Published:Updated:

"ஸ்மார்ட்சிட்டி மதுரையின் கட்டமைப்பைச் சிதைக்கிறதா?!" - வல்லபாய் அருணாச்சலம் | மதுர மக்கள் - 1

வல்லபாய் அருணாச்சலம்
News
வல்லபாய் அருணாச்சலம்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

"ஸ்மார்ட்சிட்டி மதுரையின் கட்டமைப்பைச் சிதைக்கிறதா?!" - வல்லபாய் அருணாச்சலம் | மதுர மக்கள் - 1

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

வல்லபாய் அருணாச்சலம்
News
வல்லபாய் அருணாச்சலம்
”மதுரை மாசி வீதிக்குள் கோயிலுக்குப் போக நினைத்து, பூமாலை வாங்க ஒரு தெருவுக்குள் நுழைகிறீர்கள் என்றால் அதன் தொடர்ச்சியாக தேங்காய் வாங்க அடுத்த தெரு, எலுமிச்சை வாங்க அதற்கு அடுத்த தெரு என அதன் தொடர்பிலேயே போய்க்கொண்டிருப்பீர்கள். மதுரையின் கட்டமைப்பு ஒரு சங்கிலித்தொடர்போல பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும். மதுரை மட்டுமல்ல மதுரை மக்களின் வாழ்வியலும் அப்படித்தான் இருந்தது. தற்போது தொடங்கப்பட்டிருக்கும் 'ஸ்மார்ட் சிட்டி' அத்தனை சங்கிலித்தொடர்களையும் அறுத்து தனித்தனியாக தொங்கவிட்டிருக்கிறது."

''வளர்ந்து வரும் மதுரையை எப்படி பார்க்கிறீர்கள்?'' எனக் கேட்டால் இப்படித்தான் அச்சமும் அக்கறையுமாக பேசத் தொடங்குகிறார் வல்லபாய் அருணாச்சலம். மதுரையையும் மதுரை மக்களின் முகங்களையும் அதன் மாறாத சுருக்கங்களுடன் தொடர்ந்து தனது கேமரா மூலமாக ஆவணப்படுத்தி வரும் கட்டட வடிவமைப்பாளர்.

எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்?

மதுரை ஸ்மார்ட்சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்
மதுரை ஸ்மார்ட்சிட்டிக்காக வெட்டப்படும் மரங்கள்

"அடிப்படையில் நான் ஒரு கலைக்கல்லூரி மாணவன். அதன் நீட்சியாகத்தான் கட்டடத்துறையில் இன்டீரியர் டிசைனிங்கைத் தேர்வு செய்தேன். கூடவே அசல் திராவிட முகங்களும் நேர்த்தியான வர்த்தக நேர்த்தியும் கலந்த மண் இது. இதுதான் என் பயணத்துக்கான சிறு பொறி. தொடர்ந்து மக்களோடு இயங்கும்போது நானே என்னை புதுப்பித்துக்கொள்வதாகவே உணர்கிறேன். இஸ்தான்புல் நகரத்துக்குள் போனால் ஆயிரம் கதைகளோடு வெளிவரலாம் எனச் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதே அமைப்போடுதான் மதுரையையும் நான் பார்க்கிறேன். வைகைப்பாலத்தை தாண்டி மாசி வீதிகளுக்குள் போய் வந்தோம் என்றால் ஆயிரக்கணக்கான முகங்கள், அத்தனைக்குப் பின்னும் பல சுவாரஸ்யமான கதைகள் எனப் பரிந்து விரிந்த மண் இது. அந்த முகங்கள், அதை ஒட்டிய கலாசாரம் இதுதான் இன்னமும் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது."

மதுரையில் பதினைந்து வருட பயணம்... என்னென்ன மாற்றங்களைப் பார்க்கிறீர்கள்?

"மதுரையின் அமைப்புதான் வளர்ச்சியின் பெயரில் மாறியிருக்கிறது. ஆனால், மனிதர்கள் தொன்னூறுகளில் இருந்ததைப்போலத்தான் இப்போதும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தினம் தினம் நூற்றாண்டு கண்ட மரங்களை மிஷின் மூலம் அறுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் அது அழிவுக்கான அறிகுறியாகத்தான் தென்படுகிறது.

மரங்கள்
மரங்கள்

2018-ல் ஸ்மார்ட்சிட்டி தொடங்கப்பட்ட நாளிலிருந்து மரமெல்லாம் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டவரை எல்லாவற்றையும் பதிவு செய்துவருகிறேன். தன் கூட்டை தொலைத்த பறவைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேர்களைத் தொலைத்த கிளைகளுக்குள் தன்னைத் தேடி தேடி அலைவதை பதிவு செய்திருக்கிறேன். இவ்வளவுக்கும் இந்த மரங்களுக்கும் அரசு கட்ட இருக்கும் பாலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தும் இந்த மரங்களை காக்க அரசு தவறவிட்டதே என நினைக்கையில் வேதனைப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

மாரணி, கீழ்கள்ளந்திரி, மாங்குளம் என எவ்வளவு வளர்ச்சி வந்த போதும் இன்னும் அதன் தன்மை மாறாமல், ஒழுங்கு சீர்கெடாமலும் சில பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருந்தபோது அங்கே பழங்குடி மக்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஒரு பதின்மவயது சிறுவன், சிங்கத்தை வேட்டையாடி எந்தப் பெருமிதமும் இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். இது கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்கும் நம் இளைஞர்களைத்தான் நினைவுபடுத்தியது.

பறவை
பறவை

ராஜஸ்தானில் மட்டுமே காணக்கிடைக்கிற அரிய வகை பறவையினமான ஃபால்கன் பறவைகள் அரிட்டாபட்டி மலையில் கிடைக்கின்றன. ஆனால், கிரானைட்டுக்காக மலையை அறுக்க ஒரு கூட்டம் ரொம்பவே முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது கலெக்டராக இருந்த சகாயம் ஐயாவிடம் புகார் கொடுத்த பிறகே அந்த மலை காப்பாற்றப்பட்டது.

எந்த அரிதாரமும் இல்லாமல் இருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் உலவும் மண் இது. இயற்கையை மீறிய சக்தி எதுவும் இல்லை. இயற்கையை சிதைக்காமல் இதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை நோக்கி தொடர்ந்து பயணிப்பேன்" என்கிறார் வல்லபாய் அருணாச்சலம்