Published:Updated:

தம்பியின் சம்பாத்தியத்தில் சாப்பிடும் கணவர், பறிபோகும் என் சுயமரியாதை; வாழ்வை நிமிர்த்த வழி? - 42

Penn Diary
News
Penn Diary

என் கொழுந்தனின் மனைவி, என்னை வீட்டு வேலைகளை நேரடியாகச் செய்யச் சொல்ல இப்போதெல்லாம் தயங்குதே இல்லை. `ஓசி சோறு திங்கறவங்கதானே..?' என்ற மனநிலையை அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறார். #PennDiary 42

Published:Updated:

தம்பியின் சம்பாத்தியத்தில் சாப்பிடும் கணவர், பறிபோகும் என் சுயமரியாதை; வாழ்வை நிமிர்த்த வழி? - 42

என் கொழுந்தனின் மனைவி, என்னை வீட்டு வேலைகளை நேரடியாகச் செய்யச் சொல்ல இப்போதெல்லாம் தயங்குதே இல்லை. `ஓசி சோறு திங்கறவங்கதானே..?' என்ற மனநிலையை அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறார். #PennDiary 42

Penn Diary
News
Penn Diary

எனக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகின்றன. மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. என் கணவர் தற்போது வேலையில்லாமல், அதற்கான முயற்சியும் இல்லாமல் தன் தம்பியின் சம்பாத்தியத்தில், அவர் வீட்டிலேயே குடும்பத்தோடு வாழ்ந்து வருவதுதான் என் பிரச்னை.

என் கணவர் வீட்டுக்கு மூத்த பிள்ளை. இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளார்கள். அனைவருக்கும் திருமணமாகி, உள்ளூரிலேயே தனித்தனியாக வசிக்கின்றனர். மாமனார் சமீபத்தில் இறந்துவிட்டார். மாமியார், கணவரின் கடைசி தம்பி குடும்பத்துடன் அவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் கணவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நிலை காரணமாகச் சில மாதங்கள் வேலையை விட வேண்டிய நிலை. அதற்குப் பிறகு, எந்த வேலையும் கிடைக்காததால், என் நகைகளை அடகு வைத்து தொழில் தொடங்கினார். ஆனால், அது நஷ்டத்தில் முடிந்தது. இருந்த சேமிப்புப் பணமும் கரைந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை வந்தது.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Alex Green from Pexels

கணவரின் கடைசி தம்பி வீட்டில் வசித்த என் மாமியார், `அவன் ஒரு வேலைக்குப் போற வரைக்கும் நீங்க இங்க வந்துடுங்க' என்று கூறினார். கணவரின் தம்பியும் கூட அழைத்தார். அடுத்த மாத வாடகை கொடுக்க வழியில்லாமல் இருந்த எங்களுக்கு, அதை மறுக்கவும் முடியவில்லை. நான், கணவர், குழந்தை மூவரும் கணவரின் தம்பி வீட்டுக்குச் சென்றோம். அங்கே மாடியில் இருந்த அறையில் தங்கிக்கொண்டோம்.

என்னதான் என் கணவரின் தம்பி, அண்ணன் மீது மரியாதை வைத்திருந்தாலும், மருந்தும் விருந்தும் மூன்று நாளைக்குத்தானே? நாங்கள் இங்கு வந்து தங்கி ஒரு வருடமாகப்போகிற நிலையில், ஆரம்பத்தில் எங்களிடம் காட்டிய அன்பு, மரியாதை எல்லாம் இப்போது கரைந்துகொண்டே வருவதை நான் நன்றாகவே உணர்கிறேன். என் கொழுந்தனின் மனைவி, என்னை வீட்டு வேலைகளை நேரடியாகவே செய்யச் சொல்ல இப்போதெல்லாம் தயங்குதே இல்லை.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by Jeyaratnam Caniceus from Pixabay

`ஓசி சோறு திங்கறவங்கதானே..?' என்ற மனநிலையை அப்பட்டமாகவே வெளிப்படுத்துகிறார். என் கொழுந்தன் முகம் கொடுத்துப் பேசுவதுகூட இல்லை. அண்ணன் என்றால் அன்பாகவும் மரியாதையுடனும் நடக்கும் அவரிடம் இப்போது ஓர் அதிகார தோரணை தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, என் கொழுந்தன் குழந்தை, என் குழந்தை சேர்ந்து விளையாடும் நேரங்களில், அதட்டுவது, சாப்பாட்டுப் பொருள் கொடுப்பது, இவள் கையில் இருக்கும் விளையாட்டுப் பொருளை வலுக்கட்டாயமாக அவளிடம் வாங்கிக் கொடுப்பது என்றெல்லாம் அந்த வீடு என் குழந்தையிடம் காட்டும் பாரபட்சத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

`என்ன பண்றது... அனுசரிச்சுத்தான் போகணும். உன் புருஷன் சம்பாதிக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ' என்கிறார் மாமியார்.

`நானும் வேலை தேடிட்டுத்தான் இருக்கேன், எதுவும் கிடைக்கல. தொழில் ஆரம்பிக்க கையில பணமும் இல்ல. பொறுத்துதான், சகிச்சுதான் ஆகணும், வேற வழியில்ல' என்கிறார் கணவர்.

ஆனால், உண்மையில் அதற்கான முழுமையான முயற்சியை அவர் கொடுப்பதில்லை என்பதே உண்மை. `வீட்டு வாடகை இல்ல, சோத்துக்குப் பிரச்னையில்ல, தங்கிக்க தனி ரூம் இருக்கு. இருக்குற வரைக்கும் இப்படியே இருப்போம்' என்பது போல பொறுப்பற்று நடந்துகொள்கிறார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், சண்டை போட்டும் பலனில்லை.

Couple (Representional image)
Couple (Representional image)
Pixabay

அவர் தம்பி, அவர் அம்மா என்பதால் அவருக்கு இங்கு நிகழும் அவமானங்கள் உரைக்காமல் இருக்கலாம். அல்லது இவர்கள் அவரிடம் ஒரு மாதிரியும் என்னிடம் ஒரு மாதிரியும் நடந்துகொள்ளலாம். ஆனால், நாளாக ஆக இங்கு தங்குவது எனக்கு நரகத்தில் இருப்பதுபோல உள்ளது. என் பிறந்த வீட்டில் உதவி கேட்கும் அளவுக்கு அவர்களுக்கும் வசதியில்லை. நான் வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்தாலும் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு வழியில்லை.

தம்பியின் சம்பாத்தியத்தில் என் கணவர் தஞ்சமடைந்து கிடக்கும் இந்தச் சூழலில், என் சுயமரியாதையைப் பறிகொடுத்துள்ளேன். வாழ்வை நிமிர்த்த வழி என்ன?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.