தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் சொந்த ஊர். வீட்டில் அக்கா, நான், தம்பி என மூன்று பிள்ளைகள். விவசாயக் கூலி வேலை பார்த்து வந்த எங்கள் பெற்றோருக்கு, எங்களை வளர்ப்பதே பெரும்பாடு என்பதுதான் குடும்ப சூழ்நிலை.
அப்போது, எங்கள் ஊர் பெண்கள் பள்ளியில் நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் ஊர் ஆண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த ஒருவன் என்னை காதலிப்பதாக என் பின்னால் சுற்றினான். நாளடைவில், நானும் அவனைக் காதலிக்க ஆரம்பித்தேன். `நீ பார்க்க எவ்ளோ அழகா இருக்க, அவன் உனக்கு மேட்ச்சே இல்ல' என்றெல்லாம் என் தோழிகள் கூறினார்கள். அன்புக்கு எதற்கு அழகு என்று நான் அந்தப் பேச்சுகளை எல்லாம் புறம்தள்ளினேன்.

இதற்கிடையில், நான் பதினொன்றாம் வகுப்பு படித்தபோது எங்கள் காதல் விஷயம் பற்றி என் வீட்டுக்குத் தெரிய வர, எனக்கு வீட்டில் இறுக்கம் அதிகமானது. அப்பா, அம்மா, அக்கா, தம்பி என வீட்டில் அனைவரின் வெறுப்புக்கும் ஆளானேன். அவ்வப்போது அடி வாங்கினேன். இன்னொரு பக்கம், அவன் அன்பு மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. இதற்கிடையில் அவன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், பெயின்டிங் வேலை, கார்ப்பென்டர் வேலை, டிரைவர் வேலை என சின்னச் சின்ன வேலைகளுக்குச் சென்றுகொண்டிருந்தான்.
நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, `நாம் திருமணம் செய்துகொள்ளலாம்...' என்றான் அவன். ஏன் இந்த அவசரம் என்று கேட்டபோது, `நம் காதல் விவகாரத்தால் ப்ளஸ் டூவுக்குப் பிறகு எப்படியும் உன்னை உன் வீட்டில் கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். பிறகு நாம் பார்ப்பதற்கு சந்தர்ப்பமே இருக்காது, நாம் பிரிந்துவிடுவோம்...' என்றான். வயது என்பதா, வேகம் என்பதா, விதி என்பதா தெரியவில்லை... நானும் அவன் சொன்னதைக் கேட்டு, ப்ளஸ் டூ கடைசி பரீட்சை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து நேராக அவனுடன் சென்றுவிட்டேன். காதல் திருமணம் செய்துகொண்டோம்.
எங்கள் வீட்டில் திருமண வயதில் அக்கா இருக்கும்போது நான் காதல் திருமணம் செய்துகொண்டதால் வீட்டில் அனைவரும், நான் செத்தாலும் சரி என்று தலைமுழுகினார்கள். அவன் வீட்டில் அண்ணன், இவன் என இரண்டு பிள்ளைகள். படிப்பில் ஃபெயிலாகி, கூலி வேலைகளுக்குச் சென்றுகொண்டு என இருந்த இவனை அவன் வீட்டில் `எப்படியோ போ' என்று விட்டிருந்தார்கள். எங்கள் திருமணத்துக்குப் பிறகு, முற்றிலும் இவனை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்.
இரண்டு வீடுகளிலும் எதிர்ப்பு வரும் என்று தெரிந்துதான் திருமணம் செய்துகொண்டோம் என்பதால், உனக்கு நான், எனக்கு நீ என்று வாழ்க்கையைத் தொடங்கினோம். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, நான் எடுத்திருப்பது என் வாழ்க்கையை மூழ்கடிக்கும் ஒரு முடிவு என்பது எனக்குப் புரிய ஆரம்பித்தது. அவன் செல்லும் சின்னச் சின்ன வேலைகளில் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில், பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் வாழ்க்கையை ஆரம்பித்தேன். ஆனால், திருமணமான ஒரு வருடத்தில் குடிப்பழக்கத்தை அவன் ஆரம்பித்தான். கொண்டு வரும் கொஞ்சம் பணமும் சாராயத்துக்குச் சென்றது. அதனால் எனக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்டைகள் வர ஆரம்பித்தன.

