நான் ஒரு சிறு நகரத்தில் வளர்ந்த பெண். எப்போதும் துறுதுறுவென்று இருப்பேன். மிடில் க்ளாஸ் குடும்பம். படிப்பு ஒன்றே முன்னேற்றத்துக்கு வழி என்பதை பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்தேன். மதிப்பெண்களுக்காகப் படிக்காமல் எதிர்காலத்தை மனதில் வைத்துப் படிக்கும் அளவுக்கு அப்போதே பக்குவம் பெற்றிருந்தேன்.
நான் விரும்பிய கோர்ஸை முடித்து, என் திட்டப்படியே அத்துறையில் வேலை கிடைக்கப்பெற்று, 23 வயதில் 25,000 ரூபாய் சம்பளம் வாங்கியபோது, என்னையே எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. என் மீது எனக்கே அத்துனை மரியாதை ஏற்பட்டது. வேலையில் சேர்ந்தாயிற்று, சம்பளம் வாங்கியாயிற்று என்று அப்படியே வாழ்க்கையை வாழ நினைக்காமல், என் சம்பளத்தை சேமித்து அப்பாவிடம் கொடுத்து முதலீடு செய்யச் சொன்னது, லோனில் டூ வீலர் வாங்கியது என ஒரு சுயம்புவாக விறுவிறு, சுறுசுறுவென என் வாழ்க்கையில் ஏணிகளைப் போட்டு ஏறியபடி இருந்தேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. என்னை நினைத்து சந்தோஷப்பட, பெருமைப்பட, நிம்மதியடைய அவர்களுக்குக் காரணங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தேன்.

இந்நிலையில் எனக்கு 25 வயதானபோது, `இன்னுமா பொண்ணுக்குக் கல்யாணம் முடிக்கலை...' என்ற வார்த்தைகள் என் பெற்றோரை சுணங்க வைத்தன. திருமணம் செய்துகொள்ள என்னை வலியுறுத்த ஆரம்பித்தார்கள். நானோ அப்போது என் கெரியரில் செம்ம கிராஃபில் சென்று கொண்டிருந்ததால், திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை. ஆனாலும், பல வீடுகளைப் போல என் வீட்டிலும் பெற்றோரின் எமோஷனல் பிளாக்மெயிலே வென்றது.
என்னைப் பெண் கேட்டு வந்த குடும்பம், பணக்காரக் குடும்பம். அப்பாவின் தொழிலை பையன் பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அந்த வரனை மிகவும் பிடித்துப்போய்விட்டது. எனக்கும் அதில் பிடிக்கவோ, பிடிக்காமல் போகவோ எதுவுமில்லை என்பதால், திருமணத்துக்குச் சம்மதித்தேன்.
என் கணவரின் அப்பா, வெற்றிகரமான தொழில்முனைவோர். நிறைய சொத்து சேர்த்து வைத்துள்ளார். ஆனால், `நான் சம்பாதிக்க அவசியம் இல்ல, எங்கப்பா சேர்த்துவெச்சிருக்குற சொத்துல ஜம்முனு வாழ்ந்தா போதும்' என்று ஒரு வாழ்க்கையை என் கணவர் வாழ்ந்துகொண்டிருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. `அப்பாவோட தொழிலை நீங்க பார்த்துட்டு இருக்கீங்கனுதானே சொன்னாங்க..?' என்று நான் கேட்டபோது அவரிடம் பதில் இல்லை. என் மாமியாரும், மாமனாரும், `சின்னப் புள்ளையில இருந்தே அவன் அப்படித்தான். நாமளா முயற்சி பண்ணி ஒண்ணை செய்யணும்னு நினைக்கவே மாட்டான். அவன் சம்பாதிக்கலைன்னாலும் பரவாயில்ல... இந்த சொத்தை எல்லாம் நிர்வகிக்கிற பொறுப்பையாச்சும் கத்துக்கலாம் இல்ல? அவன் இப்படி பொறுப்பில்லாம இருக்கான்னுதான், பொறுப்பான உன்னைப் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சோம்' என்றார்கள்.

எப்போதும் உழைப்பும், வாழ்க்கையில் அடுத்து என்ன என்ற நினைப்புமாக இருக்கும் எனக்கு, என் கணவரின் சோம்பேறித்தனமும் சொகுசும் பிடிக்காமல் போக, கசப்புடனேயேதான் வாழ்க்கை ஆரம்பமானது. ஆரம்பத்தில் அவரிடம் நிறைய பேசிப் பார்த்தேன். `நான் இப்படித்தான். இருக்குற சொத்து போதாதா உனக்கு?' என்று அது ஏதோ பணம் பற்றிய பிரச்னை போல பேசினார். `இல்ல... இது நம்ம மேலயே நமக்கு மரியாதை வர்ற விஷயம்' என்று நான் விளக்க முயன்றதெல்லாம் இடைவெளியில்தான் முடிந்தது.
`அவர் எப்படி இருந்தா என்ன, அதான் வசதி வாய்ப்பு இருக்கு இல்ல, என்ன குறைச்சல் உனக்கு?' என்று கேட்ட என் பெற்றோரின் மீது கோபமாக வந்தது. என் மாமனார், மாமியாரோ, `நம்ம தொழிலோட வரவு, செலவு நிர்வாக வேலைகளை நீ பார்த்துக்கோம்மா' என்றார்கள். திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டிருந்த எனக்கு, அதுதான் நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவழிக்க ஒரே வழி என்று தோன்றியதால் அவற்றை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், பிறகுதான் புரிந்தது ஒரு அக்கவுன்டன்ட்டின் வேலையை மீறி அதில் நான் பார்க்க எந்த வேலையும் இல்லை என்று. என் ஆர்வத்துக்கும் அறிவுக்கும் அந்தத் தீனி போதவே இல்லை.
என் கணவர், உழைப்பு என்றால் என்னவென்றே அறியாமல் தினமும் உண்பது, உறங்குவது, நண்பர்களுடன் காஸ்ட்லி கேளிக்கைகளில் ஈடுபடுவது, வீக் எண்ட்களில் டிரிங்ஸ் பார்ட்டி என்றெல்லாம் இருப்பது அவர் மீது எனக்கு எந்த அன்பையும், மரியாதையையும் ஏற்படுத்தவில்லை. இப்படி ஒரு பிறவியா என்று கோபமும் வெறுப்பும்தான் வருகிறது. அவருக்கும் என் மீது எந்த அன்போ, பிணைப்போ இல்லை. அவர் வீட்டில் அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் வாட்ச், மொபைல், கார் வரிசையில் இன்னொரு உடைமையாக என்னையும் வாங்கிக் கொடுத்திருப்பதாகவே இருக்கிறது அவர் அணுகுமுறை. `உனக்கும் எனக்கும் வேற வழியில்ல, வாழ்ந்து தொலைப்போம்' என்பதாகவே இருக்கிறோம் இருவரும்.

திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. இந்த வீட்டில் நான் சந்தோஷமாக வாழ்வதற்கான எந்த வாய்ப்புகளும் எனக்குத் தெரியவில்லை. என் கணவரை, அவருக்கு உழைப்பின் ருசியை உணரவைத்து, பொறுப்புள்ளவராக்கும் டாஸ்க்கில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை. எனக்குத் திருமணத்துக்கு முன்னர்போல, என் அறிவை, உழைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, படபடவென, சுடச்சுடவென வாழும் வாழ்க்கையே தேடுகிறது.
இப்போது என்னதான் செய்வது நான்?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.