லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

அமெரிக்காவில் அதிருது அகிலாவின் பறை இசை! - அகிலா

அகிலா
பிரீமியம் ஸ்டோரி
News
அகிலா

மக்கள் கலை

“எட்டு வயசுல பறை கத்துக்க ஆசைப்பட்டேன். ஆனா, ‘அதை நாம வாசிக்கக் கூடாது. குறிப்பா, பெண் பிள்ளைங்க தொடவே கூடாது’ன்னு தடுத்துட்டாங்க.

விவரம் தெரிந்த வயதில் காரணம் புரிஞ்சப்ப, இந்தச் சமூகத்தின் மீது கோபம் வந்தது. ஆனாலும், ஊர்ல கத்துக்க முடியலை. ஊர்ல கத்துக்காத பறையை அமெரிக்காவில் கத்துக்கிட்டேன். அமங்கல வாத்தியமாக ஒதுக்கி வைக்கப்படும் அந்த பறையிசையை, என் திருமணத்தில் எல்லோரும் சேர்ந்து வாசித்தோம். அந்த நொடியில், சாதியக்கட்டுகள் உடைவதாக உணர்ந்தேன்” என்று சமூகக் கோபத்தோடு அழுத்தமாகப் பேசும் அகிலா, அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

பறை இசை
பறை இசை

‘‘எனக்குச் சொந்த ஊர் கரூர் மாவட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டி. ஊர்ல திருவிழா நடக்கிறப்ப சாமியை எங்க வீட்ல இருந்துதான் எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்போ இசைக்கப்படுகிற பறையிசை எனக்குள்ள ஓர் அதிர்வலையை ஏற்படுத்துச்சு. ‘எனக்கும் கத்துக்கொடுங்க’ன்னு கேட்டப்ப ‘நீயெல்லாம் இதை வாசிக்கக் கூடாது தாயி’ன்னு மறுத்துட்டாங்க. குறிப்பா, `பொம்பளைப் புள்ளைங்க அதைக் கத்துக்க நினைக்கவே கூடாது’ன்னு தடுத்தாங்க. ஆனாலும், என் மனசுல ஒருநாள் எப்படியாவது அதை வாசிக்கணும்கிற வைராக்கியத்தை விதைச்சுக்கிட்டேன். எம்.சி.ஏ படிப்பை முடிச்ச எனக்கு, பெங்களூர்ல வேலை கிடைச்சது. 2014-ம் வருஷம், அமெரிக்காவுக்கு மாற்றலாகிப் போனேன். போன வருஷம்தான் இங்குள்ள தமிழர்கள் சிறுசிறு குழுக்களா இணைஞ்சு பறை இசைக்கிறாங்க என்பது தெரிய வந்தது. அந்த நிமிஷம் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

அமெரிக்காவில் இருக்கிற மக்களுக்குப் பறை சொல்லித்தர்ற தனுஷாகிட்ட நானும் பறை கத்துக்க ஆரம்பிச்சேன். சொன்ன நம்புவீங்களா... பறையை ஒரு தவம் மாதிரி இருந்து, பரிபூரணமா கத்துக்கிட்டேன். இங்கே பறை இசைக்கிறவங்கள்ல 50 சதவிகிதம் பேர் பெண்கள்தாம். இங்கே இருக்கிற பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நாங்க பறையிசை வகுப்பெடுக்கிறோம்னா பார்த்துக்கோங்க!

அகிலா
அகிலா

சிகாகோ தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழர் திருநாள் விழாவில், அரசு பிரதிநிதிகள் கலந்துகிட்டாங்க. நாங்க இசைச்ச பறையிசை அவங்களை ரொம்ப கவர, தங்கள் பகுதி மக்களுக்கும் இதை அறிமுகப்படுத்தப் போறதா சொன்னாங்க.

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிகாகோவில் நடந்துச்சு. அதுல நாங்க குழுவா பறை இசைச்சோம். விருந்தினர்களா கலந்துகிட்ட மொரீசியஸ் பிரசிடெண்ட், ஐ.நா சபையின் முன்னாள் இயக்குநர் நபி பிள்ளை உட்பட பலரும் எங்களைப் பாராட்டினாங்க’’ என்று உற்சாகமாகிற இவரின் குழு, இந்தியர்கள் கொண்டாடும் சுதந்திர தின விழாவில் முதல் பரிசு வென்றிருக்கிறது.

‘‘தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வாசிக்கிற, அமங்கல இசையா கருதப்படுற பறையிசை பற்றிய எண்ணங்கள் என் மனசுல அழுத்திக்கிட்டே இருந்தது. அதனால், ‘பறையைத் திருமணத்திலும் வாசிக்கலாம்’னு இங்குள்ளவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உணர்த்த நினைச்சேன். அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தை நடத்திட்டு வர்ற ராமும் நானும் சுயமரியாதைத் திருமணம் செய்துக்கணும்கிறதுல தெளிவா இருந்தோம். எங்க திருமணத்துல நானும் ராமும் 15 நபர்களோடு சேர்ந்து 12 நிமிடங்கள் பறையிசைச்சோம்” என்கிற வருக்கு இப்படியான ஐடியா தோன்றியதே பறையிசை கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகு தானாம்.

‘‘பறைதான் நம் ஆதி இசை. அதைக் கத்துக்கிறதை மறுக்கிறது முட்டாள்தனம். பறை வாசிக்கிறப்ப அந்த ஒலி நமக்குள்ள ஓர் அதிர்வை ஏற்படுத்தி பாசிட்டிவ் எண்ணங்களையும் புத்துணர்ச்சியையும் கொண்டு வரும். நம் பிள்ளைகளை பியானோ, வயலின், பரதநாட்டியம் கற்க பெருமையோடு அனுப்புவதுபோல பறையிசைக்கவும் அனுப்பணும். நம்முடைய பழங்கலையா, மங்கல வாத்தியமா இருந்த பறை இசையைக் குறுக்கி, அதன் உண்மைத்தன்மையைக் குலைத்துவிட்டோம். அதனால்தான் நம் இசையை நம் நாட்டுல கத்துக்க முடியாம, பல லட்சம் கிலோமீட்டர் தாண்டி வந்து கத்துக்கிட்டேன்.

தமிழகத்தில் பறையிசையின் புகழை, அதன் வீச்சைக் குறைப்பது நாம்தான். இதைக் கடந்து, பறையை நம் பொதுமறை இசையாக மறுபடியும் கொண்டு வரணும். அதற்காக, நாங்க இங்கே பறையை ஓங்கி அடிக்கத் தொடங்கியிருக்கிறோம். அந்த ஒலியின் அதிர்வில், தமிழகத்தில் பறைக்கான சமத்துவம் பிறக்கும்” என்கிறார் அகிலா உத்வேகத்துடன்.