Published:Updated:

``ஒரு வருஷத்துல 75 வழக்குகள்... பெண்கள், குழந்தைகளைத் தொடர்ந்து மீட்போம்!

ஹேம மாலா #SheInpires
News
ஹேம மாலா #SheInpires

அதிகார பேச்சோ, அலங்காரப் பேச்சோ இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் ஹேம மாலா.

Published:Updated:

``ஒரு வருஷத்துல 75 வழக்குகள்... பெண்கள், குழந்தைகளைத் தொடர்ந்து மீட்போம்!

அதிகார பேச்சோ, அலங்காரப் பேச்சோ இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் ஹேம மாலா.

ஹேம மாலா #SheInpires
News
ஹேம மாலா #SheInpires

மதுரையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் தொழில் குற்றங்களை, தன் தீவிர கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளால் களையெடுத்து வருகிறார், மதுரை மாநகர காவல்துறையின் தனிப்பிரிவான ஆள்கடத்தல் மற்றும் விபசார தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஹேம மாலா. வியூகங்கள், அதிரடி செயல்பாடுகள், கைதுகள், மீட்பு நடவடிக்கைகள் என்று இவரால் பல பெண்கள், குறிப்பாக குழந்தைகள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

திண்டுக்கல்லை பூர்வீகமாகக் கொண்டு, சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர் ஹேம மாலா. பள்ளிப் படிப்பு மற்றும் இளங்கலை படிப்பை திண்டுக்கல்லிலும், முதுநிலை படிப்பை மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்திலும் படித்துள்ளார். சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம்கொண்டவருக்கு, ஸ்போர்ட்ஸ் கோட்டா காவல்துறை பணிக்கு கதவு திறந்துள்ளது.

``ஆரம்பத்தில், இங்கே மலிந்து கிடக்கும் குற்றங்களைப் பார்க்கும்போது ஏன் இந்தத் துறைக்கு வந்தேன்னு நிறைய தடவை நினைச்சிருக்கேன். ஆனாலும், இதை மாற்ற நம்மால் என்ன செய்ய முடியுமோ அதுக்கான முழு உழைப்பைக் கொடுக்கணும்னு முடிவெடுத்தேன். நான் இந்த வேலைக்காக எந்த செலவும் செய்யலை, மெரிட்ல வந்தேன். மக்களுக்கு இந்த யூனிஃபார்ம் மூலம் என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்னு நினைச்சு, வேலைபார்த்துட்டு இருக்கேன்'' - அதிகார பேச்சோ, அலங்காரப் பேச்சோ இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் ஹேம மாலா. அவர் தன் பணி அனுபவங்களை, மக்களுக்கான விழிப்புணர்வாகவும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

ஹேம மாலா
ஹேம மாலா

``இதற்கு முன்பு லா அண்ட் ஆர்டர் பிரிவுல வேலைபார்த்தேன். ஆள்கடத்தல் மற்றும் விபசார தடுப்பு யூனிட்டுக்கு பணிக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகிடுச்சு. பல வழக்குகளைக் கையாண்டிருக்கேன். ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. இப்படியெல்லாம் நாட்ல நடக்குமானு சில வழக்குகள் அதிர்ச்சி கொடுக்கும்.

பாலியல் தொழில்ல ஈடுபட்டு வரும் பெண்களை குற்றவாளிகளா கைது செய்யணும் என்பதைவிட, அவங்களை மீட்டு மறுவாழ்வுக்கு வழி செய்யணும் என்பதன் அடிப்படையில்தான் எங்க நடவடிக்கைகள் அமையும். அதில் ஈடுபடும் பெண்களை திருத்தணும்னுதான் அட்வைஸ் செய்வேன். ஆனா, சில பெண்கள் அந்த உலகத்துல இருந்து வெளிய வர்றது அவ்வளவு சுலபமா இல்ல என்பது புரிஞ்சது.