அதன் அடுத்தகட்டமாக, என்னை சந்தேகப்பட ஆரம்பித்தான். `நீ ரொம்ப அழகா இருக்கே இல்ல, ஆனா நான் உனக்குப் பொருத்தம் இல்லைனுதான் ஊரே சொல்லுதே...' என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அவனுக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, கால ஓட்டத்தில் வன்முறையாக வெளிப்பட ஆரம்பித்தது. என்னை கடை, கோயில் என்று எங்கேயும் வெளியே செல்ல அனுமதிக்காதது, அக்கம், பக்கம் வீடுகளில் உள்ள பெண்களிடம் பேசினால்கூட, அவர்கள் வீட்டில் உள்ள ஆண்களுடன் என்னை சேர்த்து வைத்து ஆபாசமாகப் பேசுவது என்று துன்புறுத்தல்கள் அதிகமாயின.
ஒரு கட்டத்தில், அவன் வேலைக்குச் செல்லும்போது என்னை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் செல்ல ஆரம்பித்தான். `போலீஸ்ல உன்னை புகார் செஞ்சிடுவேன்...' என்று நான் மிரட்ட, அந்தப் பழக்கத்தை கைவிட்டான். ஆனாலும், அவ்வப்போது சந்தேக வார்த்தைகளை அமிலமாகக் கொட்டிக்கொண்டேதான் இருக்கிறான்.
இதற்கிடையில் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க, அப்போது கூட எங்கள் இருவீட்டாரும் குழந்தையைப் பார்க்கக் கூட வரவில்லை. இன்னொரு பக்கம், வீட்டுப் பெரியவர்களின் ஆதரவோ, இவனை யாரும் கண்டிக்கும் கடிவாளமோ இல்லாமல் என் வாழ்க்கை தள்ளாடியது.
இந்நிலையில், என் குழந்தையைப் பார்க்க வந்த என் பள்ளிக்காலத் தோழிகள் இருவர், என் நிலை கண்டு அதிர்ந்து போனார்கள். எனக்கு சமாதானம் சொல்லி, `ப்ளஸ் டூவில் ஃபெயிலான பேப்பர்களை எழுதி பாஸ் பண்ணு, ஏதாச்சும் வேலைக்குப் போகலாம்...' என்று நம்பிக்கையும் கொடுத்தார்கள். எங்கள் பள்ளித் தோழிகளுக்கு கான்ஃப்ரன்ஸ் கால் போட, நாங்கள் அனைவரும் பேசினோம். பல வருடங்களுக்குப் பிறகு சில நிமிடங்கள் சந்தோஷமாகக் கழிந்தது. `ஸ்மார்ட் போனாச்சும் வாங்கு... வாட்ஸஅப், யூடியூப்னு இப்படியாச்சும் உனக்குப் பொழுது போகும், நாமளும் அடிக்கடி பேசிக்கலாம்' என்று சொல்லிப் போனார்கள்.
வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நான், பூ கட்டிக் கொடுத்து அதில் கிடைத்த பணத்தில் என் தோழி மூலமாக 5,000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்கினேன். `எவன் கூட பேசுறதுக்காக இந்த போனை இப்போ வாங்கியிருக்க...' என்று என்னுடன் சண்டை போட்ட என் கணவன், அதை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டான். இப்போது என்னிடம் இருப்பது ஒரு பட்டன் போன்தான்.

ஒருவேளை பெற்றோர் என் காதல் பிரச்னையை எடுத்தவுடனேயே அடி, உதை என்று கையாளாமல், அப்போது மாணவப் பருவத்தில் இருந்த என்னிடம் கொஞ்சம் நிதானமாக, அறிவுரையாக, பக்குவமாகப் பேசியிருந்தால் நான் அவசரக் கல்யாண முடிவை எடுத்திருக்க மாட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது. மேலும், காதல் திருமணம் தவறுதான் என்றாலும், அதற்காக பெற்ற பிள்ளைகளை இரு வீட்டாரும் இப்படி மொத்தமாகக் கைவிடாமல் இருந்திருந்தால், வீட்டுப் பெரியவர்களின் கண்காணிப்பால், கண்டிப்பால் என் கணவன் நல்வழிக்கு வந்திருப்பானோ என்று அவர்கள் மீதும் கோபம் வருகிறது. `உன்னை என்னனு கேட்க எந்த நாதியும் இல்ல, நான் என்ன பண்ணினாலும் கேள்வி கேட்கவும் யாரும் இல்ல' என்று அவன் ஆக, எங்கள் பெற்றோரும்தானே காரணம் என்று தோன்றுகிறது.
இந்த 23 வயதில், என் தோழிகள் மேற்படிப்பு, வேலை என்று இளமைக்கே உரிய சந்தோஷம், குதூகலம், முயற்சி, முன்னேற்றம் என்று இருக்கிறார்கள். அதே 23 வயதில் நான் கல்யாணம், குழந்தை, குடிகார, சந்தேக புத்தி கணவன் என்று துயரத்தில் நாள்களைக் கழித்துக்கொண்டிருக்கிறேன். கணவனை விட்டுச் செல்லும் முடிவை எடுப்பது எல்லாம், இந்தக் கிராமத்துச் சூழலில் சாத்தியமில்லை. இன்னொரு பக்கம், என் பெற்றோரும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எனக்கும் வருமானத்துக்கு வழியில்லை. நரகமாக நகர்கின்றன நாள்கள். என்னுடைய இந்த நிலைக்கு நானேதான் காரணம் என்றாலும், பதின்ம வயதில் அறியாமல் எடுத்த முடிவுக்காக வாழ்க்கை முழுக்க தண்டனை காலமாகக் கழிய வேண்டுமா? என்னதான் தீர்வு..?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.