சென்னையில் ஷேர் மார்க்கெட் சார்ந்து இயங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் நான். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. வேலை சுமுகமாகச் செல்கிறது. ஆனால், பணியிடம்தான் கொல்கிறது.

நான் இயல்பிலேயே தைரியமான பெண். இருபாலர் பள்ளி, கல்லூரியில் படித்ததால் ஆண், பெண் பேதமில்லாமல் பழகுபவள். எனவே, அலுவலகத்தில் எனக்கு நிறைய நண்பர்கள், தோழிகள். என் அலுவலக பாஸிடமும் அப்படித்தான் பழகினேன். ஆனால், வேலைக்குச் சேர்ந்த ஒரு வருடத்துக்குப் பின் அவர் என்னிடம் நடந்துகொண்ட முறையில் மாற்றங்களை உணர்ந்தேன்.
`யூ லுக் பியூட்டிஃபுல் இன் திஸ் டிரெஸ்' என்று பாஸ் என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார். நானும் அதை ஒரு காம்ப்ளிமென்ட் என்ற அளவிலேயே இயல்பாக எடுத்துக்கொள்வேன். ஆனால், இந்த வருடம் அலுவலகத்தின் நியூ இயர் கொண்டாட்டத்தின்போது `யூ லுக் செக்ஸி' என்றார். நான் அதிர்ச்சியடைந்தாலும், மௌனமாகக் கடந்துவிட்டேன்.

தொடர்ந்து, அடிக்கடி போன் செய்து, `உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்...' என்று வரம்பு மீறி பேச ஆரம்பித்தார் பாஸ். பின் இரவில் பெர்சனல் மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பித்தார். `என் மனைவியுடன் பிரச்னை, நீ எனக்கு ஆறுதலாக இருப்பாயா?' என்ற ரீதியிலான மெசேஜ்கள் அவை. இனியும் நான் மௌனமாக இருந்தால் அவர் மேலும் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்வார் என்பதால், அவரை எச்சரித்து ரிப்ளை அனுப்பினேன். அதிலிருந்து அவர் மெசேஜ் அனுப்பவில்லை. திருந்திவிட்டார் என்று நம்பவில்லை என்றாலும், `அந்த பயம் இருக்கட்டும், விட்டது தொல்லை' என நினைத்தேன். ஆனால், மெசேஜ் அனுப்பினால் ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிடுவேன் என்று அவர் உஷாராகியிருக்கிறார் என்பதை பின்னர்தான் புரிந்துகொண்டேன். ஏனெனில், நேரில் அவர் தரும் தொல்லை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.
`வேலை இருக்கு, முடிக்கணும்' என்று சொல்லி ஞாயிற்றுக்கிழமைகளில் என்னையும், இன்னும் சில ஊழியர்களையும் அலுவலகம் வர வைத்தார். ஆனால், `உன்னை பார்க்கணும்னுதான் இன்னைக்கு வேலை இருக்குனு சொல்லி எல்லாரையும் வரவெச்சேன்' என்றார். மேலும், அலுவல் வேலையாக அவர் இருக்கைக்கு நான் செல்லும்போதெல்லாம் பாலியல் தொந்தரவு தரும் விதமாகப் பேச ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவரது தொல்லைகள் இப்படித் தொடர்ந்துகொண்டிருக்க, இனியும் தாமதிக்கக் கூடாது என்று நான், பணியிட பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் எங்கள் அலுவலக இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டியில் புகார் அளித்தேன். எனக்கு ஆரம்பத்தில் அவர் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட்கள், பேசிய கால் ரெக்கார்டுகளை எல்லாம் ஆதாரமாகக் கொடுத்தேன். மேலும், ஒரு கட்டத்தில் நான் எதிர்வினையாற்றவும் அவர் உஷாராகி அலைபேசியில் தொந்தரவு கொடுத்ததை நிறுத்தியதையும், நேரில் மட்டுமே அதைத் தொடர்ந்ததையும் சேர்த்தே குறிப்பிட்டேன்.
விசாரணை ஆரம்பமானது. உண்மையில் அலுவல்ரீதியாக அவர் அலுவலகத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு தலைமையாக இருந்தார். ஆனால், என்னைப் போலவே டீமில் வேறு பெண்கள் யாருக்காவது அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தாரா என்பதை, அங்கு பணிபுரிந்த பெண்களின் கனத்த மௌனத்தைக் கிழித்து என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.

