Published:Updated:

குழந்தைகளை வலது கையில் பிடித்து அழைத்துச் செல்லும் பெற்றோரா நீங்கள்? #RoadSafetyTips

போக்குவரத்து
News
போக்குவரத்து

குழந்தைகள் எப்போதும் தாங்கள் பார்த்து வளர்ந்ததையே பின்பற்றுவார்கள். குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே சாலை விதிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பெரியவர்களின் கவனக்குறைவு ஓர் உயிரைப் பறித்திருக்கிறது.

குழந்தைகளை வலது கையில் பிடித்து அழைத்துச் செல்லும் பெற்றோரா நீங்கள்? #RoadSafetyTips

குழந்தைகள் எப்போதும் தாங்கள் பார்த்து வளர்ந்ததையே பின்பற்றுவார்கள். குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே சாலை விதிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பெரியவர்களின் கவனக்குறைவு ஓர் உயிரைப் பறித்திருக்கிறது.

Published:Updated:
போக்குவரத்து
News
போக்குவரத்து

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் காசை விழுங்குவது, பொத்தான்களை விழுங்குவது, தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவது, ஆழ்துளைக் கிணற்றில் விழுவது என ஆயிரக்கான பாதுகாப்பற்ற சூழல் குழந்தைகளின் உயிர்களைப் பறிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன.

சாலை மேம்பாலம்
சாலை மேம்பாலம்

அந்த வகையில் கடந்த வாரம் சேலம், லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, தனியார் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் ஆபத்து, விபத்தாக மாறுவதை நிச்சயம் நம்மால் தடுக்க முடியும். சாலை பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகளை பயமுறுத்தாமல் எவற்றையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை வழங்குகிறார் மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் மற்றும் பேரன்டிங் எக்ஸ்பர்ட் தீப்...

``விபத்துகள் முழுக்க முழுக்க நம்முடைய கவனக் குறைவால் நடப்பவை. சேலத்தில் நிகழ்ந்த விபத்துகூட கவனக்குறைவு என்றே சொல்ல வேண்டும். தன்னுடைய மூத்த குழந்தையை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட, தன் இரண்டாவது குழந்தையையும் அழைத்து வந்திருக்கிறார் அந்தத் தாய். மூத்த குழந்தை பேருந்தில் ஏறியதை உறுதிப்படுத்தியவர், இரண்டாவது குழந்தையை சில நொடிகள் கவனிக்காமல் விட்டிருக்கிறார். அதே போன்று அந்தப் பேருந்து ஓட்டுநரும், குழந்தைகள் அனைவரும் பேருந்தில் ஏறிவிட்டார்களா, பேருந்தை நகர்த்தலாமா என்பதை மட்டும் கவனித்திருக்கிறார். சக்கரத்தின் முன்பகுதியில் குழந்தை இருந்ததை அவர் கவனிக்கவில்லை. பெரியவர்களின் கவனக்குறைவு ஓர் உயிரைப் பறித்திருக்கிறது.

விபத்து
விபத்து

முதலில் இந்தச் சம்பவத்தை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றரை வயது குழந்தைக்கு எதுவும் தெரியாது என்பதைத் தாண்டி, இனி இப்படியான விபத்துகள் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விதிகளை இங்கு பெரும்பாலானோர் பொருட்படுத்துவதே கிடையாது. குழந்தைகள் எப்போதும் தாங்கள் பார்த்து வளர்ந்ததையே பின்பற்றுவார்கள். அதனால் அவர்களும் சாலை விதிகளை மதிக்காமல் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே சாலை விதிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பள்ளிப் புத்தகங்களில் ஜீப்ரா கிராஸிங் பற்றியும், சிக்னல்கள் பற்றியும் இருக்கிறது. அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ளும் குழந்தைகள், அவற்றைப் பின்பற்றும் விதத்தை சமுதாயத் திலிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு சாலை விதிகளைக் கற்றுக்கொடுப்பதுடன் நாமும் மதிக்க வேண்டும். வாரம் ஒரு விதியாக அவர்களின் இரண்டு வயதிலிருந்து கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது அவர்களுடைய கற்றல் திறன் கூடுதலாக இருக்கும். எனவே, மற்ற குழந்தை களுடன் ஒரு சின்ன டிரிப் அழைத்துச் சென்று சொல்லிக் கொடுக்கலாம். முதலில் வீட்டிலோ, பார்க் போன்று குழந்தைகளுக்குப் பிடித்த இடத்திலோ வைத்து சொல்லிக் கொடுத்துவிட்டு, பிறகு சாலையில் செல்லும்போது மீண்டும் நினைவூட்டல் செய்யலாம்.

