Published:Updated:

வேலைக்குப் போகும் நான்; மாமியாரின் ஈகோ தரும் மன அழுத்தம்; எப்படித்தான் சமாளிப்பது?! #PennDiary - 28

#PennDiary
News
#PennDiary

நான் வேலைக்குச் செல்வதாலேயே எங்கே என் கை ஓங்கிவிடுமோ என்று தவறாக நினைத்துக்கொண்டு, அதற்கு இடமளிக்காமல் என்னை அவர் அதிகாரத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று மனதில் வைத்துக்கொண்டு, என்னை வதைக்கிறார்.

Published:Updated:

வேலைக்குப் போகும் நான்; மாமியாரின் ஈகோ தரும் மன அழுத்தம்; எப்படித்தான் சமாளிப்பது?! #PennDiary - 28

நான் வேலைக்குச் செல்வதாலேயே எங்கே என் கை ஓங்கிவிடுமோ என்று தவறாக நினைத்துக்கொண்டு, அதற்கு இடமளிக்காமல் என்னை அவர் அதிகாரத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று மனதில் வைத்துக்கொண்டு, என்னை வதைக்கிறார்.

#PennDiary
News
#PennDiary

மிடில் க்ளாஸ் குடும்பம் எங்களுடையது. நான், கணவர் இருவருமே வேலைக்குச் செல்கிறோம். ஒரே மகள் மூன்றாவது படிக்கிறாள். மாமியார் எங்களுடன் வசிக்கிறார். நான் வேலைக்குச் செல்வதால், மாமியார் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார். ஆனால், அந்தப் பொறுப்பையே ஓர் ஆயுதமாக்கி என்னை வதைத்துக்கொண்டிருக்கிறார்.

காலையில் எழுந்து பிரேக்ஃபாஸ்ட், லன்ச் இரண்டும் நான் செய்துவிடுவேன். நான், கணவர், குழந்தை மூவரும் லன்ச் எடுத்துக்கொண்டு, அலுவலகம், பள்ளி எனக் கிளம்பிவிடுவோம். வீடு கூட்டுவது, வாரம் ஒரு நாள் துடைப்பதை மாமியார் செய்வார். மாலை 5 மணிக்கு மகள் பள்ளியிருந்து வீடு திரும்பிய பின்னர், மாமியார் அவளை கவனித்துக்கொள்வார். அலுவலகத்தில் இருந்து நான் சீக்கிரம் வீடு திரும்பிவிட்டால், இரவு உணவை சமைத்துவிடுவேன். தாமதமாகும் நேரங்களில் மாமியார் செய்வார். தினமும் இரவு பாத்திரங்களை கழுவிப்போட்டுவிட்டு நான் உறங்கச் செல்வேன்.

Depression (Representational Image)
Depression (Representational Image)

இப்படி காலையில் 6 மணியில் இருந்து 10 மணி வேலை வீடு, அலுவலகம் என்று உழைக்கிறேன் நான். இன்னொரு பக்கம், வீட்டில் மாமியார் இருப்பதால் ஒரு கை உதவியாக இருக்கிறது என்பதையும் உணர்ந்து, அதற்குண்டான நன்றியுடனும், மரியாதையுடனுமே அவரிடம் நடந்துகொள்கிறேன். ஆனால் அவரோ, `அவளும் பாவம்தானே...' என்று அனுசரணையாக என்னிடம் நடந்துகொள்வதே இல்லை. மாறாக, எப்போதும் ஈகோவுடன் எதிரி போலவே இருக்கிறார்.

சில சம்பவங்களைக் கூறினால் புரியும். `அத்தை...' என்று அழைத்து என்னதான் நான் பேசினாலும், முகம்கூட கொடுக்காமல் ஓர் அதிகார தோரணையிலேயேதான் பதில் சொல்வார். ஆம், பதில்தான் சொல்வார். ஓர் உரையாடலாக என்னுடன் பேசமாட்டார். மருந்து முதல் புடவை வரை அவருக்கு உண்டான எதையுமே நான் வாங்கி வந்தாலும், அதை என் கணவர்தான் அவர் கைகளில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், `என்ன, சம்பாதிக்கிற திமிரா அவளுக்கு? அவ யாரு எனக்குக் கொடுக்க? எதுவானாலும் நீ கொடுக்குறதா இருந்தா கொடு, அவ கையால நான் எதையும் வாங்க மாட்டேன்...' என்பார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by Jeyaratnam Caniceus from Pixabay

