யுபிஐ (Unified Payments Interface)யினால் விளையும் நன்மைகளை இரண்டு வாரங்களாகப் பட்டியலிட்டோம். #HerMoney-ல் மூன்று அத்தியாயங்களாக ஒரே விஷயத்தைப் பற்றி எழுதுவது இதுவே முதல் முறை!
`அப்படி என்ன UPI அவ்வளவு ஸ்பெஷல்?' எனக் கேட்கத் தோன்றுகிறதா? மார்ச் 2021 மாத்திரம் 216 வங்கிகளின் மூலமாக UPI-ஐ பயன்படுத்தி செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்பு 5.04 லட்சம் கோடி எனச் சொன்னால் நம்புவீர்களா?
https://www.npci.org.in/what-we-do/upi/product-statistics
என்ற NPCI-ன் அதிகாரபூர்வ வெப்சைட்டை பார்த்தால் இது தெரியும். ஒரு ரூபாய் அனுப்புவது தொடங்கி ஒரு லட்சம் வரை இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் OTP-காகக் காத்திருக்காமல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இத்துடன் மாதாந்தர பில்களை ரிமைண்டர் கொடுத்து நினைவூட்டும் அவசியம் இல்லாத வகையில் `ஆட்டோ பே (Auto pay)' வசதியும் உண்டு. இவ்வளவு ஏன்? VPA (Virtual Payment Address) பயன்படுத்தி ஐபிஓ (IPO) களில் பங்குகள் வாங்குவது முதல் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் வரை எல்லாமே செய்யலாம். இத்தனை ப்ளஸ் பாயின்டுகளை கொண்டுள்ளது.
சரி இதில் பாதகமே இல்லையா என்றால், இருக்கின்றன.

* Mpin (Mobile banking Personal Identification number)-ஐ மறக்கும் பட்சத்தில் புதிதான Mpin-ஐ மாற்ற உங்களின் டெபிட் கார்ட் எண்ணும், அதன் காலாவதி மாதம் மற்றும் வருடம் குறித்த விவரங்களும், ATM பின்னும் அவசியம் என்பது நகை முரண். ஆனால், இவை இருந்தால் மட்டுமே உங்களால் Mpin- ஐ மாற்ற முடியும்
* Hermoney@VPA என்பதில், உதாரணமாக Heremoney@vpa என ஓரெழுத்தை மாற்றிப்போட்டாலும், hemoney@vpa என ஓரெழுத்தைச் சேர்க்கத் தவறினாலும் நீங்கள் அனுப்பும் பணம் மற்றொருவருக்குப் போகும். ஒருவேளை hermoney@vpa என்பதற்குப் பதிலாக hemoney@vpa எனத் தவறுதலாகக் கொடுத்து, hemoney@vpa என்ற VPAயும் புழக்கத்தில் இருக்கும் பட்சத்தில், நீங்கள் அனுப்பும் பணம் வேறு ஒரு நபரைச் சென்றடையும். ஆனால், VPA-வை நீங்கள் பணம் அனுப்பும் முன்பு பணம் பெறப்போகும் நபரின் விவரங்களோடு ஒப்பிட்டு உறுதிசெய்துகொள்ள முடியும். எனவே இதில் கவனமுடன் இருக்கவேண்டும்.
* B2B (Bank to Bank) எனப்படும் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொன்றுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யும்போது, அக்கவுன்ட் நம்பர் சலானில் தவறுதலாக மாறிவிட்டால் என்ன ஆகுமோ அதேதான் இங்கும் ஆகும். நீங்கள் தவறுதலாக அனுப்பிய பணத்தைத் திரும்பப் பெறுவது எளிதல்ல. பணம் யாரைச் சென்றடைந்ததோ அவரைப் பொறுத்தே உங்கள் பணம் உங்களை மீண்டும் வந்தடையும் வாய்ப்புகள் இருக்கும். இல்லையனில் நீங்கள் அனுப்பிய பணத்தை மறக்க வேண்டியதுதான். நீங்கள் உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லி புகாரை பதிவு செய்தால் `உரிய நடவடிக்கை எடுக்கிறோம்' என்ற பதில் வரும். ஆனால், உங்களின் பணம் உங்களை மீண்டும் வந்து அடைவதற்கான சாத்தியங்கள் குறைவு.

எப்படி இதைத் தவிர்க்கலாம்?
