நான் கிராமத்துப் பெண். அப்பா, அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் ஆலையில் வேலைபார்க்கிறார். அம்மா வயல் வேலைகளுக்குச் செல்வார். வீட்டில் இருந்த இரண்டு பசுக்களும் வாழ்வாதாரத்துக்கு உதவின. மாதக் கடைசியில் கையில் காசில்லாமல் திணறும் மிடில் க்ளாஸ் வாழ்க்கை என்றாலும், சந்தோஷத்துக்குக் குறைவில்லை. நானும் தம்பியும் அரசுப் பள்ளியில் படித்தோம். எனக்கும் அவனுக்கும் 7 வருடங்கள் வித்தியாசம். `எப்படியாச்சும் நல்லா படிச்சிடுங்க... நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்...' என்று சொல்லியே எங்களைப் படிக்கவைத்தார்கள் எங்கள் பெற்றோர்.
நான் ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க, ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் எனக்கு ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட ஏற்படும் பணப் பற்றாக்குறையை எப்படியோ சமாளித்துவிடுவார் என் அப்பா. `அதப்பத்தி எல்லாம் நீ கவலைப்படாத... நல்லா படி... நீயும் தம்பியும் சம்பாதிச்சதும் நம்ம நிலைமை மாறிடும்' என்று மந்திரம்போல சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா. அந்த வைராக்கியத்துடனேயே படித்த எனக்கு, படிப்பை முடித்த உடனேயே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைகிடைத்தது. என் முயற்சியால், அடுத்த வருடமே சென்னையில் ஒரு எம்.என்.சியில் இன்னும் அதிக சம்பளத்தில் வேலைக்கு மாறினேன். மாதம் கிட்டத்தட்ட 40,000 சம்பளம். அதை என் கைகளில் வாங்கியபோது, இந்த 55 வயதில் என் அப்பா பெறும் அவரின் ஐந்து மாத சம்பளத் தொகை, என் ஒரு மாத சம்பளமா என்றுதான் என் கண்களில் நீர் ஓடியது.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவ்வளவு பெருமை, மகிழ்ச்சி. `உன் தம்பியும் இப்படி கரை சேர்ந்துட்டா போதும் எங்களுக்கு...' என்று எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள். தங்கள் வாழ்க்கையின் இனிமையான அந்திமக் காலத்தை நோக்கியபடி இருந்தார்கள். இன்னொரு பக்கம், அதே மில் வேலை, அதே மாடு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள் இருவரும். இந்நிலையில்தான், சொந்தத்தில் இருந்து வந்து என்னை பெண் கேட்டார்கள். என் பெற்றோருக்கும் அந்த சம்பந்தம் பிடித்திருந்தது. என் விருப்பத்தையும் கேட்டுவிட்டு, இதுவரையிலான தங்கள் சேமிப்பில் அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ந்து வைத்திருந்த நகை 30 பவுனுடன், திருமணச் செலவுகளுக்கு மூன்று லட்சம் கடன் வாங்கி, திருமணத்தை முடித்தனர்.
திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. அப்பா வேலைபார்த்து வந்த ஆலை, கொரோனா பொதுமுடக்கத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க, இப்போது அறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது. எனவே அப்பாவின் வருமானம் நின்றுபோயுள்ளது. தம்பி பொறியியல் இரண்டாம் வருடம் படிக்கிறான். அவனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டும். என் அப்பாவுக்கு நான் இப்போது பொருளாதார பலம் கொடுக்க வேண்டியது என் கடமை. ஆனால், என் கணவர் `நீ உன் பெற்றோருக்கு உதவக் கூடாது. அப்படியே உதவ வேண்டும் என்று நினைத்தாலும் அந்தத் தொகையை என்னிடம் சொல்லி, நான் ஒப்புதல் கொடுத்தால்தான் கொடுக்க வேண்டும். மேலும், இது இக்கட்டான சூழலுக்கான உதவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மாதம் மாதம் பணம் கொடுப்பது எல்லாம் கூடாது...' என்றார். இதை முன்னிட்டு அவருக்கும் எனக்கும் பெரும் விவாதம், சண்டை என்று சென்றுகொண்டிருக்கின்றன நாள்கள்.
என் கணவர், என் பெற்றோரின் நிலையை நன்கு அறிவார். என்னை அவர்கள் அரும்பாடுபட்டு படிக்கவைத்த அவஸ்தைகளையும் நான் ஏற்கெனவே அவரிடம் கூறியுள்ளேன். அப்படி இருந்தும், `உன் படிப்பை முடிக்கிற வரை அவங்க சமாளிச்ச மாதிரி, உன் தம்பி படிப்பை முடிக்கிற வரை அவங்களா எப்படியோ சமாளிச்சுக்குவாங்க. அப்புறம் உன் தம்பி அவங்களைப் பார்த்துப்பான். நீ கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்ட பொம்பளப் புள்ள, உன்கிட்ட பணம் வாங்குறது அவங்களுக்குத்தான் அவமானம்' என்றெல்லாம் ஆணாதிக்க சமூகத்தின் அசல் பிரநிதியாகப் பேச, அதிர்ந்துவிட்டேன் நான்.
