அனைத்தும் சாத்தியம் (Museum of possibilities) அருங்காட்சியகம், சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரில் இருக்கும் லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்திற்குள் அமைந்துள்ளது. தமிழக அரசால் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களும், நவீன சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் மேலாளர்கள் பிரபாகரனும், ஹீத்தலும், ”மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தால் அவர்களும் எல்லோரையும் போல யார் உதவியும் இன்றி, தனித்து இயங்க முடியும் என்பதுதான் இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம். எப்போதும் இன்னொருவரின் உதவியை நாடி இருந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் சலிப்புத் தட்டிவிடும். அப்படி மாற்றுத்திறனாளிகள் முடங்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லோரும் பயன்படுத்தக்கூடிய அனைத்தையும் உள்ளடக்கிய சாதனங்கள் (Inclusive) பல இங்கு இடம்பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகம் முழுக்க வீல்சேர் பயன்படுத்துபவர்களும், பார்வையற்றோரும் தனித்து சுற்றிப் பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் சாத்தியம் மியூசியத்தில் இருக்கும் பொருள்கள் வெறும் காட்சிக்காக மட்டும் கிடையாது. அவற்றைத் தொட்டு உணர்ந்து, அந்தப் பொருள் தங்களுக்கு உதவும் என்று தோன்றினால், அதை வாங்கிக் கொள்ளலாம். இங்கு ஒரு இயன் முறை மருத்துவரும் பேச்சு சிகிச்சையாளரும் இருக்கிறார்கள். இவர்கள் அங்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களுக்கு எந்த மாதிரியான சாதனங்கள் உதவியாய் இருக்கும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
அருங்காட்சியகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தாங்கள் தேடி வந்த சாதனம் கிடைக்காவிட்டால், அதைப்பற்றி அதிகாரிகளிடம் உரையாடலாம். அவர்களுக்கு என்ன மாதிரி தேவை இருக்கிறது என்பதைச் சொன்னால், அதை அதிகாரிகள் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவிப்பார்கள்.
அதே போல, பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் விலையில் பொருள்கள் கிடைக்காவிட்டால், அதற்கு மாற்றாக என்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையும் வழங்கப்படும்.
அனைவருக்குமான வடிவமைப்பு:
இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளில் எந்தத் தடையும் இல்லாமல் இயங்க என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதைக் காட்சிப்படுத்த ஒரு மாதிரி வீடும் உள்ளது. ஒரு வரவேற்பரை, சமையலறை, படுக்கையறை, குளியலறையுடன் இருக்கும் இந்த மாதிரி வீட்டில் வீல் சேரில் இருந்து சுலபமாக சோஃபாவிற்கு மாறத் தாழ்வான நல்ல உறுதியான இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல தொலைக்காட்சியும் அலமாரியும் தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து சமையல் அறை. இங்கு மூன்று மேடைகள் உயரத்தில் வீல் சேர் பயன்படுத்துவோரின் வசதிக்கு ஏற்ப உள்ளன. அதேபோல பட்டன் அழுத்தினால் கிழே இறங்கி வரும் கிச்சன் அலமாரிகள், வீல் சேரில் உட்கார்ந்து சாப்பிட டைனிங் டேபிள், ஒவ்வொருவரின் கை-செயல்பாட்டிற்கும் ஏற்றவாரு ஸ்பூன்கள் என சமையலறை முழுக்க நவீன சாதனங்களால் நிரம்பியிருக்கிறது. இதன் மூலம் வீல் சேர் பயன்பாட்டாளர்களும் எந்தத் தடையும் இன்றி, தங்கள் அன்றாட பணிகளை, யார் உதவியும் இல்லாமல் செய்யலாம்.
அடுத்ததாகப் படுக்கையறை, மாற்றுத்திறனாளிகளுக்குத் தகுந்த படுக்கைகள், சுலபமாகத் திறக்கக்கூடிய துணி அலமாரிகள் இருக்கின்றன. கழிவறைகளும் கைப்பிடிகள், கமோட், சுலபமாகத் திறக்கக்கூடிய குழாய்கள் என ஒவ்வொரு இடமும் பார்த்துபார்த்து மாற்றுத்திறனாளிகளின் தடைப்பட்ட இயக்கத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு அறையின் கதவுகள் நன்கு அகலமாக வீல் சேர் சுலபமாக நுழையும் விதத்தில் கட்டப்பட்டுள்ளன.
தாரா எனும் அமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை எப்படி அவர்களுக்கு உகந்ததாக மாற்றலாம் எனப் புதுப்புது யோசனைகளுடனும், அறிவியலுடனும் இந்த அருங்காட்சியகம் விரிவடைந்துக்கொண்டே போகிறது.
அனைவருக்குமான சாதனங்கள்:
மாற்றுத்திறனாளிகளும் எல்லோருடனும் சேர்ந்து விளையாட பல விளையாட்டு சாதணங்கள் இங்கே உள்ளன. பார்வையற்றவர்களுக்குத் தொட்டுணரக்கூடிய பிரெய்லி செஸ், லூடோ, ரூபிக்ஸ் க்யூப் போன்ற விளையாட்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இசைக் கருவிகள், செயல்பாடு குறை உள்ளவர்கள் ஓவியம் வரைய பல வகையான பிரஷ்களும் உள்ளன.
அதே போல, மாற்றுத்திறனாளிகள் இன்று பல ஐடி நிறுவனங்களில், வங்கிகளில், கலைத் துறையிலும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த கீ-போர்ட், மவுஸ் போன்ற கணினி பயன்படுத்த தேவையான பல சாதனங்களும் இங்கே கிடைக்கின்றன.
மியூசியம் கஃபே:
அனைத்தும் சாத்தியம் மியூசியத்தில் ஓர் அழகான கஃபேவும் இருக்கிறது. பார்வையற்றவருக்கு பிரெய்லி மெனு, வீல்சேர் பயன்பாட்டாளர்கள் சாப்பிட்டு முடித்து பில் கட்ட வசதியாக தாழ்வாக அமைக்கப்பட்ட கேஷ் கவுண்டர், செயல்பாடு குறையுள்ளவர்களுக்கு தகுந்த ஸ்பூன்கள், தட்டுகளும் இங்கு உள்ளன.
இது தவிர, இங்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குச் சமையல் பயிற்சியும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டும் என்ற பயிற்சியும் கூட அளிக்கப்படுகிறது. வார இறுதிகளில் இங்கு மாற்றுதிறனாளிகள் சம்பந்தமான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கும்."