அரசுப் பேருந்து - சித்திரிப்பு படம்
அரசுப் பேருந்து - சித்திரிப்பு படம்

சிக்னல்கள் பற்றி சொல்லிக்கொடுப்பதில் தொடங்கி, பேருந்திலிருந்து கைகளை வெளியே நீட்டக் கூடாது, சாலையின் எந்தப் பகுதியில் நடந்து செல்ல வேண்டும், வாகனங்களில் செல்லும்போது எதற்காக ஹாரன் அடிக்கிறோம், எதற்காக இண்டிகேட்டர்கள் பயன்படுத்துகிறோம் என்பதையெல்லாம் குழந்தைகளை பயமுறுத்தாமல் கற்றுக்கொடுக்க வேண்டும். பொதுவாக, `ரோட்டுல தனியா போனா பஸ் இடிச்சுரும், கீழ விழுந்துருவ' என பல பெற்றோர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இவை குழந்தைகளை உளவியலாக பாதித்து சாலை பற்றிய பயத்தையே ஏற்படுத்தும். இதைத் தவிர்த்து, சாலையில் விதிகளை மதித்துச் செல்ல வேண்டும், என்பதைக் கற்றுக்கொடுத்து, அவர்களை முன்னால் நடக்கவிட்டு நீங்கள் பின்னால் நடங்கள். இப்படிச் செய்வதன் மூலம் குழந்தைகள் தாமே சாலை விதிகளைப் பழகிக்கொள்வார்கள். சாலை விதிகள் கற்றுக்கொடுப்பது மட்டுமல்லாமல் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டிய வேறு சில விஷயங்களும் இருக்கின்றன.

எக்காரணம் கொண்டும் சாலை விதிகளை மீறாதீர்கள். சாலைகளில் குழந்தைகள் முன்னால் கூடுதல் கவனத்துடன் பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும். சாலையில் செல்லும் போது உங்களுடைய இடது கைப்பக்கம்தான் குழந்தைகள் இருக்க வேண்டும். வலது கை விரல்களை குழந்தைகள் பற்றுவதை அவசியம் தவிருங்கள்.
எந்த வாகனங்கள், எந்த நிலை இயக்கத்தில் இருந்தாலும், குறைந்தது இரண்டடி தள்ளி நிற்க வேண்டும், சக்கரத்துக்கு அருகில் நிற்கக் கூடாது என்பதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும். வாகங்களில் பின்னால் ஒளிந்து விளையாடுவதையோ நிற்பதையோ, உட்காருவதையோ எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது குழந்தைகளின் முன்னால் ஒரு கையை விட்டுவிட்டு வண்டி ஓட்டுவதை அவசியம் தவிருங்கள்.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குழந்தைகள் தூங்குகிறார்கள் எனில் சீட்டுக்கு முன்னால் இருக்கும் இடைவெளியில் அவர்களை நிற்க வைக்காதீர்கள். எந்நேரம் வேண்டுமானலும் கீழே விழ வாய்ப்பிருக்கிறது. நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது, சீட் பெல்ட் அணிவது அவசியம்.

வாகனம்
வாகனம்

காரின் மேல் பகுதி திறக்கும் வகையிலான கார்கள் இப்போது அதிகரித்திருக்கிறது. மேல் பகுதி திறந்து, குழந்தைகள் எழுந்து நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் எனில் வாகனத்தை பிரேக் பிடிக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிக வேகத்துடன் பிரேக் பிடித்தால் குழந்தைகள் வாகனத்திலிருந்து கீழே விழவும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும்போது பேசுவதைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. சாலை விதிகளை மதிப்பதில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருந்து அவர்களை எப்போதும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று தெளிவாக விளக்கினார்.