''நிஷாவோட வயிற்றிலிருக்கும் குழந்தைக்காகத் தினமும் பேசுறேன்; பாடுறேன்; அதைக் கேட்டுட்டு குட்டி பேபியும் சூப்பரா ரியாக்ட் பண்றாங்க. என்னோட குட்டி பேபியை எப்போ பார்ப்பேன்னு நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாயிட்டே இருக்கு'' என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துவிட்டாள்.

நடிகையும் தொகுப்பாளினியுமான நிஷா மற்றும் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் இணையருக்கு ஜூன் 29-ம் தேதி அதிகாலை 7.29 மணிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கணேஷ்.
குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கியிருந்தவரை விரட்டிப் பிடித்தோம். தன் குழந்தையை கையில் ஏந்திய அந்த முதல் தருணம் குறித்துக் கேட்டதும் சந்தோஷமாகப் பேசினார்.

''வாழ்க்கையில உண்மையான காதல்னா என்னன்னு இப்போதான் உணர்ந்திருக்கேன். என் வாழ்க்கையில இந்தத் தருணம் ரொம்ப முக்கியமானது. என்னோட உயிரே வெளியே இருக்குற மாதிரி உணர்றேன்."கணேஷ் வெங்கட்ராம்
நிஷா மேல எனக்கு அபரிமிதமான அன்பு உண்டு. அது இப்போ இன்னும் அதிகமாயிருக்கு. தேங்க் காட்... நிஷாவுக்கு சுகப் பிரசவம்தான். ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க அவங்கப்பட்ட கஷ்டங்களையும் தாங்கிக்கிட்ட வலியையும் பக்கத்தில் இருந்து பார்த்தேன். குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே டாக்டர்ஸ் என்னை அழைச்சிட்டுப்போய் பாப்பாவை என்கிட்ட காட்டினாங்க.

குழந்தையை என்கிட்ட கொடுத்தப்போ, அவ டக்குனு என் கையைப் பிடிச்சிக்கிட்டா. அந்தத் தருணத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அழுகையும் சந்தோஷமுமா அப்படியே எமோஷனல்ல மூழ்கிப்போயிட்டேன். அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஒரு ஸ்பெஷலான பிணைப்பு இருக்கும்னு சொல்வாங்க. அதை இப்போ முழுமையா உணர ஆரம்பிச்சிருக்கிறேன்.
பாப்பா பிறந்த இரண்டாவது நாளே நிஷா என்னைக் கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. மருத்துவமனை வராண்டாவுல பாப்பாவைத் தூக்கிட்டு, சின்னதாக ஒரு நடைப் பயிற்சி போனோம். அப்போ நிஷா கையில பாப்பாவை கொடுத்துட்டு கொஞ்ச தூரம் போனேன்.
அந்தப் பிரிவையே என்னால தாங்க முடியலை. நிஷா, 'என்னய்யா.. ‘அபியும் நானும்’ படத்துல வர்ற பிரகாஷ்ராஜ் மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்ட..'ன்னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு மனிதன் தன்னைத் தாண்டி இன்னொருத்தரைப் பத்தி யோசிக்க ஆரம்பிக்கிறது, அவன் அப்பாவாகிற அந்தத் தருணத்துல இருந்துதான்னு நினைக்கிறேன். அந்தத் தருணம்தான் ஒரு மனிதனோட வாழ்க்கையில மிகப்பெரிய வளர்ச்சியா, மாற்றமா பார்க்கிறேன்.

24 மணி நேரமும் பாப்பாவோட ஆரோக்கியம் பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன். முதல் முதலாகப் பாப்பாவை குளிப்பாட்டியபோது அவளோட ரியாக்ஷன்ஸ் எல்லாம் மனசுல ஒரு படம்போல ஓடிக்கிட்டே இருக்கு.
பிரசவத்துக்குப் பிறகு நிஷாவைப் பார்த்தப்போ ரெண்டு பேருக்கும் இடையே பேச்சுகள் குறைஞ்சுபோய், எங்களுக்கு இடையே உணர்ச்சிகள்தான் அதிகமாக இருந்துச்சு. பாப்பாவை முதலில் நான்தான் பார்த்தேன். பிறகுதான் வழக்கமான நடைமுறைகள் எல்லாம் முடிச்சு நிஷாகிட்டே கொண்டுபோனாங்க.

அம்மாவோட நெஞ்சுல பாப்பா சாய்ஞ்சுக்கிட்டு அமேஸிங் லுக் ஒண்ணு கொடுத்தாங்க. அந்தத் தருணம் அப்படியே ஒரு நிழற்படம் மாதிரி நெஞ்சுல மாட்டி வைச்சிருக்கேன். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த மறக்க முடியாத தருணம் அது. பாப்பாவை பார்த்துட்டு மருத்துவர்களும் செவிலியர்களும், 'அப்படியே பாப்பா அப்பாவைப்போல இருக்கு'ன்னு சொன்னாங்க. அதைக் கேட்டதும் எனக்குப் பெருமையா இருந்துச்சு'' - உற்சாகக் குவியலாகப் பேசி முடித்தார் கணேஷ் வெங்கட்ராம்.