எங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள். மூன்று அண்ணன்களுடன் பிறந்த கடைக்குட்டி நான். அதனால் வீட்டில் செல்லம். மிடில் க்ளாஸ் குடும்பம். அரசு வேலைபார்த்த அப்பா, எங்கள் நான்கு பேரையும் டிகிரி படிக்கவைத்தார். அண்ணன்கள் மூவரும் படிப்பு முடித்த கையோடு ஒவ்வொருவராகக் கிடைத்த வேலையில் சேர்ந்து அப்பாவின் சுமையை பகிர ஆரம்பித்தனர். அப்பா தாமதிக்காமல் அடுத்தடுத்து அண்ணன்களின் திருமணத்தை முடித்தார். திருமணத்துக்குப் பிறகும் அண்ணன்கள் மூவரும் எங்களுடன் சேர்ந்து வசிக்க, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம்.

கூட்டுக் குடும்பத்துக்கே உரிய சின்னச் சின்ன சண்டை, சச்சரவுகள், ஈகோ, ஏட்டிக்குப்போட்டி மனநிலை என அண்ணிகளுக்கு இடையிலும், அம்மாவுடன் அண்ணிகளுக்கும் ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளித்து குடும்பத்தை எடுத்துச் சென்றார் அம்மா. `யார் மேலயும் யாருக்கும் மனவருத்தம் வரலாம், போகலாம். ஆனா அதையெல்லாம் சரிசெஞ்சுக்கிட்டே எல்லாரும் ஒற்றுமையா இதே வீட்டுல வாழணும்' என்று அண்ணிகளிடம் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பார். கீழ் வீட்டில் அப்பா, அம்மா, நான், மேல் தளத்தில் மூன்று அண்ணன்களுக்கும் மூன்று அறைகள், ஒரே சமையல், வீட்டுக்குச் செலவுக்கு அண்ணன்கள் ஆளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பது போக அவரவர் வருமானத்தை அவரவர் சேமித்துக்கொள்வது என இந்த ஏற்பாட்டில் எங்கள் அண்ணன்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியே. ஆனால், அண்ணிகள் ஏதாவது புலம்பிக்கொண்டேதான் இருப்பார்கள்.
இந்நிலையில், எனக்குத் திருமணம் ஆனது. அதுவரை நான் வேலைபார்த்துச் சேமித்திருந்த என் சம்பளம் ஒரு லட்சம் ரூபாயை, என் திருமணச் செலவுகளுக்காக அப்பாவிடம் கொடுத்தேன். அதேபோல, என் அண்ணன்கள் மூவரும் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் என் அப்பாவிடம் என் திருமணச் செலவுக்கு என்று கொடுத்தனர். அதில் என் அண்ணிகள் மூவருக்குமே உடன்பாடில்லை. `எங்கப்பா எங்க மூணு பேரோட கல்யாணத்தையும் அவரேதான் நடத்தினார். தங்கச்சி கல்யாணத்துக்காச்சும் நாங்க கொடுக்குறது எங்க கடமை' என்று கூறிவிட்டனர் அண்ணன்கள்.

நான்கு வருடங்களுக்கு முன் என் திருமணத்தை என் பெற்றோர், அண்ணன், அண்ணிகள் கூட்டுக் குடும்பமாக நின்று நடத்தியதை, ஊரும் உறவும் வியந்து பார்த்தது. `எப்பவும் இப்படியே இருங்க' என்று பலர் வாழ்த்த, எங்கள் ஒற்றுமையைப் பார்த்துப் பொறாமைப்பட்டவர்களும் உண்டு. திருமணத்துக்குப் பிறகு பிறந்த வீட்டிலும் என் புகுந்த வீட்டின் ஒற்றுமை குறித்தும், பெற்றோர், அண்ணன், அண்ணிகள் என்னை கவனித்துக்கொள்வது குறித்தும் மிகுந்த பெருமை எனக்கு. ஆனால், என் சந்தோஷமெல்லாம் மொத்தமாகப் பறிபோகும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
ஒன்றரை வருடங்களுக்கு முன் கொரோனாவுக்கு என் அப்பா, அம்மா இருவருமே பலியாகிவிட்டனர். அந்தத் துயரத்தில் இருந்தே ஆறித் தேறி என்னால் வர முடியாத நிலையில், மேலும் மேலும் துன்பங்கள் என்னைச் சூழ்ந்தன. புகுந்த வீட்டில் என் அப்பாவும், அம்மாவும் மறைந்த பிறகு சூழ்நிலை மொத்தமாக மாறிப்போனது. அப்பா, அம்மா இருந்தபோது பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டிருந்த என் அண்ணிகள், அவர்கள் மறைவுக்குப் பிறகு ஆளுக்கொரு பக்கமாக நின்று சண்டை, சச்சரவுகள் என்று வளர்த்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்னையைச் சொல்லி சண்டை போட்டாலும், அவர்கள் மூவர் கேட்டதும் ஒன்றுதான்... தனிக்குடித்தனம். என் அண்ணன்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும், ஒரே இடத்தில் மனக்கசப்புடனும், மனைவிகள் தினம் தினம் தங்களுடன் சண்டை போடுவதால் நிம்மதி இழந்தும் இருப்பதற்குப் பதிலாக, தனியாகச் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தனர். அப்பா, அம்மா மறைந்த ஆறாவது மாதம் நடு அண்ணனும் சின்ன அண்ணனும் தனிக்குடித்தனம் சென்றுவிட, பெரிய அண்ணன் நாங்கள் வசித்த வீட்டிலேயே வசிக்கிறார்.

