Published:Updated:

பணத்தை ஏமாற்றிய என் சகோதரர்கள், கோபத்தில் கணவர்; கேள்விக்குறியாகுமா வாழ்க்கை?#PennDiary77

Penn Diary
News
Penn Diary

`என்ன பத்திரத்துல கையெழுத்துப் போட்டா உங்ககிட்ட பணம் வாங்கினோம்? எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணினாலும் எங்கள ஒண்ணும் பண்ண முடியாது. பொறுமையா இருந்தா பணத்தை ரெண்டு, மூணு தவணையில திருப்பி வாங்கிக்கலாம். பிரச்னை பண்ணினா அதுவும் கிடைக்காது.’

Published:Updated:

பணத்தை ஏமாற்றிய என் சகோதரர்கள், கோபத்தில் கணவர்; கேள்விக்குறியாகுமா வாழ்க்கை?#PennDiary77

`என்ன பத்திரத்துல கையெழுத்துப் போட்டா உங்ககிட்ட பணம் வாங்கினோம்? எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணினாலும் எங்கள ஒண்ணும் பண்ண முடியாது. பொறுமையா இருந்தா பணத்தை ரெண்டு, மூணு தவணையில திருப்பி வாங்கிக்கலாம். பிரச்னை பண்ணினா அதுவும் கிடைக்காது.’

Penn Diary
News
Penn Diary

எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. மிடில் கிளாஸ் குடும்பம். எனக்கு 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. என் கணவர் வீடும் மிடில் கிளாஸ்தான் என்றாலும், வீட்டுக்கு ஒரே பிள்ளையான என் கணவர் தன் கடுமையான உழைப்பால் குடும்பத்தை உயர்த்தினார்.

Brothers - Sister (Representational Image)
Brothers - Sister (Representational Image)
Unsplash

வெளிநாட்டில் வேலைபார்க்கும் என் கணவர், வருடத்துக்கு ஒருமுறை விடுமுறைக்கு வருவார். என் அண்ணன், தம்பி அவரிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். அவர் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதால், அவரும் என் சகோதரர்களிடம் மிகவும் அன்புடன் இருப்பார்.

என் அண்ணன், தம்பி இருவருமே ஒரு சராசரி வேலைதான் பார்த்து வந்தனர். மூன்று வருடங்களுக்கு முன், `நாங்க ஒரு தொழில் பண்ணலாம்னு இருக்கோம். மச்சான் முதலீடு செய்வாரா? லாபத்துல அவருக்கும் ஒரு ஷேர் போட்டுடலாம்’ என்று என்னிடம் வந்து கேட்டார்கள். நானும் என் கணவரிடம் கேட்டேன். `உங்க அண்ணன், தம்பி கேட்கும்போது நான் எப்படி செய்யாம இருப்பேன்...’ என்று சந்தோஷமாக சம்மதம் சொன்னார்.

பணம்
பணம்

10 லட்சம் கேட்டார்கள் என் சகோதரர்கள். அது கிட்டத்தட்ட எங்கள் சேமிப்பில் 80%. இருந்தாலும் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து, எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுத்தார் என் கணவர். வாகன ஸ்பேர் பார்ட்ஸ் பிசினஸ் என்றார்கள். அனைத்தையும் தாங்கள் பார்த்துக்கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகும் எங்களுக்கு லாபத்தில் பங்கு என்று எதுவும் கொடுக்காததால், அது பற்றி நான் கேட்டேன். `பிசினஸ் இன்னும் பிக் அப் ஆகலை, முதல் ஆறு மாசம் லாபமெல்லாம் இருக்காது. இனி எல்லாம் சரி ஆகிடும்’ என்றார்கள்.

ஆனால், ஒரு வருடமாகியும் அவர்கள் ரிட்டர்ன்ஸ் என்று எந்தப் பணமும் கொடுக்காததால், இப்போது என் கணவரே அவர்களிடம் நேரடியாக போனில் பேசி கேட்டார். இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என்றார்களே தவிர, பணம் எதுவும் கொடுத்த பாடில்லை. அப்போதுதான் என் உறவினர் ஒருவர், `உன் அண்ணனும் தம்பியும் அந்த பிசினஸ்ல போட்டது ஆளுக்கு ரெண்டு லட்சம்தான். உங்க பணம்தான் அதுல பிரதானம். இப்போ நல்லா சம்பாதிக்கிறாங்க’ என்று சொல்ல, பின்னர் ஏன் எங்களுக்கான பங்கை அவர்கள் கொடுக்க முன்வரவில்லை என்று எனக்கு ஆற்றாமையாக வந்தது.