அந்தப் பெண்கள்கிட்ட, `ஏன் இந்தத் தொழில்ல இருந்து வெளியே வர மாட்டிங்கிறீங்க?னு நான் கேட்டப்போ, `வேற வேலை இல்லையே, தொழில் தெரியாதே'னு சொல்லுவாங்க. `காவல்துறை சார்புல தொழில் உதவி செஞ்சா இதிலிருந்து வெளியேறுவீங்களா?'னு கேட்டா, எல்லாருமே சரினு சொல்லுவாங்க.

`எனக்கு டெய்லரிங் தெரியும்', `எனக்கு இட்லி பாத்திரமும் ஸ்டவ்வும் வாங்கிக் கொடுங்க'னு ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த தொழிலைச் சொல்லி உதவி கேட்பாங்க. இப்படி ஒருமுறை 10 - 16 பெண்கள் முன்வந்தாங்க. இது தொடர்பாக நான் கமிஷனர்கிட்ட பேசி ஏற்பாடு பண்ணி, அவங்களை எல்லாம் வரச் சொன்னேன்.

வரச் சொன்ன தேதிக்கு ஒருத்தர்கூட வரலை. எல்லாரோட ஃபோனும் ஸ்விச்டு ஆஃப். அவங்களை அடுத்தடுத்த வழக்குகளில் பிடிக்கும்போது, `நாள் முழுக்க துணி தைச்சாகூட 1,000 ரூபாய் சம்பாதிக்க முடியாது மேடம்'னு சொன்னாங்க. `சரி இந்தத் தொழில்ல ஒரு மணி நேரத்துல 5,000 ரூபாய் சம்பாதிச்சும், உங்க வாழ்க்கைத் தரம் உயரலையே ஏன்?'னு கேட்டேன். அவங்க சொன்ன பதில், பல சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டுச்சு.

``இந்தத் தொழில்ல நாங்க கேஸ்ல மாட்டினா வெளிய வர வக்கீல்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கு. அதுக்காக நாங்க வட்டிக்கு வாங்குறோம். அதுவும் ரன் வட்டி, மீட்டர் வட்டி. அந்த வட்டிக்காக மறுபடியும் தொழிலுக்குப் போக, வக்கீலுக்குக் கொடுக்க, கடன் வாங்கனு வெளிய வர முடியாத ஒரு புதைகுழியா இதுல சிக்கிக்கிட்டோம் மேடம்"னு சொன்னாங்க.

வட்டிக்கு வாங்கியது தொடர்பா பெட்டிஷன் கொடுக்கச் சொன்னேன். ஆனா, சட்ட நடைமுறைகள்ல எல்லாம் அவங்களுக்கு நம்பிக்கை இல்ல. அந்தக் கடனும் வட்டிக் காசும் இவங்களை ஓடவெச்சுட்டே இருக்கு.

இந்தப் பொண்ணுங்க பாலியல் தொழில்ல வதைபட்டாலும், இதை நடத்துற புரோகர்களுக்குத்தான் இதுல பணம் கொட்டுது. இவங்களை மீட்கணும்னா புரோக்கர்களுக்கு செக் வைக்கணும்னு பிரச்னையோட வேர் புரிஞ்சது. மதுரையில கிட்டத்தட்ட எல்லா புரோக்கர்களையும் கைது செய்துட்டோம். ஒரு சிலர் மட்டும் இன்னும் கைதாகாமல் தப்பிச்சு இருக்காங்க. விரைவில் அவங்களையும் பிடிப்போம்” என்று சொல்லும் ஹேம மாலா, மதுரையில் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகள் சிறார் வதைக்குப் பயன்படுத்தப்படுவது குறித்துப் பேசினார்.

