Published:Updated:

அம்மா, அப்பா இல்லை, திருமணத்தில் விருப்பம் இல்லை; என் பாதை என்ன? #PennDiary-73

Penn Diary
News
Penn Diary

எனக்கு அப்பா, அம்மா இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை, நாளை திருமணத்துக்குப் பின்னர், எந்த நாதியும் இல்லாதவள்தானே நீ என்றுதான் என்னை கணவர், அவர் வீட்டினர் நடத்துவார்கள் என்று எண்ண வைக்கிறது. ஏற்கெனவே மனமெல்லாம் காயங்களுடன் இருக்கும் என்னால், அதையும் சேர்த்து தாங்கவே முடியாது.

Published:Updated:

அம்மா, அப்பா இல்லை, திருமணத்தில் விருப்பம் இல்லை; என் பாதை என்ன? #PennDiary-73

எனக்கு அப்பா, அம்மா இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை, நாளை திருமணத்துக்குப் பின்னர், எந்த நாதியும் இல்லாதவள்தானே நீ என்றுதான் என்னை கணவர், அவர் வீட்டினர் நடத்துவார்கள் என்று எண்ண வைக்கிறது. ஏற்கெனவே மனமெல்லாம் காயங்களுடன் இருக்கும் என்னால், அதையும் சேர்த்து தாங்கவே முடியாது.

Penn Diary
News
Penn Diary

எனக்கு வயது 24. எனக்கு அம்மா, அப்பா இல்லை. அம்மா, நான் இரண்டு வயதாக இருந்தபோதே தவறிவிட்டார். அப்பா வேறு திருமணம் செய்துகொண்டார். சரியான குடிகாரர். வருடத்துக்கு ஒருமுறை, தீபாவளிக்கு எனக்கு டிரெஸ் எடுத்துவந்து கொடுக்கும்போது மட்டுமே என்னைப் பார்ப்பார். அவ்வப்போது போனில் பேசினாலும், நான் குறித்த எந்தப் பொறுப்பும் அவருக்கு இல்லை.

Lonely child (Representational Image)
Lonely child (Representational Image)

என் அம்மா தவறியதற்குப் பின்னர் என்னை வளர்த்தது, என் சித்தி. என்னை வளர்ப்பதற்காகவே திருமணம் செய்துகொள்ளவில்லை அவர். காட்டு வேலை, சித்தாள் வேலை எனக் கிடைக்கும் வேலைகளுக்கு எல்லாம் செல்வார். எங்கள் வறுமைக்கு இடையிலும், என்னை எம்.ஏ வரை படிக்கவைத்தார். இப்போது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 8,000 ரூபாய் சம்பளத்தில் இருக்கிறேன். எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் சித்தி. ஆனால், எனக்குத் திருமணத்தில் விருப்பமே இல்லை.

வாழ்க்கையில் வறுமை, உறவின்மை, தனிமை என்று மட்டுமே பார்த்து வளர்ந்தவள் நான். நண்பர்கள், தோழிகள், அக்கம், பக்கம் வீடு என்று யாருடனும், எதுவும் பேசமாட்டேன், பழகமாட்டேன். உரையாடல் ஆரம்பித்ததுமே, ‘அய்யோ பாவம்... அம்மா, அப்பா ரெண்டு பேருமே இல்லையா...’ என்று அவர்கள் எல்லாம் என்னை பரிதாபத்துடன் பார்ப்பது, பேசுவது எனக்குப் பிடிப்பதில்லை. அதனாலேயே, தனிமையை தேர்ந்தெடுத்தேன்.

Lonely Woman (Representational Image)
Lonely Woman (Representational Image)
Photo by Nandhu Kumar from Pexels

இப்போது எனக்கென்று இந்த உலகில் இருக்கும் ஒரே ஜீவன், என் சித்திதான். ஆனால், அவருக்கு உடல்நிலை சரியில்லை. நாள் ஆக ஆக மிகவும் மோசமாகிக்கொண்டே செல்கிறது. எனவே, என்னை தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார். எனக்கு திருமணத்தில், உறவுகளில் எல்லாம் ஆர்வமே இல்லை. எனக்கு அப்பா, அம்மா இல்லை என்ற தாழ்வுமனப்பான்மை, நாளை திருமணத்துக்குப் பின்னர், எந்த நாதியும் இல்லாதவள்தானே நீ என்றுதான் என்னை கணவர், அவர் வீட்டினர் நடத்துவார்கள் என்று எண்ண வைக்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால், ஏற்கெனவே மனமெல்லாம் காயங்களுடன் இருக்கும் என்னால், மேற்கொண்டு அந்தக் காயங்களையும் சேர்த்து தாங்கவே முடியாது. இதையெல்லாம் யோசித்துதான் நான் திருமணம் வேண்டாம் என்கிறேன்.

இன்னொரு பக்கம், என் சித்தியின் உடல்நிலை. இதுவரை எனக்கு எல்லாமுமாக இருந்தவர் அவர். ஒருவேளை திருமணத்துக்குப் பின்னர், அவரை என்னால் கவனிக்க முடியாத சூழல் புகுந்த வீட்டில் ஏற்பட்டால், ஒரு நன்றியில்லாத வாழ்வை நான் வாழ வேண்டியிருக்கும். அதை சித்தியிடம் சொன்னால், என்னைப் பற்றி கவலைப்படாதே என்று தியாக வசனம் பேசுவார். மேலும், ’என் சம்பாத்தியத்தில், என் சித்தியை இறுதிவரை நான்தான் பார்த்துக்கொள்வேன் என்பதற்கு சம்மதம் சொல்கிற மாப்பிள்ளை வந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றால், ‘நான் ஒரு முதியோர் இல்லத்துல கூட இருந்துக்குவேன், கஷ்டத்தை மட்டுமே பார்த்த நீ இனி நல்லாயிருக்கணும். அதனால இப்படியெல்லாம் பேசாத’ என்கிறார் சித்தி.

Wedding (Representational Image)
Wedding (Representational Image)
Pexels

ஒன்று, எனக்குத் திருமணத்தில் உண்மையிலேயே விருப்பம், ஆர்வம் இல்லை. இரண்டு, ஒருவேளை திருமணத்துக்குப் பின்னர் நான் அப்பா, அம்மா இல்லாதவள்தானே என்று நடத்தப்பட்டால் அதை என்னால் தாங்க முடியாது. மூன்று, என் சித்தியை நிர்கதியாக என்னால் விட்டுச் செல்ல முடியாது. நான்கு, சுயமாக சம்பாதிக்கிறேன், இறுதிவரை என்னை நானே பார்த்துக்கொள்ள முடியும், திருமணம் செய்தால்தான் வாழ்வு முழுமையடையுமா என்ன?

சொல்லுங்கள்.