Woman in distress(Representational image)
Woman in distress(Representational image)
Pexels

இதற்கிடையில் என் கணவருக்கும், என் சகோதரர்கள் பிசினஸில் நன்றாக சம்பாதிப்பதும், அதில் அவரது பணம்தான் அதிகம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும் உறவினர்கள் மூலம் சென்று சேர்ந்துவிட்டது. சென்ற வருடம் வெளிநாட்டில் இருந்து அவர் வந்தபோது, நேரில் சென்று என் சகோதரர்களை சந்தித்துக் கேட்டபோது, `வியாபாரம் நல்லா போகுதுதான். ஆனா, வெளியில எங்களுக்குக் குடும்பக் கடன் நிறைய இருக்கு மச்சான். வர்ற காசெல்லாம் அதுக்குத்தான் போயிட்டிருக்கு. கடனை எல்லாம் அடைச்சதும் உங்களுக்கு காசு கொடுத்துடுறோம்’ என்றார்கள்.

என் கணவரிடம் முன்னர் இருந்த பொறுமை இம்முறை இல்லை. `வெளிநாட்டுலதானே இருக்கார், இவருக்கு எங்க தெரியப்போகுது’ என்று தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தார். சொல்லப்போனால் அதுதான் உண்மையும்கூட. மேலும், பணம் பிரியத்தைக் கெடுக்கும் என்பதும் நடந்தது. முன்னர் என் சகோதரர்கள் மீது என் கணவருக்கு இருந்த அன்பும், மரியாதையும், அவர்களது நேர்மையற்ற செயல்களால் கரைந்துபோனது.

Man in distress (Representational Image)
Man in distress (Representational Image)
Pixabay

ஆனால், இன்னொரு பக்கம், நம் சகோதரியின் கணவர் நம்மை பற்றி என்ன நினைப்பார் என்றோ, நாம் இப்படிச் செய்வது நம் சகோதரி வாழ்க்கைகு பிரச்னையானால் என்ன செய்வது என்றோ என் சகோதரர்களுக்கு எந்த நினைப்பும் இல்லை. விரைவில் தந்துவிடுகிறோம் என்ற கதையைத்தான் மூன்று வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அவர்கள் இடம் வாங்கிப்போட்டிருக்கும் தகவல்களும் உறவினர்கள் மூலம் வந்து சேர்கின்றன.

இப்போது என் கணவரின் மொத்தக் கோபமும் என் மீது திரும்பியிருக்கிறது. `உன் அண்ணன், தம்பி காசுக்காகத்தான் உறவாடினார்களா? பணம் விஷயத்தில் நேர்மை இல்லாத இவர்கள் உறவு இனி எனக்கு எப்போதும் வேண்டாம். 10 லட்சத்தை மூன்று வருடங்களாக அவர்களுக்குத் தண்டமாகக் கொடுத்து வைக்க எனக்கு என்ன தலையெழுத்தா? இன்னும் இரண்டு மாதங்களில் முழுத்தொகையையும் அவர்கள் எனக்குத் திருப்பித் தராவிட்டால் நான் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்’ என்று சொல்லிவிட்டார்.

பணத்தை ஏமாற்றிய என் சகோதரர்கள், கோபத்தில் கணவர்; கேள்விக்குறியாகுமா வாழ்க்கை?#PennDiary77

`நீங்கள் செய்வது நியாயமா?’ என்று என் சகோதரர்களிடம் கேட்டு, கணவரின் கோபம் பற்றியும், காவல் நிலையத்தில் அவர் புகார் அளிப்பதாகச் சொல்வது பற்றியும் சொன்னேன். `என்ன பத்திரத்துல கையெழுத்துப் போட்டா உங்ககிட்ட பணம் வாங்கினோம்? எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணினாலும் எங்கள ஒண்ணும் பண்ண முடியாது. பொறுமையா இருந்தா பணத்தை ரெண்டு, மூணு தவணையில திருப்பி வாங்கிக்கலாம். பிரச்னை பண்ணினா அதுவும் கிடைக்காது’ என்று மனசாட்சியே இல்லாமல் அவர்கள் பேசியபோது, அதிர்ந்துவிட்டேன்.

இப்போது அவர்கள் சொல்லியதை எப்படி நான் என் கணவரிடம் சென்று சொல்வேன். அவர் கோபம் இன்னும் அதிகரிக்காதா? என் வாழ்க்கை இன்னும் சிக்கலாகாதா? எப்படி சமாளிப்பது இந்தச் சூழலை?