என் பெற்றோர்கள் என்னையும், தம்பியையும் ஒரே போல்தான் வளர்த்திருக்கிறார்கள். எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை, ஆண்பிள்ளையான என் தம்பி எடுத்துக்கொள்ள. ஆனால், என் கல்யாணத்துக்கு வாங்கிய கடனைத்தான் வைத்திருக்கிறார்கள் என் பெற்றோர் அவனுக்காக. அதை அடைக்கும் பொறுப்பு அவனுக்குத்தான் கைமாற்றப்படும். சொல்லப்போனால், என் பெற்றோரின் 20 வருட சேமிப்பு முழுவதையும் எனக்குத்தான் 30 பவுன் நகையாகப் போட்டார்கள். அப்படி எதுவும் கொடுக்கப்படப் போவதில்லை என் தம்பிக்கு. கூடவே, என் பெற்றோரை இறுதிவரை என் தம்பி மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான், மிடில் க்ளாஸ் குடும்பங்களில் பிறந்த ஆண் பிள்ளைகளின் தலையிலும், தோளிலும், நெஞ்சிலும் பாரமேற்றுகிறது இந்தச் சமுதாயம்.

ஆனால், என் பெற்றோர் தந்த கல்வியால், சுதந்திரத்தால், தைரியத்தால், தன்னம்பிக்கையால் இன்று நல்ல சம்பளம் வாங்கும் நான், அதில் அவர்களுக்கான என் கடமையை செய்யக் கூடாது என்று கூறுவதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? `நான் பொண்ணு... அதனாலேயே எனக்குப் பெற்றோர் மீது எந்தப் பொறுப்பும் இருக்கத் தேவையில்லை. நீ பையன்... என்ன ஆனாலும் அவங்க உன் பொறுப்புத்தான்' என்று பெண்கள் தங்கள் சகோதரர்களிடம் பொறுப்பை கைமாற்றிவிடுவது சரியா?
கணவரோ நிலைமையை உணர்வதைவிட விவாதத்தை வளர்ப்பதிலேயே இருக்கிறார். `என் அக்காவும்தான் நல்லா சம்பாதிக்கிறாங்க. அதுக்காக, என் அக்காவை கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு அப்புறம், அவங்ககிட்ட இருந்து எங்க வீட்டுல பணம் எதிர்பார்க்குறோமா? சொல்லப்போனா, பையனான என்கிட்ட இருந்தே அவங்க எதிர்பார்க்கிறதில்லையே' என்கிறார்.
`உண்மைதான். ஆனா உங்க அக்காகிட்டயோ, உங்ககிட்டயோ எதிர்பார்க்குற அளவுல உங்க குடும்பம் இல்ல. உங்க அப்பா கவர்மென்ட் ஆபீஸர். வீடு, நிலம், சொத்து, பென்ஷன்னு நல்ல நிலைமையில இருக்கீங்க. இதுவே, ஒருவேளை நீங்க கஷ்டப்படுற சூழல்ல இருந்தா, அதுக்கு உதவுற கடமை உங்க அக்காவுக்கும்தான் இருக்கு. அந்தத் தவிப்பு எல்லாம் என்னை மாதிரி மிடில் க்ளாஸ் பொண்ணுங்களுக்குத்தான் புரியும், தெரியும். அதேபோல, ஒருவேளை உங்க உதவி நாளைக்கு உங்க பெற்றோருக்குத் தேவைப்பட்டாலும் அதை உங்க கடமையா செய்வீங்களே தவிர, என்னை மாதிரி இப்படி விளக்கம் கொடுத்திட்டு இருக்கிற அவசியமெல்லாம் உங்களுக்கு வரப்போறதில்லயே...' என்று எவ்வளவு விளக்கிச் சொன்னாலும், என் கணவர் எதையும் காதில் வாங்குவதில்லை.
`நான் சுயநலவாதிதான். நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம், சீக்கிரம் லோன் போட்டு சொந்த வீடு, கார்னு வாழ்க்கையில முன்னேறும் வழியைப் பார்க்கணும். உன் பெற்றோருக்கு காசு, தம்பிக்கு ஃபீஸுனு எல்லாம் கொடுக்குறது எனக்குப் பிடிக்கல' என்கிறார் கறாராக. இந்தப் பிரச்னையால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் விவாதங்களும், விரிசலும் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

உண்மையில், இந்தச் சூழலில்கூட என் பெற்றோர் என்னிடம் எதுவுமே எதிர்பார்ப்பதில்லை. `நீ உன் வாழ்க்கையைப் பாரு, நாங்க சமாளிச்சுக்குறோம்...' என்றுதான் சொல்கிறார்கள். இப்போது தம்பிக்கு ஃபீஸ் கட்ட வீட்டில் நின்ற இரண்டு பசுக்களில் ஒன்றை விற்றதை நான் அறிய நேர்ந்தபோது, இயலாமையில் துடிக்கிறேன். குற்றஉணர்வுக்கு ஆளாகிறேன். கணவருக்குத் தெரியாமல் என் பிறந்த வீட்டுக்கு நான் பணம் கொடுப்பது பெரிய காரியம் இல்லை. ஆனால், என் கடமையை நான் செய்ய எதற்குக் குறுக்கு வழி என்று கோபமாக வருகிறது. கணவரை மீறிக் கொடுக்க முடிவெடுத்தால், இவர் அதைப் பற்றி என் பிறந்த வீட்டினரிடமே பேசிவிட்டால், அதனால் அவர்களுக்கு ஏற்படும் காயத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
பெண்களுக்குத்தான் எத்தனை பாடுகள்? மகள்கள் பெற்றோருக்கு ஒரு பிள்ளையாகக் கடமையாற்றுவதை தடுக்கும் இந்தத் திருமண அமைப்பை என்னவென்று நோவது? ஆணாதிக்கவாதிகளை எப்படித் திருத்துவது? என் கணவருக்கு எப்படி புரியவைப்பது?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.