Published:Updated:

`படிப்பை முடிப்பேன்கிற நம்பிக்கை கரைஞ்சுகிட்டே இருக்கு'- ஃபீஸ் கட்டமுடியாது தவிக்கும் மருத்துவ மாணவி

பத்மபிரியா
News
பத்மபிரியா ( ம.அரவிந்த் )

''பேங்க் லோன், சுய உதவிக்குழுனு எல்லா இடங்கள்லயும் கடன் வாங்கியாச்சு. என்னைக் கரைசேர்க்க பலர் உதவிக்கரம் நீட்டினாங்க. எப்படியோ தட்டுத் தடுமாறி மூணு வருஷப் படிப்பை முடிச்சுட்டேன். ஆனா, நாலாவது வருஷம்...''

`படிப்பை முடிப்பேன்கிற நம்பிக்கை கரைஞ்சுகிட்டே இருக்கு'- ஃபீஸ் கட்டமுடியாது தவிக்கும் மருத்துவ மாணவி

''பேங்க் லோன், சுய உதவிக்குழுனு எல்லா இடங்கள்லயும் கடன் வாங்கியாச்சு. என்னைக் கரைசேர்க்க பலர் உதவிக்கரம் நீட்டினாங்க. எப்படியோ தட்டுத் தடுமாறி மூணு வருஷப் படிப்பை முடிச்சுட்டேன். ஆனா, நாலாவது வருஷம்...''

Published:Updated:
பத்மபிரியா
News
பத்மபிரியா ( ம.அரவிந்த் )

அரியலூர் அருகே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவி பத்மபிரியா, சித்த மருத்துவம் படித்து வருகிறார். வறுமையான சூழல், கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு போன்ற காரணங்களால் கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் போனதில், படிப்பைத் தொடர முடியாத நிலையில் தவித்து வருகிறார்.

சித்தா டாக்டருக்கு படிக்கும் மாணவி பத்மபிரியா
சித்தா டாக்டருக்கு படிக்கும் மாணவி பத்மபிரியா

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மபிரியா. ஏழ்மையான பின்னணி கொண்ட குடும்பம். படித்து டாக்டராக வேண்டும் என்பது பத்மபிரியாவின் கனவு. மூத்த பிள்ளையான தன்னை நம்பியே குடும்பத்தின் எதிர்காலம் இருக்கிறது என்ற நெருக்கடிக்கு மத்தியில் வைராக்கியத்துடன் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 1114/1200 மதிப்பெண்கள் எடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நல்ல மதிப்பெண், பத்மபிரியாவுக்கு மருத்துவம் படிக்க ஆசை. ஆனால், பணத்துக்கு எங்கே போவது என்ற கேள்வி பத்மபிரியாவை கலங்க வைத்தது. 'கவலைப்படாதம்மா... படிக்கத்தானே ஆசைப்படுற, நல்லதாவே நடக்கும்' என அவரின் அம்மா காந்திமதி கொடுத்த நம்பிக்கையில் 2017-ல் நீட் தேர்வு எழுதினார். அதில் தேவைப்படும் மதிப்பெண் கிடைக்கவில்லை. பின்னர் அரசு இட ஒதுக்கீட்டில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சித்த மருத்துவம் படிக்க சீட் கிடைத்தது.

பெற்றோருடன் பத்மபிரியா
பெற்றோருடன் பத்மபிரியா

உறவினர்கள் பத்மபிரியாவின் அம்மா காந்திமதியிடம், "நீயே உடம்பு சரியில்லாதவ, உன் வீட்டுக்காரரால வேலைக்குப் போக முடியாது. தனியார் கல்லூரியில லட்சக்கணக்குல காலேஜ் ஃபீஸை எல்லாம் உன்னால எப்படிக் கட்ட முடியும்? மக மனசுல வீணா ஆசைய வளக்காதீங்க, நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி படிக்க வைங்க" என அறிவுரை கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டின் நிலையைப் புரிந்துகொண்ட பத்மபிரியா, "சித்தா டாக்டருக்கு படிக்க நிறைய செலவாகும், நமக்கு இதெல்லாம் சரிப்படாதும்மா. நான் வேற ஏதாவது படிக்கிறேன்" என்றிருக்கிறார். "தெரிஞ்ச சனங்ககிட்ட கடன உடன வாங்கிக்கலாம், பத்தாததுக்கு நாலு பேருகிட்ட உதவி கேட்கலாம். எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன், படிப்பு முடியுறவரைக்கும்தானே கஷ்டம்? அப்புறம் எல்லாம் சரியாயிடும், நீ கவலைப்படாம படி" எனக் கல்லூரியில் சேர்த்துள்ளார் அவர் அம்மா காந்திமதி.

எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுடன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கால் பதித்தார் பத்மபிரியா.

தன் சக்திக்கு முடிந்த அளவு வேலை செய்ததுடன், ஈர மனம் கொண்ட சிலரிடம் உதவி பெற்றும் பத்மபிரியாவை படிக்க வைத்தார் காந்திமதி. இப்படியே இரண்டு வருடப் படிப்பு முடிந்துவிட்டது. மூன்றாவது வருடத்தில், கொரோனா பொது முடக்கம் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவி
ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவி

பத்மபிரியாவால் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. கொரோனா லாக்டெளன் எல்லோரையும் பொருளாதார சிக்கலில் தள்ளியதில் பத்மபிரியாவுக்கான உதவி கிடைக்கவில்லை. இதனால் தன் கனவான சித்த மருத்துவப் படிப்பு கேள்விக்குறியான நிலையில், படிக்க வழியில்லாமல் கண்கள் கசிய வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார்.

