Published:Updated:

மேனேஜராக இருக்கும் பெண் நான்; ஈகோ காட்டும் ஆண் ஊழியர்கள்; கையாள்வது எப்படி? #PennDiary 53

Penn Diary
News
Penn Diary

நான் என்ன சொன்னாலும், அதை ஒரு மேனேஜரின் ஆலோசனையாகவோ, கட்டளையாகவோ, விசாரணையாகவோ எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, ஒரு பெண் நம்மை அதிகாரம் செலுத்துவதா என்றே நினைக்கின்றனர்.

Published:Updated:

மேனேஜராக இருக்கும் பெண் நான்; ஈகோ காட்டும் ஆண் ஊழியர்கள்; கையாள்வது எப்படி? #PennDiary 53

நான் என்ன சொன்னாலும், அதை ஒரு மேனேஜரின் ஆலோசனையாகவோ, கட்டளையாகவோ, விசாரணையாகவோ எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, ஒரு பெண் நம்மை அதிகாரம் செலுத்துவதா என்றே நினைக்கின்றனர்.

Penn Diary
News
Penn Diary

நான் ஷேர் மார்க்கெட் சார்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். மாநகரத்தின் பிரதான அலுவலகத்தில் மேனேஜர். நகரில் உள்ள மற்ற இரண்டு கிளை அலுவலகங்களுக்கும் இதுதான் தலைமை அலுவலகம். எனவே, இந்த மாநகரத்தில் உள்ள எங்களது மூன்று அலுவலகங்களில் வேலைபார்க்கும் அனைவருக்கும் நான்தான் ரிப்போர்ட்டிங் பாஸ். ஒரு பெண்ணை பாஸாக ஏற்பதா என்ற ஆண் ஈகோவுடன் எங்கள் அலுவலக ஊழியர்கள் என்னிடம் நடந்துகொள்வதுதான் என் பிரச்னை.

நான் வங்கிப் பணி தொடர்பான பட்டப்படிப்பை முடித்தவுடன், அதிலேயே மேற்படிப்பும் படித்தேன். படிக்கும்போதே இரண்டு நிறுவனங்களில் இன்டர்ன் ஆகப் பயிற்சி பெற்றேன். மேலும், மேற்படிப்பை முடித்த கையோடு கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு தேசிய அளவிலான புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. 23 வயதில் பணியில் சேர்ந்தபோது, அலுவலகத்திலேயே நான்தான் ஜூனியர் மோஸ்ட்.

Office
Office
Pixabay

தென்மாவட்டத்தின் ஒரு மாநகரத்தில், புரோக்கரேஜ் பணி சார்ந்த ஒரு நிறுவனத்தில், 13 வருடங்களுக்கு முன்பு என்னுடைய 23-வது வயதில் நான் பணியில் சேர்ந்தபோது, அந்த அலுவலகத்தில் பணிக்கு வரும் முதல் பெண் நான்தான் என்று கூறி, அலுவலகத்தில் இருந்த அனைவரும் கொஞ்சம் ஆச்சர்யமாகவே என்னை வரவேற்றனர். பணியிலிருந்த சக ஆண் ஊழியர்கள் அனைவரும் சீனியர்கள் என்பதால், தட்டிக்கொடுத்து வேலை சொல்லிக்கொடுத்தனர்.

வகுப்பில் எப்போதும் முதல் மாணவியான நான், வேலையைக் கற்றுக்கொள்வதிலும் அந்த முனைப்பைக் காட்டினேன். ஆனால், அதுவே விரைவில் எனக்குப் பிரச்னையாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆம்... என் பணித்திறனும், அதனால் எனக்கு அலுவலகத்தில் கிடைத்த வாய்ப்புகளும், மூன்று ஆண்டுகளில் சக ஆண் பணியாளர்களைக் கடந்து என்னை முன்வரிசைக்குக் கொண்டுவந்தது. எனவே, `அவ மேனேஜர்கிட்ட பேசிப் பேசியே புரோமோஷன் வாங்குறா' என்பதில் ஆரம்பித்து, பணியிடத்தில் தன்னைத் தாண்டிச் செல்லும் பெண்களைப் பேசும் எல்லா அவதூறுகளையும், எங்கள் அலுவலக ஆண்களும் என்னைப் பற்றி பேச ஆரம்பித்தனர். என்றாலும், இயல்பிலேயே உறுதியான குணம் கொண்ட நான் எதற்கும் கலங்காமல், என் பணியில் மட்டும் கவனம் செலுத்தினேன். அடுத்த ஒரு வருடத்தில் என்னை சென்னையில் உள்ள எங்கள் நிறுவனக் கிளைக்கு, பதவி உயர்வு கொடுத்து அழைத்துக்கொண்டனர்.

