Published:Updated:

``வயசுக்கு வந்தா கலராயிருவேன்னு சொன்னாங்க" |ஜன்னலோரக் கதைகள் - 15

பெண்
News
பெண்

'வயசுக்கு வந்தா கலரா ஆயிருவ', 'மஞ்சள் பூசி குளிச்சா கலர் ஆயிருவ', 'கறுப்பா இருக்கிறதால நிறைய நகை போட்டா அழகா இருக்கும்.' இப்படி நிறத்தைப்பத்தி பேசிப் பேசியே என்னை தாழ்வு மனப்பான்மைக்குள்ள தள்ளிட்டாங்க.

Published:Updated:

``வயசுக்கு வந்தா கலராயிருவேன்னு சொன்னாங்க" |ஜன்னலோரக் கதைகள் - 15

'வயசுக்கு வந்தா கலரா ஆயிருவ', 'மஞ்சள் பூசி குளிச்சா கலர் ஆயிருவ', 'கறுப்பா இருக்கிறதால நிறைய நகை போட்டா அழகா இருக்கும்.' இப்படி நிறத்தைப்பத்தி பேசிப் பேசியே என்னை தாழ்வு மனப்பான்மைக்குள்ள தள்ளிட்டாங்க.

பெண்
News
பெண்

சென்னையில் எழும்பூரில் ஒரு விடுதியில் தங்கி இருந்தேன். அந்த விடுதிக்கு புதிதாக பெண்கள் வருவதும் போவதுமாக இருப்பது வழக்கம். புதிதாக வரும் எல்லாரிடம் அறிமுகம் செய்து கொண்டாலும், ஒரு சிலரைத் தவிர மிக நெருக்கமாக யாரிடமும் நான் பழகியது இல்லை.

ஒருநாள் அலுவலக வேலை முடிந்து போகும்போது, விடுதியில் ஒரு பெரிய பையும், மூன்று கட்டைப்பைகளும் என் அறையில் இணைந்திருந்தன. புதிதாக அறைக்கு யாரோ வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். இது வழக்கமானது தானே என்று என் ரெகுலர் வேலைகளை பார்க்கத் தொடங்கினேன். அவள் தன் குடும்பத்தினரை வழியனுப்பி விட்டு அறைக்குள் நுழைந்தாள். என் மெத்தைக்கு அருகிலிருந்த மெத்தைக்கு அடியில் தன் பொருள்களை அடுக்கி விட்டு நிமிர்ந்தாள். இருவரும் பெயரை மட்டும் பகிர்ந்து கொண்டோம்.

பெண் 
பெண் 

அடுத்தடுத்த நாள் அலுவலக வேலை முடிந்து, அறைக்கு வந்ததும், அவளைப் பார்ப்பேன். கையில் எப்போதும் புத்தகங்கள் இருந்தன. தூங்கும்போது போனில் வீடியோக்கள் பார்ப்பாள். தினமும் ஊரில் இருக்கும் தன் மகளிடம் வீடியோ கால் பேசுவாள். ஒரு வார காலத்தில் இதுவே அவளைப் பற்றிய என் புரிந்துணர்வாக இருந்தது.

அவளின் அமைதியே அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. நானே பேச்சுக் கொடுத்து தோழியாக்கிக் கொண்டேன். மதுரைக்கு அருகில் ஒரு கிராமம். சென்னை அவளுக்குப் புதிது என்பதெல்லாம் சில நாள் பழக்கத்தில் புரிந்தது.

காலையில் அவசரமாகக் கிளம்பிக்கொண்டு இருப்பேன். அவள் நீண்ட நேரம் கண்ணாடி முன் அமர்ந்து மேக்கப் செய்து கொண்டிருப்பாள். அணிந்த ஆடைகளை மீண்டும் அவிழ்ப்பதும், மற்றோர் ஆடையை அணிவதுமாக இருப்பாள். நான் அதைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வேன். என் ஆடையைப் பற்றியும் அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பாள். சில வாரங்கள் கழித்து, ஷாப்பிங் செல்ல என்னை அழைத்தாள். தவிர்க்க முடியவில்லை.

நானும் அவளும் தி.நகர் செல்ல எழும்பூரில் ரயில் ஏறினோம். ரயிலில் ஏறியதில் இருந்து அவளின் கண்கள் ஒவ்வொருவரின் ஆடைகளையும் கண்களால் அளந்தன. ஒவ்வொருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, போனில் கேமரா ஆன் செய்து தன்னையும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் செய்யும் அனைத்து ரியாக்‌ஷனையும் சென்னை வந்த புதிதில் நானும் செய்திருக்கிறேன் என்பதால், சில நிமிடங்கள் மலரும் நினைவுக்குள் சென்று சென்னை என்னை எப்படி மாற்றியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