- முதன்முறையாகப் புதிதாக ஒருவருக்கு யுபிஐ மூலம் பணத்தை அனுப்பும்போது VPA மாத்திரம்தான் வேண்டும் என்பதில்லை. அந்த VPA உடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணே போதும். யுபிஐ கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல் நம்பரைப் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
- அத்துடன் முதன்முறையாக ஒரு VPA அல்லது செல் நம்பருக்குப் பணப்பரிமாற்றம் செய்யும்போது, `டெஸ்ட் பேமென்ட்" எனும்படி ஒரு ரூபாய் அல்லது ஒரு சிறு தொகையை அனுப்பி, பெறுநரை அது சென்றடைந்ததா எனச் சோதித்த பின் நீங்கள் அனுப்ப வேண்டிய மீதித் தொகையை முழுமையாக அனுப்புங்கள். பெரும் வங்கிகளில்கூட, புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குக்கு நடக்கும் முதல் பரிவர்த்தனையின்போது சிறு தொகை ஒன்றை முதலில் அனுப்பும் வழக்கம் இன்றளவும் உண்டு.
- என்னதான் OTP-க்காக காத்திராமல் பணப் பரிமாற்றம் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், தவறான நபருக்கு அல்லது தவறான கணக்குக்கு காசோலையை வழங்கின பின் `ஸ்டாப் செக்' எனும் வசதி இருப்பதுபோல, இங்கே `ஸ்டாப் யுபிஐ பேமென்ட்' எனும் வசதி கிடையாது. நான்கு முதல் ஆறு இலக்க Mpin-ஐ போட்டு நீங்கள் அங்கீகரித்த நொடி, பணம் உங்கள் கணக்கில் இருந்து வெளிநடப்பு செய்துவிடும். இதனாலேயே ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் சரியான நபருக்குத்தான் பணம் அனுப்புகிறீர்களா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
`லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்' எனச் சொல்வதைப்போல UPI-களை பயன்படுத்துவதில் எல்லோருக்கும் இருக்கும் பெரும் பயம், அதன் மூலம் நடக்கும் மோசடிகள். VPA-ஐ பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் இன்னொருவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதை முதல் வாரத்திலேயே பார்த்தோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளுக்கு நடந்த சம்பவத்தை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, தன் சோஃபாவை விற்பதற்காக வெப்சைட் ஒன்றில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதை வாங்க விரும்புவதாகச் சொல்லி அவரையொருவர் தொடர்பு கொண்டார். மேலும் சோஃபாவுக்கான மொத்தப் பணத்தை அனுப்புவதற்கு முன் டெஸ்ட் பேமென்ட் போல இரண்டு ரூபாயை கெஜ்ரிவாலின் மகளின் VPA-க்கு அனுப்பினார். அதன் பின்னர், ஒரு லிங்க்கை அனுப்பி அதில் இருக்கும் க்யூ.ஆர் (QR CODE) கோடை ஸ்கேன் பண்ணச் சொல்ல, இவரும் நொடியில் அதை ஸ்கேன் பண்ண, மறுமுனையில் இருந்த நபர், ஏற்கெனவே திட்டமிட்டபடி இவரின் வங்கிக் கணக்குக்குள் நுழைந்து முதலில் 20,000-த்தையும் அடுத்த சில நிமிடங்களுக்குள் 14,000-த்தையும் எடுத்துவிட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும் ஹர்ஷிதா எஃப்.ஐ.ஆர் எனும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ததுடன் சம்பந்தப்பட்ட வங்கியிலும் புகாரளித்திருக்கிறார். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காவல்துறை கெஜ்ரிவாலின் மகள் கணக்கு வைத்திருந்த வங்கியின் உதவியுடன் 34,000 ரூபாய் சென்றடைந்த வங்கிக் கணக்கை கண்காணிக்க,18 வயதான கோபி குமார் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் சிக்கினர்.
விசாரித்தபோது அவர்கள் சொன்னது எல்லாமே அதிர்ச்சி ரகம்! கோபி குமார் இந்தக் கணக்குடன் இன்னும் 6 கணக்குகளை இதுபோல UPI ஏமாற்று வேலைகளுக்கு மட்டுமே வைத்திருந்ததும், 7 கணக்குகளுக்கும் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்றும், கணக்கை இதுபோல பயன்படுத்திக்கொள்ள வாடகைக்கு(!) விடுவதன் மூலம் அவர் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகப் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
என்ன கேட்கவே மலைப்பாக இருக்கிறதா? என்னவோ வீட்டை உள்வாடகைக்கு விடுவதைப்போல தன் வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டவர் வசமாக சிக்கிக்கொண்டார். மேலும் ஏ.டி.எம்மில் பணத்தை எடுத்தபோதே சிக்கினார். சிக்கியது ஒரு கோபி குமாரின் குழு மாத்திரமே. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிக்காமல் பணத்தைக் களவாடுபவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம் .