விசாரணையை மேற்கொண்ட இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டியிடம், தன் மீதான குற்றச்சாட்டுகளை என் உயரதிகாரி மறுத்தார். என் பணியில் அவர் திருத்தங்கள் சொன்னதாலும், பணியில் செய்த தவறுகளுக்காக என்னை கண்டித்ததாலும் அவரை பழிவாங்கும் நோக்கத்துடன் நான் அவர் மீது புகார் கொடுத்திருப்பதாக வாதிட்டார். மேலும், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இரண்டே வாரங்களில் அவர் தன் பணியை ராஜினாமா செய்தார். இந்த ஸ்டன்ட்டால், ஏதோ அவர் வஞ்சிக்கப்பட்ட ஹீரோ போலவும், நான் வில்லி போலவும் பணிச்சூழலில் காட்சிகள் மாறின.
சம்பவம் நடந்ததற்குப் பின்னான இந்த ஒன்றரை மாதங்களில், என் அலுவலகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் என்னிடம் பேசுவதையே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர். அலுவல்ரீதியான சம்பிரதாய பேச்சு மட்டுமே தொடர்கிறது. இவர்களின் இந்தச் செயல்பாடுகள் எல்லாம், ஏதோ நான் சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தி புகார் அளவுக்குச் சென்றதுபோல நடந்த சம்பவத்தைக் கட்டமைக்கின்றன. பாலியல் தொல்லை கொடுத்த ஆண் இங்கு விக்டிம் ஆக்கப்பட்டு, அதைப் புகார் அளித்த பெண்ணை குற்றம் சொல்கிறார்கள்.

ஆண்கள் இப்படி என்றால், உடன் பணிபுரியும் பெண்களும் என் நிலையை புரிந்துகொள்ளாமல் என்னிடமிருந்து விலகுவது எனக்கு இன்னும் அதிர்ச்சி. பலர் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. பேசும் சில தோழிகளும்,` நம்ம வீடு மாதிரியே ஆபீஸும் இருக்கும்னு எதிர்பார்க்கக் கூடாது. எல்லா இடத்திலும் சர்வைவ் பண்ண கத்துக்கணும்', 'வேலைபார்க்கிற இடத்துல பிரச்னைகளை வளர்த்துக்கக் கூடாது', `அவர்கிட்ட பேசி சரி பண்ண முயன்றிருக்கலாம்... ஒருத்தரோட வேலை பறிபோக காரணமாகியிருக்க வேண்டாம்' என்ற ரீதியிலான அட்வைஸ்களாகவே சொல்கிறார்கள்.
உண்மையில், நான் கொடுத்த புகார் என்பது எனக்காக மட்டுமல்ல. சம்பந்தப்பட்ட நபரால் எனக்கு நேர்ந்த தொல்லை இனி இன்னொரு பெண்ணுக்கும் நேர்ந்துவிடக் கூடாது, அவருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற அக்கறையிலும்தான். ஆனால், அந்தப் பெண்களே இதைப் புரிந்துகொள்ளாமல், `நீ பொறுமையா இருந்திருக்கணும்' என்பதுபோல பேசும்போது என் கோபமும் ஆற்றாமையும் அதிகரிக்கிறது.

ஒன்று புரியவில்லை எனக்கு. இன்றைய காலகட்டத்திலும் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் கொடுக்கும் பாலியல் தொல்லையை, `கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம்' என்பதாக சுருக்கி எவ்வாறு இவர்களால் பார்க்க முடிகிறது? எதற்காக பொறுக்க வேண்டும்? தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கட்டும் என்று நினைக்காமல், `அப்படி என்ன தப்பு பண்ணிட்டார்...' என்ற இந்த மனநிலையில் என்ன நியாயம் இருக்கிறது?
ஒருவேளை, என் பாஸ் `அப்படி ஒண்ணும் பெரிய தப்பு பண்ணிடலை' என்று நான் நினைத்து `கொஞ்சம் பொறுத்துப் போயிருந்தால்' அடுத்து என்ன நடந்திருக்கும்? அவர் தந்த பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கும்; நான் மன அழுத்தத்தில் தள்ளப்பட்டிருப்பேன். அவருக்கு சாதகமாக அமைந்த ஒரு தனிமை சந்தர்ப்பத்தில் எனக்கு அடுத்தகட்ட விபரீதங்கள் நிகழ்ந்திருக்கலாம். இப்போது என்னிடம் விலகிச் செல்லும் இதே அலுவலக நண்பர்கள் அப்போது என்னிடம் வந்து, `முன்னரே சொல்லியிருக்கலாம்ல...' என்று அறிவுரை வழங்க வருவார்கள்.

இப்படி என் பக்க நியாயங்களை எல்லாம் நான் சொன்னபோது, `அவ ரொம்ப ஓவரா பேசுறா...' என்று இன்னும் அதிகமாக என்னிடமிருந்து விலகிவிட்டார்கள் அலுவலகத் தோழமைகள். பணியிடத்தில் நான் தனித்துவிடப்பட்டதுபோல உணர்கிறேன். வேலையை ரிசைன் செய்துவிட்டு வேறு வேலை பார்த்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன்தான். ஆனால், யாரோ செய்த தவறுக்கு நான் ஏன் வேலையை விட வேண்டும்? பின்னர், `இப்டித்தான் அவ கம்ப்ளெயின்ட் கொடுத்தா, கடைசியில அவளே வேலையைவிட்டுப் போகும்படி ஆகிடுச்சு' என்று மற்றவர்கள் பேசும் வகையில் நான் பிற பெண்களுக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிவிட மாட்டேனா?
பாலியல் தொல்லையை தைரியமாகப் புகார் அளித்தது குற்றமா என்ன? இந்தச் சூழலை எப்படி கையாள்வது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.