Published:Updated:

``உலகம் முழுக்க பரதக் கலையை ரசிக்கிறார்கள்!" - நாட்டியக் கலைஞர் `கலைமாமணி' பாலாதேவி சந்திரசேகர்

பாலாதேவி சந்திரசேகர்
News
பாலாதேவி சந்திரசேகர்

தமிழர்களின் கலையாகிய நம் பரதத்தை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கும் நாட்டியக் கலைஞர் `கலைமாமணி' பாலாதேவி சந்திரசேகர், பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

Published:Updated:

``உலகம் முழுக்க பரதக் கலையை ரசிக்கிறார்கள்!" - நாட்டியக் கலைஞர் `கலைமாமணி' பாலாதேவி சந்திரசேகர்

தமிழர்களின் கலையாகிய நம் பரதத்தை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கும் நாட்டியக் கலைஞர் `கலைமாமணி' பாலாதேவி சந்திரசேகர், பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

பாலாதேவி சந்திரசேகர்
News
பாலாதேவி சந்திரசேகர்

எக்காலத்திலுமே பாரம்பர்யத்துக்கென்று ஒரு தனித்துவம், பெருமை உள்ளது. பல நூறு ஆண்டுகளாக நம் தமிழகத்தின் பாரம்பர்யக் கலையாக விளங்கும் பரதத்தின் முக்கியத்துவம் இன்றும் நிலைத்து நிற்கிறது. தமிழர்களின் கலையாகிய நம் பரதத்தை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கும் நாட்டியக் கலைஞர் `கலைமாமணி' பாலாதேவி சந்திரசேகர், பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலகின் பல பெருமைமிக்க மேடைகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் தன் சலங்கைகளின் கதைகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இங்கு.

`எனக்கு ஐந்து வயது இருக்கும்போது பரதத்தின் மேல் எனக்கு இருந்த ஆசையைக் கண்டறிந்த என் பெற்றோர் எனக்கு முறையாகப் பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். என் முதல் குரு, ஹைதராபாத்தில் இருந்த ஜெயலக்ஷ்மி நாராயணன். பின்னர், சென்னையில் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களிடம் பயின்றேன். திருமணமான பின்பு வெளிநாடுகளுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

பாலாதேவி சந்திரசேகர்
பாலாதேவி சந்திரசேகர்

மேலாண்மை சம்பந்தமாக மூன்று பட்டப்படிப்புகளை முடித்த நான், 20 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் வேலைபார்த்தேன். அந்தக் காலத்திலும் நான் பரதத்தைக் கைவிடாமல் நாட்டியத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். முன்னர் துபாயில் இருந்தோம். பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றோம். தற்போது நியூஜெர்சியில் வசிக்கும் நான், பரதத்தை மட்டுமே என் மூச்சாகக் கொண்டு, பிரின்ஸ்டனில் SPNAPA அகாடமி மூலம் பரதத்தைக் கற்றுக்கொடுத்து வருகின்றேன்'' என்று சொல்லும் பாலாதேவி, இதுவரை உலக அளவில் 30 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர்.

``உலக அளவில் நம் பாரம்பர்யக் கலையைக் கண்டு ரசிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, இனம், மொழி கடந்து வரவேற்கப்படும் கலையாகப் பரதம் இருக்கிறது. கலையாக மட்டுமல்லாமல், நான் பரதத்தின் மூலம் மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துகளைக் கூறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். உதாரணமாக, கர்ணன் பற்றிய ஒரு நாட்டியத்தை நல்வழியில் செல்வது மட்டுமே வாழ்வில் நம்மை உயர்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் உருவாக்கி அரங்கேற்றினேன்.

அனைவரும் சமம், பெண்கள் பலமானவர்கள் போன்ற கருத்துகளை வலியுறுத்தி நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றேன். உலக அளவில் வரவேற்பு அமோகமாக உள்ளது. ஐஸ்லாந்தில், கடந்த 75 ஆண்டுகளாக யாரும் பரதக் கலையை நிகழ்த்தியது இல்லை. சமீபத்தில் நான் நிகழ்த்தினேன். அங்கும் நல்ல வரவேற்பு. பழைமையில் இருக்கும் பழைமை மாறா புதுமையை உலக மக்கள் விரும்புகின்றனர்'' என்பவருக்கு, உலகம் முழுக்க உள்ளனர் பரத மாணவர்கள்.

``ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று பல மாணவர்களைப் பயிற்றுவித்து வருகின்றேன். லண்டன் பாரதிய வித்யா பவனில் நாட்டியப் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளேன். வெளிநாட்டு மாணவர்களும் நம் நாட்டுக் கலையைக் கற்பதில் முழு ஈடுபாட்டுடன் உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப கற்றுக் கொடுக்கிறேன். நாட்டியம், பாடல், தாளம் என நம் நாட்டில் உள்ள குரு-சிஷ்ய கலாசாரம் போன்றே கற்றுக் கொடுக்கின்றேன்'' என்று சொல்லும் பாலாதேவி, தமிழக அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நாட்டிய சூடாமணி விருது, டாக்டர் பத்மா சுப்ரமணியம் சூட்டிய நிருத்ய கலா ரஞ்சனி விருது, நிருத்ய கலா பாரதி, பாரத கலா வாணி உள்ளிட்ட இன்னும் பல விருதுகளைப் பெற்று பரத நாட்டியத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

``நான் வாங்கும் ஒவ்வொரு விருதையும், எனக்கான கூடுதல் பொறுப்பை உணர்த்தி, என்னை மெருகேற்றிக்கொள்ள கொடுக்கப்படும் வாய்ப்பாக உணர்கிறேன். `பிரகதீஸ்வரர்' என்ற நாட்டிய உருவாக்கத்தைப் பத்தாயிரம் பேர் முன்னிலையில் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆடினேன். பின்னர், அதே உருவாக்கத்தை யுனெஸ்கோவிலும் அரங்கேற்றினேன்.

கடல் கடந்தும் சிறந்து விளங்கியது அந்த நாட்டியப் படைப்பு. சமீபத்தில் சென்னையில் `பத்மாவதி அவதாரம்' என்ற நாட்டியப் படைப்பை அரங்கேற்றினேன். சில மாதங்களுக்கு முன் துபாய் எக்ஸ்போவிலும் நடன நிகழ்ச்சியை நடத்தினேன். உலகெங்கும் ஆட்டிப்பார்த்த கொரோனா பொதுமுடக்கம் காரணமாக என் நிகழ்ச்சிகளும், பயிற்சி வகுப்புகளும் தடைபட்டாலும், கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலமாக என் நிகழ்ச்சிகளை உலகமெங்கும் நடத்தி வருகிறேன். இந்த இரண்டு வருடங்களில் நிறைய படித்தேன். புது நாட்டிய உருவாக்கங்களுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்'' என்பவர், தன் ஒவ்வொரு நாட்டியப் படைப்பின் உருவாக்கத்துக்கும் கொடுக்கும் உழைப்பு சிறப்பு.

பாலாதேவி சந்திரசேகர்
பாலாதேவி சந்திரசேகர்

``நான் உருவாக்கியுள்ள ஒவ்வொரு நாட்டிய நிகழ்ச்சிக்காகவும் 3 முதல் 4 வருடங்கள் வரை உழைத்துள்ளேன். ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தால், பல துறை நிபுணர்களிடம் அதுகுறித்து கலந்து ஆலோசித்த பின்னர், மிகுந்த சிரத்தையுடன் உருவாக்குவேன். பாமர மக்கள் முதல் பண்டிதர் வரை அனைவரும் பார்க்கும் விதமாக என்னுடைய ஒவ்வோர் உருவாக்கமும் இருக்கும். ஒவ்வோர் உருவாக்கத்தையும் சவாலாக எடுத்து முழு ஈடுபாட்டுடன் மெருகேற்றுவேன். அதனால்தான் என் நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் மிகவும் லயித்துக் காண்கின்றனர். அது மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது'' என்பவர், தன் துறை சார்ந்த ஜூனியர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்கிறார்.

``இளம் பரதக் கலைஞர்களுக்கு நான் கூறுவது, உங்களுக்கு பரதம் மேல் இருக்கும் ஆர்வம் என்றுமே உங்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். எந்தத் துறையிலும் உடனே முன்னேற்றங்களைக் காண முடியாது. பொறுமை அவசியம். என்றுமே அறிவுத்தேடல் இருக்க வேண்டும். உங்கள் படைப்புகள் அனைத்துமே தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்'' என்றவர்,

``என் வருங்காலக் கனவு இதுதான். உலக அளவில் இருக்கும் முக்கியப் பிரச்னைகளை நாட்டியம் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்கும் சமூகக் கடமை எனக்கு உள்ளதாகக் கருதுகிறேன். உலக அமைதிக்காக நான் கற்ற கலையைப் பயன்படுத்துவேன்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் `கலைமாமணி' பாலாதேவி சந்திரசேகர்.