 ஷாப்பிங்
ஷாப்பிங்

ரயில் மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்க, கூட்டத்திலிருந்து இறங்கி கடைக்குள் நுழைந்தோம். ஒவ்வொரு பிரிவாகச் சென்று ஆடைகளை எடுப்பதும், ட்ரையல் பார்ப்பதுமாக இருந்தாள். ஒரு கட்டத்தில் எனக்கு பொறுமை இழந்துவிட்டது. நான் வாங்கிய சில ஆடைகளுக்கு பில் போடுவதாகச் சொல்லி, நகர்ந்தேன். அரை மணி நேரம் கழித்து இரண்டு ஆடைகளை கையில் எடுத்துக்கொண்டு நடந்து வந்தாள். 'அட இதுக்கா' இவ்வளவு நேரம் கடையைப் புரட்டினாள் என்று யோசித்தேன். இறுதியாக அந்த இரண்டு ஆடையிலிருந்து ஓர் ஆடைக்கு பில் போட்டாள். ஷாப்பிங் முடிந்து மீண்டும் ரயிலில் ஏறினோம். ஜன்னல் காற்று இதமாக இருந்தது.

`என் டிரெஸ் நல்லா இருக்கா' என்றாள். `உனக்கு பிடிச்சுதானே எடுத்த' என்றேன். `பிடிச்சுருந்துச்சு. ஆனா, நல்லா இருக்குமானு தெரியல' என்று குறைபட்டுக் கொண்டாள். `அதெல்லாம் நல்லாதான் இருக்கும்' என்று சமாளித்தேன். `நீங்க ஸ்கின்னுக்கு ஏதும் யூஸ் பண்றீங்களா?' என்றாள். இல்லை என்று தலையசைத்தேன். 'நீங்க சென்னைக்கு வர்றப்போ, இந்த நிறத்துலதான் இருந்தீங்களாக்கா' என்றாள். 'பொறந்ததுல இருந்து இதே நிறம் தான்' என்றேன். 'இல்ல ஏசில இருந்தா கலர் அதிகமாகும்னு சொல்லுவாங்களே... அப்படி எதும் ஆச்சா' என்றாள்.

மின்சார ரயில்
மின்சார ரயில்

சிரித்துக்கொண்டேன். எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க என்றேன். சிரித்துக் கொண்டே, 'உங்கள இதுவரைக்கும்  கறுப்புனு யாராவது கிண்டல் பண்ணிருக்காங்களா' என்றாள். 'அதெல்லாம் நிறைய பண்ணிருக்காங்க. ஏன் கேக்குற' என்றேன். 'என்னையும் பண்ணிருக்காங்க அதான் கேட்டேன்'என்றவளின் முகத்தில் சிரிப்பு  குறைந்தது.

அவளின் அமைதி அவள் ஆழமாகக் காயப்பட்டிருக்கிறாள் என்பதைக் காட்டியது. 'இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத. நிறத்துல என்ன இருக்கு' என்றேன். அமைதியாய் இருந்தவள் திடீரென்று என் கைகளைப் பற்றிக் கொண்டாள். ` ''சின்ன வயசுல இருந்து எல்லாரும் என்னை கருவாச்சி'னு தான் கூப்பிடுவாங்க. ஒவ்வொரு முறை என்னை மத்தவங்க அப்படி கூப்பிடும்போதும் என் தன்னம்பிக்கை முழுசா உடைஞ்சுரும். கண்ணாடி முன்னாடி நின்னு என்னை நானே பார்த்துப்பேன். கோபம் வரும்.

என் தம்பி என்னைவிட கொஞ்சம் கலரா இருப்பான். அவனும் நானும் ஒரு இடத்துக்கு சேர்ந்து போனா, 'உன் தம்பியா? இவ்வளவு கலரா இருக்கான்; நீ இப்படி இருக்க'னு கிண்டலா கேட்பாங்க...இப்படியான கிண்டல்கள்னாலயே சின்ன வயசுல என் தம்பி மேல எனக்கு வெறுப்பு வந்துச்சு. உண்மையைச் சொல்லணும்னா நான் கறுப்பா இருக்கேன்னு நான் ஃபீல் பண்ணல... என்னைச் சுத்தியிருந்தவங்க ஃபீல் பண்ண வெச்சாங்க. 'வயசுக்கு வந்தா கலரா ஆயிருவ', 'மஞ்சள் பூசி குளிச்சா கலர் ஆயிருவ', 'கறுப்பா இருக்கிறதால நிறைய நகை போட்டா அழகா இருக்கும்.' இப்படி நிறத்தை பத்தி பேசிப் பேசியே என்னை தாழ்வு மனப்பான்மைக்குள்ள தள்ளிட்டாங்க.

பெண்
பெண்

டிரெஸ் எடுக்கலாம்னு ஷாப்பிங் போவோம். என் மனசுக்குப் பிடிச்ச கலர் டிரெஸ்ஸை நான் எடுப்பேன். `இந்த கலர் உனக்கு எடுக்கவே எடுக்காது. அடிக்கும்'னு சொல்லி வேற கலர் டிரெஸ்ஸை வாங்க வைப்பாங்க. காலேஜ் படிக்கும்போது லைட்டா மேக்கப் போட்டுட்டுப் போவேன். `கருவாச்சிக்கு லிப்ஸ்டிக் ஒரு கேடா; குரங்குக்கு மேக்கப் போட்ட மாதிரி இருக்கு'னு பாடி ஷேமிங் பண்ணி அழ வெச்சுருக்காங்க. ஆசையா மூக்கு குத்திக்கிட்டேன். அப்போ கூட, 'கறுப்பா இருக்கிறதால அழகா இருக்கு'னு சொல்லிக் கஷ்டப்படுத்துனாங்க.

ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து எங்கயாவது வெளிய போவோம். அவங்கல்லாம் அவங்களோட லவ்வரோட வருவாங்க. எனக்கு லவ் பிடிக்காதுனு நான் லவ் பண்ணல. ஆனா, 'கறுப்பா இருக்கனு எவனும் திரும்பிப் பார்க்கலையா'னு கிண்டல் பண்ணுவாங்க. அது அவங்களுக்கு ஜாலிதான். அந்த நிமிஷம் நானும் சிரிக்கத்தான் செய்வேன். ஆனா, என் மனசு எவ்வளவு வலிக்கும்; நான் எத்தனை நாள் அழுதுருக்கேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.

இதெல்லாம்விட, எனக்கு கல்யாண சேலை எடுக்கப் போன இடத்துல நடந்ததை என்னால இப்போ கூட மறக்க முடியல. எனக்கு அரக்கு கலர் பிடிக்கும். அரக்கு கலர் எடுத்துக்குறேன்னு சொன்னேன். ' நீயே கறுப்பு; அரக்கு கலர் சேலை கட்டுனா, ஃபோட்டால நல்லாவே தெரியாது'னு சொல்லி, கல்யாண சேலையைக்கூட எனக்குப் பிடிச்ச மாதிரி எடுக்க விடல. நான் மாசமா இருக்கும்போது, குழந்தை கலரா பொறக்க அதைச் சாப்பிடு, இதைச் சாப்பிடுனு டெய்லி டெய்லி கஷ்டப்படுத்துனாங்க.

பெண்
பெண்

நானே எதிர்பார்க்காம என் மக கலரா பொறந்தா...அந்த சந்தோஷத்தைக்கூட கொண்டாட விடல. என் மகளோட எங்கயாவது வெளியபோகும் போது, என் மகளைப் பார்த்து, 'இது உன் மகளா; இவ்வளவு கலரா இருக்கு. குங்குமப்பூ சாப்டியா'னு கேட்டு காயப்படுத்துவாங்க. அதனாலயே மேக்கப், டிரெஸ்னு சின்னச் சின்ன விஷயத்துக்கு ரொம்பவே கவனம் செலுத்துறேன். நிறைய முறை காயப்பட்டுட்டேன். யாரும், எதையும் வேணும்னு செய்யல. ஆனா, அவங்களோட வார்த்தைகள் நம்மளோட நம்பிக்கையை உடைச்சு, ஓர் ஓரமா தள்ளுதுனு அவங்களுக்கு புரியல" என்று தன் ஆதங்கத்தை கொட்டி முடித்தாள்.

உண்மைதான். நாம் யாரும் அடுத்தவரின் மனநிலை பற்றி சிந்திப்பதே இல்ல. என்று வருத்தப்பட்டுக் கொண்டேன். ஒருமுறை என் அம்மாவை குண்டம்மா என்று சொல்லி காயப்படுத்தி அழ வைத்தது நினைவுக்கு வந்து போனது. தவற்றை சுட்டிக்காட்டிய அவளுக்கு நன்றி சொன்னேன். இறுகப்பற்றியிருந்த கைகளை விலக்கி, ``நானும் கறுப்பு தான். அதற்காக நான் வருத்தப்பட்டது இல்லை. நிறத்தை என் ப்ளஸ்ஸாகத்தான் பார்க்கிறேன். நிறமோ, உடல்வாகோ ஒருவரின் அடையாளமோ, குணமோ அல்ல. அது வெறும் தோற்றம்தான். அதற்கு முக்கியத்துவம் தரும்போது ஒருவரின் அன்பைவிட, தோற்றத்தை நாம் கொண்டாடுகிறோம்.

பெண்
பெண்

பாடி ஷேமிங் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கிறது. இதனை மாற்ற, நம் பார்வையும், எண்ணங்களும் மாற வேண்டும். பாடி ஷேமிங் என்பது பூமி உருவானதிலிருந்தே இருந்தே இருக்கிறது. தோற்றம் என்பது அழகல்ல. ஒருவரின் நம்பிக்கையே அவர்களின் அழகு என்று சொல்லும் போது..."கேட்க நல்லா தான் இருக்கு. மனசுக்குள் ஏத்துறது தான் சிரமம்"என்றாள்.

வார்த்தைகளால் மற்றவர்களின் நம்பிக்கையை நாம் உடைத்துவிடுகிறோம். வார்த்தைகள் கத்தியை விட ஆபத்தானவை என்று உணர்ந்து கவனமாக பயன்படுத்த வேண்டும்..மனிதர்களின் அன்பை நேசியுங்கள். அன்பிற்கு முன் நிறை, குறைகள் எப்போதும் தெரியாது.