ஒருவேளை, அலுவலகத்தில் முக்கியமான வேலை காரணமாக நான் காலையில் சீக்கிரம் கிளம்பிப் போகும் தினங்களில், தாமதமாக வீடு திரும்பும் தினங்களில் எல்லாம் அவர் மிகுந்த கோபத்துக்கு உள்ளாகிவிடுவார். இவ்வளவுக்கும், அதனால் அவருக்கு அதிக வேலை ஏற்படாத வகையில் நான் முடிந்தளவு வீட்டு வேலைகளை முடித்துவிடுவேன். அல்லது, இரவு உணவை ஹோட்டலில் வாங்கிக் கொடுப்பது என்று என் கணவர் சமாளித்துக்கொள்வார்.

ஆனாலும், என்னிடம் அவர் மிகக் கடுமையாக நடந்துகொள்வார். `நீ வேலைக்குப் போறேன்னு நான் வீட்டுல வேலைக்காரியா கிடக்க முடியாது...' என்று சண்டை போடுவார். வீட்டு வேலைகளுக்கு ஓர் ஆள் வைத்தால், ஏதாவது காரணம் சொல்லி அவரை நிறுத்துவிடுகிறார். அவருக்கு, `நான் வீட்டை, குழந்தையைப் பார்த்துக்கிறதாலதான் உன்னால வேலைக்குப் போக முடியுது...' என்று என்னை மிரட்ட கடிவாளம் தேவைப்படுகிறது. அது உண்மைதான் என்றாலும், அதற்காக அவரது கடுமைத்தனத்தை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பொறுத்துக்கொள்வது?

பொறுக்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் நானும் பதிலுக்கு இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டால், அவ்வளவுதான். கிராமத்தில் இருக்கும் எங்கள் பூர்விக வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். என் கணவர் ஒரே மகன் என்பதால், அவர் அந்த கிராமத்து வீட்டில் வசிப்பதற்கான செலவுகளையும் நாங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இங்கு குழந்தைக்கும், அவள் பள்ளி விட்டு வந்ததும் கேர் சென்டரில் விடுவதற்கான செலவுகளைச் சமாளிக்க வேண்டும். இப்போது பள்ளி வேறு லாக்டௌன் விடுமுறையில் இருப்பதால், நாள் முழுக்க டே கேரில்தான் விட வேண்டும். நானும் கணவரும் வாங்கும் சொற்ப சம்பளத்தில், அதற்கெல்லாம் சாத்தியமில்லை. எனவே, மாமியாரின் ஈகோபிடித்த செயல்களுக்கு எல்லாம் என் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்து நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

Stress
Stress
pixabay.com

நான் வேலைக்குப் போவதுதான் என் மாமியாருக்குப் பிரச்னையாக இருக்கிறது. நான் யாருக்காக வேலைக்குப் போகிறேன்? குடும்பத்துக்காகத்தானே? அவர் மகனின் பொருளாதாரப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளத்தானே? அது என் மாமியாருக்குப் புரியாமல் இல்லை. நான் கொண்டு வரும் என் சம்பளம், இந்த குடும்பத்துக்கு எத்துணை அவசியம் என்பதை அவர் நன்கறிவார். ஆனாலும், நான் வேலைக்குச் செல்வதாலேயே எங்கே என் கை ஓங்கிவிடுமோ என்று தவறாக நினைத்துக்கொண்டு, அதற்கு இடமளிக்காமல் என்னை அவர் அதிகாரத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று மனதில் வைத்துக்கொண்டு, என்னை வதைக்கிறார். நானும் இந்த உறவுச் சிக்கலை சரிசெய்ய எவ்வளவோ முயன்றுவிட்டேன். எனக்கும், இணக்கமான, சிநேகமான மாமியார் - மருமகள் உறவை எங்கள் இருவருக்கு இடையிலும் வளர்த்து, இருவருமாக இந்தக் குடும்பத்தை முன்னகர்த்தவே விருப்பமாக இருக்கிறது.

ஆனால், எப்போதும் என்னுடன் முறுக்கியபடியே இருக்கும் என் மாமியாரையும், அவர் ஈகோவையும் நான் எப்படிச் சமாளிப்பது?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.