``18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகள் 3 - 4 பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதா எங்களுக்குத் தகவல் வந்தது. நடவடிக்கை எடுத்ததுல, ஒன்றரை மாசம் முன்னாடி 16 வயதுச் சிறுமியை மீட்டோம். தொடர் கண்காணிப்பு, நடவடிக்கைகள் மூலமா மற்றவர்களையும் நிச்சயம் மீட்போம். இந்த வழக்குகளைப் பொறுத்தவரை சரியான ஆதாரங்கள் கிடைக்காமல் கைது செய்தாலும் பயன் இல்லை. அதனால திட்டமிட்டுத்தான் களத்துல இறங்குவோம். 18 வயசுக்குக் கீழ் உள்ள சிறுமிகளுக்கு, இதில் எந்தளவுக்கு அவங்க பாதிக்கப்படுறாங்கனு புரியுறதுகூட இல்ல.

ஹேம மாலா
ஹேம மாலா

வறுமையான சூழ்நிலையில இருக்குற குழந்தைகள, `ரெண்டு மணி நேரம் நாங்க சொல்றபடி கேட்டா போதும்'னு சொல்லி பயன்படுத்தி பாழாக்குறாங்க'' என்றவர், தன் மனதைப் பாதித்த சம்பவம் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

``கடந்த ஒரு வருஷத்துல மட்டும் 75 வழக்குகளைப் பதிவு செய்திருக்கோம். ஒரு முறை ஒரு அம்மா, கல்லூரியில படிக்குற தன் மகளை பாலியல் தொழில்ல ஈடுபடுத்தியிருந்ததைப் பார்த்தப்போ, அதிர்ச்சியாகிட்டோம். 23,000-னு தன் மகளுக்கு ஃபிக்ஸ் பண்ணி, அந்தச் சின்ன பொண்ணு வாழ்க்கையவே அழிச்சிட்டு இருக்க, அந்தப் பெண்ணை நாங்க மீட்டோம்'' என்று ஆதங்கத்துடன் சொன்னவர், பெற்றோர்களை எச்சரிக்கும் விதமாக மற்றொரு அனுபவத்தையும் குறிப்பிட்டார்.

``சமீபத்துல ஒரு கல்லூரி மாணவியை, இங்கு உள்ள தனியார் விடுதியில பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணுடன் சேர்த்து கைது பண்ணினோம். அந்தக் கல்லூரி மாணவியைக் கைது செய்த சில மணி நேரத்துல, பெரிய பெரிய இடங்கள்ல இருந்து போன் கால் வந்தது. விசாரிச்சப்போ, அந்தப் பொண்ணு புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி எனவும், வீட்டுல சென்னையில் படிப்பதா சொல்லிட்டு ஒரு பிரபலத்துடன் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. அந்த மாணவியோட பெற்றோர், தங்களோட பொண்ணு சென்னையில படிச்சிட்டு இருக்கானு நினைச்சிட்டிருக்க, அந்தப் பொண்ணோ இந்த நபருடன் சில வருடங்களா வாழ்ந்துட்டு வந்திருக்கு.

ஹேமமாலா
ஹேமமாலா

சென்னையிலிருந்து ஒரு குழுவால அந்தப் பொண்ணு மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, இங்க கைதாகியிருக்கு. அந்தச் செய்தியை டிவியில பார்த்த பிறகுதான், அந்தப் பொண்ணோட பெற்றோருக்கு விஷயமே தெரிய வந்திருக்கு. அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோர்கிட்ட ஒப்படைச்சோம்” என்று சொல்லும்போது ஹேம லதாவின் குரலில் ஆதங்கம்.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் வகையில் தற்போது `ஆபரேஷன் ஸ்மைல்' என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளை மீட்டு வருகிறாது ஹேம மாலா தலைமையிலான டீம். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை வழக்குகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் அனைத்தையும் முடிக்கும் முனைப்பு மற்றும் பொறுப்புடன் செயலாற்றி வருகிறார்கள்.

``பணி என்பதைத் தாண்டி, சமூகப் பொறுப்பும் இணைந்து என் வேலையை செய்றேன். குற்றங்களைக் குறைக்க, தடுக்க தொடர்ந்து செயலாற்றுவேன்'' என்கிறார் ஹேம மாலா உறுதியுடன்.