Representational Image)
Office (Representational Image)
Photo by Jose Losada on Unsplash

`ஒரு பொண்ணு, உன்னால என்ன பண்ண முடியும்?' என்ற ஆணாதிக்கமும், `என்னை பகைச்சுக்கிட்டே இல்ல... இனி உன் வேலை என்ன ஆகுது பாரு' என்று மிரட்டும் தொனியும் அவரிடம் வெளிப்படுகிறது. அலுவலகத்தில் என் சீனியர்களிடம் நான் இது பற்றி புகார் சொல்லலாம் என்று நினைத்தால், அந்த அளவுக்கு யாரும் எனக்கு இங்கு பழக்கமோ, நெருக்கமோ இல்லை. `ஹாய், பை' என்ற அளவில்தான் இருக்கிறார்கள் அனைவரும். மேலும், ஜுனியரான என் புகாருக்கு இங்கு என்ன மதிப்பு இருக்கும், சீனியரைத்தானே காப்பாற்ற நினைப்பார்கள் என்ற தயக்கமும் இருக்கிறது.

இந்த உழைப்புறிஞ்சியை எப்படி டீல் செய்வது நான்?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.