எங்கள் ஊர் போல் அல்லாது, சென்னையில் அலுவலகத்தில் பல பெண்கள் பணியில் இருந்ததால், நான் தனி ஒருத்தியாக உணராத அலுவலக சூழல். மேலும், சென்னை முழுக்கவிருந்த எங்கள் அலுவலகக் கிளைகளில் என்னைப் போல பல பெண்கள் தடதடவென பணியில் அடுத்தடுத்த படிகளுக்கு ஏறினோம். இதற்கிடையில் எனக்குத் திருமணம் முடிந்தது. ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். கணவர் சுயதொழில் செய்கிறார்.

இப்போது எனக்கு 36 வயதாகிறது. இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன் எனக்கு வடதமிழகத்தில் ஒரு மாநகரத்தின் தலைமை அலுவலகத்தில் மேனேஜர் ஆக புரொமோஷன் தந்தது என் நிறுவனம். என் கணவருக்கும் அது தொழில் வாய்ப்புக்கு ஏற்ற மாநகரமாக இருந்ததால், குடும்பத்தோடு இங்கு குடிபெயர்ந்தோம். குழந்தையையும் இங்கு பள்ளியில் சேர்த்தோம். எனவே, இட மாற்றத்தால் பெர்சனல் வாழ்க்கையில் எனக்குப் பிரச்னை. ஆனால், அலுவலகச் சூழல் இந்த ஒரு வருடத்தில் மிகவும் இறுக்கமாகிவிட்டது எனக்கு.

Office (Representational Image)
Office (Representational Image)
Image by RAEng_Publications from Pixabay

முன்பே சொன்னதுபோல, என் அலுவலகத்தில் எனக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும், நான் என்ன சொன்னாலும், அதை ஒரு மேனேஜரின் ஆலோசனையாகவோ, கட்டளையாகவோ, விசாரணையாகவோ எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, ஒரு பெண் நம்மை அதிகாரம் செலுத்துவதா என்றே நினைக்கின்றனர். இதற்கு முன் நான் இருக்கும் இந்த தலைமைப் பொறுப்பில் பெண்கள் யாரும் இருந்ததில்லை என்பதால், அவர்கள் யாரும் என்னை மனதளவில் பாஸ் ஆக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அலுவலகத்தில் சில ஆண்களும், பல பெண்களும், என் ஆளுமையை மட்டுமே பார்த்து சப்போர்ட்டிவ்வாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்களும், சில பெண்களும் ஆணாதிக்க மனப்பான்மையுடனேயே என்னை அணுகுகிறார்கள்.

நான் எதிர்பார்ப்பது, பாஸ் ஆன எனக்கு அவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை இல்லை. ஒரு குழுவாக இணைந்து பணியாற்றினால்தான், எங்கள் அலுவலகத்தை நான் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல முடியும் என்பதால், அந்த ஒத்துழைப்பையும், பணித்திறனையுமே அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில் அவர்களோ, `உன் இலக்குகளை எல்லாம் எட்ட நாங்கள் வேலைபார்க்க, நீ அதற்கான பெயரையும், புரொமோஷனையும் வாங்குவதா? ஒரு பெண்ணான உன்னை இதற்கு மேல் வளரவிடக்கூடாது' என்ற ஆதிக்க மனப்பான்மையுடன், ஆரோக்கியமான அலுவலகச் சூழலையே சிதைக்கிறார்கள். எங்கள் அலுவலகம் மட்டுமல்லாது, மற்ற இரண்டு கிளை நிறுவனங்களில் லீடர்போர்டில் உள்ள அலுவலர்களும் இதே மனநிலையில்தான் என்னிடம் நடந்துகொள்கிறார்கள்.

Office (Representational Image)
Office (Representational Image)
Pixabay

ஓர் ஆண் பாஸ் வேலை தொடர்பாக கேள்விகள் கேட்டால், அதை அலுவல் சம்பந்தப்பட்டதாகவே எடுத்துக்கொள்கிறார்கள் ஊழியர்கள். அதுவே ஒரு பெண் பாஸ் வேலை தொடர்பாக கேள்விகள் கேட்டால், `இவ வயசுக்கு நாம இவளுக்குக் கீழ வேலை பார்க்கணுமா?', `சென்னை ஆபீஸ்ல கேட்டாதான் தெரியும் இவ எப்படி மேனேஜர் ஆனான்னு...', `சீட்டுல உக்காந்து வேலைபார்க்கிற பொம்பளைக்கு ஃபீல்டுல என் அனுபவம் என்னனு தெரியுமா', `இவளுக்கு ஏன் நாம வேலைபார்த்துக் கொடுக்கணும்?', `ஆம்பளைங்கள எதிர்த்துக்கிட்டா என்ன ஆகும்னு இவளுக்குப் புரிய வைக்கணும்' என இப்படி அதை அவர்கள் ஆண்மைக்கான இழுக்காகவே எடுத்துக்கொள்கிறார்கள். என்னை இழிவுபடுத்த நினைக்கிறார்கள்.

இந்த ஆணாதிக்க அலுவல் சூழலை எப்படிக் கையாள்வது நான்?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.