அண்ணன் குடும்பங்கள் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் இருக்க, என் நிலைமைதான் அநாதரவாகிவிட்டது. அண்ணிகள் மூவருமே என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்காமல், அண்ணன்களை என்னிடம் பட்டும் படாமல் இருப்பதுபோல நடந்துகொள்ள வைக்கின்றனர். குறிப்பாக, பிறந்த வீட்டுக்குப் போய் தங்கிவிட்டு வருவது என்ற பெரிய சந்தோஷத்தை இழந்து நிற்கிறேன். எந்த அண்ணன் வீட்டுக்குச் சென்றாலும் சில மணி நேரங்களில் கிளம்பிவிடும் ஒரு விருந்தினர்போலவே நடத்தப்படுகிறேனே தவிர, எங்குமே என்னால் இரண்டு நாள்கள் தங்கிவர முடியவில்லை.
மேலும் அப்போது அண்ணிகளின் பேச்சும் ஏதாவது ஒரு வகையில் என்னை சங்கடப்படுத்துவது, புண்படுத்துவது போலவே இருக்கிறது. அண்ணன்களும் அண்ணிகளுக்குக் கட்டுப்பட்டு பாசத்தை வெளிப்படுத்துவதில்லை. `ஏதாச்சும் தேவைன்னா சொல்லு, அக்கவுன்ட்ல பணம் போட்டுவிடுறேன்' என்கிறார்கள். நானும் என் கணவரும் வேலைபார்க்கிறோம், பொருளாதாரத்துக்கு எந்தக் குறையும் இல்லை. நான் எதிர்பார்ப்பது என் அண்ணன்கள், அண்ணிகளின் அன்பை, அரவணைப்பை. என் குழந்தை பிறந்தநாளுக்கு100 ரூபாய் கொடுத்தாலும், தாய்மாமன்கள் என்ற அன்புடனும் உறவு உரிமையுடனும் அவர்கள் எனக்காக இருக்க வேண்டும், நிற்க வேண்டும் என்ற பெருமையை.

`கல்யாணம் ஆயிட்டா அண்ணன்கள் எல்லாம் அப்படித்தான் ஆகிடுவாங்க' என்பது எனக்கும் புரிகிறதுதான். ஆனால்,வீட்டில் அண்ணன்களால் இளவரசியாக வளர்க்கப்பட்டு, ஒரே நேரத்தில் அம்மா, அப்பா என்று இருவரையும் இழந்து, திடீரென அண்ணன்களிடமும் தூரமாகிப்போயிருக்கும் இந்நிலையை என்னால் கடக்க முடியவில்லை. என் புகுந்த வீட்டில் மாமியார், `கல்யாணம் பண்ணும்போது, எங்க தங்கச்சிக்கு எப்பவும் நாங்க இருப்போம்னு சொன்ன உன் அண்ணனுங்க இப்போ உன்னை இப்படி கழட்டிவிட்டுட்டாங்களே'ன் என்று குத்திக்காட்டிப் பேசும்போது உடைந்துபோகிறேன். `எங்களுக்கு அப்புறமும் உன் அண்ணனுங்க உன்னை எப்பவும் ராஜாத்தி மாதிரி பாத்துக்குவாங்க' என்று அவ்வப்போது சொல்லும் அம்மாவின் குரல் நினைவுக்கு வரும்போதெல்லாம் தேற்றமுடியாமல் தேய்கிறேன்.
அண்ணன்களின் அன்புக்கு வழி என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.