பத்மபிரியாவிடம் பேசினோம். ''அப்பா குணசேகரன் மாற்றுத்திறனாளி, எந்த வேலைக்கும் செல்ல முடியாது. அம்மா காந்திமதி விவசாயக் கூலி வேலை செய்றாங்க. அதுல கிடைக்கும் வருமானத்துலதான் குடும்பம் ஓடுது. குடிசை வீடு, 3 ஆடு, ஒரு பசு மாடு. இதுதான் எங்க சொத்து. சின்ன வயசுலயிருந்தே நான் நல்லா படிப்பேன். நான், தங்கை, தம்பினு நாங்க எல்லாரும் படிச்சு பெரிய ஆளா வரணும், அப்போதான் எங்க கஷ்டமெல்லாம் தீரும்னு அம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க.

திருக்குறள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பொருளுடன் சேர்த்து எல்லா குறள்களையும் சின்ன வயசிலேயே படிச்சு கரைச்சுக் குடிச்சேன்! எந்தக் குறளை எப்படிக் கேட்டாலும் சொல்வேன்; பொருளைச் சொல்லி குறளைக் கேட்டாலும் சொல்வேன். இது எனக்கு 'திருக்குறள் அரசி' என்ற பெயரைப் பெற்றுத் தந்ததோட, எனக்குப் பெரிய அடையாளத்தையும் கொடுத்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐயா, முதல்வர் ஜெயலலிதாம்மா உள்ளிட்ட பலரிடம் பரிசு வாங்கியிருக்கேன். திருக்குறள் போட்டி ஒன்றில் ஜெயலலிதாம்மா, 'நீ பெரிய ஆளா வருவ'னு தட்டிக் கொடுத்துப் பாராட்டினாங்க.

சித்த மருத்துவ மாணவி பத்மபிரியா
சித்த மருத்துவ மாணவி பத்மபிரியா

அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகும். அப்பாவும் மாற்றுத்திறனாளி. இவங்களைப் பார்த்து பார்த்து வளர்ந்ததால, 'இதுபோன்றவங்களுக்கு எல்லாம் சிகிச்சை அளிக்க டாக்டருக்குப் படிக்கணும்' என்ற எண்ணம் வந்தது. அதுவே லட்சியமா ஆச்சு. ஆனா, நீட் தேர்வால என் கனவுக்கான வாசல் திறக்கலை.

சித்த மருத்துவம் படிக்க தனியார் கல்லூரியில இடம் கிடைச்சது. கல்லூரிக் கட்டணம், ஹாஸ்டல் ஃபீஸ்னு வருஷத்துக்கு லட்சங்கள்ல செலவானது. பேங்க் லோன், சுய உதவிக்குழுனு எல்லா இடங்கள்லயும் கடன் வாங்கியாச்சு. என்னைக் கரைசேர்க்க பலர் உதவிக்கரம் நீட்டினாங்க. எப்படியோ தட்டுத் தடுமாறி மூன்று வருஷ படிப்பை முடிச்சுட்டேன். இப்போ நாலாவது வருஷத்துக்கு கிளாஸ் தொடங்கிருச்சு.

பத்மபிரியா குடும்பம்
பத்மபிரியா குடும்பம்

வேதனையான விஷயம், மூணாவது வருஷத்துக்கான ஃபீஸ் 1,10,000 ரூபாய் இன்னும் கட்டாமல் பாக்கியிருக்கு. காலேஜ்லயிருந்து ஃபீஸ் கட்டச்சொல்லி போன் மேல போன் அடிச்சாங்க. நிலைமையைச் சொன்னேன். 'ஃபைனல் இயருக்கான ஆன்லைன் கிளாஸ் தொடங்கிருச்சும்மா. போன வருஷத்துல பாக்கியுள்ள ஃபீஸுடன் சேர்த்து இந்த ஆண்டுக்கான ஃபீஸையும் கட்டிட்டு கிளாஸ்ல சேர்ந்துக்க'னு சொல்லிட்டாங்க.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு எல்லோருக்கும் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிற இந்த நேரத்துல, யார்கிட்டயும் உதவியும் கேட்க முடியலை. கேட்டவங்களும், இந்த நேரத்துல எதுவும் செய்ய முடியாதுனு கையை விரிச்சுட்டாங்க. மூன்றாவது வருட ஃபீஸ் பாக்கி ரூ. 1,10,000, ஃபைனல் இயரான இந்த வருஷ ஃபீஸ் 5 லட்சம்... மலையா எங்க முன்னால நிக்குது.

என் படிப்பை முடிக்க மொத்தம் ரூ. 6 லட்சம் செலவாகும். இப்போ கிளாஸ் அட்டண்ட் செய்ய 3,54,000 ரூபாய் கட்டணும். நான் படிப்பை முடிப்பேன்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சிகிட்டு இருக்கு.

மாணவி பத்மபிரியா
மாணவி பத்மபிரியா

அம்மாவும் அப்பாவும் பணத்துக்காக அலையுறாங்க அவங்க முகத்தைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. நம்பிக்கை தர்ற மாதிரி எதுவும் நடக்கலை. முக்கால் கிணறு தாண்டின பிறகும் மூழ்கிடுவோமோனு கவலையா இருக்கு. எங்கிருந்தாவது வெளிச்சம் வராதானு காத்திருக்கோம்!"

தன் குடிசை வீட்டில் மருத்துவப் புத்தகங்களை அடுக்கியபடி சொல்கிறார் பத்மபிரியா.

Note

பத்மபிரியாவுக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியை அவரிடம் கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism