Published:Updated:

பாசத்தவிப்பில் அப்பா, பகைமையுடன் பார்க்கும் அப்பாவின் மனைவி; செல்வதா விலகுவதா நான்? #PennDiary-70

Penn Diary
News
Penn Diary

என் அப்பாவின் சொத்தை எதிர்பார்த்து நான் இல்லை என்றும், என் அம்மா என்னை சுயசம்பாத்தியமும் சுயமரியாதையும் உள்ள பெண்ணாக வளர்த்தெடுத்திருப்பதையும், அப்பாவுக்குத் தேவைப்படும் பிள்ளை அன்பையும் ஆறுதலையும் மட்டுமே இப்போது நான் கொடுத்துக்கொண்டிருப்பதையும் கூறினேன்.

Published:Updated:

பாசத்தவிப்பில் அப்பா, பகைமையுடன் பார்க்கும் அப்பாவின் மனைவி; செல்வதா விலகுவதா நான்? #PennDiary-70

என் அப்பாவின் சொத்தை எதிர்பார்த்து நான் இல்லை என்றும், என் அம்மா என்னை சுயசம்பாத்தியமும் சுயமரியாதையும் உள்ள பெண்ணாக வளர்த்தெடுத்திருப்பதையும், அப்பாவுக்குத் தேவைப்படும் பிள்ளை அன்பையும் ஆறுதலையும் மட்டுமே இப்போது நான் கொடுத்துக்கொண்டிருப்பதையும் கூறினேன்.

Penn Diary
News
Penn Diary

எனக்கு 25 வயதாகிறது. பொறியியல் பட்டதாரி. கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். என் அம்மா ஒரு சிங்கிள் பேரன்ட். எனக்கு 10 வயதானபோது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மணவாழ்க்கை ஒத்துப் போகாததால் விவாகரத்து செய்துகொண்டார்கள். விவாகரத்து முடிந்த கையோடு அப்பாவுக்கு மறுமண வேலைகளை அவர் வீட்டில் தொடங்கியதால், அவர் என்னை தன்னுடன் வைத்துக்கொள்ளவோ, வளர்க்கவோ நினைக்கவில்லை. அம்மா கேட்டபடியே முழுவதும் அம்மாவின் பொறுப்பில் என்னை விட்டுவிட்டார். கைகழுவிவிட்டார் என்றும் சொல்லலாம்.

Mom and Daughter
Mom and Daughter

அம்மா மறுமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்காக வாழ ஆரம்பித்தார். அக்கம் பக்க வீடுகளுக்கு இட்லி மாவு அரைத்துக் கொடுத்து என்னை வளர்த்தார், படிக்கவைத்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இப்போது ஒரு மளிகைக் கடை வைத்திருக்கிறார். என்னை பொறியியல் வரை படிக்கவைத்தது அவரது அயராத உழைப்பில்தான். இப்போது நான் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலும், அம்மா ஓய்வெடுக்கத் தயாராக இல்லை. பரபர என்று இருந்தே பழகிவிட்டதால் இப்போதும் கடையில் சுழன்றுகொண்டிருக்கிறார்.

இதற்கிடையில், என் அப்பாவுக்கு மறுமணம் முடிந்திருந்தது. இரண்டாவது திருமணத்தில் அவருக்குக் குழந்தையில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து அவர் என்னை முதன்முறையாகத் தேடி வந்தார். தன் தவறுகளுக்காக மிகவும் வருந்தினார். என்னை இத்தனை வருடங்கள் தேடாமல் இருந்ததற்காக வருந்தினார், அழுதார். இந்த உலகில் அவருக்கு இருக்கும் ஒரே சந்தோஷம், நிம்மதி இப்போது நான்தான் என்றார். அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என்ன இருந்தாலும் அவர் என் அப்பா என்று என் மனமும் அன்பில் பொங்கியது.