மேற்சொன்ன சம்பவத்தில் இருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று... நாம் பிறருக்கு பணத்தை அனுப்பும்போது Mpin-ஐ கொடுக்க வேண்டி இருக்குமே அல்லாது, பிறரிடம் இருந்து பணத்தைப் பெற எந்த யுபிஐ ஆப்பிலும் நமது Mpin-ஐ கொடுக்கத் தேவையில்லை.
இதுமட்டுமா... 2020-ல் கொரோனா வெறியாட்டத்தின்போது பிரதமரின் நிவாரண நிதிக்கு என உருவாக்கியிருந்த VPA-க்கு பதிலாக பிற VPA-கள் மூலம் செய்யப்பட்ட தகிடுதத்தங்கள் ஏராளம்.
pmcares@sbi என்ற vpa-க்குப் பதிலாக, pmcare@, pmoindia@, pmindia@ எனப் போலி VPA-கள் உருவாக்கப்பட்டன. SBI, AXIS, HDFC முதலிய பல வங்கிகள் அப்போது இது குறித்த எச்சரிக்கை செய்திகளை அதனதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பின.

`என்ன இது... அத்தனையும் அச்சுறுத்துகிறதே...' என நினைக்க வேண்டாம் தோழிகளே!
1. Mpin உங்கள் வசம் இருக்கும் வரையில், விழிப்புடன் நீங்கள் இருக்கும் வரையில், யுபிஐ பயன்பாடுகள் பாதுகாப்பானவையே.
2. உங்களின் செல்போன் தொலைந்தால் முதலில் உங்களின் செல் நம்பரை பிளாக் செய்யுங்கள். எந்த செல் நம்பர் வங்கிக் கணக்குகள் உடன் இணைக்கப்பட்டு இருக்கிறதோ அதன் சேவையை நிறுத்தும் பட்சத்தில் உங்களின் போனை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.
3. UPI பரிவர்த்தனை தொடர்பான பிரச்னையைப் பற்றி புகாரளிக்க எந்தெந்த வங்கிகள் அப்பரிவர்த்தனையில் இணைந்திருக்கின்றனவோ அவையனைத்தையும் தொடர்புகொள்ளவும். உதாரணமாக கூகுள் பே ஆப்பின் மூலமாகச் செய்யப்பட்ட பரிவர்த்தனை, எச்டிஎஃப்சி வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், கூகுள் பிளே ஆப்பின் மூலமாகப் புகாரளித்ததுடன், எச்டிஎஃப்சி வங்கியிலும் புகாரளிக்க வேண்டும்.
4. மத்திய அரசின் BHIM app-ஐ தவிர யுபிஐ சேவையை வழங்கும் பிற நிறுவனங்களான Google pay, phonepay, தொடங்கி தற்போது UPI சேவையில் இணைந்திருக்கும் வாட்ஸ்ஆப் வரையிலுமான 21 TPAP - Third Party Application Providers சேவையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை இந்த லிங்கைப் பயன்படுத்துவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

போலவே நீங்கள் தரவிறக்கம் செய்வது சம்பந்தப்பட்ட வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட App தானா என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
5. TPAP-களைப் பயன்படுத்தும்போது பணத்தை அனுப்பியவரின் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட தொகை போய் சேர வேண்டிய கணக்கை அடையவில்லை எனக் கொள்வோம். இப்போது எந்த வங்கியிலிருந்து பணம் கழிக்கப்பட்டதோ அந்த வங்கியையும், எந்த TPAP app ஐப் பயன்படுத்தி பரிவர்த்தனையை செய்தோமோ அதிலும், எந்த வங்கியின் கணக்கை அப்பணம் சென்றடையவில்லையோ அந்த வங்கியையும் தொடர்பு கொள்ள வேண்டும். டெபிட் செய்யப்பட்ட பணம் உரிய கணக்கை அடையாமலிருப்பது அரிதுதான் எனினும், பணம் டெபிட் செய்யப்பட்டு அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்குள் அப்பணம் வாடிக்கையாளரின் கணக்கை மீண்டும் வந்தடையும் என்கின்றனர் UPI வல்லுநர்கள்.
UPI-யினால் விளையும் சாதக, பாதகங்களை அலசும்போது சில பாதகங்கள் இருக்கின்றனவே என்பதற்காக மொத்தமாக யுபிஐ பயன்படுத்தாமல் இருக்க வேண்டியதில்லை தோழிகளே. கற்றுக்கொண்டு பாதுகாப்புடன் கையாள்வோம் சிறப்பாக!