Father - Daughter (Representational Image)
Father - Daughter (Representational Image)
Pexels

என் அம்மா, ‘உன்னை அவர் இப்போது தேடி வந்திருக்கிறார், நீயும் அவர் மேல் பாசமாக இருக்கிறாய் என்பதை எல்லாம் என்னால் அனுமதிக்க முடியுமே தவிர, என்னால் அவரை மன்னிக்க முடியாது. என்னால் அவருடன் பேச முடியாது. என் உள்ளத்தில் அந்தளவுக்குக் காயங்கள் உள்ளன. ஆனால், இந்த 55 வயதில், மகளின் அன்பு அவருக்குத் தேவையாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’ என்று கூறி, தான் விலகி நின்றுகொண்டார். தென் மாவட்டத்தை சேர்ந்த என் அப்பா, அவ்வப்போது என்னை வந்து பார்த்துச் செல்வார். கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுச் செல்வார். உண்மையில், நானே நல்ல வேலையில் இருப்பதால் அந்தப் பணம் எனக்குத் தேவையில்லை என்றாலும், அவர் மன திருப்திக்காக அதை நான் வாங்கிக்கொள்வேன்.

இந்த ஐந்து வருடங்களாக இப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் என் அப்பாவின் இரண்டாவது மனைவி எனக்கு போன் செய்தார். என் அப்பா என்னை வந்து பார்த்துச் செல்வது தனக்குப் பிடிக்கவில்லை என்றும், இதனால் கடந்த சில வருடங்களாகவே அப்பாவுக்கும் அவருக்கும் அதிகம் சண்டை வருவதாகவும், இது இப்படியே தொடர்ந்தால் என் அப்பா தன் சொத்தை எனக்குக் கொடுத்துவிடுவார் என்றும், இதுவரை என் அப்பாவுக்காகவே வாழ்ந்த அவர் வாழ்க்கை, இப்போது என்னால் அர்த்தம் இழந்துகொண்டிருப்பதாகவும், இன்னும் வெறுப்புடன் நிறைய பேசினார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Nandhu Kumar from Pexels

என் அப்பாவின் சொத்தை எதிர்பார்த்து நான் இல்லை என்றும், என் அம்மா என்னை சுயசம்பாத்தியமும் சுயமரியாதையும் உள்ள பெண்ணாக வளர்த்தெடுத்திருப்பதையும், அப்பாவுக்குத் தேவைப்படும் பிள்ளை அன்பையும் ஆறுதலையும் மட்டுமே இப்போது நான் கொடுத்துக்கொண்டிருப்பதையும் கூறினேன். என்றாலும், அவர் எதையுமே காதுகொடுத்து வாங்கவில்லை. புரிந்துகொள்ளும் பக்குவத்திலும் இல்லை. நான் என் அப்பாவுடன் பேசக் கூடாது, என் அப்பா என்னைப் பார்க்க வரக் கூடாது... இதுதான் அவர் எதிர்பார்ப்பது, கட்டாயப்படுத்துவது.

என் அம்மா இதுபற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. என் அப்பாவுக்காக வருந்தவும் இல்லை. ‘உன்னால் இந்த சூழலை சமாளிக்க முடிந்தால் அவருடன் பேசு. அவருக்கு மன நிம்மதி கொடுக்க நினைத்து உன் மன நிம்மதியை இது கெடுக்கிறது என்றால், இதை நிறுத்திவிடு’ என்கிறார்.

Old Man(Representational image)
Old Man(Representational image)
Pixabay

’இன்னும் எத்தனை வருடங்கள் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. அவள் (இரண்டாவது மனைவி) அப்படித்தான் பேசுவாள். அதை பொருட்படுத்தி அப்பாவை விட்டுவிடாதே’ என்கிறார் அப்பா. ஒவ்வொரு முறையும் என் அப்பாவின் இரண்டாவது மனைவி எனக்கு போன் செய்து பேசிய பின்னர், அந்த அமில வார்த்தைகள் அடுத்து வரும் என் நாள்களை, நிம்மதியை பொசுக்கிக்கொண்டிருக்கின்றன.

என்ன செய்யட்டும் நான்?